Skip to main content

சவால்....!


















மெளனமாக இருந்து விடல் சாலச் சிறந்தது என்று சமீபத்திய நாட்களில் கிடைக்கும் அனுபவத்தின் சாரங்கள் என்னுள்ளே ஏதேதோ எண்ணங்களை கிளைக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. சராசரியான ஒரு வாழ்க்கை ஓட்டத்தின் அங்கமாயிருக்கும் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொரு செயலும் அதன் விளைவுகளும் நமக்கு திருப்தி கொடுப்பதே இல்லை. கொடுக்கிறது என்றூ வாதம் புரிய விரும்புபவர்களுக்கு இந்த இடத்திலேயே பாய் சொல்லிக் கொள்கிறேன்.

காலம் முழுதும் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த என் நெருங்கிய உறவினருக்கு இரண்டு மகள்கள். வாழும் வயதில் வாழ்க்கை துரத்த குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாட்டில் இருந்து உழைத்த அந்த உறவு 24 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவதும்.. பின் செல்வது இப்படியான ஒரு 25 வருட வாழ்க்கையிலி ஈட்டி முடித்தது இரண்டு மகள்களின் கல்வியும் அவர்களின் திருமணமும் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அருகே உள்ள காமராஜபுரத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் வீடும் என தனது ஓட்டத்தை முடித்த போது அவரின் வயது 60.

ஒரு திருமண விழாவில் சந்தித்த என்னை வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்த... தாம்பரம் வரை ட்ரெய்னில் போய் பின் பேருந்தில் அவரை பார்க்க நான் பயணித்ததின் பின்னால் சில காரணங்கள் இல்லாமல் இல்லை.....!

காமராஜபுரம்.. ! என் உறவினரின் வீடு.. வீட்டை ஒட்டி ஒரு வாறம் இறக்கி அதில் கொஞ்சம் காய்கறிகளை சில்லறை வியாபாரம் செய்து கொண்டும் அடித்து பிடித்து பெற்றிருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்தும் அவரின் பொழுதினை போக்குவதற்கு உதவிக் கொண்டிருப்பது யாரும் சொல்லாமலேயே பிடிபட்டது.

தொலைந்து போன வாழ்க்கையைப் பற்றி அவர் புலம்பிக் கொண்டிருந்ததில் பல வருட தீபாவளிகளும், பொங்கல்களும், பல உறவினரின் திருமணங்களும், மரணங்களும் இருந்தது கூட எனக்கு ஆச்சர்யமாகப் படவில்லை அவரின் சொந்த தந்தையின் மரணத்திற்கும் கூட வர இயலவில்லை என்று....சொன்ன போது அவரின் கண்கள் கலங்கி இருந்தன... என் மனமோ எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது....

காலம் முழுதும் எங்கே ஓடினாய் மானிடா? எதைத் தேடினாய்?

காமராஜ
புரம்...இரண்டு பெட்ரூம் வீடும்.. இரண்டு பிள்ளைகளின் கல்வி திருமணமும் உனது இலக்காய் போனதில் தவறில்லை.. ? நீ சந்தோசமாக இருந்தாயா? என்ற கேள்வியை அசை போட்ட மனது.. அதை வார்த்தையாக்கி கேட்டே விட்டதைக் கண்டு.. மெளனியாக அமர்ந்திருந்த என் உறவின்....பெருமூச்சிலிருந்து தெரிந்தது...அவர் வாழ்க்கையை வாழவில்லை என்று......

ஒரு கப் காஃபியோடு.... அவரின் உடலில் தொற்றிக் கொண்டிருக்கும் முதுமையின் அடையாளமும்.....இன்னும் எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றாமையும் எனக்கு முழுதும் விளங்கிப் போய்விட்டது.....! அவரையும் அவரின் மனைவியையும் நமஸ்கரித்து விட்டு....

வெளியே வந்தேன்....!

என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம்? எங்கே ஓடிக் கொண்டிருக்கிறது....? ஏதோ ஒரு மாய இலக்கினை நோக்கி மூச்சு இறைக்க இரவும் பகலும் ஓடிக் கொண்டே இருக்கிறது? என்ன கிடைக்கப் போகிறது....! மேலே சொன்ன என் உறவு ஒரு உதாரணம்... அவரின் வாழ்க்கையில் குடும்பத்தையும், நாட்டையும் விட்டுப் போனதின் விளைவுகளில் இழந்திருப்பது ஏராளமாக இருக்கலாம்......!

கட்டுரையின் இலக்கு வெளிநாட்டிற்கு சென்று அதனால் சந்தோசங்களை பறிகொடுத்தவர்கள் பற்றிய பார்வை அல்ல...!

மாறாக....

விடிதலும் விடிந்த பின் அன்றாட ஓட்டமும் ஓட்டத்தினூடே ஓராயிரம் பிரச்சினைகளும் கொண்டு ஆடி அலுத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் மிச்சம்தான் என்ன? இலக்குகள் அற்று வாழ இயலாது பிண்டத்துக்குள் அடைபட்டு நகரும் மனதுக்கோ எப்போதும் எல்லைகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இன்றைய பிரச்சினைகள் நாளை தீரும் என்ற ஒரு வேட்கையோடு பொருளீட்டலில் போட்டி போட்டு நகரும் போது நாம் இழந்து போகும் எதார்த்தங்கள் எத்தனை எத்தனை.....! நித்தம் வானில் காணும் மேகக் கூட்டங்களின் தன்னிச்சையான வர்ண ஜாலம் தப்பியிருக்கிறது, ஒரு மழைக்கு பட்டென்று குடை விரிக்கும் தருணத்தில் மழை மடங்கி குடைக்குள் அடங்கி ஏதோ ஒரு அனுபவத்தை வெறுமனே நகர்த்தி வைத்து விடுகிறது. ஒரு காற்றை சுவாசித்தலும், ஸ்பரிசித்தலும் இயந்திரத்தனமாய் தானே நிகழ்கிறது?

உடலாய் இருக்கும் வரையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இயம்ப யாரலும் முடியாது. தொடர்புகளின்று வாழ்தலும் சாத்தியத்திற்கும் எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டது, ஒவ்வொரு செய்கையிலும் பல மனிதர்களின் தொடர்புகள் தன்னிச்சையாய் நம்மீது விழுந்து அவர்களின் குழப்பங்களும், தெளிவுகளும் சேர்ந்தே நம்மை ஆளுமை செய்கின்றன.

ஓராயிரம் புறக்காரணங்கள் நாம் விரும்பியோ விரும்பாமலோ வந்து விழத்தான் செய்யும் நம்மீது. பந்தங்களும் அந்த பந்தங்கள் கொணரும் பொறுப்புகளும் என்று எதையும் மறுத்து ஓடினாலும் அவையும் முரண்களாய் போய்விடும் அபாயமும் இருக்கிறது....? எல்லா கடமைகளையும் நான் அல்லது நீங்கள் செய்யும் அதே வேளையில் நாம் நாமாய் வாழ்ந்திருக்கிறோமா? என்பதுதான் சவால் இங்கே.....

அது என்ன நான் நானாய் வாழாமல் வேறு யாரோவாகவா வாழ்ந்தேன் என்ற கேள்விகள் சட்டென்று கிளைத்து நிற்கும் வேளையில்...ஒரு கணம் எல்லாவற்றையும் நிறுத்துங்கள்....! ஆமாம் சற்றுமுன் எழுந்த கேள்வி உட்படத்தான்....

என்னோடு அமருங்கள்....! உங்களின் அன்றாட திட்டங்களைத் தூக்கி பரணில் போட்டு வையுங்கள், திரும்ப போய் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் புத்திசாலிதனத்தையும், கேள்விகள் கேட்கும் அறிவையும் தூரமாய் வைத்து விடுங்கள்....! நீங்கள் இப்போது யாருமல்ல..நானும் யாருமல்ல இருவரும் இரண்டு இருப்பு நிலைகள் அவ்வளவே.....!

வாருங்கள் கொஞ்சம் காலாற நடப்போம்....! ஒன்றும் வேண்டாம்.. வெறுமனே என்னோடு நடங்கள்....! எந்த கொள்கைகளும் அடையாளங்களும் இல்லாத நம்முடைய இருப்பு நிலை... மற்றும் சுற்றுச் சூழல்...எதையும் பகிராத ஒரு ஆனந்த மெளனம்...

என்னுள் இருக்கும் சந்தோச அலைகளை என் விழிகளால் பரவவிடுகிறேன்....ஓ.....எவ்வளவு அகண்டு விரிந்த ஆகாயம், அங்கே நமக்கென்னவென்று மிதக்கும் மேகங்கள்...திசைகள் தாண்டி எங்கோ எதற்கோ பறக்கும் பறவைகள், ஏதோ சில சப்தங்கள் அவ்வப்போது வந்து என்னுள் கடக்கின்றன.. .யார் யாரோ என்று மனிதர்களும் என்னை கடக்கிறார்கள்...!

நான் தொடர்பற்று நடக்கிறேன்....

என் நடையின் ஒவ்வொரு அடியும்...நான் இருப்பதை உணர்த்துகின்றன. இந்த நான்... என் பெயரல்ல, என் தொழிலல்ல, என் உறவல்ல, என் எதுவுமல்ல.. இது நானே நான்...! நீங்களும் வாருங்கள் நீங்களே நீங்களாக...! சலமனற்ற ஒரு குளத்தில் யாரேனும் கல்லெறிவது போல ஏதேனும் எண்ணம் கொண்டு விடப்போகிறீர்கள் ஜாக்கிரதை....

எனது இரைச்சல், எனது ஓட்டம், எனது தேடல் எல்லாம் உடலின் நியதி..! என் ஆத்ம நியதியின் அரங்கேற்றம் இங்கே...! சந்தோசங்களின் உச்சம் என்று எதுவும் இல்லை. எந்த புறப்பொருளும் சந்தோசத்தை கொண்டு வந்து என்னுள் இறக்கப் போவதில்லை. எல்லா சந்தோசத்துக்கும் புறம் ஒரு தேவையாயிருக்கிறதே அன்றி புறமே சந்தோசமில்லை.

நமது சந்தோசத்தின் கிரியா ஊக்கி பதுங்கிக் கிடக்கிறது நமக்குள்...! உறக்கத்திற்கும் மாத்திரை போட்டு உறங்கும் பழக்கத்தில் அடிமையானவர்கள் போல...நாமும் புறத்திலிருந்து ஏதோ வந்து சந்தோசம் கிடைக்கும் என்று ஏங்கி ஏங்கி எதை எதையோ தேடித் தேடி பெரும்பாலும் நமக்கு எரிச்சல்தான் வந்து கிடைக்கிறது அல்லது அப்படி நம்மை சந்தோசப்படுத்தும் பொருள் இல்லாவிட்டால் விரக்தி வந்து விடுகிறது...!

நானே நானாக
என் இயல்புகளில்
சிறகடிக்கும் தருணங்களில்
விரிந்து கொண்டேயிருக்கிறது
என் வானம்...!

வாழ்க்கையின் சாயங்களை
எல்லாம் கழுவி விட்டு
வெளுமையின் செழுமையில்
என் மூலக் கருமையில்
என்னை அமிழ்த்தி
திடங்கள் அழிந்து
திடத்தின் மூலச் சத்தில்
முழுதுமாய் நான் நிறையும்
என் ஆழமான கனவு
பலித்துப் போகத்தான் கூடாதா?

பொருள் ஈட்டலின் ஊடேயே நாமே நாமாய் வாழும் சந்தோச நிமிடங்களை அழித்து விட்டு கடைசியில் நமது இலக்கினை ஒரு இரண்டு அல்லது மூன்று பெட்ரூம் வீடு...மணமுடித்து கொடுத்த பிள்ளைகள் வீட்டை ஒட்டிய ஒரு பெட்டிக் கடை, இனிமே எனக்கு என்ன இருக்கு .......காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது என்றில்லாமல்....

எதுவுமே இல்லையெனிலும் ஒற்றை ஆடையை காய வைத்து உடுத்தும் லெளகீக இருப்பே வாய்த்தாலும், என் வாழ்க்கையின் சக்கரவர்த்தியடா நான் என்று இறுமாப்புடன் சப்தமிட்டு சிரிக்கும் சந்தோசம் கொள்வோம்.......!

மன்னியுங்கள்....நான் கொள்கிறேன்.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொள்ளுங்கள்...! இல்லையெனில் பதிவுலகின் கட்டுரைகளில் பத்தோடு ஒண்ணு பதினொண்டு அத்தோடு ஒண்ணு இது ஒண்ணு என்று போய் விடுங்கள்....!

யாதொரு கவலையும் கொள்ளாமல்..நான் சந்தோஷித்தே நகர்வேன்...! ஊராக பேராக நானிருந்தாலும் நானாக நானிருப்பதுதானே இங்கே சவால்....ஹா..ஹா.ஹா!


தேவா. S

Comments

//ஒரு மழைக்கு பட்டென்று குடை விரிக்கும் தருணத்தில் மழை மடங்கி குடைக்குள் அடங்கி ஏதோ ஒரு அனுபவத்தை வெறுமனே நகர்த்தி வைத்து விடுகிறது//

...ஹம்ம்ம்ம்.. வார்த்தை விளையாட்டில் உங்களை மிஞ்ச முடியாது.

...சொல்ல வந்த விசயத்தையும் சுருக்குன்னு பதிய வைக்கவும் உங்களால் தான் முடியும்.

...நானும் வெளிநாட்டில் இருப்பவள் என்ற காரணத்தால், ஏனோ உங்கள், பதிவு என் உள்ளத்திடம் இப்போது சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

...வரி விடாது படித்தேன்... அவசியமான, அலசிப் பார்க்க வைக்கும் சவால் :-))
ஏன் இந்த விரக்தி?
dheva said…
சமுத்திரா...@ சந்தோசமா இருக்கேன்னு சொன்ன விரக்தியா....ஹா..ஹா...ஹா.. நல்ல கதை போங்க..!
Unknown said…
நிச்சயம் இது சவால் தான்...
Anonymous said…
குடும்பம் குழந்தை என்றானபின் அவர் கடமையைச்
செய்திருக்கிறார். அறுபது வயதானபின்னாவது
அவருக்கு ஓய்வு கிடைத்திருக்கிறதே! புறச் சூழ் நிலைகளை ஓரளவுதான் கட்டுப்படுத்த முடியும்.
ஆற்றில் விழுந்த மரக்கிளையின் போக்கு தீர்மானிக்கப்பட்ட ஒன்று. சிறிதளவு மட்டுமே இங்கேயோ அங்கேயோ நகர முடியும். கடமையைச்
செய்வதே மகிழ்ச்சிதானே:-)
dheva said…
அனானி........@ உங்களுக்கு மகிச்சியாயிருக்கும் போல ஆனால் அவர் திருப்தியாயில்லைன்னுதான் சொன்னார். பேரோடு வரலாமே..........!
Free Traffic said…
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த