Skip to main content

என் ஜன்னலில்...!
























ஒரு ஜன்னல் ஓரத்து இரவு மழை...முன்னிரவா பின்னிரவா என்று கேட்கிறீர்களா.....? அது முன்னிரவுதான்! இரவு மழையும் மின்சாரமும் எப்போதும் நண்பர்கள் இல்லை...எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது வழமையில் எமக்குப் பழகிப்போன ஒன்று.....

வழமைக்கு ஒத்தாசையாக இதோ மின்சாரம் ஓடி ஒளிந்தே விட்டது....பின் கேட்கவா வேண்டும் அழையா விருந்தாளியாக வந்தே விட்டாள் இருள் மங்கை...! இவள் மிகப் புதிரானவள்.. இவளின் புதிர்கள் விளங்க வேண்டுமெனில் அவளோடு கலந்து அமர்ந்து விட வேண்டும்.. இதோ நானும்...

சப்தமின்றி....சலமின்றி... நானும் இருளும்...பொறுமையாய் மெளனங்களைப் பரிமாறிக் கொண்டோம்...! ஜன்னல் கம்பியில் பட்டு சில மழைத்துளிகள் என் கன்னங்களில் முத்தமிட்டது...மெல்ல ஜன்னல் கம்பியை பற்றினேன்.. சிலீரென்று அந்த இரும்புக் கம்பி ஒரு ஏகாந்தத்தை உள்ளே பரவவிட்டதை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தேன் ஒரு மின்னல் வந்து பளீரென்று பார்த்துவிட்டுப் போனதை கண்டு சந்தோசத்தில் மோதி எகத்தாளமாய் சிரித்த மேகங்கள் அதை இடி என்று படித்து வைத்திருந்தது பழக்கப்பட்ட மனது.....

என் வீட்டில் யாருமில்லை...ஒரு திருமணம்..உறவுகள் எல்லாம் ஒரு நாள் முன்னதாகவே போய்விட்டு...மறுநாள் என்னை வரச்சொல்லி சென்றிருந்த அந்த இடைவெளியில் தான் இந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது எனக்கு. நிசப்தமும் என்னோடு சேர்ந்து... மழையின் மொழியை ரசித்துக் கொண்டிருக்க என்னையும் கொஞ்சம் இன்றாவது கவனியுங்கள் என்று சில தவளைகள்..தங்களின் ராகங்களையும் பரவவிட்டுக் கொண்டிருந்தன காற்றில்...

இரவு உணவு முடித்து மனிதர்கள் கண்ணயர முயன்று கொண்டிருந்த போது விழித்துக் கொண்டது இந்த பிரபஞ்சக்காதல்....! மழையின் சப்தம் கேட்டிருக்கிறீர்களா தோழர்களே...அது....உடம்பின் நரம்புகளை சுகமாய் நீவி விட்டு உள்ளுக்குள் ஒரு தாளகதியில் கச்சேரியே நடத்தும்...ஜன்னலோர சாரல் கச்சேரிக்குள் பூ அள்ளித் தூவும்...! இந்த தருணத்தில் வீசும் காற்றை வாடைக்காற்று வாடைக்காற்று என்று பலமுறை மனிதர்கள் மறுத்திருப்பார்கள் இல்லை மறைத்திருப்பார்கள்....

வாடைக்காற்று எப்போதும் தனியே வருவதில்லை... அது மண்ணின் வாசத்தை பிசைந்து..தண்ணீரின் பதத்தை நிறைத்து சில்லென்று பற்றிப் பரவி......ஒரு கூடலை ஒத்த சுகத்தை உடலுக்குள் ஊற்றிவிட்டு ஓடியே ஒளிந்து விடும். வாடைக்காற்றை...தொலைத்து விடாதீர்கள் வரவேற்று முடிந்தால் உங்கள் மூளைகளுக்குள் தேக்கிவையுங்கள் அதன் ஸ்பரிசங்களின் அடர்த்தியை....

மழை நின்றபாடில்லை....யாரோ தெருவில் அலுத்துக் கொண்டே குடை பிடித்து கைவிளக்கெரிய விட்டு..சொல்லிக்கொண்டே.. என் ஜன்னல் கடந்து போனார்கள்...! கோபத்தின் உச்சத்தில் கத்தியே விட்டேன்...மழை நிற்க வேண்டியதில்லை...பெய்யட்டும் என்று... ஆமாம்..தோழர்களே.. மனிதன் மட்டும் பேசலாம்...ஆடலாம் கூடலாம்..மழை செய்யக் கூடாதா...மழையும் மனிதனைப் போலத்தானே....

இருளும் நானும் கவனித்துக் கொண்டிருந்த அந்த அற்புத நிகழ்வினை எழுத்துக்களில் கோர்த்துவைக்க எண்ணியதை கவனித்து விட்டாள் போலும் இருள்...நான் தீப்பெட்டி எடுத்ததும் சிணுங்கலாய்....நீ அழைத்தால் வருவேன்..இல்லை இல்லை இல்லை ஒளியை அணைத்தால் வருவேன்..என்று.சொல்லிக் கொண்டே இருந்தவள்....ஒரு தீக்குச்சி உரசலில்..வெட்கி ஓடி மறைந்தாள்...! தேக்கி வைத்திருந்த அக்னியை ஒரு கிழித்தலில் வெளிக் கொண்டு வந்த தீக்குச்சி தன் உயிரை மெழுகுவர்த்திக்கு கொடுத்து தன் ஆயுள் முடித்துக் கொண்டது.....

உயிரியல் சித்தாந்தமும் இதுவே....மனிதன் மரிக்கும் முன் தன் உயிர் பரவ விட்டுத்தான் போகிறான். பிரபஞ்ச நியதியின் சூட்சுமம் சின்ன சின்ன விசயங்களிலும் மறைந்து கிடக்கிறதுதானே...?

உயிர் பெற்ற மெழுகுவர்த்தி மெல்ல நடனமாடிக் கொண்டிருந்தது... காற்றில்...உற்றுப் பார்த்தேன்.... ஒரு உயிரோட்டமான முழுமையான கொடுத்தலில் ஜ்வாலையாய் அடங்கி நின்று கொண்டிருந்தது அக்னி....! எத்தனை வலு.... எவ்வளவு சீற்றம் கொண்டது அக்னி....... கட்டுக்குள் நின்று...மெல்ல என்னைப் பார்த்து சிரிக்க.. நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

ஆமாம் வலுவானவை எல்லாம் அடக்கமானவை... தேவைகளின் பொருட்டு இயல்புகளை வெளிக் கொணருபவை... தவறாக பயன்படுத்தும் போது அழிவை ஏற்படுத்துபவை....! மனிதர்களில் கூட வலுவான மனிதர்கள் எப்போதும் சீறுவது இல்லை கட்டுக்குள் இருந்து செயல்களைச் செய்யும் போது அவர்களின் மொத்த கவனமும்...நேர்மறை விளைவுகளை நோக்கியே இருக்கிறது...! அவர்களை தவறாகப் பயன்படுத்தினாலோ சீற்றம் பெறச்செய்தாலோ.. அழிவுகள் தானே நிகழ்கின்றன....

மெல்லிய வெளிச்சம் கொடுத்த திருப்தியில் தன்னை இழந்து கொண்டிருந்தது மெழுகு வர்த்தி.... சூழலை வாங்கிக் கொண்ட நானும் என்னை இழந்து கொண்டே இருக்க....ஏதோ ஒரு இருப்பு நிலை எல்லாவற்றையும் ஆளுமை செய்து கொண்டிருந்தது....

ஒரு வெள்ளைப் தாளில்
எழுதப்படாத வெறுமையின்
பின்னணியில் ஒளிந்து கிடந்தன
என் கவிதைக்கான வார்த்தைகள்...!

பேனாவின் நுனியில் தேங்கிக் கிடந்த
உணர்வுகள் எல்லாம் இதோ
விழுந்து விடவா விழுந்து விடவா
என்று கேட்டுக் கொண்டே
பதிலுக்கு காத்திராமல்...
சொட்டத் தொடங்கியிருந்த
எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து சேர்ந்து
வரிகளாய் வழிந்தோடின...

காற்றையும் மழையையும்....
செரித்த மூளை அவற்றை
காகிதத்தில் பரவவிட்டது...
வாடைக் காற்றின்...இதம்..
தொட்டு நனைந்து விழுந்திருந்தன
வார்த்தைகளின் கூட்டங்கள்...!

மொத்தமாய் எழுதிவிட்டு...
அதை மொய்த்த கண்களுக்கு
மனசு சொன்னது....
இதுதான்...கவிதையென்று....
மீண்டும் கேட்டேன் மனதிடம்
என்னவென்று....

மெளனமாய் சொன்னது மனது.....இது காதலின் மறுபிறவி....கடவுளின் ஒரு சாயல் என்று.....!

எழுதி முடித்து மெல்ல ஜன்னல் வழி வெளி நோக்கினேன்...சாரல் குறைந்திருந்தது...மழைத் தூரலாய்...மெலிந்திருந்தது..இன்னும் சற்று நேரத்தில் நின்றுவிடும் என்று மனசு சொன்னது......சொல்லிமுடித்த மறு நிமிடம் பளீச் பளீச் சென்று பற்றியெறிந்தன வீட்டின் குழல் விழக்குகள்....ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மின் விசிறி ஆக்ரோசமாய் அணைத்துப் போட்டது....மெழுகுவர்த்தியை....

சுற்றுப்புறமும் மின்சாரத்தால் உயிர்பெற்று ஏதேதோ சப்தங்கள் இறைக்க...முற்றுப் பெற்றுப் போனது என் மோன நிலை...

ஜன்னலடைத்தேன்...மெழுகுவர்த்தியை எடுத்து ஓரம் வைத்தேன்.....தொலைக்காட்சியை உசுப்பிவிட்டு...எதோ ஒரு இயக்க நிகழ்வுக்குள் என் மூளையை கொடுத்து விட்டு....காட்சிகளில் லயிக்க ஆரம்பித்தேன்.....

ஜன்னலோரத்தில் இருந்த என் கவிதைத்தாள்....காற்றில் பட படத்தது... பறக்கவிடாமல்...மேலே அமர்ந்திருந்தது...வார்த்தைகளை கொட்டிவிட்டு தற்காலிகமாய் செத்துப் போயிருந்த என் பேனா....

நான் தொலைக்காட்சியில் தொலைந்து போயிருந்தேன் ....

கவிதை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.....


தேவா. S

Comments

அருமையான விளக்கங்கள்...
என்னையும் வாடைக்காற்றாய் வருடச் செய்தது...
ம்ழையின் ஒலியும் மண்ணின் வாசமும்
வாடைக்காற்றின் குளிரும்
தவளைகளின் இசையும் அனுபவித்த சுகத்தைத் தந்தன
உங்கள் எழுத்துக்கள்..!

வாழ்த்துக்கள் அண்ணா..!
உணர்வுக் குவியல்களை அள்ளி வீசும் அற்புத அனுபவம்!
//.எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது வழமையில் எமக்குப் பழகிப்போன ஒன்று.....//

எங்க ஊரிலும் போய்டும் ., ஹி ஹி ஹி ..
//மழை செய்யக் கூடாதா...மழையும் மனிதனைப் போலத்தானே....///

புரியலையே..?
//வாடைக் காற்றின்...இதம்..
தொட்டு நனைந்து விழுந்திருந்தன
வார்த்தைகளின் கூட்டங்கள்...!//

அட ச்சே ., நான் இதனை வடைகாற்று அப்படின்னு படிச்சிட்டேன் .!!
//வலுவானவை எல்லாம் அடக்கமானவை//

ஆம். உங்கள் எழுத்தாளுமையைப்போல....
சில கோடுகள் இடப்பட்ட வெள்ளைக் காகிதத்தில் நிரப்பி இருக்கும் எண்ணங்களின் பின்னணி மிகவும் அருமை . கவிதையுடன் கூடிய எழுதுக்குவியல்கள் மெல்ல இதயம் வருடி செல்கிறது . பகிர்வுக்கு நன்றி நண்பரே
//நான் தொலைக்காட்சியில் தொலைந்து போயிருந்தேன் ....//

இவரை முதல்ல ஒரு இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைங்க. அடிக்கடி தொலைஞ்சு போயிடுறாரு...
நல்ல கவிதை.
உணர்வுகளின் வெளிப்பாடு அருமை..

இருள்,... அவளை ரசிக்க தெரிந்தால் மட்டுமே அழகாக தெரிவாள்.. இல்லையென்றால் அவள் உன்னை பயமுறுத்தும் வெறும் கருப்பு நிறம்...
Chitra said…
ஜன்னலோரத்தில் இருந்த என் கவிதைத்தாள்....காற்றில் பட படத்தது... பறக்கவிடாமல்...மேலே அமர்ந்திருந்தது...வார்த்தைகளை கொட்டிவிட்டு தற்காலிகமாய் செத்துப் போயிருந்த என் பேனா....


...WOW! Simply Superb!!!! Awesome!
RVS said…
Repeat to the power of infinity to Chitra's Comment!!! ;-)
ஹேமா said…
வெள்ளைத்தாளில் உணர்வுகள் வடித்த கவிதைதான் நிறையப் பிடிச்சிருக்கு.
அற்புதம் நண்பரே அற்புதம்!
Anonymous said…
I go with Chitra akka :-)

ஒரு பெரிய கவிதை படித்த மாதிரி இருந்தது :-)
//I am First ....DOT //
வடை வடை....
Anonymous said…
இயற்கையை துளி துளியாய் ரசிக்கும் பிரபஞ்ச காதலன் !!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த