Skip to main content

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் V




















ஆன்மாவின் பயணம் என்னும் இந்த தொடரின் நான்காவது பாகத்தை நான் எழுதியது 2011 ஜனவரி மாததில்....! அதன் பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் அதன் அடுத்த அடுத்த பாகங்களை எழுத வேண்டும் என்று தோன்றவில்லை....மனதில் தோணும் போது எழுதலாம் என்று வலுக்கட்டாயமாய் வார்த்தைகளைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டு வர முயலவில்லை.

இதோ அதன் ஐந்தாம் பாகத்தை நான் வெளியிடும் காலச் சூழல் முற்றிலும் மாறிப் போயிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் என்னைச் சுற்றிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். இப்போது ஏற்பட்டிருக்கும் புரிதல் அசாத்தியமானது...

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து என்னோடு பயணிப்பவர்கள் வெகு சிலரே...! பலர் வந்தனர்....சென்றனர்...! சென்றவர்களை எல்லாம் ஏதோ ஒரு சூழலால் உந்தப்பட்டு சென்றவர்கள். உடன் வந்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு சூழலில் உந்தப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்..நாளை அவர்களும் செல்லவும் கூட செய்யலாம்...!

ஒரு அலாதியான அனுபவத்தை வார்த்தைகளாக்கும் முயற்சியாய் இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டு இந்த கட்டுரையை எழுதும் சூழலே ஒரு மிகப்பெரிய அனுபவமாய் ஆகிப்போனது...!

ஆமாம்....வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லைதானே..!

தொடர்ந்து பயணிப்போம்...

PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஐந்தாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...


இனி...

பேருந்தில் ஏறிய சில நொடிகளில் மனதிலிருந்து வெளிப்பட்ட அதிர்வுகள் மீண்டும் என்னை கீழே இறங்கச் சொன்ன போது வத்தலகுண்டு கடந்து கொடைக்கானல் மலையில் ஏறும் முஸ்தீபோடு பேருந்து ஒரு உறுமலோடு நகர்ந்து கொண்டிருந்தது...! எங்கே செல்லவேண்டும் என்று கண்டக்டர் என்னிடம் கேட்கவும்...அடுத்த ஊரில் இறக்கிவிடுங்கள் என்று சட்டைப்பையில் கை நுழைத்து கிடைத்த ரூபாய் காகிதங்களை அவரின் கையில் திணிக்கவும்...கண்டக்டர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

ஆமாம்...இருந்த 75 ரூபாயையும் சொச்சத்தையும் அவரின் கையில் திணித்தால் அவர் அப்படித்தானே பார்ப்பார்....! மிச்ச ரூபாயை கையில் திணித்த படி மிரட்சியான பார்வையை பரவவிட்ட படி டிக்கட்டை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். இயல்புகள் என்று இந்த உலகம் ஒன்றினை எப்போதும் பிடித்து வைத்திருக்கிறது. அந்த இயல்புகளை விட்டு கடந்து நிற்கும் மனிதர்களை பெரும்பாலும் அது ஆச்சர்யமாய்த்தான் பார்க்கிறது. புத்திக்குள் கோடுகள் கிழித்துக் கொண்டு எல்லைகளால் நிரம்பிப் போயிருக்கும் ஒரு வாழ்க்கை கொடுத்த அலைகழிப்பிலிருந்து விடுபடவே நான் வீடு விட்டு நகர்ந்து வந்திருக்கிறேன் என்பது கண்டக்டருக்கு எப்படி தெரியும்..!!!!

பணம் என்பதை எப்போதும பெரும் பொருட்டாக எல்லோரும் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றே உறவுகள் என்னும் தொடர்புகள் மெல்ல மெல்ல பட்டுப் போகத் தொடங்கி விட்டன. மனித வாழ்வின் சுமூக இயங்கு நிலைக்காக யாரோ பண்டமாற்றாய் வைத்து இருந்த ஒரு பழக்கம் இன்று நாட்டுக்கு நாடு பணமாய் மாறி மனிதர்களை இயக்கும் மந்திரவாதியாய் மாறிப் போய் நிற்கிறது. கோடி ரூபாய் இருந்தால் அவன் கோமான் என்று கையெடுத்து கும்பிடும் சம்பிரதாயச் சுற்றுக்கு ஆசைப்பட்டு மனிதர்கள் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டேருக்கிறார்கள்.

அடிப்படையில் மனித தேவை என்பது மரியாதைதான். அடுத்தவன் தன்னைப் பற்றி மரியாதையாக நினைக்க வேண்டும். எப்போதும் தன்னை புகழவேண்டும். அதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனை செயல்களையும் மனித மனம் மறைமுகமாய் அரங்கேற்றிக் கொள்கிறது. படைப்பில் அறிவாளிகள் என்றும் முட்டாள்கள் என்றும் யாரும் கிடையாது. சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவனையும், தேவையான விசயத்தில் கூர்மையாய், கவனமாய் செயல்படுகிறவனையும் நாம் அறிவாளிகள் என்கிறோம். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்து அதனால் துல்லியமான முடிவுகளைப் பெற்றுத் தருவகிறவர்களை திறமைசாலிகள் என்கிறோம் அவ்வளவுதான்...!

வாழ்க்கையை கூர்மையாய் கவனித்து வாழ்பவன்...கவனிக்காமல் ஏனோதானோ என்று வாழ்பவன். இந்த இரண்டு வகைக்குள்தான் திறமைசாலிகளும், திறமையற்றவர்களும் இருக்கிறார்கள். நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் இடைவிடாது கற்பித்துக் கொண்டிருக்கிறது. கற்பித்தால் தன்னை உலகம கவனிக்கும் என்று இடைவிடாமல் விளம்பரமும் செய்து கொண்டிருக்கிறது.

அறச்செயல்களின் பலன்கள் தானே வெளிப்பட்டு எங்கும் தானியங்கியாய் பரவிக் கொள்ளும் என்ற இயற்கையின் விதியறியா மூடர்கள் அதை விளம்பரம் செய்து கொள்கிறார்கள். புகைப்படங்கள் எடுத்து புகழ் பாடிக் கொள்கிறார்கள். இது அகங்காரத்தின் வெளிப்பாடு..தர்ம சிந்தனைக்கு எதிரானது.

தங்களை பற்றி கட்டியம் கூறிக் கொண்டே கட்டியம் கூற தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தையும் வைத்துக் கொள்வதைப் போல ஒரு ஈனப் பிழைப்பு கிடையாது. வாழ்க்கை மிக அழகாக இயற்கையால் நடத்திச் செல்லப்படுகிறது. மனிதர்கள் அதை பெரும்பாலும் சிதைக்கிறார்கள். தியானம் என்பது சலனமில்லா மனித மனத்தின் தெளிவு. இதைக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்வதும் தவறு .. கற்றுக் கொடு என்று கேட்பதும் தவறு. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும், ஒவ்வொரு கூச்சலுக்கும், ஒவ்வொரு மனிதக் கூட்டங்களின் சந்திப்புக்களுக்கும் பிறகு ஒரு மனிதன் என்ன நிகழ்கிறது தானே உற்றுக் கவனிப்பானாயின் தியானம் என்னும் நிகழ்வு அவனுக்கு சிறகுகள் பூட்டி எங்கோ தூக்கிச் செல்லும்.

ஆர்ப்பாட்டங்கள் கடந்த தனிமையில் கிடைக்கும் ஒரு பேரனுபத்தை சோகம் என்று கருதி மனிதன் அதை நிராகரிக்கவே முயலுகிறான். அங்கே சற்று கூடுதல் கவனம் செலுத்தி நிற்பானாயின் அவன் தேடிக் கொண்டிருக்கும் நிம்மதியின் நுனி அங்கே இருப்பதை உணர்ந்து கொள்வான். ஆமாம் அங்கேதான் காலம் தன் சுட்டு விரலை நீட்டிக் கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதை வெறுமனே பற்றிக் கொள்ள வேண்டியது மட்டுமே...!

நினைவுகள் இல்லாத, புறச்சூழல்கள் கடந்த ஒரு வெளியில் எல்லா உணர்வுகளையும் ஏந்திப் பிடித்தபடி அடடே.... அடடே... அடடே...என்று ஆனந்தத்தில் லயித்து பின் ஒருவன் மீண்டும வெளிவரும் போது சராசரி வாழ்க்கையில் இருக்கும் அபத்தங்கள் புலப்படும். தன் கையை ஊண்டி தானே கரணம் பாய வேண்டும். இங்கே உதவி என்ற வார்த்தையே அபத்தம். ஒவ்வொரு சூழலும் ஒரு குரு. ஒவ்வொரு அனுபவமும் ஒரு உதவி.

நான் வாழ்க்கையைப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வாழ்க்கையை இன்னும் தெளிவாக வாழவே வீட்டை விட்டு வெளியேறினேன். துறவி என்ற முத்திரையை உடனே எனக்கு இந்த சமுதாயம் குத்தி எனக்கு ஒரு காவி சட்டையையும், வேஷ்டியையும் கொடுத்து ஒன்று தூற்றும் அல்லது போற்றும். பெரும்பாலும் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு இடத்திலேயே மெய்யான ஞானம் ஒளிந்து கிடக்கிறது.

மாமரத்தில் மாங்காய்கள் காய்ப்பதும், தென்னை மரத்தில் தேங்காய்கள் வருவதும் இயல்பு மற்றும் நியதி. இதில் எது மாறினாலும் மாற விரும்பினாலும் அது அபத்தம். மனிதர்களும் அப்படித்தான் எல்லோருக்கும் ஒரு பொதுவான நியதியை வகுக்கவே முடியாது....ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, ஒவ்வொரு சூழலையும் அவன் வாங்கிக் கொள்ளும் விதமும் வெவ்வேறு ... இதில் எங்கே இருந்து பொதுவன நியதிகளை நாம் பிறப்பிப்பது..

அதிர்ஷ்டவசமாய் யாரோ ஒருவர் அல்லது இருவரின் மனோநிலைகள் ஆச்சர்யமாய் ஒத்துப் போக வாய்ப்புகள் உண்டு அவ்வளவுதான்!

நின்ற படியே பேருந்தில் என் எண்ணங்கள் எங்கோ பறந்து கொண்டிருக்க. உடலுக்குள் மீண்டும் என் புத்தியை திணித்துக் கொள்ள நான் முயன்ற போது.... பேருந்தின் நடத்துனர் மெல்ல என் தோள் தட்டினார்.. தம்பி.. இது மூணாவது தடவையா உங்கள கூப்புடுறேன்...என்று ஏதோ ஒரு ஊர் பெயரைச் சொல்லி அதுதான் அடுத்த ஸ்டாப்பிங்க் என்று கூறி படியை நோக்கி இறங்கச் சொல்லி கையைக் காட்டினார்....

மேற்கு தொடர்ச்சி மலைகளின் நீட்சி தமிழ்நாட்டுக்குள் எட்டிப்பார்த்திருக்கும் ஒரு இடம் கொடக்கானல் மலைகள்.....இயற்கையின் ஆசிர்வாதத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மலைச்சரிவின் காற்று என்னை இறுகத் தழுவி கொடுத்த வரவேற்பில் நான் திக்கு முக்காடிப் போயிருந்தேன்.

பேருந்து என்னை சட்டை செய்யாமல் மலை நோக்கி மேலேறே.. அந்த குக்கிராமத்தில் இருந்த மனிதர்கள் தங்கள் வேலைகளுக்காய் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்த அவசரத்தில் என்னை கவனிக்கவில்லை. நான் மீண்டும் பேருந்து வந்த வழியே சரிவில் அந்த கிராமத்தை விட்டு மெல்ல வெளியேற ஆரம்பித்தேன்...

20 நிமிட நடையில் சுத்தமாய் மனிதர்கள் தொலைந்து போயிருக்க...சாலையின் இடது புறச் சரிவில் மெல்ல இறங்கி மரங்களினூடே நடக்க ஆரம்பித்தேன்...

மதியம் கடந்திருந்த அந்த நேரத்தில் மணி எத்தனையாயிருக்கும், நான் எங்கே போகிறேன்? ஏன் போகிறேன்? யாரை பார்க்க போகிறேன்..? என்றெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியாதோ அது போலத்தான் எனக்கும் தெரியாது....

புதருக்குள் ஒரு மிகப்பெரிய சாரைப்பாம்பு என்னை சட்டை கூட செய்யாமல் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது..

உள்ளுக்குள் சில்லிட்ட பழக்கத்தின் வாசம் மெல்ல ஒரு பயத்தை உடம்பு முழுதும் பரவ விட..... புத்தி அதை வெட்டி வீழ்த்தியது...

நான் காட்டுக்குள் முன்னேறிக் கொண்டிருந்தேன்....

(பயணம் தொடரும்...)


தேவா. சு


Comments

///தன் கையை ஊண்டி தானே கரணம் பாய வேண்டும். இங்கே உதவி என்ற வார்த்தையே அபத்தம். ஒவ்வொரு சூழலும் ஒரு குரு. ஒவ்வொரு அனுபவமும் ஒரு உதவி.////

:)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...