Skip to main content

சுமை....!




















ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வித சூழ்நிலைகள் உருவாகி அதன் போக்கில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் வாழ்வென்றால் என்ன? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியோடு தேடலில் இருப்பவர்கள் நிச்சயமாய் தொடர்ந்து நான் எழுதுவதை வாசிக்கிறார்கள்.

அதே நேரத்தில் தேடலில் இல்லாதவர்களும் புரிகிறதோ இல்லை புரியவில்லையோ...என் மீது கோபம் கொண்டாவது என்னதான் எழுதி இருக்கிறான் என்று விமர்சிக்க வேண்டியாயினும் வாசித்து விடத்தான் செய்கிறார்கள்.

பெரும்பாலும் மனம் மறுத்தாலும் ஆன்மா வாசிக்கத்தான் தூண்டும். இது கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு பாங்கு ஆதலால்.... ஒரு வித கவனம் ஈர்க்கப்படுவதும் அதை மறுத்து மனம் வெளியே கூட்டிச் சென்று கேளிக்கைகளை வேடிக்கைப் பார் இங்கே ஒன்றுமில்லை என்று கட்டளைகள் போடுவதையும் நாம் அறியாமலில்லை.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களின் மூலம் அடைய நினைப்பது ஒரு நிம்மதி நிலையை, இந்த நிம்மதியை வேண்டித்தான் மறைமுக ஓட்டமாக பொருளீட்டலும், புகழ் தேடலும், இன்ன பிற சுகங்களைத் தேடலும் தொடருகிறது. பெரும்பாலும் உடல் சார் இன்பங்களைத் தேடி தேடி துய்த்து, துய்த்து, அடுத்து என்ன? அடுத்து என்ன... என்று ஓடும் ஒரு கணத்தில் சட்டென்று எல்லாம் நின்று....இதுவெல்லாம் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது அதுதான் நமது நிம்மதி என்று உணர முடியும் ஆனால் எல்லோருமா உணர்ந்து விடுகிறார்கள்? சிலர் உணரலாம்...சிலர் கடைசி வரை எது நிம்மதி என்று உணராமலும் போகலாம்.

இப்படி உணர்தலும் உணராமல் போதலும் எதைப் பொறுத்தது...? இதற்கான பதில் வேறெங்கோ நம்மை பயணிக்க வைத்து விடுமாதலால் அது பற்றி பிறிதோர் சமயம் விரிவாக பார்க்கலாம்....

எல்லாமே ஒரு விளையாட்டு. வேண்டும் என்பவனும் வேண்டாம் என்பவனும், நண்பனும், எதிரியும், சுற்றமும் ஒன்றுதானே...ஒன்றிலிருந்தது வேறாகி நின்று அது நம்மையே முறைக்கிறது, நம்மையே கேலி செய்கிறது, நம்மையே கேள்வி கேட்கிறது, நாமாய் இருந்து பதில் சொல்கிறது. மொத்தத்தில் இருப்பது ஒன்றுதான்..அதனால்தான் எல்லாமே ஒரு நகைச்சுவை காட்சியை ஒத்ததாய் ஒரு வித புரிதலில் பார்த்துக் கொண்டு நகர்கிறோம்.

திருக்குர் ஆனில் ஒரு வாசகம் வரும், அதாவது இறைவன் கூறுவதாக...."நான் சூழ்ச்சிகளுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன்" என்று, இங்கே என்ன கவனிக்க வேண்டும் என்றால் மனித மனங்களுக்குள் அகப்பட்டு மாயையில் போடப்படும் திட்டங்கள் எல்லாம்....தூசியை விட அற்பமானது. நாம் என்ன திட்டம் வேண்டுமானாலும் போடலாம், சூழ்ச்சிகள் செய்யலாம்...

ஆனால் பிரபஞ்ச சக்தியின் மாசற்ற வெளிப்பாட்டின் முன் அது எம்மாத்திரம். வீடு நாம் கட்டுவோம் திட்டம் தீட்டி அழகாக, இத்தனைக்கு இத்தனை அடி நீளம், அகலம், இங்கே இத்தனை பெட்ரூம், கிச்சன், அட்டாச்ட் பாத்ரூம், குளிர்சாதன வசதி, தெற்கு பார்த்த வாசல், ஒரு ஸ்கொயர் பீட்டுக்கு இவ்வளவு காசு என்று பார்த்து பார்த்து காசு சேர்த்து, திட்டம் தீட்டி கட்டுவோம்.....

ஒரு பூகம்பம் எல்லாவற்றையும் பெயர்த்து எறிந்து விடும்.

முதலில் சொன்ன திட்டம் மனித மனத்தின் திட்டம். தான் கோடாணு கோடி ஆண்டுகள் வாழப்போவதாய் மனித மனம் உண்டாக்கிய மாயா திட்டம். இரண்டாவது சொன்னது பிரபஞ்ச நியதி...எல்லாம் வல்ல இயற்கையின் திட்டம். முதல் திட்டம் இரண்டாவதின் முன்னால் ஏதாவது சண்டைகள் போட முடியுமா? மறுப்பு தெரிவிக்க முடியுமா...? நமது திட்டங்கள் எல்லாம் பொடி பொடிதானே...! நானே வல்லவன் என்று எண்ணும் அதி நுட்ப நவீன மூளைகள் எல்லாம் இயற்கைக்கு முன்னால் வெறுமனே திரவத்தில் மிதக்கும் வெள்ளை சதைக் கோளம்தான்.

சில கேள்விகளை கடந்த வாரத்தில் சில நண்பர்கள் மூலமாக நான் எதிர் கொள்ளவேண்டியிருந்தது. சில கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதிலளிக்க முடியும், சில கேள்விகளுக்கு ஒரு பாராவில் இது... இது இப்படி என்று எங்கேயோ படித்த விளக்கத்தை மூளையின் நினைவுப் பகுதியில் இருந்து உருவி நாமே சொல்வது போலச் சொல்லி ஒரு பொய்யான பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டு இறுமாப்படைய முடியும், சில கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் தெரிந்ததைப் போல அலட்டிக் கொள்ள முடியும், சில நேரங்களில் கேள்வி கேட்பவருக்கே என்ன கேட்கிறோம் என்று தெரியாமல் கேள்வி கேட்டு பதில் சொல்பவரும் என்ன பதில் சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிவிட்டு இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள முடியும்.....

ஆனால்...சில கேள்விகள் பதில் சொல்பவருக்கு அன்றி கேள்வி கேட்கப்படுபவரின் அனுபவத்திற்கான ஒரு விதையாய் மாறிவிடும் ஆச்சர்யமும் உண்டாகி விடும். அப்படிப்பட்டவை கேள்விகள் அல்ல நம்மை எங்கோ தூக்கிச் செல்லும் கணைகள்.

என்னை நோக்கி ஒரு மூன்று கேள்விகள் சரமாரியாய் பாய்ந்தது மூன்று வெவ்வேறு நபர்களிடம் இருந்து அந்த கேள்விகள் என் செவிகளுக்குள் பாய்ந்த மாத்திரத்தில் ஒரு ஆழ்நிலை பயணத்தில் நான் அகப்பட்டு எங்கோ சென்றது என்னவோ உண்மை ஆனால் இப்போது பதில் சொல்வது கேள்வி கேட்டவர்களுக்கான பதிலாக நான் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக எனது அனுபவத்தினை நானே எழுதிப்பார்த்து மீண்டும் உணரும் ஒரு உத்தியாக மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

கேள்விகள்:

1) அடிக்கடி உங்கள் உலகம் வேறு, வேறு என்று சொல்கிறீர்களே? உங்கள் உலகம்தான் என்ன? அங்கு யார் இருக்கிறார்கள்....?

2) ஆன்ம முக்திக்கு உங்களின் சொந்த நாட்டிற்கு வரவேண்டும் என்று சொல்கிறீர்களே? ஏன் இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு ஆன்மா இல்லையா? உங்கள் சொந்த நாட்டை விடுத்து வசிக்கும் நாட்டிலேயே ஆன்ம முக்திகான வழி இல்லை அல்லது பெற முடியவில்லையெனில் உங்கலின் தேடல் வீண்தானே?

3) யார் நீங்கள்? நீங்கள் ஞானியா!!! இல்லை காதலில் தோல்வியுற்ற ஒரு தேவதாசா? இருவரும் இப்படியேதான் பேசுவார்கள்

மூன்றும் மூன்று விதமான அனுபவமாய் போய்விட்டது...! இதை எழுத்தில் இறக்கி வைத்துவிட்டால் வார்த்தைகளைக் கடந்த ஒரு அனுபவம் என்னுள் தேங்கி நிற்கும்...கரைந்து போன கற்பூரமாய்!

அடுத்த பதிவில் இந்த மூன்று கேள்விகளுக்குமான பதிலை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்...! சுமைகளை அதிகம் சுமப்பதில் எனக்கு விருப்பமில்லை!

100 கிலோ தங்கமாய் இருந்தாலும் சரி அல்லது அது இரும்பாய் இருந்தாலும் சரி..என்னைப் பொறுத்த வரையில் பயன்பாடுகளை கணக்கு கூட்டும் ஒரு பொருளாதாய நிலை தாண்டிப் பார்த்தால்....சுமை சுமைதான்....!

பயணங்களும் பாதைகளும்
கணிக்க முடியாத தூரங்களில்
இறக்க முடியாத என் சுமையோ
கழிக்க நினைக்கும் பொழுதுகளில்
கூடிக் கூடி என்னை கூனனாக்கி விடுமோ?
கடைத்தேறலுக்கான தேடலும்...
தேடலுக்கான ஆவலையும் சுமத்தலே...
என் அஞ்ஞானத்தின் அறைகூவல்தானோ?

காத்திருங்கள் நாளை வரை....!


தேவா. S

Comments

நாளை எதிர்பார்த்து....
காத்திருங்கள் நாளை வரை....!////

சொல்ல வந்ததை ஏன் பாதியில் நிறுத்துறீங்க....
Kousalya Raj said…
எனக்கு தெரிந்தவர்களை உங்கள் தளம் படிக்க சொன்னபோது படித்த பின் அவர்களின் கேள்வியும் இதை போன்றே இருந்தது...!

ஆன்மா, ஆன்மிகம் பற்றி எழுதினால் வாழ்வை வெறுத்த தேவதாசாக, ஞானியாத்தான் இருந்தாக வேண்டும் என்பது இந்த சமூகம் நம் மூளைக்குள் பதியவைத்த ஒன்று. அதனால் இப்படி கேள்விகள் வருவது ஆச்சரியம் இல்லை.

குடும்ப வாழ்வில் அன்பான பெற்றோர், அருமையான மனைவி, அறிவான குழந்தை, பொருளாதாரம் ..... இப்படி பல நிறைவுகள் அடைந்த பின் இனி பிறப்பை முழுதாய் அர்த்தபடுத்த அடுத்தது என்ன ? எதை நோக்கிய பயணம் என்பது உங்களுக்குள் எழுகிறது என்று நினைக்கிறேன் அதுதான் இங்கே எழுத்துக்களாய் வருகிறது என்பது எனது புரிதல்.

முக்தி பற்றி ஏற்கனவே நிறைய சொல்லி இருக்கீங்க...முக்தி பெற காவி உடை, தியானம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே உடைத்து போட விரும்புகிறேன் என்று ஒரு பதிவில் படித்தேன்...இதை பற்றியும் இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

சுமைகளை இறக்கி வைக்க போறீங்களா, பதிலை எதிர்பார்த்து இருப்பவர்கள் மேல் ஏற்ற போகிறீர்களா ? (ரொம்ப யோசிக்க வைக்க போறீங்க என்று சொல்றேன் !) :)))
Unknown said…
Thala ..,

one of your excellent post..,this is my second comment of your blog .,ennai theriyum endru ninaikiraen
VELU.G said…
எல்லாச் சுமைகளும் பாரங்களே
சுமைகளை இறக்கி வைக்க போறீங்களா, ஏற்ற போகிறீர்களா ?

//காத்திருங்கள் நாளை வரை....!//


எதிர்பார்த்து...
யப்பா தமிழ் இப்பிடி கொட்டுது அருவி போல....!!!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல