Skip to main content

Posts

Showing posts from October, 2015

யுத்தம்..!

சிறு ஓய்வுக்குப் பிறகெழுந்து உடை தரித்தாயிற்று தலைக்கவசத்தை மனைவி எடுத்துத் தருகிறாள் வாசல் வரை சென்று மீண்டும் வந்து பிள்ளைக்கு முத்தமிடுகையில் மறந்து போன உடைவாளினை எடுத்து இடுப்பில் தரித்துக் கொள்கிறேன் காலையிலிருந்து கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருக்கும் என் புரவி கனைத்து என்னை அழைக்கிறது... அதன் கழுத்து தடவி வயிற்றில் கால் உதைத்து கடிவாளம் சொடுக்கி முறுக்குகையில் திமிறி எழுந்து களம் நோக்கி... விரைகிறதென் புரவி, அடுத்தென்ன நிகழுமென்றறியா அதிரகசிய வாழ்க்கையொன்றைப் பருகியபடி சலனமற்று நகருமென் வாழ்வில் நித்தம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது முடிவில்லா யுத்தம்...! தேவா சுப்பையா...