நீயும் நானும் யாரோவாகிப் போயிருந்த ஒரு உச்சி நேரத்தில் என் சாலையின் முன் எதிர்ப்படுகிறாய் நீ... வார்த்தைகளை விழுங்கிக் கொண்ட ஒரு ஆழ் மெளனம் ஒன்று ஞாபகங்களைக் கிளறி எடுத்து என்னை பின்னோக்கி இழுத்து கதைகள் பேசி நம் கடந்த காலங்களை ஒவ்வொன்றாய் என் முன் கடைவிரித்துப் பார்க்கிறது... ஏதாவது சொல்ல வேண்டும் என்ற.. ஆசைகளை எல்லாம் தின்று கொண்டிருக்கும் இயலாமை குற்ற உணர்ச்சியோடு எழுப்பும் என் காலடி சப்தங்களை எதிர் கொள்ள முடியாமல் தவித்து நடக்கிறேன் நான்.... எத்தனையோ முறை ஊடுருவிப் பார்த்து எனக்கான காதலில் நான் மிதந்து கிடந்த உன் விழிகள் என்னிடம் இன்று உயிர் இல்லை என்று பகிர்ந்த செய்தியை உன் இமைகள் மெளனமாய் ஆமோதிக்க.... இதோ என்னை கடந்து செல்கிறாய் நீ.... புன்னகையாவது நீ செய்திருக்கலாம்... என்ற நினைவுகளோடு புன்னகைக்க முடியாத என் கனவுகளை இதோ... கவிதையாக்கி என் எழுத்துக்களிலாவது புன்னகைக்கலாமா என்று முயன்று கொண்டிருக்கிறேன்... நான்...! தேவா சுப்பையா...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....