Skip to main content

தேடல்....10.02.2011!




















விக்னேஷ் அண்ணன் டைரக்டர் கார்வண்ணன் அங்கிள்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர், நான் ஹோட்டலியர். எப்பவும் தியானம், ஆன்மிகம்னு விக்னேஷ் அண்ணன் ஒரு பக்கம். ஊர் சுத்தல், ஆட்டம், பாட்டம்னு நான் ஒரு பக்கம். இரண்டு பேரும் ஒன்னா தங்கியிருந்தது போரூர் மதானந்தபுரம் கீரீன் பார்க் அப்பார்ட்மெண்ட்ல....!

டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு ஒரு நாள் பத்து மணிக்கு வந்து என்னோட சாவிய வச்சு வீட்டை திறந்து உள்ள போனா ஒரு பெட்ரூம் திறந்தும் இன்னொன்னு ஒருக்களிச்சு சாத்தியும் வச்சு இருந்துச்சு....யாரும் இருக்க மாதிரி தெரியலை....

மெல்ல பாதி திறந்து இருக்குற கதவை திறந்து உள்ள பாத்தா.. விக்னேஷ் அண்ணன்... பத்மானசனத்தில் அமர்ந்து தியானம் பண்ணிட்டு இருந்தாங்க....! எனக்கு டி.வி போடணும் உடனே...ஆன அண்ணனுக்கு தொந்தரவா இருக்குமோன்னு யோசிச்சுகிட்டெ ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தேன்.....

15 நிமிசம் ஆச்சு.... எனக்கு பொறுமையில்லை. வரட்டும் வெளிலன்னு கடுப்பா காத்துட்டு இருந்தேன். 20 நிமிசத்துல அண்ணன் வெளில வந்தாரு....கையில ஒரு சின்ன புத்தகத்தோட...! அவரை முறைச்சு பாத்துட்டே கேட்டேன்...என்ன பண்றீங்க... ? கொஞ்சம் கடுப்பா கேட்டேன்...! ஒண்ணும் இல்லை தியானம் பண்ணி ரொம்ப நாளாச்சு அதனாலதான்...

நான் கேள்விகளிலேயே நிரம்பி வழிஞ்ச காலம் அது. பத்தாக்குறைக்கு உங்க வீட்டுத் திமிரு இல்லை எங்க வீட்டுத் திமிரு இல்லை, ஊருல இருக்குற திமிர எல்லாம் ஒண்ணா சேத்து நாந்தான் வச்சிருந்தேன். மறுபடி விக்னேஷ் அண்ணனை கேட்டேன்....

தியானம் எதுக்கு பண்றீங்கனு? ம்ம்ம்ம் மன அமைதிக்குன்னு அவர் பதில் சொல்லவும் நான் சிரிச்சுகிட்டே...ஹா ஹா ஹா... அப்படியா? அப்படீன்னா எனக்கு தியானம் தேவையில்லைனு சொன்னேன்....அவர் மெலிதாய் சிரித்தபடி கையிலிருந்த புத்தகத்தை எடுத்கொண்டு பால்கனியில் போய் அவர் அமைதியாய் அமர்ந்தது எனக்கு இன்னும் எரிச்சலூட்டியது....

எப்பவுமே நாம கோபமா பேசும் போது எதிராளியும் கோபமா பேசி நம்மகிட்ட ஆர்கியு பண்ணனும்னு மனசு எதிர்பார்க்கும்....ஆனா கண்டுக்காம போகும் போது நம்ம உள்முனைப்பு தோத்துப் போய் இன்னும் அவமானப்பட்டு நிக்கும். ஆமாம் பெரும்பாலான மனிதர்களின் கோபங்கள் அடுத்தவரை மட்டம் தட்டத்தானே வெளிப்படுகின்றன. இன்னொரு விதமும் இருக்கு.... தெரியாத விசயத்தைத் தெரியாதுன்னு சொல்லித் தெரிஞ்சுக்க முயற்சி செய்யாம...யாருக்குத் தெரியுமோ அவரை மட்டம் தட்ட முயற்சி பண்றது...

எனக்கும் கோபம் வந்து விக்னேஷ் அண்ணன் கிட்ட மீண்டும் போய்... என்ன படிக்கிறீங்கனு? நான் கேட்ட அந்த நிமிடம் என் வாழ்க்கையையே மாற்றிப் போடப்போகிறது என்று எனக்குத் தெரியாது...

"சிவபுராணம்" படிக்கிறேன்னு அவர் சொல்லிட்டு ... சரி சரி தேவா நீ போய் தூங்கு லேட் ஆச்சு இது எல்லாம் நீ படிக்காதேன்னு அவர் சொன்ன இடம் எனக்குள் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க....ஏற்கனவே என்னோடு உறவில் இருந்த பாலகுமாரனின் நாவல்கள் ஆழ்மனம் என்னும் சப்கான்ஸியஸ் மைண்டிலிருந்து படையெடுத்து வெளிவந்து....ஏன்? ஏன்? ஏன் நான் படிக்க கூடாது என்று அவரிடம் கேட்க....

வேண்டாம் புலிவாலைப் பிடிக்காதே.... உனக்கு இப்போ வேண்டாம். அதுவும் இல்லாம ஆன்மீகம்னா என்னனு விளங்கிக்கிற பக்குவமும் சூழ்நிலையும் உனக்கு இல்லை என்று என்னுடைய 23 வயதையும் என்னுடைய நட்சத்திர ஹோட்டல் வேலையையும் மறைமுகமாகச் சொல்ல....

நான் சரி என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டேன். அதற்கு அடுத்த விடியப்போகும் நாள் என்னுடைய டே ஆஃப்....அதற்கு மறுநாள் நான் ஒரு இரு வார விடுமுறைக்கு மதுக்கூர்(என் வீட்டுக்குத்தாங்க) போகிறேன்.

10 மணிக்கு விடியும்
எனது விடுமுறைதின காலைகளில்
எந்த பரபரப்பும் இருக்காது..
இல்லாத நேரம் நகர்வதாய்ச்
சொல்லி ஒரு மாயையை ஊட்டும்
மொத்ததில் நானே நானாய்
இருக்கும் பொழுதுகள்
உடைத்துப் போட்டிருக்கும் ...
எல்லா விதி முறைகளையும்...!

நான் எழுந்த போது விக்னேஷ் அண்ணன் வெளியே போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டிருந்தது. அவர் அதிகாலை பட்சி...நான்...கட்டுகடங்கா காற்று...! டீ போட்டு எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்த என் கண்ணில் பட்டது காற்றில் படபடக்கும் சிவபுராணம் புத்தகம். டி.வி பெட்டிக்கு பக்கத்தில் இருந்து கொண்டு காற்றில் அது ஆடி என்னை கலைத்துப் போட்டது....! " நீ எல்லாம் படிக்காத...வேண்டாம்....புலி வால ஏன் கைல பிடிக்கிற? " இப்படி நேத்து நைட் அண்ணன் கேட்டது நினைவுக்கு வர.... வழக்கம் போல எனக்குள் இருக்கும் திமிர் உற்சாகமாய் வேலை செய்யத்தொடங்க....

சற்றைக்கெல்லாம் சிவபுராணம் என் கையில்.... சப்தமாய் டீயை மறந்து விட்டு நான் வாசிக்கத் தொடங்கினேன்....வரிகள் வழுக்கிக் கொண்டு போக.. மனம் எனக்குத் தெரியமால் எங்கோ சென்று வார்த்தைகளுக்குள் லயித்து....

"ஈசனடி போற்றி; எந்தை அடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார்ப் பெருந்துறை நம் தேவனடி போற்றி"

வரிகளைக் கடந்து....செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து...வாசித்து முடித்தவுடன் மீண்டும் அதை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. மனப்பாடம் செய்து விக்னேஷ் அண்ணனிடம் சொல்ல வேண்டும். இது என்ன பெரிய விசயம் என்ற வேகத்தில் சிவபுராணத்தை மீண்டும் மனப்பாடம் செய்யத்தொடங்கினேன்....

வயிற்றுப் பசி எடுத்த சமயம் டைம் பார்த்த போது மதியம் மணி 3 ஆகி இருந்தது அப்போது தங்கு தடையின்றி சிவபுராணம் மனப்பாடம் ஆகியும் இருந்தது. அதே தினத்தின் இரவில் விக்னேஷ் அண்ணனும் நானும் தி.நகர் போக் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம். நான் ஊருக்குச் செல்ல விக்னேஷ் அண்ணன் என்னை ஏற்றி விட.....

விக்னேஷ் அண்ணனிடம் சிவபுராணம் சொல்லிமுடித்துவிட்டு.. அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டவுடன்... ஒரு மெல்லிய சிரிப்புடன் என்னைப் பார்த்தவர். படிச்சிட்டியா சரி சரி இனிமே நான் எதுக்கு அர்த்தம் சொல்லணும் சிவபுராணமே அர்த்தம் கொடுக்கும். சிவன் என்பது ஒரு ஆள் இல்லை இது மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்க பெஸ்ட் ஆஃப் லக் என்று அவர் கூறி முடிப்பதற்கும் நாரயண மூர்த்தி பஸ் வருவதற்கும் சரியாய் இருந்தது...

அந்த ஜன்னலோரத்து ...
இரவுப் பேருந்தில்
என் உண்மையான பயணம்
எனக்கே தெரியாமல் தொடங்கியது...!

சிவன் ஒரு ஆளில்லை...அப்படி என்றால் யார் சிவன்? அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு? திருவிளையாடல் படம் ஒரு கணம் என் கண் முன் வந்து சென்றது.....மனதுக்குள் ஈசனடி போற்றி எந்தையடி போற்றி....என்னையறியாமல்..வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தன.

விடுமுறை வீட்டில் குதுகலமாயிருந்த என் மனம் தொடர்ச்சியாய் சிவபுராணத்தில் உழன்று கொண்டிருந்தது. வழக்கம் போல் நூலகத்திற்குச் சென்ற என் கண்ணில் தென்பட்ட விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு என்னைப் புரட்டியே போட்டு விடும் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை.

நாத்திகவாதியாயிருந்து, வறுமையிலும் ஒளிரும் அறிவு கொண்டு, கேள்விகள் கேட்டு ஆராய பகவான் இராமகிருஷ்ணரைக் காணச் சென்று அவரது சத்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அதன் பிறகு அமெரிக்கா சென்று பல அனுவங்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி, பின் தாயகம் திரும்பி... அவரின் 40வது வயதில் இந்த உலகை விட்டு நீத்த விதமும்....அவரின் சீடர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பும்...அவரின் தியான வேகமும்...நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தரை எனக்குள் நிறைத்துப் போட்டது....

இரண்டு நாள் தொடர்ந்து வாசித்த போதே... பேச்சு என்னிடம் குறையக் கண்டேன். தனிமையும் அமைதியும் சூழக் கண்டேன்... வெறுமனே எனது அறையினுள் வெறித்த படி இருந்தேன்! உணவருந்தும் நேரம் உணவு அருந்துவதும் மற்ற நேரங்களில் புத்தகம் வாசிப்பதும் என்றிருந்த நான்.. பெரும்பாலும் என் நேரத்தை யாருமற்ற இரவு மொட்டை மாடியில் கழிக்கத் தொடங்கினேன்.

சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து நான் வாசித்த சைவசித்தாந்தம் ஏதோ விடைகளை எனக்கு மறைமுகமாய்ச் சொல்ல யாரும் சொல்லாமலேயே சிவபுராணம் எனக்கு விளங்கத் தொடங்கியது. சிவன் என்று இப்போது வணங்கும் உருவம் முதன் முதலில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனின் உருவம். முதல் முக்தன் முதல் ஜீவிதன்.

அது என்ன முதல் முக்தன்? மனிதன் ஆதி சமுதாயத்தில் இருந்து விலங்குகளோடு விலங்குகளாய் திரிந்த காலத்தில் தன்னை உணர்ந்த ஒரு மனிதன் பெயர்தான் ருத்ரன். இப்போது நமக்கு முன்னால் எத்தனையோ ஞானியர்களும் தீர்க்கதரிசிகளும், வாழ்க்கைப் பற்றியும் நிலையாமை பற்றியும் கூறியே நமக்கு விளங்குதல் மிகக்கடினமாயிருக்கையில்...

முதன் முதல் ஆதி மனிதன் தன்னை உணர்தல் எவ்வளவு கடினம்? அப்படித் தன்னை உணர நிலையாமையைக் கடுமையாக உணர எப்போதும் சுடுகாட்டில் போய் இருந்து பிணம் எரிதலை பார்த்து பார்த்து, இந்த உடல் இருந்தது இப்போது இல்லை..... என்று திரும்ப திரும்ப மனதில் உருபோட்டு ஏற்றி, அப்படி எரிந்த பிணத்தின் சாம்பலை உடலெல்லாம் பூசி... எப்போதும் நாம் அழிவோம் என்ற சிந்தைனையை மனதில் தேக்கி, சுற்றியோடும் உயிர்களை தமது உறவாக்கி பாம்புகளை தமது கழுத்துகளில் போட்டு......

காளை மாட்டினை தமது வாகனமாக்கிக் கொண்டு இடுப்பில் ஒரு புலியின் தோலை உடுத்தி அலைந்த கபாலிதான் ருத்ரன்....! ஆதியிலே ஞானம் அடைய இத்தனை கடும் தவங்கள் இருக்கவேண்டிய தேவை யிருந்தது ருத்திரனுக்கு.....இப்படி இருந்து....இருந்து...எதுவமற்ற ஆனால் எல்லாமான சிவத்தை உணர்ந்ததனால் அவரை சிவபெருமான் என்று கூறி அந்த உருவத்தை படமாக்கி நாம் வணங்கி வருகிறோம். நாம் இப்பொது வழிபடும் படம்.....முதல் முக்தனின் படம். அவர் சிவத்தை உணர்ந்த முதல் முக்தன்... முதல் ஜீவிதன்...ஆனால் சிவம் எது?

வானாகி, மண்ணாகி வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, நான் எனது என்பவனை கூத்தாடுபவனாகவும் இருக்கும்....எல்லாமான ஆனால் எதுவமற்ற ஆதிநிலை.....அதுதான் சிவம்.

ஏதோ ஒரு மாயையில் உலகம் இயங்குவதும் அங்கே சுற்றிச் சுற்றி நிகழும் சம்பவங்களுக்கும் காரணம் மனித மனம் கொள்ளும் ஆணவமும் புரிதலற்ற தன்மையும்தானென்றும், மனிதன் தன்னை உணர கற்பிக்கப்பட்ட கடவுளர்கள் வழிபாடும் ஒரு ஒழுக்க நெறியேயன்றி வேறொன்றும் இல்லை என்றும் தோன்றியது.

பெரும்பாலும் பொருள் தேடும் இவ்வாழ்வில் பொருள் எப்போதும் மனிதனை சந்தோசபடுத்துவதில்லை மாறாக பொருள் தேடும் நிகழ்வே நிம்மதியென்னும் நிலையை அடையவேயன்றி வேறெதற்காகவும் இல்லை. ஆனால் பொருள் தேடும் வாழ்க்கையில் புரிதலற்றுப் போய் இருப்பதனால் முடிச்சை அவிழ்ப்பதாக எண்ணி எப்போதும் முடிச்சுகளால் மனிதன் தன்னை இருக்கிக் கொள்கிறான். மூன்று வேளை உண்டு, எப்போதும் சந்தோசம் தேடுதல் மட்டுமல்ல வாழ்க்கை...வேறு ஏதோ ஒன்றைத் தேடவேண்டும் என்ற எண்ணம் பளிச்சென்று என் மனதில் பதிந்த நொடியில் எனது ஆர்ப்பாட்டமான அகங்காரம் செத்துப் போயிருந்தது.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்று அறிய முடியாத மனிதன் ஏன் இப்படி பறக்காவட்டியாய் பறக்கவேண்டும்....? ஏதோ ஒரு மாற்றம் என்னுள் நிகழ்ந்திருப்பது உலகத்துக்கு தெரியாது..உலகத்தின் பார்வை வழக்கமானது ஆனால் உலகம் பற்றிய எனது பார்வை 180 டிகிரி மாறிப்போயிருந்தது.

அம்மாவை அம்மாவாகவும், அப்பாவை அப்பாவாகவும், நண்பனை நண்பனாகவும்...எது எது எதுவோ அது அது அதுவாகப் பார்க்கும் பார்வை கிடைத்தது. கோணம் மாறியது....சராசரி வாழ்க்கையில் சராசரியாய்...நான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் எனக்குப் புரிந்தது. என்னைப் புரிதல் பிறர்க்கு கடினம் என்றும் உணர முடிந்தது....

விடுமுறை முடிந்து சென்னைக்குப் பயணமானேன்... விக்னேஷ் அண்ணனைக் காணவேண்டும் என்ற ஒரு அன்பு ஆவலாய் இருந்தது...

மீண்டும் ஒரு இரவு
ஜன்னலோர பேருந்து ...
நானற்ற நானின்றி
பயணமென்ற ஒன்றுமின்றி
வெறுமையில் நிறைவாய்
தொடங்கவும் இல்லை...
முடியவும் இல்லை என் பயணம்..!

குளுமையான காற்று என்னை சில்மிஷம் செய்ய...ஏகாந்த சுகத்தில்..இருந்த என்னைச் சுமந்து கொண்டு பேருந்து மன்னார்குடியைத் தாண்டியிருந்தது..!

நானில்லாமல் நான் இருந்தேன்...


தேவா. S


Comments

Unknown said…
ஆன்மீகம் மட்டுமல்ல இங்கே எல்லா விஷயமும் புலி வாலைப்பிடிப்பது போலத்தான்...
Unknown said…
தேவாவின் புதிய அவதாரம்...ருத்ரன்.... அஹம் பிரம்மாஸ்மி..
Chitra said…
எப்பவுமே நாம கோபமா பேசும் போது எதிராளியும் கோபமா பேசி நம்மகிட்ட ஆர்கியு பண்ணனும்னு மனசு எதிர்பார்க்கும்....ஆனா கண்டுக்காம போகும் போது நம்ம உள்முனைப்பு தோத்துப் போய் இன்னும் அவமானப்பட்டு நிக்கும். ஆமாம் பெரும்பாலான மனிதர்களின் கோபங்கள் அடுத்தவரை மட்டம் தட்டத்தானே வெளிப்படுகின்றன. இன்னொரு விதமும் இருக்கு.... தெரியாத விசயத்தைத் தெரியாதுன்னு சொல்லித் தெரிஞ்சுக்க முயற்சி செய்யாம...யாருக்குத் தெரியுமோ அவரை மட்டம் தட்ட முயற்சி பண்றது...


....என்னை மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்.... சாதாரணமான விஷயங்களாக தோன்றினாலும், இத்தனை அர்த்தங்கள், உள் பொதிந்து இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறீங்க.
ஜானகிராம் said…
உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது.

ஓரின சேர்க்கை பாவனையாளர்கள் பற்றி உங்கள் கருத்துக்களை எழுதவும்.
Unknown said…
அடுத்து என்ன நிகழப்போகிறது என்று அறிய முடியாத மனிதன் ஏன் இப்படி பறக்காவட்டியாய் பறக்கவேண்டும்....?


அதுதான் சரி

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த