திணறடிக்கும் அன்றாடம், பொருள் ஈட்டும் பொருட்டு ஓட்டம்.....என்று நின்று நிதானிக்க முடியாத காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஒவ்வொரு இரவிலும் இமைகள் கண்ணயரும் முன்பு ஒரு ஏக்கப்பெருமூச்சு வருகிறதே...? என்ன இது வாழ்க்கை? ஏன் எல்லாம்? என்ன நிகழும் நாளை என்று கணிக்கமுடியாமல் கண்ணயர்ந்து போகிறோம்.
கண்ணயரும் எல்லோருக்கும் தெரியாது நாளை கட்டாயம் நாம் விழிப்போம் என்று.....இப்படிப்பட்ட நம்மைப் பற்றியே உத்தரவாதம் கொள்ள முடியாமல் கழியும் நாட்களையும் மூளையையும் வைத்துக் கொண்டுதான் திட்டமிடுகிறோம் அடுத்த தலை முறைக்கும் சேர்த்து.
அறியாமை என்று தெரிந்தே மனிதன் ஆணவம் கொள்வதின் நுனி எங்கே இருக்கிறது? எத்தனை புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும் பக்குவப்பட்டு விட்டோம் என்று சொன்னாலும் கோபத்தின் வேரறுக்க முடியாமல் ஆணவம் வெளிப்பட்டு விடுகிறதே....?
சம காலத்தில்தான் பக்குவப்பட்டு இருக்கிறோம்....ஆனால் பக்குவப்படாமல் இருக்கும் போது தேடித் தேடி சேர்த்த எண்ணங்களும் கற்றுக் கொண்ட கற்பிதங்களும் என்னவாகும்? மறையாதன்றோ...? மூளையின் செயல்பாடும் அதன் நினைவுப் பகுதியும் செயல்படும் விதமும் அப்படி...ஒருமுறை ஏறிய செய்திகளும் கற்பிதங்களும் மறைய வேண்டும் என்றால் அதை அழித்துவிட முடியாது ஆனால் அதற்கான புரிதல் வேண்டும்.புரிதல் ஏற்கெனவே பதிந்ததை நீர்த்துப் போகச்செய்யும். அது இல்லாதவரை.. எல்லாம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்....
இப்படி தேவையில்லாமல் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளில் இருந்து கிளைப்பதுதான் ஆணவம். ஆணவம் என்பதின் மூலம் நான் என்ற அகங்காராம். நான் என்பதை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மனம். மனம் ஒரு வித கற்பிதத்தை, ஒரு வித விஸ்தாரிப்பைக் கொடுத்து என்னால் மட்டுமே முடியும் எனக்கு மட்டுமே தெரியும் என்று நம்ப வைத்து அதை மூளையை கிரகிக்க செய்து நம்ப வைத்து மூளையின் நினைவுப் பகுதியில் தவறான ஒரு ஒரு கற்பிதத்தை பதிய வைக்கிறது.
இப்பொது சொல்லுங்கள் இந்த கற்பிதங்கள் உள்ள வரை மூளை ஒவ்வொரு தடவையும் எல்லா செயல்களுக்கும் நினைவுப் பகுதியில் இருக்கும் விசயங்களை தொடர்பு கொண்டு ஏற்கனவே பதிபப்பட்டுள்ள விசயமான எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை மனதுக்கு பரவச் செய்து ....யாரேனும் ஒன்று நமக்கு எதிராக சொல்லிவிட்டால் அதை கோபமாக வெளிப்படுத்துகிறது.
மனம் நான் பெரியவன் என்று நமக்கே சொல்லும் தருணத்தில் அந்த இடத்திலேயே நிறுத்தி விசாரிக்க வேண்டும்....செக் போஸ்டில் நிறுத்தி செக் பண்ணுவது போல ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய வேண்டும். எனக்கு இப்படி தோணுகிறதே... இதை ஏற்றுக் கொள்ள எனக்கு என்ன அருகதை இருக்கிறது....?
இந்த உலகத்திலேயே இன்னும் மனிதர் காலடி படாத இடங்கள் எவ்வளவோ இருக்கிறதே...அதன் மர்ம முடிச்சுக்களே இன்னும் அவிழ்க்கப்படவில்லையே.... நான் எப்படி அத்தாரிட்டிகலாக (அதிகார பூர்வமாக அல்லது சர்வ நிச்சயமாக) விசயங்களை மற்றவர்களுக்கு கூறுவது? என்று அந்த எண்ணத்தை ஆராய்ந்து சிதைக்கும் போது பதிவு மூளையில் விழுவது இல்லை.
கவனமின்றி சேர்க்கும் எண்ணங்கள் எல்லாம் கத்தியை விட கூர்மையானது. எண்ணமில்லாமல் வாழ முடியாது ஆனால் எல்லாம் என்னால் ஆனது என்ற மமதையின்றி செயல்கள் செய்யும் போது அந்த செயல்கள் மூளைப்பதிவில் ஏறுவது இல்லை.
இறைவன் போதுமானவனாக இருக்கிறான், இறைவன் நிறைவானவனாக இருக்கிறான்....எல்லா புகழும் இறைவனுக்கே...அவனின்றி ஓரணுவும் அசையாது, தேவனின் மகிமை, இந்த வார்த்தைகள் எல்லாம் விளையாட்டக இறைவனை நினைவு கூற சொல்லப்பட்டது அன்று .....மனிதனின் அகந்தை அழிய, நான் என்ற திமிர் ஒழிய....இறக்கும் போது சிரமமில்லாமல் இறக்க....எண்ணங்களை உட்புகவிட்டு அது நம்மை திடமாக ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க ஞானிகளாலும் தீர்க்கதரிசிகளாலும் கொடுக்கப்பட்ட அஸ்திரங்கள்....
அஸ்திரங்களை எல்லாம் அலங்கார பொருள்களாக்கி விட்டு அகங்காரம் அடக்க முடியாமல்..இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்....! பெரும்பாலும் பிரச்சினைகளின் கிளைகளையும், இலைகளையும் அழிப்பதிலேயே நாம் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் வேர்களை களைவதில்லை.....எல்லா பிரச்சினைக்கும் வேர் என்று ஒன்று இருக்கிறது....
அது கடவுளை விரும்புவதாய் இருந்தாலும் சரி.....கம்மர்கட் மிட்டாயை
விரும்பவதாய் இருந்தாலும் சரி...மறைத்தல் விருப்பத்தையும் தெளிவையும் கொடுக்காது மாறாக அறிதல், புரிதல் என்ற கத்தியின் மூலம் வேர்களை களைந்தால்....வெறுமையில் விளையும் ஓராயிரம்....தெளிவுகள்...!
தேவா. S
Photo Courtesy: Ms. Ramya Pilai
Comments
முற்றிலும் உண்மை
அருமையானதொரு படைப்பு
thanks for your detailed reply
you only can explain me.you open many windows for many people keep it up!!!!
இதை யாரும் நினைத்து பார்ப்பதே கிடையாது
இப்படி எனக்கு அடிக்கடி தோன்றுவது உண்டு. என்ன வாழ்க்கை இது? ஏன் மனிதர்கள் ஓடி கொண்டே இருக்கிறார்கள்? எதற்காக இவ்வளவு துன்பங்களை ஏற்கிறார்கள்? வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன?
///இப்படி தேவையில்லாமல் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளில் இருந்து கிளைப்பதுதான் ஆணவம்.///
கோபத்திற்கான தங்களின் காரணங்கள் அருமை!
அப்பாடா இந்த பதிவு எனக்கு முழுமையாக புரிந்தது! இந்த எளிமையுடன் எழுதங்கள் நண்பரே!
அசத்தலான வரிகள் அண்ணா...
இது ரொம்ப சரியா எனக்குப் பொருந்திப்போகுது....
ஒரு சில இல்லை பல விசயங்களில் இதை நான் செஞ்சிருந்தேன்னா நான் இன்னும் நல்லாயிருந்திருப்பேனோன்னு தொனுது. மொத்தப்பதிவையும் புரிஞ்சுக்கிறத விட ஒரு சில வார்த்தைகளையோ இல்ல வாக்கியங்களையோ புரிஞ்சிக்கிட்டோம்னாலே போதும், பல விசயங்களை விளக்கிடுது உங்க எழுத்து.
.....உண்மைதான், தேவா.... அதை செய்யாமல், அந்த எண்ணம் தரும் மகிழ்ச்சியில் சிறிது நேரமாவது இளைப்பாறுவோமே என்று நினைத்து விட்டால் போதும் - மெல்ல ஆணவமும் அகங்காரமும் துளிர்த்து வளர்ந்து விட ஆரம்பிக்கும். நல்ல பதிவு! பாராட்டுக்கள்!
இன்னும் இன்னும் யோசிக்க வைக்கிறீர்கள் !
அந்த எண்ணத்தின் மூலம் மற்றவரின் கருத்துக்களை நாம் எப்பொழுது உதாசீனப்படுதுகிறோமோ அப்பொழுது அந்த எண்ணம் நம்மை ஆணவக்காரர்களாக மாற்றி விடுகிறது. மேலும் நாம் மேலானவன் இல்லை என்று நிரூபிக்கப்படும் பொழுது நமது மனதில் பதிந்துவிட்ட நானே சிறந்தவன் என்கின்ற எண்ணத்தால் கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறது. நானே சிறந்தவன் என்று எண்ணுவதுடன் , நம்மைப்போல மற்றவர்களும் சிறந்தவர்களே என்ற எண்ணமும் வளருவதே சிறந்தது.
ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க அண்ணா ..
இப்படி தேவையில்லாமல் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளில் இருந்து கிளைப்பதுதான் ஆணவம். ஆணவம் என்பதின் மூலம் நான் என்ற அகங்காராம். நான் என்பதை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மனம். மனம் ஒரு வித கற்பிதத்தை, ஒரு வித விஸ்தாரிப்பைக் கொடுத்து என்னால் மட்டுமே முடியும் எனக்கு மட்டுமே தெரியும் என்று நம்ப வைத்து அதை மூளையை கிரகிக்க செய்து நம்ப வைத்து மூளையின் நினைவுப் பகுதியில் தவறான ஒரு ஒரு கற்பிதத்தை பதிய வைக்கிறது.//
உண்மைதான்.
மனம்,ஆணவம்...இறை நம்பிக்கை இவற்றைப்பற்றி
நல்லா சொல்லியிருக்கிங்க..
மனிதமனத்திற்கு நல்ல மற்றும் கெட்ட என இரண்டு குணங்கள் உண்டு.
அனுபவத்தினாலும்,படித்தும்,கேட்டும் பெற்ற அறிவினால் எதை யூஸ் பண்னுகிறோம் என்பதை பொறுத்து நம்மை மற்றவர்கள் அறிவார்கள்..
இறை நம்பிக்கை...இப்போது உள்ளவர்களைப்போல பகுத்து அறிபவர்கள் அந்நாளில் குறைவு...பாமரன் முதல் பணக்காரன் வரை ஒழுக்கம் உள்ளவனாகவும், ஒரளவிற்கு நேர்மையுடையவனாகவும் இருக்கச்செய்யவே நீங்க சொன்னமாதிரி தீர்க்கதரிசிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்...
உலகம் முழுதும் இறைனம்பிக்கை இல்லாது போனால்...கொலை,கொள்ளை...அப்புறம் உலகமே சூன்யம்...
அன்புடன்,
மறத்தமிழன்.
உங்களின் ஒவ்வொரு தேடலின் போதும் பல கேள்விக்கு பதில்கள் கிடைக்கின்றன. மாணவியாய் உங்கள் வார்த்தைகளிடம் பாடம் கற்று கொண்டு இருக்கிறேன்.
நான் என்ற ஆணவம் நபருக்கு நபர் வேறு படும். சில நேரம் தங்களது அந்த ஆணவத்தால் அவர்கள் தனித்து நிற்கிறார்கள், அதில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்து கொண்டார்கள் என்றால் கால ஓட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள். அந்த ஆணவ எண்ணம் பிறரை பாதிக்காதவரை அது சரி என்றே படுகிறது.
உங்கள் தேடல்கள் தொடரட்டும். இன்னும் என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
:))