Skip to main content

தேடல்.....!

விவரிக்க முடியாத ஒரு மனோ நிலையில் ஏதோ ஒரு நிகழ்வு மனசை காயப்படுத்திய அந்த வேளையில் வரும் கண்ணீரை எழுத்துக்களாக்கிப் பார்த்த போது தடுக்கி விழுந்த வேகத்தில் ஒரு எதார்த்த பதிவராகிப் போனேன். எத்தனை எழுத்தாளர்களை கடந்து சென்ற போதும் பாலகுமாரானை இதுவரை விடாத மனசைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இயல்பான எழுத்தா, காதலைச் சொல்லும் பாங்கா, காமத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் சரியாக புரிந்து கொள்ளச் செய்த விதமா? கடவுளைப் பற்றி கற்றுக் கொடுத்த கற்பிதமா? எதில் லயித்துப் போனேன் என்று தெரியாத அளவிற்கு இன்று வரை இந்த பாலகுமாரன் மீதான காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு கூட்டமில்லாத மாலை வேளையில் அவரை பார்த்த போது நேரே போய் பேச முடியவில்லை. யாரோ இருவருக்கு திருஞான சம்பந்தர் பற்றி அவர் விவரித்து பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பலைக் கொண்டு தேவார பதிகம் பாடி உயிர்ப்பித்தது பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களுடன் சம்பந்தப்படமால் அந்த விளக்கத்தை தூர நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவருக்கு அறியாமலேயே அவரின் அருகாமையை நன்றாக அனுபவித்தேன். கோவில் விட்டு போகும் போது இயல்பாய் ஒரு ஸ்கூட்டியில் சாதரணமாய் போய் விட்டார்.

எத்தனை எத்தனை படைப்புகள்....படைத்திருந்தாலும் அவருக்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி....ஸ்கூட்டியில் பறந்தே போய்விட்டார். ஒவ்வொரு சென்னை பயணமும் இவரைச் சந்திக்க முடியாமல் இன்னும் முற்று பெறவில்லை...அடுத்த முறை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று கண்டிப்பாய் எண்ணி மற்ற வேலைகளால் சந்திக்க முடியாமல் போவது என்னுடைய இயலாமை.


இவருடைய பேய்க்கரும்பு நாவலை படித்து விட்டு திருவொற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் சமாதியை மீனவ குடிசைகளுக்கு நடுவே தேடிக் கண்டு பிடித்து கோவிலினுள் போய் அமர்ந்த அன்று பாலகுமாரனின் எழுத்தில் படித்த ஒரு வெறுமையை உணர்ந்தேன். சிறிய கோவில் உள்ளே ஒரு சிவலிங்கம் அங்கேதான் பட்டினத்து அடிகள் சமாதியானாராம் வேறு ஒன்றும் இல்லை. வெறுமனே உட்கார்ந்திருக்க...வெறுமனே ஆகிவிடுவோம்....ஆர்பாட்டம் உள்ள கோவில்களில்தான் பெரும்பாலும் மக்கள் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்....அல்லது வேறு ஏதோ ஒன்று நிகழ்வதாகத்தான் எனக்குப் படுகிறது. பட்டினத்து அடிகள் கோவிலில் வந்து அவரின் வாழ்வு பற்றி எண்ணிப்பார்க்கும் அளவிற்கும் மானசீகமாய் அவருடன் பேசவும் ஒரு மனோ நிலை வேண்டும். இங்கு வந்து போனல் ஒரு வேளை எதுவும் கிடைக்காது என்று எண்ணி யாரும் வருவதில்லையோ என்று கூட எண்ணத் தூண்டியது. அங்கே அமர்ந்திருந்த ஒரு சில மணி நேரமெல்லாம்.... என்னுள் இடைவிடாது.....

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

என்று இடைவிடாது சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒன்றுமிலையப்பா என்று பட்டினத்தார் வேறு மெளனமாய் கடற்காற்றின் மூலமாக வீசி வீசி பேசிக் கொண்டிருந்தார். நிலையாமையை உணர்வதற்கு பயப்படும் மக்கள்.. இங்கு வரவும் பயப்படுகிறார்கள். இன்றிருக்கும் எல்லாம் நாளை நம்மை விட்டுப் போகும் என்று உணர்ந்தால் எல்லோரிடமும் அன்பாய் இருக்கும் ஒரு ஒப்பற்ற நிலை எய்த முடியுமே...எல்லாம் எனது, நான் .. நான் எனும் வாழும் மனிதர்களுக்கு .....


" பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடு போவ தில்லை; இடை நடுவில்

குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்க அறியாது

இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே "


தீர்க்கமாய் அவர் சொல்லிச் சென்றது எனது காதில் விழுந்து ஓலித்துக் கொண்டே இருந்தது. அந்த சூழலும் பட்டினத்தாரும் மிகவும் எனக்கு சினேகமாகிவிட எழுந்து வர மனமில்லாது அங்கேயே கிடந்தேன். நம்மைச் சுற்றி நகரும் மக்கள் எல்லாம் ஏதோ ஒரு அதிர்வலைகளோடு சென்று கொண்டிருக்கிறார்கள் ...அவர்களது அதிர்வலைகள் எதிரில் உள்ளவரையும்...சுற்றி உள்ளவரையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன். அவற்றின் பாதிப்பும் மற்றவர்களை மனத்தளவில் பாதிக்கிறது. அதனால்தான் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று திரும்பும் போது நேர்மறையான ஒரு மனோபலம் நமக்கு கிடைக்கிறது ஏனென்றால் வழிபாட்டுத்தலங்களுக்கு வருபவர்கள் குறைந்த பட்சம் தான் நன்றாக இருக்க வேண்டும் என்றாவது எண்ணிக் கொண்டு வருவார்கள் அல்லாவா? எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் எதிர்மறையான அலைகளை பரவவிட்டுச் செல்வார்கள். அதனால்தான் சிலரை பார்த்தால் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம், வேறு சிலரைப் பார்த்தல் ஓட்டமாய் ஓடி விடத் தோன்றும்.


இதை ஏன் சொல்கிறேன் என்றால் யாருமற்ற இந்த பட்டினதார் கோவில் போன்ற இடங்களுக்கு வந்து சென்றால்...எந்த எண்ணமும் ஏற்படுவதில்லை...அதாவது மனமற்ற ஒரு நிலை எளிதாக கிடைக்கிறது. ஏனென்றால் எந்த பேரமும் நாம் நடத்துவதில்லை.....


அட நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன் .... நேரமாச்சுங்க.....அடுத்த தேடலில் சந்திப்போம்!


தேவா. S

Comments

தேடல் அருமை. நானும் சில நேரம் இந்த மாதிரி கூடம் இல்லாத கோவிலுக்கு செல்வது உண்டு, பெசன்ட் நகரில், முருகன் கோவிலில் முன்பு கூட்டம் அதிகம் இருக்காது, அந்த இடமும் அதிக சந்தடி இல்லாத இடம். இப்பொழுது எப்படி என்று தெரிய வில்லை
அருமை! தொடருங்கள்.
ஹலோ dheva நான் திருவொற்றியூர் தான்
dheva said…
உண்மைதான் L.K
dheva said…
நன்றி பா.ரா ஐயா...உங்களின் வருகை மோதிரக்கையால் பட்ட குட்டு போன்று! மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து வந்து வழி நடத்துங்கள்!
dheva said…
என்னங்க சவுந்தர் நீங்களும் திருவொற்றியூரா...அடா அடா.. சூப்பர்ங்க...! நிறைய பேசுவோம் உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்!
This comment has been removed by the author.
VELU.G said…
உபயோகமான பதிவு நன்பரே

மிகவும் ரசித்துப்படித்தேன்

எனக்கும் பாலகுமரன் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்
Chitra said…
அதனால்தான் சிலரை பார்த்தால் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம், வேறு சிலரைப் பார்த்தல் ஓட்டமாய் ஓடி விடத் தோன்றும்.

....ha,ha,ha,ha,ha..... இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்களே........ ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
நல்ல தேடல்....
அடுத்தமுறை வரும்பொழுது சந்திப்பதற்கு வாழ்த்துக்கள்..

திருவொற்றியூர் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.. சில இடங்களுக்கு மட்டும் மனதை வெற்றிடமாக்கும் தன்மை உண்டு... ஒவ்வொருவருடைய மனநிலையைச்சார்த்தது.

நானும் பார்க்கவேண்டும்... வாய்ப்பு சூழ்நிலைகளுக்காக காத்திருக்கிறேன்...

மிகத்தெளிவான எழுத்து நடை உங்களுக்கு.... தொடருங்கள்....
dheva said…
அடுத்த முறை வரும் போது பாலகுமாரனை மட்டுமல்ல....பாலாசி உங்களையும்தான் சந்திக்கப் போகிறேன்....! வெட்டி வேரு வாசம்...இங்க துபாய்ல நிறைய வீடுகளில் வீசிருச்சிய்யா...வீசிருச்சு!
dheva said…
நன்றி வேலு...! நீங்க நிறைய படிப்பீங்கன்னு பாலாசி சொன்னாரு....வாழ்த்துக்கள்!
அருமையான மொழிநடை!


இப்போ மேட்டருக்கு வருவோம்!

முதலில் சில இடங்களில் கிடைக்கும் மன அமைதி!

அமைதி தேடி எங்கேயாவது போவது எனக்கு உடன்பாடில்லாத ஒன்று, அமைதி எங்கிருந்து உங்களை வந்து ஆட்கொள்லவில்லை, அது உங்களிடமே இருக்கிறது, தத்துவங்கள் தரும் சிலாகிப்பு, நமது உளவியல்;ஐ சீண்டிபார்க்கும் காரணிகள்!

ஒரு இந்துவுக்கு சர்ச்சும், மசூதியும் வெறும் கல்கூடம், அது போலவே மாற்று மதத்துகாரனுக்கும்!, முன்முடிவுகளுடன் எதையும் அனுகவுது, அதுவும் சக மனிதனை அனுகுவது நிச்சயம் கண்டிக்கபடதக்க ஒன்று!, எதிர்மறை எண்ணங்கள் அவனுக்கு விதைத்தது இச்சமூகம்! சமூகத்தை சாடுவதை விட்டு அவனை சாடினால் மேலும் விளிம்புநிலைக்கு தள்லப்படுவான் அவன்!

உலகம் கண்ணாடி மாதிரி என்பது என் புரிதல், நாம் அதை பார்த்து சிரித்தால் அது நம்மை பார்த்து சிரிக்கும், நாம் அதை பார்த்து அழுதால் அது நம்மை பார்த்து அழும்!, முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியை ஊருகுள் விதையுங்கள்!
dheva said…
வால் பையன் @ நீங்கள் சொல்வதில் உடன்பாடு இருக்கிறது. இருந்தாலும் நாம் என்னதான் நல்லது நினைத்துக் கொண்டிருந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களின் எண்ண தாக்கங்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ தொடரத்தான் செய்திறது.

மேலும் ஒவ்வொரு இடம் பொறுத்து மனோ நிலை மாறுவது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று....படுக்கை அறைக்குப் போனால் தூக்கம் பற்றிய நினைவுகளும், சமையலறையில் உணவு பற்றிய எண்ணங்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படித்தான் தங்களது வாழ்வில் ஒழுக்கமாய் இருந்து பற்றற்று வாழ்ந்து மரித்தவர்களின் இடங்களுக்குப் போகும் போது அவர்கள் சூட்சுமமாய் வந்து உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லவரவில்லை.....ஆனால் உங்கள் மனம் அவர்கள் வாழ்வு பற்றி எண்ணும் போது ஒடுங்க்கும் என்றுதன சொல்லியிருக்கிறேன்.

வாழ்த்துகள் பாஸ்!
//படுக்கை அறைக்குப் போனால் தூக்கம் பற்றிய நினைவுகளும், சமையலறையில் உணவு பற்றிய எண்ணங்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.//

ஏற்கனவே சொன்னேனே முன்முடிவுகள் சார்ந்த எந்த விசயமும் இப்படி தான் எண்ண தோன்றும்!

பொண்டாட்டியை சந்தேகிப்பவன் நேராக படுக்கையறைக்கு தான் போவான், கிச்சனுக்கு அல்ல, ஆனல் பாருங்கள் பெரும்பாலான மாற்றுகாதல் ஜோடிகள் கூடும் இடம் படுக்கையறை அல்ல! கிச்சன் அல்லது அலுவலக டேபிள்!


நாம இன்னும் வளரனும் பாஸ்!
I have started reading your blogs recently. Very nice writing.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த