Skip to main content

தாளமிங்கு தப்பவில்லை...யார் மீதும் தப்பு இல்லை!



சில விசயங்களை உள்ளுக்குள் அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறேன். பேரமைதிக்குள் விழுந்து கிடந்த அந்த காலமற்ற பொழுதையே எண்ணி மனம் ஏங்கிப் போய் அன்றாடங்களில் பேசவும், மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும் குறைத்துக் கொள்ளச் சொல்கிறது. விவரிக்க முடியாத புலன்களைக் கடந்த ஒரு விசயத்திற்குள் நான் ஏனோ, தானோ என்று சென்று விழுந்து விட்டேன்.

சப்தமில்லை, குணம் இல்லை, நிறம் இல்லை, பொருட்கள் என்று எதுவுமே இல்லை. உணர்வு மட்டுமே எஞ்சி இருக்க, கிடந்து பார்த்த அந்த பெரும் அனுபவத்தை விட்டு வெளியே வர சுத்தமாய் பிடிக்கவில்லை. தேவையின் அடிப்படையில் இங்கே யாரும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதே இல்லை. சொல்ல வந்த செய்தியையும், கேட்க வேண்டிய செய்தியையும் விட்டு விட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு எப்படி ஒட்டி வாழ்வது  என்பதுதான் இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் பயிற்சி.

எதுவுமே இங்கே சிறப்பு இல்லை என்று தெரிந்த பின்னால் மூச்சுக்கு முன்னூறு தடவை தொடை தட்டி கொக்கரித்து நான் செய்தேன், நான் செய்தேன் என்று புஜபலம் காட்டும் ஒரு வாழ்க்கை ஏளனத்துக்குரியதா இல்லையா? மனித மனத்தை சீரமைத்து ஒரு வழித் தடத்துக்குள் கொண்டு வர புரிதல் கொண்ட மனிதர்கள் உருவாக்கிய எல்லா மதமும் தோற்றுதான் போய் விட்டது. வாழ்க்கையை விட்டு வெளியே வந்து யோசிக்க யாதொரு அவகாசத்தையும் மதங்கள் மனிதர்களுக்கு வழங்கவில்லை மாறாக என் மதம் பெரிதா..? உன் மதம் பெரிதா...? என்ற சண்டையை இங்கே உருவாக்கி விட்டிருக்கிறது.

பேசுகிறார்கள்....மனிதர்கள் பேசுகிறார்கள்..... எழுதுகிறார்கள் .. மனிதர்கள் எழுதுகிறார்கள்.....சீர்திருத்தம் செய்து விட்டேன் என்றும், செய்வோம் என்றும் பேசுகிறார்கள். யுகங்களாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் ஒப்பற்ற சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் அருகதையை பெற யாருமே இல்லாமல் போக, ... இவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சபிக்கப்பட்டது இங்கே விதியாகிப் போயிருக்கிறது. யார் யாரை இங்கே சபித்தார்கள்...? என்று ஒரு கேள்வி வரும்...

நமது செயல்களால் இப்போது நம்மை நாமே சபித்துக் கொள்கிறோம். நான், நான் என்று சபிக்க, சபிக்க சாபம் அதன் விளைவுகளை அடுத்த, அடுத்த வெளிப்பாடுகளுக்கு அடுத்த, அடுத்த பிறவிகளுக்கு எடுத்துச் செல்கிறது. மறுபிறவி இல்லை என்று நம்பி இங்கே நான் கூறுவதை மறுக்கவும் சிலர் செய்யலாம். 

நீங்கள் கூறும் மறுபிறவி இல்லை என்றுதான் நாமும் கூறுகிறோம்..!!!!

மறு பிறவி என்றால்  மீண்டும் வேறு ஊரில் நான் பிறந்து நான் போன பிறவியில் தேவா என்று சொல்வது கிடையாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி சொல்வது பித்தலாட்டம். பெரும் மோசடி. தேவா என்பது இந்த உடலை அடையாளப்படுத்த வைக்கப்பட்ட ஒரு பெயர். இந்த உடலுக்கு அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கும் புலன்கள் எல்லாம், சமகாலச் சூழலைத்தான் புத்தியில் அனுபவங்களாக சேகரிக்கிறன. நினைவுப் பகுதியில் செயல்கள் சம்பவங்களாக பதியப்படுகிறது. எனது அம்மா, எனது அப்பா, எனது உறவுகள், எனது செயல்கள், எனது உத்தியோகம் இது எல்லாம் இந்த உடல் ஏற்படுத்திக் கொடுக்கும் அனுபவங்கள்.

இவை காட்சிகளாக மூளையின் நினைவுப் பகுதியில் சேகரமாகி வாழ் நாள் முழுதும் தேவைப்படும் போதெல்லாம் நினைவு கூற பயன்படுகின்றன. உடல் பெறும் அனுபவங்களை, அதனால் ஏற்படும் நினைவுகளைத் தாண்டி ஒட்டு மொத்த எல்லாவற்றின் புரிதலை உடலுக்குள் இருக்கும் உயிர் சக்தி கிரகித்துக் கொள்கிறது. இங்கே காட்சிகளாய் கிரகிப்பு நடப்பது இல்லை. உணர்வாய் நடக்கிறது.

சைக்கிள் ஓட்டுவது ஒரு செயல். சைக்கிள் எப்படி ஓட்டுவது என்பது புரிதல். சைக்கிள் ஓட்டாமல் இருக்கும் போதும், சைக்கிளே இல்லாத போதும் சைக்கிள் ஓட்டுவதற்கான எல்லா புரிதலையும் நாம் கொண்டிருப்பது எப்படியோ அப்படியே ஆன்மா என்னும் உயிர் சக்தி எல்லா அனுபவங்களையும் புரிதலாய் ஏந்திக் கொள்கிறது. இது ஒரு உதாரணமே....!!!!!

உடலை விட்டு வெளியே செல்லும் உயிர் அல்லது ஆன்மா அல்லது சக்தியின் வடிவம் இந்த புரிதலோடுதான் செல்கிறது. சைக்கிளும் இல்லை, சைக்கிளை ஓட்டவும் இல்லை, ஓட்ட வேண்டிய தேவையும் இல்லை ஆனால் சைக்கிள் ஓட்டத் தெரியும் அப்படியாய் பல உணர்வுகளை புரிதல்களாக கொண்டு செல்லும் ஆன்மா தனது இயல்புக்கு ஏற்றார் போல ஒரு இடம் நோக்கிப் பாய பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கிறது சக்தி வடிவமாய்.

எப்படி தெரியுமா.....?

வானொலி ஒலி அலைகள் எப்படி அலைகிறதோ, செயற்கைக் கோள் தொலைகாட்சியின் ஒளி, ஒலிகள் எப்படி அலைகிறதோ அப்படி. சரியான ரிசீவர் கிடைக்கும் போது, அதிர்வெண் சேர்க்கை கிடைக்கும் போது எப்படி அந்த அலைகள் காட்சிகளாய் மாறி நம் முன் விரிகிறதோ அப்படியாய் சரியான கருப்பைக்காய் காத்திருக்கும் ஆன்மா, தனது தன்மைக்கேற்ற ஒரு கருவிற்குள் தஞ்சமடைகிறது.

ஏன் தஞ்சமடைகிறது? யார் தஞ்சமடையச் சொன்னது என்ற கேள்வி உங்களுக்கு வருமானால்....அதற்கும் பதில் உண்டு. அதாவது யார் நம்மைச் சுவாசிக்கச் சொன்னார்களோ, அதுவும் பரந்து விரிந்த இந்த அண்டத்தில் ஆக்சிஜனை சுவாசித்து நீ வெளி விடுவது கார்பன்டை ஆக்ஸைடாக இருக்க வேண்டும் என்று யார் விதித்து வைத்தார்களோ, இரண்டு பங்கு ஹைட்ரஜனும், ஒரு பங்கு ஆக்ஸிஜனும் கூடினால் உனக்கு நீரென்ற ஒரு வஸ்து கிடைக்கும் என்று எந்த சூட்சுமம் உருவாக்கி வைத்ததோ...அதே சூட்சுமம்தான் கருவுக்குள் உயிர் என்னும் ஆன்ம சக்தியையும் திணிக்கிறது.

உடலுறவில் மனிதர்களை ஈடுபட வைக்க காமத்தை மையமாக்கி வைத்திருப்பதும் அதே சூட்சும சக்திதான். இது தேவை. இங்கே காரணமும் காரியமும் முக்கியமில்லை. அனுபவமே தேவையாகிறது. அந்த அனுபவமும் புரிந்து, பின் பிரிந்து மெளனிக்க உருவான தேவைகளே இல்லாத தேவை இது.

இப்படியாய் உருவாகும் ஒரு குழந்தைக்குள் ஆன்மா மீண்டும் மறுபிறப்பு எடுத்தது என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வீர்கள்....? புரிதலை அனுபவமாகக் கொண்டு வேறு உடலில் தொடரும் பயணத்தில் பழைய பிறப்பின் அனுபவங்கள் புரிதலாய் இருக்குமே அன்றி செயல்களாய் நினைவில் இருக்கவே இருக்காது. அந்தப் புரிதல்தான் கர்மா. நமக்கு நாமே சபித்துக்  கொண்டது. இப்போது இங்கே நமக்கு விதியாகிப் போயிருக்கும் சாபங்கள் நமக்கு நாமே சபித்துக் கொண்டது. சம காலத்தில் சபித்துக் கொள்ளும் செயல்களின் விளைவுகள் இயன்ற வரையில் அந்த அந்த பிறவியிலேயே நடந்து விட  மிச்சங்கள் அடுத்த பிறவிக்கு கடத்தப்படுகின்றன.

இப்போது கூறுங்கள் மீண்டும் மீண்டும் நாம் நம்மை சபித்துக் கொள்ளப் போகிறோமா இல்லை சபித்தலை நிறுத்தி பெரும் இயக்கத்தின் பேரமைதியில் லயிக்கப்போகிறோமா? நீங்களும் நானும், தனித் தனி என்று எண்ண வேண்டாம். ஒரு கூட்டு நிகழ்வின் தனித்தனிகள் என்று கொள்க; உங்களுக்கும் எனக்கும் ஏற்படும் அனுபவமும், தேவைகளும் தனித்தனி அல்ல அது ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தின் தேவைகள் என அறிக;

ப்ரியமுள்ள எனது ஆன்மீக வழிகாட்டி மூத்த அண்ணன் காலிது ஷா அவர்கள் கூறுவார்கள். தேவா....அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறானே ஒருவன் செயல்கள் எதுவுமே செய்யாமல் அவனின் தூக்கமும் இந்த பிரபஞ்ச நகர்விற்கு அத்தியாவசியம்தான் என்று....!

அரசியல் ரீதியாக மனதிற்குள் அடைபட்டு நான் என்னும் அகங்காரத்தைக் கொண்டவர்களால் இந்த பூமி சூறையாடப்பட்டு விட்டது. அப்படியாய் சூறையாடப்பட்ட பின்னும் அது மெளனமாய் சுற்றிக் கொண்டிருப்பதுதான் மிகபெரிய ஞானம்.  எல்லோரையும் சுமந்து சுற்றும் இந்த பூமியும், இந்த பூமியின் நகர்வினைத் தீர்மானிக்கும் சூரியனும் மெளனித்துக் கொண்டு மனிதர்களை பேசச் சொல்கிறன. ஆனால், மனிதர்கள் அந்த சக்தியைத் தவறாகப் பிரயோகம் செய்கிறார்கள். எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்....இல்லையேல் எனக்கும் இந்த வாழ்க்கைக்கும் எந்த ஒரு பிணைப்பும் இல்லை என்று தன் முனைப்பிலேயே பேசாமல் இருக்கிறார்கள்....

தேவைகளின் அடிப்படையில் பேசி, தேவையில்லாத போது மெளனித்துக் கிடக்கும் போது, எது தேவையில்லாதது என்பதை தெளிவாய் உணரமுடிகிறது. என் தேவையில்லாத நேரத்தை இயற்கை இப்போது அதிகரித்து இருக்கிறது. அதனால் ஜோடனைப் பேச்சுகளையும், சுய தம்பட்டங்களையும் கடந்து இந்த ஜன சந்தடிக்குள் நகர்ந்து செல்வது பெரும்பாடாய் இருக்கிறது....

என்ன செய்வது.. கடந்துதான் செல்ல வேண்டும்.....! இறைவனால் மறுக்கப்பட்டதை யாராலும் பெற இயலாது...., இறைவன் கொடுத்ததை யாராலும் மறுக்க இயலாதுதானே....?!!! இறைவன் என்று கொண்டலும் சரி இயற்கை என்று எடுத்துக் கொண்டாலும் சரி....அது உங்களின் பாடு...!

" உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் 
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் 
மனிதன் தினமும் அலையில் அலையும் துளி நீர் 
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ 
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை 
கால்கள் போன பாதை எந்தன் எல்லை "

மீண்டும் மெளனிக்கிறேன்...!

தேவா. S


Comments

///இப்படியாய் உருவாகும் ஒரு குழந்தைக்குள் ஆன்மா மீண்டும் மறுபிறப்பு எடுத்தது என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வீர்கள்....?///


மனித உயிர் ஒன்று உருவாகும் போது ஆணின் விந்தணு கரு முட்டையுடன் சேரும் போது நிகழ்ந்து விடுகிறது. இங்கே (மனித) ஆத்மா எப்போது அந்த கருவுடன் சேர்கிறது.??? உடலுறவில், முதல் மாதத்தில் ,இராண்டாவது மதத்தில் இல்லை பத்தாவது மாதத்திலா ? எப்படி சேர்கிறது ??
ஆத்மா said…
நல்ல பதிவு சார்.
எழுத்துத் துரையில் நீங்கள் மிக அனுபவம் வாய்ந்தவர் என்பதனை உங்கல் பதிவுகளைப் படிக்கும் போது புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது..

மறு பிறப்பு பர்றிய உங்கள் கூற்றோடு இசைவான சில விடயங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்..

எம்மைக் தாயின் கருவில் கொண்டு சேர்த்த இறைவன் அல்லது ஏனையவர்கள் கூறுவது போன்ற ஓரு சக்தி உயிர்களைப் உருவாக்கும் விடயத்தில் தாளார தன்மை கொண்டதுதான். மனிதன் வியந்து கொள்ளும் இயற்கையையும் உருவாக்கியது இறைவனே இந்த இயற்கையில் ஒரு சில பற்றாக் குறைகளை வைத்தான் அதனால் தான் வியாபாரம் கொடுக்கல் வாங்கள் என்பன உருவாகியது. இது அவசியமானது அதனால் அவ்வாறு செய்தான்.

ஆனால் உயிர்கள் விடயத்தில் இறைவனிடம் குறைவு என்ற ஒன்று இல்லை அப்படி இருந்தால் மட்டுமே மறு பிறப்பென்பதை இவ்வுலகில் வைத்துவிடுவான்.

இன்னும் சொல்லப் போனால் ஒருவன் ஒரு செயலை நல்லது அல்லது கெட்டது என அறிந்து நல்லதை செய்கிறான். மறு வாழ்வு என்ர ஒன்று இல்லையென்றால் அவன் நல்லதை செய்யாமல் கெட்டதையே செய்துவிட்டு இறந்திருக்கலாமே....

மறு பிறப்பாக இவ்வுலகில் பிறப்போம் என்று கூறுதல் பிழையான ஒன்று...

எம்முள்ளம் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி மறு பிறப்பென்ற ஒன்று இருக்கிறது அது இந்த உலக்த்தில் இல்லை...

எமது மரணத்தின் பின்னுள்ள வாழ்வுதான் அது கல்லரையிலோ அல்லது சவக்குழிகளிலோ தான் அந்த வாழ்வு இருக்கிறது என்பது தான் உண்மை
dheva said…
கிருஷ்ணா @

ஆணின் விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் கருமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாய் சேரும் போது 22 ஜோடி குரோமோசோம்களில் உருவாகப்போகும் கருவின் பரம்பரைக் குணம், நிறம், நோய்க் கூறுகள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன. 23வது ஜோடிதான் ஆணா பெண்ணா என்று கருவை நிர்ணயம் செய்கிறது.

இதுவெல்லாம் முடிவாகி கரு ஒரு செல்லில் இருந்து பல்கிப் பெருகி சிறு பிண்டமாய் உருவெடுக்கிறது. கரு உருவான பின்னால் 18 தினங்களுக்குப் பிறகு இதயம் என்ற தசைக்கோளம் உருவாகி தனது முதல் துடிப்பினைத் தொடங்குகிறது. 21 ஆவது நாளில் இருந்து இதயம் இரத்தத்தை உடம்பு முழுதும் அழுத்தி செலுத்தத் தொடங்குகிறது.

பிண்டம் உருவான பின் அதற்குள் ஆன்மா என்னும் உயிர் சக்தி உள்புகக் காரணமாய் 22 ஜோடி குரோமோசோம்களால் கருவில் பதிந்து போயிருக்கும் குணாதிசம்கள் காரணமாகின்றன. ஆன்மா தனது பூர்வ ஜென்ம அனுபவத்தின் தொடர்ச்சியை ஏந்திக் கொள்ள ஏதுவான் ஒரு கருவினுள் செல்வது......நிகழ்ந்து விடுகிறது.

இது இயற்கையிலேயே சூரியனிலிருந்து தாவரங்கள் எப்படி ஸ்டார்ச் என்னும் உணவுப் பொருளைத் தங்களுக்கு தானே தயாரித்துக் கொள்கின்றனவோ...அதே போல ஒரு தன்னிச்சையான ஆனால்....சூழலுக்கு ஏற்றார் போலான ஒரு நிகழ்வு....!

நன்றிகள் அண்ணா...!






////பிண்டம் உருவான பின் அதற்குள் ஆன்மா என்னும் உயிர் சக்தி உள்புகக் காரணமாய் 22 ஜோடி குரோமோசோம்களால் கருவில் பதிந்து போயிருக்கும் குணாதிசம்கள் காரணமாகின்றன. ஆன்மா தனது பூர்வ ஜென்ம அனுபவத்தின் தொடர்ச்சியை ஏந்திக் கொள்ள ஏதுவான் ஒரு கருவினுள் செல்வது......நிகழ்ந்து விடுகிறது//////


சரி தம்பி .... இதை Mind -ல வச்சுக்கிறேன் :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த