Pages

Wednesday, September 1, 2010

தேனு...!"தேன் மொழி எக்ஸ்பைர்ட்..ஸ்டார்ட் இம்மிடியட்லி...." தந்தியை கையில் திணித்த தபால்காரர்..அப்பா வீட்ல இல்லையா என்று கேட்டது என் காதில் ஏறமால் அந்த இரவு எட்டு மணியிலும் எனக்கு வியர்க்கத் தொடங்கியது.

வீட்டில் எல்லோரும் கோவில் திருவிழாவிற்கு ஆடு பலி கொடுப்பதற்கு போயிருந்தார்கள்.... அன்று மாலைதான் கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த நான் புதிதாக வெளியாயிருந்த திருடா திருடா படத்தின் பாடல்களை சுழல விட்டுக் கொண்டிருந்த போதுதான்...அந்த இடியை கையில் கொடுத்து விட்டு பறந்திருந்தார் தபால்காரார்.

ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியவில்லை....என்னை விட 8 வயது மூத்த தேன் மொழி என் அப்பாவின் அக்கா மகள்...என் அத்தை மகள். கிராமத்திலேயே வளர்ந்து உலக அறிவுகள் அதிகம் எட்டப்படாததாலேயே எதார்த்தமான உணர்வுகளோடு பாசாத்தை பரிமாறத் தெரிந்த மனிதர்களிடம் அவள் கற்றிருந்தது ஏராளம்.

எனக்கு முறைப் பெண்தான் இருந்தாலும் அவள் காட்டும் பாசம் வெகுளியானது. இரத்த பாசம் என்று அடிக்கடி அத்தையும் அம்மாவும் சொல்லுவார்கள். எல்லோருக்கும் இப்படியான உறவுகள் இருக்கத்தான் செய்யும்..ஒரு அத்தை மகனோ, மகளோ வைத்திருக்கும் பாசம் சொல்லி விவரிக்க முடியாதது.

கிராமத்து வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் ஒன்று இரத்த பாசம். இன்றைய பட்டணத்து வாழ்க்கையில் பெற்றோர் குழந்தையின் உறவுகளே நீர்த்துப் போயிருக்கும் ஒரு அவல நிலையில்....கிராமத்துக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியிருக்கும் சுயநல உலகம் இப்போது இந்த உறவுகளையும் சிதைக்க ஆரம்பித்திருக்கிறது.

பள்ளிக் கூட நாட்களில் இருந்து விடுமுறைக்கு ஊருக்குப் போகும் போது எல்லாம் தேன் மொழிதான் என் ப்ரண்ட். வாஞ்சையோடு கையைப் பிடித்து கொல்லைக்கு கூட்டிக் கொண்டு போய் இங்கே பாத்திய செவல கண்டு போட்டு இருக்கு என்று கடந்த மாதம் போட்ட கன்று குட்டியை காட்டும்.

சீம்பால வச்சிக்கிட்டு உன்னயத்தேன் நினைசுகிட்டு இருந்தேன் ஏய்..சின்னராசு....அந்த கருத்த சாவல புடிச்சு கவித்தி போடுன்னு நேத்தே சொன்னேன்ல....வீட்டில் வேலை செய்யும் சின்னராசுவை விரட்டும் தேனுடைய பாசம் என்னை மிரட்டும்...!

வயது கூடத்தான் சின்ன வயசுல இருந்தே.... பேரை சொல்லி வா போன்னு கூப்பிட்டு பழகியாச்சு.... ஏடி.. புள்ளய சாப்பிட கூட்டியாடின்னு அத்தை கொடுக்கும் குரலில் குற்ற உணர்ச்சி கொண்டவளாய்.....ச்சே....வா...வா நா ஒருத்தினு சொல்லிக்கிட்டு..... அடுப்படியில் நுழைஞ்சு... ஏய் ஆத்தா நீ நவுரு...ன்னு சொல்லிகிட்டே... நீ வருவேன்னுதான் தோசை மாவு அரச்சு வச்சேன்... பலகாரம்தேன் நீ சாப்பிடுவேன்னு எனக்கு தெரியும்.... தோசையை சுட்டு நேர்த்தியாய் எனக்கு வைக்கும் போது எனக்குள் ஒரு சந்தோசம் இந்த புள்ள என்ன இப்படி இருக்கு என்று என் நகரத்து புத்தி கபடமாய் அந்த அன்பை எதிர்கொள்ளும்....

வேகமாய் கத்தும்..ஏய் ஆத்தா.. நேத்தே உன்னைய சீனி வாங்கிட்டு வரச்சொன்னேல....னு திட்டிகிட்டே டப்பாவில் இருக்கும் சொச்ச சீனைய கொட்டி எனக்கு தோசைக்கு வைக்கும்....எனக்கு என்ன பிடிக்கும் என்பது தேனுக்கு அத்து படி......மணிக்கு ஒரு தடவ காப்பி குடிக்கிறாயா.... நாங்க எல்லாம் கிராமத்துல இருக்குற ஆளுக எல்லாத்தையும் அச்சஸ் பண்ணிகிருவோம்...சொல்லிக் கொண்டே முகம் பார்க்கும்....

மாடு பத்திகிட்டு போறேன் நீயும் வரியான்னு கேட்டு.... வேண்டாம் என்று சொல்லும் அத்தையும் மாமவையும் இடை மறித்து சந்தேகமாய் என்னைப் பார்க்கும். அந்த பார்வைக்கு அர்த்தம்..எனக்கு விருப்பம் இருக்குதானு பார்க்கிறது... சரி வரேன்னு நானும் கிளம்பிடுவேன்.

முன் வெயிலில் வயக்காட்டுக்குள்ல போவோம்...சூதானமா நடந்து வா... அம்புட்டும் கருவ முள்ளு...காலுல தச்சா உன்னால் வலி தாங்க முடியாதுன்னு சொல்லிகிடே அது முன்னால போகும் போது கவனிப்பேன்... ஏன் தேனு நீ செருப்பு போடலையா.....அட...கால்ல முள்ளு தைச்சாதேன் என்ன இப்போ...எப்பவும் செருப்பு போட்டிகிட்டே இருக்க முடியுமா....வெள்ளந்தியாய் சிரித்து மாடு ஓட்டிக் கொண்டு போகும்........

ஏட்டி தேனு யாருலே அது" தூரத்துல இருந்து யாரோ கேட்டது காதில் விழுந்தது. உருவம் தெரிந்த அளவுக்கு முகம் தெரிய வில்லை. " ஏய்.. எங்க மாம மயன்லே (மகன்).....ஊர்ல இருந்து வந்துருக்கு......" மாரியம்மா மக குமாரி என்று தேனு சிரித்துக் கொண்டே சொல்லி முடிப்பதற்குள் குமாரி பக்கத்தில் வந்து விட்டது...!

'ஏட்டி உங்க மாம மயனையே நீ கட்டிக்க வேண்டியதுதானே...' குமாரி கேட்டு முடிப்பதற்குள் தேன் படீரென்று பதில் சொன்னது......." ஏட்டி.. கட்டிக்கிறதா...? எங்க மாம மயனுக்கு படிச்ச நல்ல புள்ளைய பாத்து கட்டி வைப்போம்டி.....ஏம்பா.." அன்பாய் முகம் பார்க்கும். தேனோடு நேரம் போவதே தெரியாத அளவிற்கு பேசிக் கொண்டே இருக்கும்... நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

பழைய நினைவுகள் என்னை புரட்டிப் போட....வெயிலில் சிவந்த தேனுடைய முகம் என் முன் நிழலாடிக் கொண்டே இருக்க......குடும்பத்தோடு திருவிழாவையெல்லாம் ஒதுக்கி விட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்....காரைக்குடியில் இருந்து....கல்லல் வந்து விட்டது.....ஜன்னோலராமாய் வெளியே இருட்டு கரும் கும் மென்ன்று..... என் மனதில் அந்த தந்திக்கு முன் கேட்ட பாடல்...ஒலித்துக் கொண்டு இருந்தது....


" அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ.......

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை......"

இதுவும் காதல்தான்...ஆனால் வேறு விதம்...

எதை என்னிடம் எதிர்பார்த்து இருக்கும் தேனு? ஒண்ணுமில்லையே... எங்கே இருந்தது துளிர்த்தது நேசம்....ஒரு பனங்கிழங்கை பதுக்கி வைத்திருந்த்து எனக்காக கொடுக்கும் போது தேனின் முகம் மலர்வதில் இருப்பது என்ன அன்புதானே.....? ஏனோ தெரியலை என்னை பிடிக்கும் தேனுக்கு ஆனா இதுவரைக்கும் இது அதுன்னு சொல்லி மட்டுப்படுத்தி என்கிட்ட ஒரு தடவை கூட என்னை பிடிக்கும்னு என்கிட்ட நேரா சென்னது இல்லை.

எத்தனையோ முறை சாப்பாடு போட்டுட்டு என்னையே உற்று பார்த்துகிட்டு இருக்கும் போது… என்ன தேனு? என்று கேட்டிருக்கிறேன்... ஒண்ணுமில்லனு சிரிச்சுகிட்டே நீ மாமா மதிரியும் இல்லை அத்தை மாதிரியும் இல்ல....ன்னு சொல்லிகிட்டு கல கல சிரிக்கும்.....

பேருந்து நின்று விட்டது....அப்பாவின் உலுக்கலில் நினைவுகள் கலைந்து...சூழலுக்குள் வந்தேன். சிவகங்கை பேருந்து நிலையத்துக்குள் நாங்கள் அலறியடித்துக் கொண்டு இறங்கிய போது அதிகாலை மணி 3.00. உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோகாரர்களை அதிரடியா எழுப்பி.....

மானாமதுரை ரோட்டில் இருக்கும் சிவகங்கை அரசு மருதுவமனைக்குள் நுழைந்தது ஆட்டோ.....மரங்கள் சூழ்ந்த மருத்துவமனை மிரட்டியது....மார்ச்சுவரி பக்கத்திலேயே மரத்தடியில் மண்ணோடு மண்ணாக கிடந்தன உறவுகள். அத்தை வந்து அப்பாவின் காலில் விழுந்து அழுததும், அத்தான் வந்து கட்டிப்பிடித்து அழுததும்....சராசரி காட்சிகள்..

கோபத்தில் அத்தை திட்டி விட விளையாட்டுத்தனமாய் எலிமருந்தை தோசைக்குள் வைத்து சாப்பிட்டுவிட்டு......மருத்துவமனைக்கு கொண்டு வர வண்டி வசதியில்லாமல் கிராமத்து மருத்துவ அலட்சியத்தில் தாமதமாக சேர்க்கப்பட்டதால்.......போய் சேந்துடுச்சு தேனு......

எல்லாவற்றையும் தாங்கிய என்னால்..கடையாக அவள் " ஆத்தா நான் பொழைச்சுக்குவேன் ...பொழைச்சுக்குவேன்ல கேட்டுகிட்டே உசுர விட்டத தாங்கவே முடியல....." என்னால அழ முடியலீங்க...ரொம்ப இறுக்கமா வாழ்க்கை சொன்ன பாடத்த மொறச்சு பாத்துகிட்டே இருந்தேன்....

பொட்டலாமாய் கொடுத்த தேனுவை மருத்துவமனை வாசல்லயே வச்சு முறை செஞ்சுகிட்டு இருந்தாங்க......அவ முகம் கருத்து போயிருந்தது.....ஈக்கள் முகத்தில் வந்து வந்து உக்கார்ந்ததை யாரோ விரட்டிக் கொண்டு இருந்தார்கள்....என்னால் முகத்தை பார்க்க முடியவில்லை....

அடக்கம் செய்ய பக்கத்திலிருந்த இடுகாட்டுக்கு எல்லோரும் போனவுடன்..... மீதமிருந்தவர்கள்... எல்லோரும் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள்... நானும்......தான்...

தேனு இல்லாத கிராமத்துக்குள் முதல் முறையாக...பேருந்தில் இறங்கி எல்லோரும் 3 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.....மெல்ல நடந்து கொண்டிருந்தேன்....கிராம எல்லையை கடந்து வயக்காடு கடக்கையில்...ஒரு கருவ மரத்தடியில் இருந்த கொஞ்சம் நிழலில் அமர்ந்து கொண்டேன்.....

எனக்குள் சப்தமாய்....

" எலே யாருலே அது.....? யாரோ கேட்க....

" ஏய்.. எங்க மாம மயன்லே (மகன்).....ஊர்ல இருந்து வந்துருக்கு......"

...." ஏட்டி.. கட்டிக்கிறதா...? எங்க மாம மயனுக்கு படிச்ச நல்ல புள்ளைய பாத்து கட்டி வைப்போம்டி.....ஏம்பா.."

தேனின் குரல் எனக்குள் உரக்க கேட்டது...

நான் வெடித்து அழத் தொடங்கினேன்.......!தேவா. S

30 comments:

சங்கவி said...

//கிராமத்து வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் ஒன்று இரத்த பாசம். //

முற்றிலும் உண்மை தேவா...

நகரத்தில் இது கிடைப்பது கொஞ்சம் கஷ்டந்தான்....

வெறும்பய said...

...மருத்துவமனைக்கு கொண்டு வர வண்டி வசதியில்லாமல் கிராமத்து மருத்துவ அலட்சியத்தில் தாமதமாக சேர்க்கப்பட்டதால்.......

//

இந்த நிலையில் இன்னும் இருக்கின்றன பல கிராமங்கள் இந்தியாவில்..

புதிய மனிதா said...

நகரம் நரகம் தான் ...am u r follower also..

வெறும்பய said...

கிராமத்து வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் ஒன்று இரத்த பாசம். இன்றைய பட்டணத்து வாழ்க்கையில் பெற்றோர் குழந்தையின் உறவுகளே நீர்த்துப் போயிருக்கும் ஒரு அவல நிலையில்....கிராமத்துக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியிருக்கும் சுய நல உலகம் இப்போது இந்த உறவுகளையும் சிதைக்க ஆரம்பித்திருக்கிறது.

//

எல்லாம் மாறிப் போச்சு...

நேற்று போல இன்று இல்லை... கேட்டால் நாகரீகமும் கலாச்சாரமும் வளர்கிறதாம்... என்ன தான் வளர்ந்தாலும் மனிதனின் மனது மட்டும் இன்றும் என்றும் வளர்ச்சி குன்றியே...

வெறும்பய said...

எல்லாவற்றையும் தாங்கிய என்னால்..கடையாக அவள் " ஆத்தா நான் பொழிச்சுக்குவேன்ன்ல ...பொழைச்சுக்குவேன்ல கேட்டுகிடே உசுர விட்டத தாங்கவே முடியல....." என்னால அழ முடியலீங்க...

//


படித்து கொண்டிருக்கும் போதே அழுகை வந்து விடும் போலிருந்தது...

பதிவுலகில் பாபு said...

அருமையான கதைங்க..

மனசு பாரமாயிடுச்சு..

Bavan said...

அருமையா எழுதியிருக்கீங்க தேவாண்ணே.. வாசித்து முடித்த பின் நீண்ட பெருமூச்சு பதிலாகக் கிடைத்தது எனக்கு..;)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இது போல் ஒரு நடையை அனுபவத்தை எங்கும் பார்த்ததில்லை

அதுவும்

// ஏய்.. எங்க மாம மயன்லே

...." ஏட்டி.. கட்டிக்கிறதா...? ///

இந்த மொழி நடையில் சொல்லிய அந்த சோகம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது

இது கதையாக பாக்க முடியல உங்களுக்கு நடந்த ஒரு சம்பவமாகவே கண்முன் தெரிந்தது

வானம்பாடிகள் said...

ரொம்ப பிடிச்சது தேவா

என்னது நானு யாரா? said...

கிராமத்து மனிதர்களின் அன்பை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்

அந்த கிராமத்தின் மொழியின் நடையில் கதை நெஞ்சை துயரத்தின் பள்ளத்திற்குள் தள்ளியது.

சரி தேவா! கட்டுரையை படித்தீர்களா? பதிலை ஈமெயில் அனுப்புங்கள். காத்திருக்கிறேன்!

ஜீவன்பென்னி said...

அண்ணே சிலிர்த்துப்போச்சு........ உடம்பு பூரா.....

சௌந்தர் said...

எனக்கும் பழைய நினைவுகள் வருகிறது கண்ணீரில் நான்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

என்ன சொல்ல :(

--

லெபிள் யூஸ் பண்ணுங்க தேவா.

வானம்பாடிகள் said...

ரொம்ப இலகுவா, இயற்கையான வழக்கில் கனமான கதை.

பா.ராஜாராம் said...

கண்கள் கலங்கி போச்சு தேவா. மிக நெகிழ்வான இடுகை. என்னவோ இன்னைக்கு மகன்ஸ் என அழைக்க மனசு வரல. தேவாதான், இன்னைக்கு தோதா இருக்கு.

sakthi said...

நெகிழ்வான பதிவு

தேனு எங்கள் மனதில் குடியேறிவிட்டாள் தேவா

விந்தைமனிதன் said...

நல்ல கனம்... நல்லாருக்கு!

கே.ஆர்.பி.செந்தில் said...

இது நிஜமான வலி..... மனதின் வலிக்கு எப்போதும் மருந்தே கிடையாது ...

malgudi said...

உண்மையிலே காட்சிகள் கண்ணுக்கு முன்னாடி ஓடிட்டே இருந்தன.
//தேனு இல்லாத கிராமத்துக்குள் முதல் முறையாக...//
எனும் போது அந்த ஊரில் எனக்கும் வெறுப்பு வருதே ?
எப்படி சார்.

பதிவுக்கு ரொம்ப நன்றீங்க.

இராமசாமி கண்ணண் said...

இதுக்கும் நலலாருக்குன்னு கமெண்டு போட முடிலண்ணே (: மனச சங்கடபட்டு கிடக்கு...

ஜெயந்தி said...

படிக்க படிக்க கண்ணுல இருந்து கண்ணீர் வடிகிறது.

அருண் பிரசாத் said...

படிச்சு மனசு ஒரு மாதிரி ஆகிட்டுச்சுன்னா... இது உண்மை கதைய்யா?

JMBatcha said...

நெசமா அழுதுட்டேன் தேவா.. வேற என்ன சொல்ல

Chitra said...

தேவா..... வாசித்து முடித்ததும், அந்த தேனு எங்களுக்கும் உறவு போல நினைக்க வைத்து, மனதில் சோகமும் தொற்றி கொண்டது....

சிறுகுடி ராமு said...

இன்னும் என்னால அழுகைய கட்டுப்படுத்தவே முடியலடா மாப்ஸ்... அவ்ளோதான்.

Mohamed Faaique said...

சூப்பர் அண்ணா.. சும்மா சொல்லல... ஒவ்வொரு வரியா திருப்பி திருப்பி படிச்சிட்டு சொல்றேன் ..சூப்பர் அண்ணா...

சிறுகுடி ராமு said...

திரும்ப படிக்கனும்போல் இருக்கு.. ஆனா, ரொம்ப பயமாவும் இருக்கு.

"பருத்தி வீரன்" படத்த, எப்படியும் ஒரு 50 தடவையாவது பார்த்திருப்பேன். என்னடா எதோ சம்பந்தம் இல்லாம பேசுறானேன்னு பாக்குறியா? இருக்கு....! படத்த 50 தடவ பாத்தேன். ஆனா, அந்த படத்தோட க்ளைமேக்ஸ் காட்சிய மட்டும் ஒரே ஒருதடவைதான் பாத்தேன். அதுக்குமேல அத பாக்க தைரியம் இல்ல.

அதுமாதிரிகூட இத படிக்க முடியல.. ஏன்னா, இதுல மொத வரிலே, தேனு செத்துப்போச்சு அப்பிடின்னு தந்தி வந்துருதே... அதுனாலதான் மாப்ஸ். எங்கயோ போய்ட்டடா...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தேவா யார் அந்தத் தேனு..

விஜய் said...

இப்படி தான் அண்ணா, இருக்கணும் பதிவுன்னா, படிச்சு முடிக்கும் போது மனசு கணக்குரத எப்படி சொல்றது அண்ணா, இன்னும் கிராமங்கள் தோறும் இது போன்ற ஆயிரம் பாசத்தை சொல்லும் மென்மையான, கண்ணியமான உணர்வுகள் பரிமாரப்பட்டுகொண்டு தான் இருக்கின்றன அண்ணா,

புதிதாய் உடை உடுத்திவந்து நல்லா இருக்கிறதா என்பதில் ஆரம்பித்து, நான் வைச்சு குழம்பு நல்லா இருக்குதா அப்டின்னு கேட்டு, பாத்து பாத்து சாப்பாடு வைச்சு, தனக்கு வைச்சு இருக்குற தலைகாணியையும், போர்வையையும் கொடுத்துட்டு ஒரு ஓரமா படுத்து, தூங்குற வரைக்கும் கதைபேசி, காலைல அழுதுகிட்டே வழியனுப்புறது ...
ஐயோ அந்த மாதிரி பாசம் எல்லாம் எத்தனை காசு கொடுத்தாலும் வாங்க முடியாது.

அண்ணா கண் கலங்க வைச்சுடீங்க ...

வில்சன் said...

மரணம் ஒரு கொடூரமான விசயம், அதை நாமே தேர்ந்தெடுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது மயிரிழையில் தப்பித்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். உனது தேனின் ஆத்மா இளைப்பாற வேண்டுகிறேன்