Skip to main content

வேர்.....!




















நேற்றின் ஞாபகங்கள் எப்போதுமொரு சுகமான ஒத்தடங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அடித்து செல்லும் காலவெள்ளத்தில் மிதக்கும் ஒரு சருகாய் நானும் மிதந்து கொண்டிருக்கிறேன்.

அது ஒரு சராசரியான இரவு பத்து மணி நான் மட்டும் வாசலில் அமர்ந்திருக்கிறேன். தெருமுனையிலிருக்கும் அரசமரம் அதன் கீழிருக்கும் பிள்ளையார்.... இருட்ட்டாய் இருந்ததால் அந்த நாள் அமாவசையாய்தானிருக்கும் என்று நானே நினைத்துக் கொள்கிறேன் ஆனால் அது பெளர்ணமிக்கு முந்தைய நாள்.

தூரத்தில் ஒரு நாய் குலைக்கும் சப்தம் தெளிவாய் கேட்டதில் இரவின் அடர்த்தி என்ன என்று மனதுக்கு பட்டது. கிராமங்கள் பெரும்பாலும் இரவு 9 மணிக்கு எல்லாம் அடங்கி விடுகின்றன......! ஆள் அரவமற்ற தன்மையின் வீரியத்தை பிள்ளையார் கோவில் அரசமரத்தின் சருகுகள் கீழே விழும் காட்சி கூர்மை உணர்த்தியது.

மனிதர்கள் இருந்தால் நாம் எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்திப்போம். யாருமற்றுப் போனால் சிறிய சிறிய ஈ, எறும்பு, இலை, மரம், என்று நம்மைச் சுற்றி உயிர்ப்போடு ஓராயிரம் விசயங்களை கவனிக்க ஆரம்பிப்போம். வெற்றுடம்புடன் ஒற்றை துண்டோடு அமர்ந்திருந்த என்னுள் ஒரு இறுக்கம் பரவ காரணம் இருந்தது.

ஆமாம்... வீட்டினுள் என் அப்பத்தா... தனது அந்திமத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். எதிர் வீடான அத்தை வீட்டில் அப்பா, அம்மா, தம்பிகள் எல்லாம் உறங்கியே போய் விட்டனர்....அப்பா மட்டும் போய் படுடா தம்பி என்று சொல்லி விட்டு அவரும் உறங்கிப் போனார். நானமர்ந்து இருந்த என் பூர்வீக பிரமாண்ட வீட்டின் நடு ஹாலில் என் அப்பத்தா மட்டும் தனியே...

சற்று முன் அவளின் அருகில் அமர்ந்திருந்தேன்.....அவளின் கண்களின் மிரட்சியில் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றிய ஏக்கமும், என்ன நிகழ்கிறது அவளுக்கு என்று புரிந்து கொள்ளமுடியாத விரக்தியும் சேர்ந்தே தெரிந்தது...82 வயது வாழ்க்கை அவளை
கிழிந்த கந்தல் துணி ஆக்கி வைத்திருந்தது.

சம்சாரி..... அவள்..... 6 பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் பெற்று 15 வருடத்துக்கு முன்பே தாத்தவை பறிகொடுத்து.. எல்லோரையும் கட்டிக் கொடுத்து எல்லோரு ம் பேரன் பேத்திகளும் பிள்ளைகள் பெற்றதை கண்டு பூரித்து வாழ்ந்த சம்சாரி அவள்.

தாத்தா வயலில் உழும் போது ஒரு நாள் காலில் ஏதோ ஒன்று கிழித்து விட...அவரை அமரச் சொல்லிவிட்டு வயலில் இறங் கி மாடு ஓட்டியவள். கணீர் குரலுக்கு சொந்தக்காரி...ஏலேய்......சின்னையாயாயா யாயாயாயாயாயா அவள் குரலெடுத்து கூப்பிட்டால் அந்த கிராமம் மட்டுமல்ல...3 மைல் தூரத்துக்கு எல்லோருக்கும் கேட்கும்.....! அவளின் நடை பற்றி அவளே சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

தாத்தாவிற்கு இரண்டு ஊர் விவசாயம். பருத்திக் கண்மாயில் கொஞ்சம் நிலங்களும் அங்கு போனால் வந்தால் தங்குவதற்கு ஒரு வீடும் உண்டு. அங்கே உழவு நடக்கும் நேரத்தில் வீட்டிலிருந்து 4 மைல் இருக்கும் அந்த ஊருக்கு நடந்தே செல்வாளாம் அப்பத்தா....!

காலையில் தாத்தாவிற்கு சோறு எடுத்துக் கொண்டு... மதியத்துக்கு இங்க இருக்குற புள்ளக்குட்டியளுக்கு சோத்த அடுப்பில ஏத்தி வச்சிட்டி பருத்திக் கண்மாயிக்கு போயி உங்க அய்யாவுக்கு சோறு கொடுத்துட்டு உலைய இறக்கி வைக்க திரும்பி வந்திடுவேன்ல....அவளின் வேகம் மெலிதாய் பிடிபடும்.

உங்க அய்யா கம்மா கரையில் குளிச்ச்சிட்டு அவுக தலை முடியை சிக்கெடுத்து கிட்டே வருவாக...காதுல வைர கடுக்கண் சொலிக்கும் பாரு.....சொல்லும் போதே பள பளக்கும் அவளின் கண்கள் காதலை அப்பட்டமாய் வெளிப்படுத்தும்.

திடமான பெண்மணி அவள்...! வீட்டில் ஒரு நாள் திருடன் வந்துவிட...அவனை தனியே விரட்டிப்பிடித்து......மல்லுக்கு நின்று...ஆட்களை கூச்சலிட்டு அழைத்து அவனை நையப்புடைக்க வைத்தவள்.

இன்று சுருங்கிப் போய் கிடக்கிறாள்...மெல்ல மீண்டும் உள்ளே சென்று பார்க்கிறேன்... பிரமாண்ட ஹாலின் ஓரத்தில் 60 வால்ட் மஞ்சள் பல்ப் வெளிச்சத்தில்..அந்த வீட்டின் மகாராணி...கிழிந்த துணியாய்...!

சிரமமில்லாமல் இருப்பதற்காக மொட்டையடித்து வளர்ந்த வெள்ளை வெளிர் தலை முடி..! எவ்வளவு வனப்பானவள் என் அப்பத்தா? பழையப் போட்டோக்களில் பார்த்திருக்கிறேன்....

அழகுச் சிலை அவள். அவளின் அழகிற்கு கூடுதல் அழகாக அந்த ஒற்றை மூக்குத்தி இன்னும் வசீகரம் கொடுக்கும்.....ம்ம்ம்ம்ம் காலம் எல்ல வடுக்களையும் அவள் மேல் ஏற்றி அவளின் உருமாற்றி....எல்லாம் தின்று விட்டு... எச்சத்தை போட்டதை போல அந்திமத்தில் கொண்டு வந்து கிடத்தி விட்டு காத்திருக்கிறது...மொத்தமாய் கொண்டு செல்ல...

அவள் அருகினில் செல்கிறேன்....கண்களை மூடிய பாவனையில் இருந்தவள் அரவம் கேட்டு மெல்ல விழிக்கிறாள்....ஏதோ சொல்ல முற்படும் விழிகள்...சொல்ல முடியாமல் கண்ணீராய் வழிகிறது வார்த்தைகள். கலங்கும் என் கண்களோடு கைக்கொண்டு துடைக்கிறேன்....அவளின் கண்களை....!

நான் கிளைத்து வளர...
விதை கொடுத்த மரம்...
பட்டழிந்து போகும் முன்னே...
பசுமையான என்னைக் கண்டு....
என்னவெல்லாம் நினைத்ததோ...!
என் தகப்பனை எனக்கு....
தருவித்த தெய்வமே...
எங்களின் கண்ணெதிர் மூலமே.....!
என் குலம் சுமந்த கோவிலே....
என்னவென்று சொல்வேனடி..
வேடிக்கை வாழ்க்கைப் பற்றி....?

என்னால் தாங்க முடியாத அந்த அழுகை வெளிப்பட்டு அவளுக்கு பீதியை மேலும் கொடுக்க விரும்ப வில்லை என் மனது.

" அப்பத்தா......லைட்ட அமர்த்தவா....தூங்குறீங்களா நீங்க....? கேட்டேன். " வேம்பாபாபா.. வேம்பாபா....வேம்பா (வேணாம்பா)..... பமக்குபா.. பமக்குபா...பமக்குபா..(பயமாயிருக்குப்பா...)...வாய்குழறி ஏதேதோ சொன்னாள்....

அழுத்தமாய் வாழ்கையை வாழ்ந்தவள் அவள். மரணத்தை எதிர் கொள்ளவே முடியாமால் மருகிப்போயிருக்கிறாள். இன்னும் ஆடு மாடுகள் கட்டியதையும், சம்சாரியாய் நின்று பொறுப்புகளை வகித்ததையுமே மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.

அன்று மதியம் வீட்டு வாசலில் எல்லா உறவுகளும், அவளது எல்லா பிள்ளைகளும் அவளது மரணத்திற்காக எங்கெங்கோ இருந்து வந்து காத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் வெவ்வேரு சூழ் நிலைகள் பிரச்சினைகள் இருப்பதால்... அவர்கள் இந்த இறப்பை கூட எதிர்ப்பார்க்கிறார்கள்....கல்யாண சாவு என்று பேசிக் கொள்கிறார்கள். கூட்டத்தை விட்டு சற்று தூரத்தில் இருந்தேன் அவர்களை கவனித்துக் கொண்டு...

"ஏம்பா.. பெளர்ணம வருதுப்பா.. அது வரைக்கு தாங்காதுப்பா...." பெரிய அத்தை....அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். " ஏம்பா தம்பி..சும்மா மச மசன்னு நிக்கிறியே...ஆளுகள விட்டு வெறகு வெட்டிப் போடச் சொல்லுப்பா...ஆளுப் பேரு வந்த பொங்கிப் போடணும்ல" இது...சின்ன அத்தை...." அப்படியாக்கா சரி.. இந்த பழசோலிய வர சொல்லியிருக்கேன் நாளைக்கு வெட்டச் சொல்றேன் விறக..." இது என் அப்பா........!

ஒரு கட்டத்தில் பெற்ற பிள்ளைகளே முடிவு செய்கின்றனர்.....தாயாய் இருந்தாலும் போய்ச்சேரட்டும் என்று...! காரணம் இப்போது அவர்கள் காண்பது வேறு உருவம்... குழந்தைப் பருவத்தில் பார்த்த “ஆத்தா” இல்லை....! ஒரு வேளை காலம் உருவை மாற்றுவது இது போன்ற நிகழ்வுகளை தாண்டிப் போவதற்குதானோ...என்று நினைத்தேன்...

மதிய நினைவுகளில் இருந்து வெளியே வந்தேன்........! அப்பத்தா இப்போது என் கையை பிடித்துக் கொண்டிருந்தாள்...அழுத்தமாக.... நான் அவள் தலையில் கைவைத்து தலையை வருடிக்கொண்டிருந்தேன்...........உஷ்ணம் அதீதமாக இருந்தது.

மனசுக்குள் அவளோடு பேசினேன்...." அப்பத்தா இப்போ உங்களுக்கு வேறு ஒரு அனுபவம் கிடைக்கப் போகுது. தயவு செஞ்சு பழசு எல்லாம் அழிச்சுடுங்க.....இனி வேறு விதம்...அது எப்படின்னு எனக்கு தெரியாது.....உங்களை எது இங்க கொண்டு வந்துச்சோ அது பாத்துக்கும். நீங்க வரும்போதும் யாரும் இல்ல...போகும் போதும் யாரும் இல்ல...ப்ளீஸ் எதுவும் உங்களது இல்லை.....இல்லை ...இல்லை...." சொல்லி முடித்து மணி பார்த்தேன்..அது அதிகாலை 1 மணியை தொடப்போனது.

அவளது கையைப் பிரித்து விட்டு......திணைக்கு வந்து படுத்திருத்த அத்தையிடம் நான் தூங்கபோறேன்ன்னு நீங்க...பாத்துக்கோங்க னு சொல்லிட்டு....வெளியில் கிடந்த மாட்டு வண்டியில் தலை சாய்த்து கண்களை மூடும் முன் ஒரு முறை அப்பாத்தா இப்போ என்ன நினைச்சு கிட்டு இருப்பாங்க? என்று நினைத்தேன்

உறக்கம்...என் அனுமதியின்றி...என்னை இழுத்துச் சென்றது............

............
............
.............
..........
...........

சப்தம் கேட்டு எழுந்தேன்...........கூக்குரல். ஒப்பாரி...எல்லோரும் வீட்டுக்குள் கதறவும்...எதிர்வீடு பக்கது வீடுகள் அரக்க பறக்க ஒடி வரவும்.......அந்த அதிகாலையில் ஒரே....பரபரப்பு.....மெல்ல நடந்து வீடு நோக்கி வந்தேன்.......அப்பா என்னை கட்டியணைத்து.....

" அப்பத்தா நம்மளை விட்டுட்டு போயிருச்சுப்பா" கதறினார்.

மெல்ல அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு.....பின்புறம் இருக்கும் தோட்டத்துக்கு வந்தேன்.....வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது......

யாரோ இரவு முழுதும் உறங்காத ஒரு குழந்தைக்கு.........தூரத்தில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது.....லேசாய் காதில் வந்து விழுந்தது......

" ஆராரோ ஆரிராரோ.....என் கண்ணே நீயுறங்கு......"

அப்பத்தா கண் முன் வந்தாள்... புரிஞ்சுதுப்பா...புரிஞ்சுதுப்பா.....சிரித்துக் கொண்டே.....சொல்வதைப்போல தோன்றியது.....

நான் திடமாய் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...!


தேவா. S

Comments

///மனிதர்கள் இருந்தால் நாம் எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்திப்போம். யாருமற்றுப் போனால் சிறிய சிறிய ஈ, எறும்பு, இலை, மரம், என்று நம்மைச் சுற்றி உயிர்ப்போடு ஓராயிரம் விசயங்களை கவனிக்க ஆரம்பிப்போம். //

இது உண்மைதான் .. நான் கூட தனிமையில் இருக்கும் போது தான் எனது ஆராய்சிகளை கூட மேற்கொள்கிறேன் . அதாண்ணா கொசுவுக்கு கொம்பு இருக்கா இது போன்ற ஆராய்சிகளை சொன்னேன் ...
//ஏதோ சொல்ல முற்படும் விழிகள்...சொல்ல முடியாமல் கண்ணீராய் வழிகிறது வார்த்தைகள். //

சத்தியமா இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..!! அவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க ..!!
சத்தியமா எனக்கு என்ன சொல்லுறது அப்படின்னே தெரியலை அண்ணா .. படிச்சு முடிச்சதுமே ஒரு சிலிர்ப்பு வந்தது .. அந்த கடைசி வரிகள் ஆராரோ அத படிக்கும் போது என்னையும் அறியாமல் கொஞ்சம் கண்ணீர் வருவது போல உணர்ந்தேன்.. உண்மைலேயே கலக்கல் அண்ணா ..!!
//அந்த நாள் அமாவசையாய்தானிருக்கும் என்று நானே நினைத்துக் கொள்கிறேன்//

ஒழுங்கா கரண்ட் பில் கட்டனும். இல்லைனா இருட்டாதான் இருக்கும்..
இன்னிக்குதான் உங்க பதிவை முழுசா படிச்சிருக்கேன். நல்லா இருக்குனா
@தேவா

மாப்ஸ் லவ்வ்வ்லி மாப்ஸ்.... அருமையா எழுதி இருக்கிங்க... அதுலயும் இந்த லைன் “உங்களை எது இங்க கொண்டு வந்துச்சோ அது பாத்துக்கும்.” ஆன்மிகத்த தேடல ஒரு வரில சொல்லிட்டிங்க.
அருமையான எதார்த்த தேடல் சிதறிக்கிடக்கிறது பதிவின் வார்த்தைகளில் . பகிர்வுக்கு நன்றி நண்பரே
Anonymous said…
மனச கணக்க வச்சுட்டீங்க அண்ணே!
ராஜபிளவை கண்டு மிகுந்த வேதனையோடு உயிர் பிரிந்த என் அம்மா வழிப்பாட்டியை இந்தப் பதிவின் வழி மீண்டும் நினைக்க வச்சுட்டீங்க!
Dheva anna

wow....super .this is the first time really appreciate from my heart.Its truly high class and lovely once.once again i thank that for giving the this much experience from you
தேவா அண்ணா முதலில் நன்றி .எனக்கு புரியுற மாதிரி எழுதினதுக்கு .அருமையான பகிர்வு அண்ணா உங்க கூட இருந்து பார்த்தது மாதிரி இருந்துச்சு .தமிழ் வார்த்தைகள் அப்படி கோர்வையாய் வந்திருகிறது .நன் இந்த பதிவிக்கு கும்மி அடிக்க வரமாட்டேன் .
//Dheva anna

wow....super .this is the first time really appreciate from my heart.Its truly high class and lovely once.once again i thank that for giving the this much experience from you //

yes. Im suffering from fever. Im unable to attend the class. Please grand me leave for 2 days.
செம டச்சிங் அண்ணா, ஒன்னும் சொல்ல முடியல... இருங்க நான் அந்த நினைவுல இருந்து மீண்டு வந்த பிறகு கமெண்ட் போடுறேன்

ஏற்கனவே உங்க ஒரு பதிவுல சொல்லி இருக்கேன். இங்கயும் சொல்லுறேன் இனி உங்க பதிவை என் வாழ்க்கையில் ஒன்றி படிக்க மாட்டேன்... மீள் கஷ்டமா இருக்கு
இது போன்ற சில பதிவுகள் ஒரு முறை படித்தாலே போதும் மனதில் பதிந்துவிடும்
பதிவோட மொத்த சாரத்தையும் உள்ளார வாங்கி மனசுக்குள்ள ஏத்திக்கிறத விட வேற என்ன செய்ய முடியும். உள் மனதின் பொதிகளையும், எண்ணங்களை கிளறும் எழுத்து.
Mahi_Granny said…
வெளியில் கிடந்த மாட்டு வண்டியில் தலை சாய்த்து கண்களை மூடும் முன் ஒரு முறை அப்பாத்தா இப்போ என்ன நினைச்சு கிட்டு இருப்பாங்க? என்று நினைத்தேன்.'' அப்பத்தாவின் நினைவுகளை உணர்வு பூர்வமாக வாசிக்க முடிகிறது.
ஹேமா said…
மனம் வலிக்கிறது தேவா.இந்த நிலைமை ஆகும்வரை என் உயிர் இருக்ககூடாதென வேண்டுதலும் செய்கிறேன் !
நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை...
உங்கள படைப்புகளில் இதுதான் சிறந்தது, அந்த நேரத்து வலியை உணர்வுகளை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்
ஒரு கட்டத்தில் பெற்ற பிள்ளைகளே முடிவு செய்கின்றனர்.....தாயாய் இருந்தாலும் போய்ச்சேரட்டும் என்று...! காரணம் இப்போது அவர்கள் காண்பது வேறு உருவம்... குழந்தைப் பருவத்தில் பார்த்த “ஆத்தா” இல்லை....!

வலி வார்த்தைகள்.
///அது ஒரு சராசரியான இரவு பத்து மணி நான் மட்டும் வாசலில் அமர்ந்திருக்கிறேன்.///

அப்படி எல்லாம் தனியா உக்காராதீங்கப்பா.... :-))

///யாருமற்றுப் போனால் சிறிய சிறிய ஈ, எறும்பு, இலை, மரம், என்று நம்மைச் சுற்றி உயிர்ப்போடு ஓராயிரம் விசயங்களை கவனிக்க ஆரம்பிப்போம்.///

அப்பவே சொன்னேன்.. கேட்டீங்களா.. இப்ப பாருங்க.. ஈ, இரும்பெல்லாம்.....ஆஹா.....

******ஜோக்ஸ் அபார்ட்...

///நீங்க வரும்போதும் யாரும் இல்ல...போகும் போதும் யாரும் இல்ல...ப்ளீஸ் எதுவும் உங்களது இல்லை.....இல்லை ...இல்லை...." சொல்லி முடித்து மணி பார்த்தேன்////

வாழ்க்கைத் தத்துவம்.. வடிவாய் வரிகளில்.. நல்லா இருக்குங்க.. :-)))
//ஒரு கட்டத்தில் பெற்ற பிள்ளைகளே முடிவு செய்கின்றனர்.....தாயாய் இருந்தாலும் போய்ச்சேரட்டும் என்று...! காரணம் இப்போது அவர்கள் காண்பது வேறு உருவம்... குழந்தைப் பருவத்தில் பார்த்த “ஆத்தா” இல்லை....! ஒரு வேளை காலம் உருவை மாற்றுவது இது போன்ற நிகழ்வுகளை தாண்டிப் போவதற்குதானோ...என்று நினைத்தேன்...//

Dhevaa, superb.
கலக்கல்...
அழகா சொல்லிருக்கீங்க .
அருமையான எழுத்து நடை தேவா! மிகவும் ஆழ்ந்த கருத்தைக் கூட அழகாக எளிதாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நேராக உள்மனதிற்குள் சென்று ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வார்த்தைகள். அருமை! அருமை! அருமை! ரொம்ப நன்றி தேவா! இனி எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

இதுப் போன்ற படைப்புகள் உங்களுக்கு எளிமையாக கைக்கூடுகிறது. உங்களின் எழுத்தில் ஒரு ஆளுமை இருக்கிறது. இந்த பதிவு உங்களில் சிறந்த பதிவுகளில் ஒன்றாக இருக்கும் என்பது மட்டும் உறுதி தேவா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த