Skip to main content

கலையாத கனவுகள் - 1

மணியைப் பார்த்தான் செல்வம்.. மூன்றரை ஆக இன்னும் பத்து நிமிடம் இருந்தது. நாலே முக்காலுக்கு மதுக்கூர்  வந்துச்சுன்னா பஸ்ஸ்டாண்ட் போய் அப்புறம் ஊரை விட்டு கிளம்ப எப்டியும் ஒரு அஞ்சு அஞ்சே காலாச்சும் ஆயிடும். அஞ்சே காலுக்கு மதுக்கூரை விட்டுக் கிளம்பினுச்சுன்னா படப்பைக்காடு, கண்டியங்காடு, வேப்பங்குளம் பண்ணை, தளிக்கோட்டை பாலத்துக்கு ஒரு அஞ்சே முக்காலுக்கு வந்து சேரும். முத்துப்பேட்டையில இருந்து வர்ற வண்டி பெருமகளூர் போறவரைக்கும் கூட்டம் அதிகமாத்தான் இருக்கும். எப்டிப் பார்த்தாலும் ஒரு ஆறு இல்ல ஆறே காலுக்கு பட்டுக்கோட்டை மைனர் பில்டிங்கிட்ட வந்துடும் சீக்கிரம் வேலைய முடிக்கணும்.....

யோசித்தபடியே பைல்களுக்குள் மூழ்கிக்கிடந்த செல்வம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கணக்கர். மனைவியையும் மகனையும் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க நாலேமுக்கால் பேருந்து ராஜ்கலாவில் வரச்சொல்லியிருந்தவர் சீக்கிரம் வேலையை முடிக்க பரபரத்துக் கொண்டிருந்தார். மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி. மதுக்கூர் ஜனத்தின் எல்லா தேவைகளையும் பெரும்பாலும் தீர்த்து வைப்பது பட்டுக்கோட்டைதான். இப்போதெல்லாம் பட்டுக்கோட்டை தாண்டி தஞ்சாவூர் தாண்டி திருச்சி வரை துணி எடுக்கச் செல்லும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பூம்புகார், சில்க் ஹவுஸ், ராஜா சில்க் பேலஸ், மகாராணி இவைதான் பட்டுக்கோட்டையின் பிரபலமான கடைகள்.. மீதி அத்தனை கடைகளும் அதற்கு பிறகு வந்ததுதான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி. அந்த ராசியை அனுசரித்தே ஜவுளிக் கடைகளின் கூட்டமும் நிரம்பி வழியும். எப்போது துணி எடுக்கப் போனாலும் செல்வம் போவது பூம்புகாருக்குத்தான். கடை முதாலாளி ரொம்ப ராசிக்காரர் என்று செல்வம் தன்னுடைய சக ஊழியர்களிடம் சொல்வதும் உண்டு. என்ன சார் பெரிய துணிப் பை எதுவும் கிடையாதா என்று புதுத்துணியைப் போட்டுக் கொடுக்கும் பிளாஸ்டிக் பையை கண்களால் அளவெடுத்துக் கொண்டே முதலாளியைப் பார்ப்பார்....

பேக்கிங் செய்து கொடுப்பது ஒரு இடம். முதலாளி அமர்ந்திருப்பது இன்னொரு இடம்... செல்வத்தின் குரலைக் கேட்டதும் பதறியபடியே முதலாளி ஏய்....தம்பி சாருக்கு பெரிய பையா எடுத்துக் கொடு என்று அதட்டல் போட்டபடியே கல்லாப்பெட்டியில் இருந்து இரண்டு மூன்று மணி பர்ஸ்களை எடுத்து செல்வத்திடம் கொடுப்பார். துணியை நியாயமான விலைக்கு வாங்குகிறானோ  இல்லையோ செல்வத்துக்கு இப்படி துணிப்பையும்,லெதர் பேக்கும், மணிப்பர்ஸும் வாங்கினால்தான் துணி எடுத்த திருப்தியே கிடைக்கும்....! கல்யாணம், காதுகுத்து, எல்லாத்துக்கும் பூம்புகார் லெதர் பேக் செல்வத்தின் கக்கத்தில் இருக்கும். சாமான் செட்டுக்கள் எல்லாம் பூம்புகார் மஞ்சள் பையில் இருக்கும். 

ஒழுங்கா மரியாதையா இந்த வாலுப் பைய பாபு சுமதி கூட வருவானா..? மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி வழியே பைலைப் பார்த்துக் கொண்டே வாயிலிருக்கும் வெற்றிலை எச்சில் பைலில் விழுந்து விடாமல் லாவகமாய் முகவாயைத் தூக்கிக் கொண்டு தன் 10 வயது மகனைப் பற்றி மெலிதான கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

                                                                         ***


ஒழுங்கா அளடா..... நான் கேட்டது நூறு. அடிச்ச இடத்துல இருந்து குழி கிட்ட சரியா 100 வருது தண்ணி எல்லாம் ஒண்ணும் குடிக்கல... ஏம்பி... என்ன ஏய்க்கிறியளா.... எங்களுக்கும் கிட்டிப்புல்லு விளையாட தெரியும். பாபு சுரேஷோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தான். ஓய்....புளுகு மூட்டை இங்க பாரு மறுபடி அளக்குறேன்.... சொல்லியபடியே கிட்டிப்புல் விழுந்து கிடந்த இடத்திலிருந்து கிட்டிக் கம்பால் சுரேஷ் அளக்க ஆரம்பித்திருந்தான்....95...96....97...98.....99 ஓய்....பாத்தீல்ல 100க்கு கிட்டிக் கம்பு குழிக்குள்ள போவுது....

சுற்றி இருந்த குட்டி நீதிபதிகள் தீர்ப்பினை சுரேஷ்க்கு சாதகமாக்க....

10 சூ... பத்து வாளக்கா புடிடா.... தம்பி எங்க போய் கட்டக் கடைசில கிட்டிப்புல்லு உழுவுதுதோ அங்க இருந்து மூச்சு விடாம கத்திக்கிட்டே வரணும் சூ...ஊஊஊஊஊஊஊஊஉன்னு.... இடையில வுட்ட அங்க இருந்து மறுபடி அடிப்பேன்.....

தலையெல்லாம் கலைந்து போய் முகம் எல்லாம் வியர்க்க, முட்டிக்கால் வரை இருந்த புழுதியோடு.. சரி தம்பி.... தோத்தா தோத்துட்டுப் போறேன்...நீங்க சரியா அளந்தா நூறு வரும் ஆனா இருக்கட்டும்....சூ நான் புடிக்கிறேண்டா...நான் எல்லாம் ரஜினியாந்து மாதிரி....கெட்டவைங்கள எதித்து நின்னு ஜெயிப்போம்...

கிட்டிப்புல் காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்தது. அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தான் பாபு...ச்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ இடையிலேயே மூச்சை விட்டு விட....மறுபடி....சுரேஷ் கிட்டிப்புல்லை காற்றில் பறக்க விட்டான்...பாபு சூ பிடிப்பதும் பாதியில் விடுவதும்....சுரேஷ் அடிப்பதும் மீண்டும் பாபு பிடிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்க....

டேய்....நான் பட்டோட்டைக்கு போறேண்டா... எங்க அப்பா வரச்சொல்லி இருக்காங்க அம்மாவோட நாலே முக்கால் ராஜ்கலால போறேன்.... நாளைக்கு மிச்சத்த புடிக்கிறேண்டா....சுரேஷிடம் டீல் பேசினான் பாபு. ஏம்பி என்ன...?  புடிக்க முடியலேன்னா... முடியலேன்னு சொல்லும்ம்பி.... விட்டுதர்றேன்... தோத்துப்புட்டு பொய் சொல்லி தப்பிக்கப் பாக்குறியா....

சுரேஷ் கேட்டதும் ரோஷமாக சரி நான் ஒண்ணும் பொய் சொல்லல.. நீ அடி நான் புடிக்கிறேன்.. .மறுபடி ரஜினி ஆனான் பாபு.


                                                                ****

குளித்து விட்டு வந்து புடவையைக் கட்டிக் கொண்டிருந்தவள்..... இந்த குரங்கு எங்க போச்சுன்னு தெரியலையே.... பஸ் நாலே முக்காலுக்கு வந்துடும். சீப்பை வாயில் கடித்தபடி தலையைப் பின்னிக் கொண்டிருந்த சுமதிக்கு பட்டுக்கோட்டைக்கு போவது என்றால் கொஞ்சம் சந்தோசம்தான். 24 மணி நேரமும்  அப்பனுக்கும் மகனுக்கும் அவிச்சு கொட்டறதுக்குன்னே எங்காத்தா என்னை பெத்தெடுத்து இருப்பா போலிருக்கு என்று அடிக்கடி சுமதி சொல்வதற்கு பின்னால் இயந்திரம் போன்ற அவளது தினசரி வேலைகள் இருக்கும். செல்வத்துக்கு 10 மணிக்குதான் ஆஃபீஸ் ஆனாலும் 7 மணிக்கு எழுந்து காப்பி போட்டுக் கொடுத்து காலைக்கு இட்லி அவிச்சு, சட்னி வச்சு, சாப்டக் கொடுத்து, மதியத்துக்கு  லஞ்ச் கட்டிக் கொடுத்து, ஆளைப் பேக்கப் பண்ணிப்புட்டு அஞ்சாவது படிக்கிற அறுந்த வாலுக்கு சாப்பாடு போட்டு ஊட்டி விட்டு, தலை சீவி பவுடர் போட்டு டவுசர் போட்டு சீவி சிங்காரிச்சு பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிபிட்டு பத்து மணிக்கு ஆறிப்போன காபிய மறுபடி சுட வச்சுக் குடிச்சு புட்டு, வீடு கூட்டி, பாத்திரம் துலக்கி, துணி துவைச்சு, மதியத்துக்கு சமைச்சு, எல்லாம் முடிச்சு செத்த நேரம் படுக்கலாம்னு தலை சாய்க்கிறப்ப நாலரை மணிக்கு பள்ளிகூடம் விட்டு பாபு வந்துடுவான்....மறுபடி காபி போட்டுக் கொடுத்து, அவனுக்கு கை கால் கழுவி விட்டு சாப்பாடு போட்டு, ட்யூசன்க்கு கொண்டு போய் விட்டு...

சுமதிக்கு அவ்வப்போது இது போன்ற சனிக்கிழமைகள் கிடைக்கும். நல்லது கெட்டதுக்கு பட்டுக்கோட்டைக்குப் போய் துணி எடுக்கும் சாக்கில், இரவு எதுவும் சமைக்காமல் பாபு மேல் பழியைப் போட்டு செல்வத்தை சம்மதிக்க வைத்து ஏதாவது ஒரு ஹோட்டலில் டின்னரை முடித்து விட்டு வீடு திரும்பும் சுகம்தான் அவளுக்கு சொர்க்கம்.

தலை பின்னி முடித்தவள் மணி நாலே கால் ஆனதைப் பார்த்து திடுக்கிட்டாள். அடப்பாவி பாபு.. பஸ் வர இன்னும் அரை மணி நேரந்தானடா இருக்கு அடுத்தபஸ் ஆறு பத்துக்குத்தானேடா அதுல கொள்ளைக் கூட்டம் இருக்குமே.... வாசலில் நின்று தெருவை பார்த்துக் கொண்டே இருந்தவள்.. லேட்டா போனா இந்த மனுசன் முனகியே தீத்துப்புடுவாரே நம்மள.....

யோசித்தபடியே கேட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவள்...... தெரு முனையில் அழுக்கு மூட்டையாக பாபு ஓடி வருவதைப் பார்த்து சந்தோசமானாள்.
                                               
                                   

                                                            ...தொடரும்...





தேவா சுப்பையா...






Comments

//துணியை நியாயமான விலைக்கு வாங்குகிறானோ இல்லையோ செல்வத்துக்கு இப்படி துணிப்பையும்,லெதர் பேக்கும், மணிப்பர்ஸும் வாங்கினால்தான் துணி எடுத்த திருப்தியே கிடைக்கும்//

:) தமிழனின் பர்ச்சேஸ் புத்தி
அண்ணா...
கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க...
கிட்டி விளையாடுவதை அப்படியே மனசுக்குள் நினைத்து ரசிக்க வைத்து விட்டீர்கள்...

தொடருங்கள்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...