Pages

Thursday, July 21, 2011

தேடல்.....21.07.2011!

தெளிவுகளை நோக்கிய ஓட்டத்தில் தேடல் என்பது தன்னிச்சையான விசயமாகிப் போய்விடுகிறது. கோவிலுக்குள் சென்று சென்று சுற்றி சுற்றி தூணுக்கு தூண் அமர்ந்து அமர்ந்து அங்கும் இங்கும் அலைந்து அடித்து பிடித்து கருவறை முன்பு நின்று இறைவனை வணங்குகிறேன் பேர்வழி என்று கண்களை மூடி நமக்குள் நாமே நம்மைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின்னால் கோவிலைச் சுற்றி விட்டு ஏதோ ஒரு தூணின் ஓரத்தில் அமர்வோமே...., அப்போது கிடைக்கும் திருப்திக் கடலுக்குள் மூழ்கி இருக்கிறீர்களா?

கடும் வெறுமையில் வார்த்தைகளும் மனிதர்களும் இல்லாத போது நம்மை ஆளுமை செய்யும் அந்த மெளனம் நின்று நிதானித்து ஊறிக் கிடக்கவேண்டிய இடம். கோவிலுக்குச் செல்வது இந்த அமைதியை அனுபவிக்கத்தான். இப்படிப்பட்ட அமைதியை கொடுக்குமிடமாக கோவில் இருப்பதற்கு காரணம் அங்கே பரவும் அதிர்வலைகள். மனிதர்கள் அனைவரும் அதிர்வலைகளுக்குச் சொந்காரர்கள்தான்.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு அதிர்வலைகள். கோபமே உடையவர்கள் தங்களை சுற்றி கோப அதிர்வலைகளையும், சாந்த சொரூபிகள் சாந்தத்தையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட சூழலும் வாழ்க்கை முறையும் இருக்கும் போது மனிதர்களும் பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டுதான் இருக்கிறார்கள் இதனால் அமைதியும் சாந்தமும் எல்லா இடத்திலும் அவ்வளவு எளிதாக கை கூடி விடுவதில்லை.

கோவில், மசூதி, அல்லது தேவாலயம் என்ற ஒன்றை நிர்மாணித்து அங்கே வரும் மனிதர்களிடம் எல்லாம் அங்கே இறைவன் இருக்கிறான் என்ற புனிதத்தை புத்தியில் இரைத்தும் வைத்த பின்........அங்கே வரும் மனிதர்கள் நேர்மறையான ஒரு அதிர்வலைகளோடுதான் வருகிறார்கள். எல்லோருடைய எண்ணமும் சீராக இருக்கும் போது அங்கே ஒத்த அதிர்வுகள் ஏற்பட்டு நமது எண்ணங்களை அகற்றி விடுகிறது.

எண்ணங்கள் எல்லாம் வலுவானவை ஆனால் போலியானவை, ஏன் போலியானாவை என்று சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? மாறும் தன்மை உள்ள எல்லாமே இடைக்கால உண்மைகள்தான். நிரந்தர உண்மைகள் என்றென்றும் மாறாதது. எண்ணங்களும் மாறிக் கொண்டே இருப்பது. சூழலுக்கு ஏற்றவாறு ஒருவரை நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ காட்டி விடும். அவர் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர் என்ற அனுமானங்களே நமது எண்ணங்களாகின்றன.

பெரும்பாலும் அனுமானங்கள் அற்ற வாழ்வுதான் எளிதான வாழ்வு எனக் கொள்க. ஒரு உண்மை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அதை நீங்கள் காணவில்லை அல்லது உணரவில்லை எனும் போது அதைப்பற்றிய அனுமானம் வெற்றுதானே? அனுமானம் என்பது நம்மை உண்மையை விட்டு எப்போதும் ஒதுக்கியே வைக்கும் ஒரு காரணி.

அனுமானங்கள் எல்லாம் சேர்த்து ஒரு எண்ணத்தை கொடுக்க அந்த எண்ணம் திடப்பட்டுப் போய் ஒரு சூழலில் உண்மையை காணும் போது உங்கள் எண்ணத்தோடேயே அதைப் பார்க்க வைக்கிறது. சத்தியத்தினை நமது எண்ணங்களோடு சேர்த்து வைத்துப் பார்த்து அதன் தாத்பரியத்தை இழக்கத்தான் செய்கிறோம்.

உண்மையில் யாரும் யாருக்கும் எதுவும் பகிரவோ அல்லது நிறுவவோ வேண்டியது இல்லை. காரணம் எந்த விடயமும் நிறுவி உணர்த்தி விடமுடியாது. உண்மையில் உணரும் போது அதை யாரும் விளக்க வேண்டிய அவசியமில்லை. வார்த்தைகளால் மனிதர்களை மாற்றமுடியாது, எழுத்தினால் முடியாது ஆனால் சிந்திக்க வைக்கலாம். இப்படிப்பட்ட சிந்திப்புகளால் அவர்களுக்குள் பூக்கும் தாத்பரியங்கள்தான் சத்தியத்தின் பரிமாணங்களைப் பிரதிபலிக்கும்.

ஒரு நிகழ்ச்சியை கூறிவிட்டு மேலே தொடருகிறேன்....

மயிலாப்பூர் கோவிலுக்கு நான் ஒரு முறை தனித்து சென்றிருந்தேன். கபாலி, கபாலி என்று நெக்குருகிப் போய் அந்த கோவிலின் இடப்புறத்திலிருந்த சுற்றுப்பாதையின் ஓரத்தில் நான அமர்ந்து இருந்த போது அந்த மனிதரை கவனித்தேன். விபூதியும் ஒரு வேஷ்டியும், ஒரு சட்டையும், தாடியும் மீசையுமாய், மனிதர்கள் இடமிருந்து வலம் சுற்றிய போது அவர் வலமிருந்து இடம் சுற்றிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து கோபுரத்திற்கு வட மூலையில் தனியாக நின்று கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல ஒற்றைக் காலில் நின்று கொண்டு தலைக்கு மேல் கை தூக்கி கும்பிட்டுக் கொண்டு கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அவரின் பார்வை கோபுரத்தை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து சில ஆசனங்களை செய்து கொண்டிருந்தார். பின் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தமர்ந்தார். எனது ஆவலில் அவரின் அருகில் சென்று சில கேள்விகளை கேட்டேன். திரும்பி என்னை உற்று நோக்கினார். ஏன் கோவிலை வலமிருந்து இடம் சுற்றினார் என்று நான் கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும்....

நீங்கள் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறேன். இது எனது வழி. எனது வழியை ஏன் கேள்வி கேட்கிறாய்? உனது வழியில் போ என்றார். சொல்லி விட்டு வேகமாய் போய் விட்டார். அவருக்கு ஒரு 40 வயது இருக்கும். எனக்கு சம்மட்டியால் அடித்தது போல அந்த வார்த்தைகள் உறுத்திக் கொண்டு இருந்தன. இன்னமும் அவர் சொன்ன வார்த்தையின் ஆழமும் அதிர்வும் என்னுள் சுற்றிக் கொண்டுதானிருக்கின்றன.

யாரும் யாரிக்கும் பகிர இந்த உலகத்தில் செய்திகள் இல்லை. வெற்றுக் குப்பிகளாய் இருக்கு வார்த்தைகளை இரைச்சலாய் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். நிகழும் காரியங்கள் எல்லாம் அதுவாகவே தானியங்கு முறையில் ஒரு பெரும் சத்தியத்திற்கு உட்பட்டு நிகழ்கிறது ஆனால் மனித மனம் இது தன்னால் விளைந்தது, அவரால் விளைந்தது, இவரால் விளைந்தது என்று கொண்டாடுகிறது...

அவரும், இவரும், எவரும் வெறும் கருவிகள்தான். அந்த கருவிகளூடே கடந்து சென்று கொண்டிருக்கிறது ஒரு பெரும் சக்தி. அது இன்று இல்லை, நேற்று இல்லை.......அனாதியாய் நடந்து கொண்டிருக்கிறது. அனாதி என்றால் எப்போது ஆரம்பித்தது என்றும் தெரியாது. எப்போது முடியும் என்றும் தெரியாது. இது என் வழி என்று சொன்னவருக்கு அந்த வழியை ஏற்படுத்தியது ஒரு பெரும் சக்தி....

அவர் தன்னுடைய வழியைப் பற்றி கூறுவதில் எந்த லாபமும் எனக்குக் கிடைத்து விடப் போவது இல்லை மேலும் அவரும் ஒரு கருவி அவரைக் கடந்து செல்லும் பெரும் சக்தி என்னையும் கடந்து செல்ல வேண்டும். அப்படி கடந்து செல்வது அவரைப் போலவே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அது முற்றிலும் வேறாக கூட இருக்கும். அது என் வழி. இதை வெறுமனே அவர் ஏதாவது கூறிப் பகிர்ந்திருந்தால் அதை எனக்கு ஏற்றார்ப் போல ஒரு கற்பிதம் கொண்டு ஏற்று விட்டு நான் சத்தியத்தைப் பார்க்கத் தவறியிருப்பேன்...

நான் என்ற ஒரு உணர்வினை தொலைத்து விட்டவர் அவர். நானும் தொலைக்க அந்த நானை தொலைக்க வைக்கும் புறச்சூழலும் காரணிகளும் எனக்கு அமையும். இப்போது அவரை நான் கண்டேன் அது ஒரு காரணி. நான் என்ற தன்முனைப்பை தொலைத்தவர்கள் பிரபஞ்சத்தையே தன்முனைப்பாய் கொண்டவர்கள். இப்படி இருக்கும் போது உலகின் எல்லா செயல்களின் அர்த்தமும் தெரியும். மட்டுப்படாமல் எல்லோருடைய வலியும் அவர்களின் வலியாகும். எல்லோருடைய சந்தோசமும் அவர்களின் சந்தோசமாகும்...

இருமை இல்லாது ஒருமையாய் இருக்கும் பொழுதில் எல்லாமே புரியும்........! நகர்ந்து கொண்டே இருக்கிறேன். இன்னமும் அந்த பெருஞ்சக்தியினை உள்வாங்கி ஏற்றபடி எனது தேடலின் தூரங்கள் குறைந்து, குறைந்து ஒரு நாள் என் தேடல் சுத்தமாய் நிற்கும்....அன்று எல்லாமாய் நானிருப்பேன்....!

தற்காலிகமாய் இந்தக் கருவி தற்சமயம் வாய்மூடிக் கொள்கிறது.


தேவா. S


3 comments:

தனி காட்டு ராஜா said...

:)

சுபத்ரா said...

//...அப்போது கிடைக்கும் திருப்திக் கடலுக்குள் மூழ்கி இருக்கிறீர்களா?//

Yessss!!! “வாரியர்” கடலுக்குள் மூழ்கியது மட்டுமல்லாமல் ‘தேடல்’ என்னும் முத்துகள் கூட நிறைய எடுத்திருக்கிறேன்...!!

Pls Continue ur Classic writings..

சே.குமார் said...

Thedal Arumai anna...