
எக்காலமும் நிலைத்து நிற்கும் எழுத்துக்களுக்கு சமகால நிகழ்வுகளின் சாரம் மட்டுமே போதும். சமகால நிகழ்வுகளோடு பந்தப்பட்ட எழுத்துக்கள் ஒரு 20 வருடங்கள் கழித்து எடுத்து வாசிக்கும் போது கண்டிப்பாய் சுவாரஸ்யம் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. விஜயகாந்த் வேட்பாளாரை தாக்கி அடித்தது அந்த சமயத்தில் பரபரப்பு இருபது வருடம் கழித்து அது ஒரு செய்தியளவிலேயே நிற்கும் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்காது. இப்படித்தான் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் ஒரு நாள் அல்லது இரு நாள் கழித்து அல்லது ஒரிரு மாதம் அல்லது வருடங்களில் செத்துப் போகும்.
முக்காலமும் படிப்பினை கொடுக்கும் விசயங்கள் எல்லாம் ஆத்மார்த்தமாக வெளிப்பட்டவை. இந்த வகையிலேதான் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்திய தேசத்தில் தமிழக கோவில்கள் எல்லாம் கலைப் பொக்கிஷங்கள். அவை எல்லாம் மனிதனின் உள்ளுணர்வு தெளிவாக ஏதேதோ உணர்த்த, உணர்த்த அவற்றை எண்ணங்களால் உற்றுப் பார்த்து மனதினால் களிமண் பிசைவது போல பிசைந்து சக மனிதர்களிடம் கூறி அவற்றை விவாதித்து அவற்றை வரைபடங்களாக்கி, சாதக, பாதகங்களின் கூறுகளை திட்டமிட்டு பெரும் மனித உழைப்புக்குப் பின்னால் செய்து முடிக்கப்பட்டது.
மனித உள்ளுணர்வில் ஏராளமான விசயங்கள் ஸ்பூரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆழமான தெளிவான மனம் கொண்டவனுக்கு, புலன்களின் ஆட்டத்தில் மயக்கம் கொள்ளாமல் இருப்பவனுக்கு புறத்தின் செயல்கள் தனது மூளையை கற்பழித்து விடாமல் கற்போடு இருப்பவனுக்கு... தெளிவான நீரினடியில் கிடக்கும் எல்லாம் தெரிவது போல முன்னும், பின்னும், மேலும், கீழும் என்று சூழல்களும், மனிதர்களும், மனிதர்களின் எண்ணங்களும் நோக்கங்களும் அத்துபடியாகின்றன.
மனித வகைகளை இதுவரை ஓரளவிற்கு நான் கணித்து இருக்கிறேன். இது நாடு, மொழி, மதம், இனம் தாண்டிய எனது கவனிப்பு. இரு மனிதர்கள் அச்சில் வார்த்தது போல ஒன்றாயிருப்பது இரட்டைப் பிறவிகளில் சாத்தியம் என்று அனைவருக்குமே தெரியும் ஆனால் நிறைய ஒத்த மனிதர்களை நான் கவனித்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஒரே சூத்திரத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.....
இவர்களின் கண்களின் தீட்சண்யம் ஒத்தது
விசயங்களை உ ள்வாங்கிக்க் கொள்ளும் போது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களின் எண்ணிக்கை ஒத்தது.
இவர்களின் பற்கள் ஒத்தது.
இவர்களின் நாசியின் நீளங்கள் ஒத்தது.
சுவாசிக்கும் தன்மை ஒத்தது.
தலை முடியின் அமைப்பு ஒத்தது.
விசயங்களை அணுகும் போக்கு ஒத்தது.
இதை நான் சட்டென்று நேற்றோ, இன்றோ கணித்து எழுதவில்லை. கடுமையான பலவித பரீட்சைகளை வைத்து இங்கொன்றும் அங்கொன்றுமாய் மனிதர்களின் சுபாவங்களை பிடித்து அவற்றை முன்பு கண்ட இதே போன்றவருடன் ஒப்பிட்டு அதன் இறுதியில் எட்டிய முடிவு.
இப்படி நான் ஒரு மனிதர்களை ஆராய்வது யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இவற்றை எல்லாம் என் சொந்த ஆர்வத்தில் நானே ஒப்பிட்டு மனம் போடும் கணக்குகளை அபாரமான கற்பனைகளை ஒதுக்கி தள்ளி விட்டு மேலே நான் சொன்ன உள்ளுணர்வின் ஸ்பூரிப்பில் கண்ட உண்மைகள்.
இப்படி நான் இருப்பதற்கு எனது 4 நட்சத்திர ஹோட்டலின் ப்ரண்ட் ஆஃபிஸ் உத்தியோகம் ஒரு கருவியாக இருந்தது. பல நாட்டு மக்கள், பல மாநில மக்கள், பல மாவட்டத்து மக்கள் என்று ஒவ்வொரு மனிதரையும் அடிப்படையில் ஆராய்ந்து என்னுள் உள்வாங்கிக் கொள்வதை எனது பொழுது போக்காகவே செய்து வந்தேன். நாளடைவில் முத்து பேட்டை ரகீம் பாயைப் போல கிட்டத்தட்ட பற்கள் அமைப்பும், முக மேவாய் அமைப்பும் கொண்ட ஒரு ஆஸ்திரேலிய தேசத்து மனிதரின் குரல் கூட ஒத்து இருந்தது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.
உணவு, உடை, மற்றும் பழக்க வழக்கங்கள் எல்லாம் புறச்சூழல்தான் நியமிக்கிறது என்றாலும் அடிப்படை முடிவெடுக்கும் திறன், ஒரு பிரச்சினையை எதிர் கொள்ளும் விதம், பேசும் வார்த்தைகளின் கட்டமைப்பு, ஆச்சர்யம் கொள்ளும் போது ஏற்படும் முக மாற்றம், கோபம் ஏற்படும் போது செய்யும் ஒரு பாவம் என்று எல்லாமே ஒத்துதானிருக்கிறது.
மனித மூலத்தின் கிளைகள் வெவ்வேறாய் இருந்தாலும் மூலம் ஒன்றுதான் என்பதை தெளிவாக உணர முடிந்தது. ஆமாம் சேம் தியரி... சூரிய குடும்பத்தின் மூலம் சூரியன், சூரியனின் மூலம் இன்னொரு சூரியன் என்று பின்னோக்கி சென்று கொண்டே இருந்தால் மூல அமைப்பில் எல்லாம் ஒரு பூர்வாங்க நிலையிலே போய் அடங்குவதை உணர முடியும்....!
இப்போது சொல்லுங்கள் நீங்களும் நானும் யார்? வெவ்வேறா? அல்ல...ஒன்றா?
சூழலும் மனம் கற்பித்த பாடங்களும் வெவ்வேறாய் காட்டினாலும் அடிப்படையில் என்னை நீங்கள் அடித்தால் எனக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் உங்களை நான் அடித்தால் உங்களுக்கும் வலிக்கும். உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்க கூடாதது கிடைத்து அதற்கு நீங்கள் எவ்வளவு சந்தோசம் அடைகிறீர்களோ அவ்வளவே நானும் அடைவேன்...!
அடிப்படயில் ஏற்றத் தாழ்வுகள் சமூக அமைப்பினால் ஏற்பட்டவை. மனித உடலில் இருக்கும் வலுவின் அளவு, மேலும் அனுபவங்களை நிதானித்து அதன் மூலம் வரவிருக்கும் செயல்களை அனுமானித்து எடுக்கும் முடிவு இவையாவும் மனித வாழ்வை தீர்மானிக்கும் காரணிகள் என்றாலும்...
அடிப்படையில் கோபம், மகிழ்ச்சி, பயம், மரணத்தை கண்டால் அலறும் மனம், காமம், முரண்பாடு இவை எல்லாமே மனிதர்களுக்கு ஒரே மாதிரி உணர்வைத்தான் உண்டு பண்ணுகின்றன. சமூக சூழலுக்கு ஏற்ப தேவைகளும் ஏற்பட தேவைகள் ஆசைகளாக மாற, ஆசைகள் பேராசைகளாக மாற மொத்த சமுதாயமும் தெளிவான மன ஓட்டமும் தமது மூலமும் அறியாமல் குழம்பிக் கிடக்கிறது.
இந்த லெளகீக வாழ்க்கையில் பணம் சேர்த்தவன், அதிகாரம் செய்பவன், அத்துமீறல் செய்பவன், மதத்தை சொல்லி மனிதர்களை ஏமாற்றுபவன் என்று இவர்கள் எல்லாம் கடவுள்....
ஆனால்....
ஆன்ம விழிப்பு கொண்டவன், அகங்காரம் அற்றவன், தெளிவான சமுதாயம் படைக்க தன்னை உற்று நோக்கி நியாயமாய் நடக்கச் சொல்பவன், கடவுளென்ற ஒன்று வார்த்தை விளையாட்டுதான், நீங்கள் கற்பிதம் மூலம் கொண்டிருப்பது எல்லாம் பொய்கள், உண்மையாய் இருக்கும் எல்லாம் வல்ல சக்திகளை தன்னிடம் கொண்டு உங்களையும் என்னையும், இன்னும் கண்ணில் காணும், காணா விசயங்களோடு சேர்ந்து ஒரு ஒட்டு மொத்த இயக்கமும் தான் நிஜம்...என்று கூறுபவர்கள் எல்லாம்...
முட்டாள்கள் ..ஏமாளிகள், பரதேசிகள்....வாழத் தெரியாதவர்கள்..! .இப்படித்தான் மிகைப்பட்டவரின் பார்வைகள் சொல்கின்றன. இவையெல்லாம் கண்டு எரிச்சலடைய வேண்டிய அவசியம்ற்று இவையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு தேவை என்ற அளவில்தான் தெளிந்தவனின் பார்வைகள் இருக்கின்றன.
முக்காலமும் வாசிக்கும் கட்டுரைகளை மிகையாக செய்ய ஆசிவர்தித்திருக்கும் பிரபஞ்ச பேரியக்கத்திற்கு நமஸ்காரங்களையும், அர்ப்பணிப்புக்களையும் நான் காணிக்கையாக்கத்தான் வேண்டும் என்ற அளவில் இத்தோடு நிறுத்துவதை நான் தீர்மானிக்கிறேன்...இல்லையேல் நீண்டு கொண்டே இருக்கும் செய்திகள்.
அடுத்தடுத்து பேசுவோம்....
நலமான செழிப்பான உங்களின் எல்லா செளகரியங்களுக்கும் எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்!
தேவா. S
Comments
அடிப்படையில் கோபம், மகிழ்ச்சி, பயம், மரணத்தை கண்டால் அலறும் மனம், காமம், முரண்பாடு இவை எல்லாமே மனிதர்களுக்கு ஒரே மாதிரி உணர்வைத்தான் உண்டு பண்ணுகின்றன. சமூக சூழலுக்கு ஏற்ப தேவைகளும் ஏற்பட தேவைகள் ஆசைகளாக மாற, ஆசைகள் பேராசைகளாக மாற மொத்த சமுதாயமும் தெளிவான மன ஓட்டமும் தமது மூலமும் அறியாமல் குழம்பிக் கிடக்கிறது.
...wow! தெள்ளத் தெளிவான அலசல். பக்குவப்பட்ட மனதில் தோன்றிய ஆழ்ந்த சிந்தனைகள் என்று தெரிகிறது.