Skip to main content

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VI




PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஆறாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...


இனி...


நான் காட்டுக்குள் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தேன். என் வீடு என்னைத் தேடி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். அது பற்றிய எண்ண விவரணைகளுக்குள் செல்லாமல் மெல்ல சமகாலச் சூழலுக்குள் ஒரு சர்ப்பத்தைப் போல புத்தியை தவழவிட்டேன். அடர்த்தியாய் விரிந்து சென்று கொண்டிருந்த மலைச்சாரல் பாதை அது...! ஆங்காங்கே சிறு சிறு சுனைகள் ரகசியமாய் பாறைகளின் இடுக்குகளில் இருந்து கசியும் நீரினால் உருவாகி அவ்வப்போது கால்களை சில்லிடச் செய்தாலும்....

அடர்த்தியான சுற்றுப் புறக் குளிரில் அந்த குளுமை தனித்து ஒன்றும் தெரியவில்லை. சாந்தமாய் இருந்த மனதுக்கு கிடுக்குப் பிடி போட்டு அதன் மீது ஏறி ஆத்மா சவாரி செய்து கொண்டிருந்தது. ஒரு முரட்டுக் குதிரையை கடிவாளத்திற்குள் கொண்டு வந்து தனது இஷ்டப்படி சவாரி செய்வதற்கு குதிரை ஓட்டுபவனிடம் வெறுமனே முரட்டுத் தனமும் கையில் சாட்டையும் இருந்தால் மட்டும் போதாது. 

மூர்க்கமாக நடந்து கொண்டு முரட்டுத் தனமாய் குதிரையைக் கையாளும் போது அது எதிர்த்து மீண்டும் மூர்க்கம் காட்டும். குதிரையை அடக்க, அடக்க திமிறும்...அடக்குகிறேன் பேர்வழி என்று சாட்டையை சொடுக்கினால் வலி தாங்க முடியாமல் அது தறிகெட்டு ஓடும். ஓடும் வேகத்தில் தாறுமாறாய் நம்மை கீழே தள்ளி விட்டு சவாரி செய்யும் ஒரு சுகானுபவத்தை சிதைத்தேவிடும்...

முரட்டுக் குதிரையைக் கூட அடக்கி ஆள்வன் முதலில் குதிரையை பற்றி தெளிவந்தவனாய் அறிந்தவனாய் இருக்க வேண்டும்.  முரட்டுக் குதிரையை அதன் போக்கில் ஓடவிட்டு சலனமில்லாமல் முதலில் சவாரி செய்யவேண்டும், அங்கும் இங்கும் அலையும் குதிரை தன் ஆவல் தீர அங்கும் இங்கும் ஓடி...ஓடி மூச்சிறைத்து களைத்து ஓயும் வரை கடிவாளத்தை கெட்டியாய் பிடித்தபடி குதிரையின் அங்குல அங்குலமான, அசைவுகளை கவனித்தபடி அதனை சமாதனப்படுத்தியபடியே அதன் மீது அமர்ந்து,  எப்படி எல்லாம் கீழே தள்ள முயலுகிறது, அதன் உச்ச பட்ச வேகம் எவ்வளவு என்ற கணக்கீட்டோடு அதன் பிடரியை தடவி ஆசுவாசப்படுத்தி மெல்ல, மெல்ல குதிரைக்கு பரிச்சையமானவனாய் நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும், குதிரையோடு சினேகமாகும் வித்தை இது.

ஓடி ஓடி சலிக்கும் குதிரை மெல்ல, மெல்ல மூர்க்கம் குறைந்து, தன் மீது இருப்பவனை உணர ஆரம்பிக்கும், மூச்சிறைத்து அது நிற்கும் போது அதற்கு தண்ணீர் காட்டி, உணவு கொடுத்து தாடை தடவி, முதுகினை கைகளால் உரசி, வயிற்றினை தட்டிக் கொடுத்து ஸ்னேகமாக்கிக் கொள்ள நேர்மறையான அதிர்வுகளை ஏற்றுக் கொண்டு அதன் மூர்க்கம் தணிந்து மெல்ல, மெல்ல தன்னை நேசிப்பவனுக்கு அது அடி பணிய ஆரம்பிக்கும். இங்கே அடக்குதல் என்ற ஒன்று கிடையாது. அறிதல் என்ற ஒன்றே இருக்கிறது. குதிரையை அறிந்து அணுக, அது பணிந்து, சொற்படி கேட்கும்.

மனமும் அப்படித்தான். அதை எதிர்த்து முரண்டு பிடிக்க நம்மை தறிகெட்டு எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. கீழே தள்ளிவிடுகிறது. கோரமான எண்ணங்களை வேகமாய் பரப்புகிறது. சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மாறாக ஸ்னேகமாய் மனதை உற்று நோக்கி, என்னதான் உனக்குவேண்டும் என்ற ஒரு வாஞ்சையோடு பார்க்கையில் அது ஒரு நாய்க்குட்டியாய் வால் குலைக்கிறது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்...? என்று பாவமாய் நம்மை பார்க்கிறது அப்போது போடவேண்டும் கடிவாளத்தை, ஆத்மா என்னும் உள் உணர்வை உசுப்பிவிட்டு மனதின் மீது ஏறி மெல்ல மெல்ல புலன்களை விட்டு கழன்று உள்நோக்கி பயணிக்க பயணிக்க....

ஆத்மாவானது மனதின் துணை கொண்டு மனமற்ற வெளிக்குள் வந்து நிற்கிறது. அப்படியான நிலையில் மனம் என்ற ஒன்றும் ஆன்மா என்ற ஒன்றும் இல்லாமல் போக சுற்றி இருக்கும் எல்லாமே ஒன்றாகிப்போக கேட்கவும் பார்ப்பவனும் இல்லாமல் வெறும் ஒலியும் பார்வையும் மட்டுமே மிஞ்சுகிறது. இங்கு யார் பார்க்கிறார்கள்..? தெரியாது...ஆனால் வெறுமனே பார்வை இருக்கிறது. இங்கே யார் கேட்கிறார்கள்....? தெரியாது. வெறுமனே சப்தம் இருக்கிறது. யார் அனுவிக்கிறார்கள்...? அதுவும் தெரியாது. இங்கே அனுபவித்தல் மட்டும் நிகழ்கிறது. புலன்கள் இல்லை ஆனால் அவற்றினால் ஏற்படும் அனுபவம் அனுபவித்தலாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது...

சரி.. இது எப்போது நிகழும்? மனதை அறிந்து ஆன்மாவால் அதை முடுக்கிவிட்டு மெல்ல மெல்ல புலன்கள் கடந்து புறச்செயல்கள் மறக்கும் போது நிகழும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? மனதை அறிய வேண்டும். சரி மனதை அறிய என்ன செய்யவேண்டும்? ஒரு நாளில் ஒரு அரைமணி நேரமாவது தனியாய் இருக்கவேண்டும். தனியாய் இருக்கையில் என்ன செய்ய வேண்டும்..? ஒன்றும் செய்யவேண்டாம். ஒன்றும் செய்யாமலிருத்தல் என்றால் என்ன? வெறுமனே தன்னையே உற்று நோக்குதல். தன்னை உற்று நோக்கையில் என்ன நிகழும்? எப்போதும் வெளியில் உள்ள புறக்காட்சிகளை பார்த்து அதில் பயணித்து அது பற்றி அபிப்ராயம் தெரிவிக்கும் மனம் தன்னைத் தானே முதன் முதலில் பார்க்கும் போது என்ன சொல்வது ? என்ன அபிப்ராயம் சொல்வது என்று தெரியாமல் முதலில் திகைக்கும்...

சரி பிறகு..?

பிறகு  தன்னைப் பற்றிய அபிப்ராயங்களை வேகமாக ஏதேதோ சொல்வது போலச்  சொல்லி ஏதோ ஒரு ஓட்டையின் மூலம் மீண்டும் புறம் நோக்கி பாய முற்படும். சரி .அப்போது என்ன செய்யவேண்டும்.... ? மீண்டும் தன்னையே பார்க்கவேண்டும். இது நீடிக்க, நீடிக்க மனம் அலுத்துப் போய் சுருண்டு போய் சொல்ல செய்திகள் ஏதுமின்றி புலன்களை எல்லாம் உள்ளிழுத்துக் கொண்டு உள்நோக்கி நகரும். உணர்வோடு கலந்து மனம் பயணிக்கையில் மனம் என்ற ஒன்றே இல்லை என்பது தெளிவாகும்

இப்படித்தான் மனம் என்னும் புரவி மீது என் ஆன்மா ஒரு சக்கரவர்த்தியைப் போல பயணித்து அந்த மலைப்பாதையை விழிகளால் சுகித்து சுகித்து உடல் மறந்து ஒரு ஏகாந்த லயிப்பில் அந்த அனுபவத்தை ரசித்துக் கொண்டே வந்தது. அங்கே ரசனை என்ற ஒன்று மட்டுமே இருந்தது. கேட்கவும் பகிரவும் யாருமில்லை.

மலைச்சாரல் சரிவுகளில் நடந்து சிறிது சமப்பட்ட இடத்துக்கு வந்து நான் நின்ற போது சூரியன் அவசர அவசரமாய் கீழிறங்கிக் கொண்டிருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் மெல்ல சிரிக்க ஆரம்பிக்க ஒரு நெடிய மரத்தின் கீழ் வந்து நின்றேன். சுற்றிலும் பறவைகளின் சப்தம் காதுகளுக்குள் ஊடுருவி என்னை கடந்து சென்று கொண்டிருக்க...மெல்ல மெல்ல ஆன்மாவை கீழே தள்ளி விட்டு மனக்குதிரை மீண்டும் பழக்கட்ட விசயங்களை செரித்துப் போட்டு புலன்களின் வழியே வெளியே பயணிக்க ஆரம்பித்து இருந்தது....

தடுக்க முடியவில்லை. தடுக்கவும் கூடாது. முரண்டு பிடித்தால் வேகமாய் ஓடும் பிசாசு அது. மெளனமாய் மனதை வேடிக்கை பார்க்கையில் அது என்னை பயமுறுத்த தொடங்கியிருந்தது. காட்டு மிருகங்கள் வந்து என்னை  கொன்றாலும் கொன்று விடும் என்று பயமுறுத்தியது. 

வீட்டில் சுகமாய் பஞ்சு மெத்தையில் குளிரூட்டப்பட்ட அறையில் காதுவரை கம்பளிப் போர்த்திக் கொண்டு தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளை மாற்றிக் கொண்டே தூங்கலாமே என்ற சுகானுபவத்தை கொண்டு வந்து என் முன் போட்டு திரும்ப வீட்டுக்கே போய்விடுவோம் என்று கெஞ்சியது. உறவுகளின் முகத்தை எல்லாம் மெல்ல ஒவ்வொன்றாய் காட்டி முதுகு தண்டினை சில்லிடச் செய்து.. வா ஊருக்கே ஓடிவிடுவோம் என்று கெஞ்சியது....

சலனமில்லாமல் எல்லாவற்றையும் உள்ளுணர்வால் கவனித்துக் கொண்டிருக்கையில், என் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல கரை புரண்டோட, லெளகீக பந்தங்களின் கட்டுக்கள் எவ்வளவு உறுதியானவை என்றும் அவை எப்படி எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன என்றும் தெளிவாய் புரிய இரத்த ஓட்டம் தாறுமாறாய் ஓட, நெஞ்சின் ஓரத்தில் ஒரு வலி வந்து போனது அது நெஞ்சு முழுதும் ஒரு கனத்தை பரவவிட.......

நான் மெல்ல நகர்ந்து கொஞ்சம் உயரமய் இருந்த ஒரு சிறு குன்றினைப் போல இருந்த பாறை மீது ஏறி அமர்ந்தேன். முழுதுமாய் இருட்டி விட நிலவின் ஒளி தனது அதிகாரத்தை பூமியெங்கும் செலுத்த ஆரம்பித்து இருந்தது. ஏதேதோ வினோத சப்தங்கள் அந்த காட்டுக்குள் கேட்கத் தொடங்க...., மலைப் பிரதேசத்துக்குரிய எல்லா குணங்களோடும் அந்த பகுதி கடுமையாய் குளிர ஆரம்பித்திருந்தது. இடைவிடாத சில் வண்டு சப்தங்களை விட வேகாமாய் வீசும் காற்றின் சப்தம் ஊ..ஊ.. .ஊ என்று அமானுஷ்யமாய் என்னை கடந்து செல்ல.. மனம் மேலும் என்னை பயமுறுத்தியது...

கையிலிருந்த பையிலிருந்து சிறு துணியை எடுத்து பாறையின் மீது விரித்தேன். அதன் மீது சம்மணமிட்டு அமர்ந்தேன்......! மெல்ல மூச்சினை உள்ளே இழுத்து நிதானமாய் ஆழமாய் சுவாசித்தேன். வெகு நிதானமாய் மூச்சினை வெளியே விட்டேன்.  மீண்டும், மீண்டும் இதையே செய்ய.. மனம் சட்டென்று நின்று மூச்சினை பார்க்க ஆரம்பித்தது. உள்ளே இழுத்தலையும், வெளியே விடுதலையும் ஆற அமர வெகு நிதானமாக செய்யச், செய்ய மனம் மறுபடியும் வேசத்தை கலைத்து விட்டு உள்ளுக்குள் வந்து ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டு சலனமில்லாமல் சுவாசத்தையே பார்த்துக் கொண்டிருந்தது....

உடலென்னும் உணர்வையும் கடந்து நான் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை... வெறும் சுவாசமாக மட்டுமே நான் நின்று கொண்டிருந்தேன்....

அப்போது........

மெலிதாய் காற்றில் கலந்து......ஒரு மனித சப்தம் என் செவிகளுக்குள் ஊடுருவ...திடுக்கிட்டு கண் விழித்தேன்.. ! ஆமாம் அது மனித சப்தம்தான்...இந்த நடுக்காட்டில்.. யாராயிருக்கும்...?

அந்த சப்தத்தை இன்னும் கூர்மையாய் கேட்க ஆரம்பித்தேன்....


(பயணம் தொடரும்...)


தேவா. சு



Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...