Pages

Thursday, May 5, 2011

இருப்பது கடவுளா? கடவுள் தன்மையா...?கட்டுரை செய்யவும் கதைகள் செய்யவும் பெரும்பாலும் புறத்தில் காரணங்களை ஒரு இயந்திரத்தனமாய் தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு அலுப்பு வந்து விடுகிறது. அடுத்து என்ன எழுதுவது என்ற பரபரப்பு நோயும் மூளையை தொற்றிக் கொண்டால் சொல்லவே வேண்டாம் அப்படிப்பட்ட எண்ணம் தோன்றிய உடனேயே மூளை ஸ்தம்பிக்கத் தொடங்குகிறது.

நம்மைச் சுற்றி நிகழும் நிகவுகளின் மேலோட்டப் பார்வையை அல்லது பொதுவான வெளிச் செய்திகளை எடுத்து பகிர்ந்து கொள்ளும் போது நமது ஆழ் மனது ஒரு வெறுப்பு நிலையை அடைவது தவிர்க்க முடியாத நிகழ்வாகிப் போகிறது.

ஒவ்வொரு முறையும் நம்மைச் சுற்றி இயங்குமெ எல்லா சூழலுக்குள்ளும் மனதைப் பொருத்திப் பார்த்துக் கொண்டு அந்த அனுபத்தையும் பெரும் ஒரு செயலையும் இடைவிடாது செய்து அதன் சாரத்தை எடுத்து வெளியே இயம்ப அலுப்பாக இருப்பதில்லை. எழுத வேண்டிய விடயங்களை யாரோ ஒருவரின் பார்வையாகப் பதியாமல் நம்முடைய அனுபவமாக கொள்ளும் போது அதன் வெளிப்பாடு வீரியமாகிறது.

ஒவ்வொரு மனிதனின் சூழலையும் உள்வாங்கும் போது ஒரு வித பக்குவம் ஏற்படுவதையும் அடுத்த மனிதரின் வலி என்னவென்று உணரும் தன்மை அதிகரிப்பதும் உடன் நிகழ்ந்து விடத்தான் செய்கிறது. பெரும்பாலான விசயங்களுக்குத் தீர்வுகல் புறத்தில் கிடையாது. ஒவ்வொரு மனிதனின் அகத்தில் இருக்கும் கறைகள் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் தன்னின் சுயத்தை தான் யார் என்று அறியும் அந்த பரீட்சையை எழுத் ரொம்பவே பயமாயிருக்கிறது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் எங்கே நகர்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு கூச்சலுக்கும் பின்னே என் யோக்கியதை என்ன? என்று கேள்விகள் கேட்டு உள்நோக்கி திரும்ப பெரும்பாலும் மனம் ஒத்துழைப்பது இல்லை.

கொஞ்சம் தனித்திருக்கும் போதே மனம் பெரும் பயத்தினை காட்டத் தொடங்குகிறது. பெரும்பாலும் பழக்கப்பட்ட ஒரு சூழலுக்குள் சாக்கடைக்குள் கிடக்கும் ஒரு விலங்கைப் போல அங்கேகே குட்டிகள் இட்டு, சேற்றில் புரண்டு அழன்று சுகம் காணவே மனதுக்கு விருப்பம். புதிய விசயங்களைப் பார்த்து மனம் மிரளுகிறது.. ஐயகோ!!! இது வேண்டாம் என்று நமக்கு உத்தரவுகள் போட்டு பயமுறுத்துகிறது. புதியதை பார்க்கவே மனம் கூச்சப்படுகிறது அது எப்போதும் தனக்குத் தெரிந்த இருட்டில் அமர்ந்து கொண்டு கதாகாலட்ச்சேபம் செய்கிறது.

எப்போது பயம் வருகிறோதோ, எப்போது மிரட்சி வருகிறதோ அப்பொதெல்லாம் மனதை உற்றுப் பாருங்கள்... எதிர் கேள்வியையும் அதே மனத்தைக் கொண்டு கேட்கச் சொல்லுங்கள்.. நீ யார்? ஏன் என்னை மிரட்டுகிறாய்... எங்கே இருந்து நீ நினைவுகளாய் கிளைக்கிறாய் என்று எங்கே மனம் உற்பத்தியாகிறதோ அங்கே பாருங்கள்.

இப்படி பார்க்க பார்க்க ஐம்புலன்கள் என்னும் திருடர்கள் மூலமாக உள்ளே நுழைந்து விவரித்து இல்லாத பொல்லாத கற்பனைகளையும் ஏற்படுத்தும் இந்த மனம் உருவாக முழுக் காரண கர்த்தாவாய் புறச் சூழலும் புலன்களும் இருப்பது தெரியவரும்.

வசப்படுத்திக் கொள்ளும் காட்சிகளை தான் கேட்டு வைத்திருக்கும் அல்லது தனக்கு பிடித்தமான நம்பிக்கையாய் மூளையில் சேர்த்து வைத்திருக்கும் ஒரு வித கருத்தோடு ஒப்பிட்டு அதற்கு ஏற்றார் போல இருந்தால் சரி என்றும், முரண்பட்டால் தவறென்றூம் கற்பிதம் கொள்கிறோம்.

மனம் என்ற ஒன்றினை அறிய தனித்து அமர்தல் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு செயலின் சரி தவறுகளை எந்த ஒரு மனிதனுக்கும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டியது இல்லை. இங்கே புரியாதவர் என்று யாரும் இல்லை. எல்லோருக்குமே எல்லாவற்றையும் ஆழ் மனது என்று சொல்லக்கூடிய இருப்புத்தனமை ஒவ்வொரு முறையும் நாம் செயல்கள் செய்யும் போது சரியென்றும் தவறென்றும் கடிவாளமிட்டுக் கொண்டுதானிருக்கும். இந்த கடிவாளம் பிரபஞ்ச இயக்கத்திற்கு உதவும் வகையில் இருக்கும்..

சமகாலச் சூழலும், மாயையில் தன்னை ஒரு தனிப்பட்ட அடையாளம் கொண்டிருத்தலும், அந்த அந்த சூழலின் அவசியமும் என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நாளும் அந்த கடிவாளத்தை மீறிக் கொண்டே இருக்கிறோம். அந்த கடிவாளம் சொடுக்கி நிறுத்தும் போது நின்று கவனித்து புறத்தில் தனக்கு அது சரி இல்லையென்றாலும் அதை செயல்படுத்துபனை ஞானி என்று உலகம் கூறுகிறது.

காலம் காலமாக ஞானமும் ஞானத்தின் மூலமும் சாதாரண மனிதனுக்கு அப்பாற்பட்டது என்று மறைத்தே வைக்கப்பட்டிருக்கிறது அதுவே மனித குழப்பங்களுக்கும் புதிய கடவுளர் பிறப்பிற்கும், தன்னை உணர்ந்து தன் மூலம் அறிந்து சப்தமின்றி ஒதுங்கத் தெரியமால் அரைகுறையாய் புகழ்ச்சிக்கு ஆட்பட்ட மனிதர்களைத் தன்னை கடவுள் என்றும் சொல்ல வைத்தது.

இந்த உலகில் வெளிப்பட்டு இருக்கும் எல்லாமே கடவுள் தன்மை கொண்டது நீங்களும் நானும் இன்னும் நீக்கமற விரவிக்கடக்கும் எல்லா பொருளிலும் கடவுள் தன்மையிருக்கிறது. இங்கே தனியா கடவுள் என்ற ஒன்றும் இல்லை. மனிதன் கடவுள் என்றால் என்னவென்று அறியாத காலத்தில் மண்டியிட்டு, மண்டியிட்டு பெரும் இயற்கையின் முன்னால் தொழுது புலம்பி, பலிகள் கொடுத்து, வேண்டுதல் செய்து கடவுள் என்ற ஒரு விசயத்தை மனிதரைப் போல தனி நபராக சித்தரித்து விட்டான்.

காலப் போக்கில் கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்று தெரிந்தவுடன், வெளிப்பட்டு இருக்கும் எல்லாமே கடவுளின் தன்மையில் இயங்குகிறது கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தெரிந்தவுடன் அரைகுறை அறிவோடு இருக்கும் ஜந்துக்கள் எல்லாம்

' நானே கடவுள் " என்னை வணங்குங்கள் என்று கொக்கரிக்கின்றன. நீ பிறந்தாய், கடவுள் தன்மையை உணர்ந்தாய், பக்கவப் பட்டாய் ...போய்க் கொண்டே இரு மானிடா? ஏன் இந்த தற்பெருமை. சத்தியத்தில் தன்னை கடவுளின் தன்மையோடு உணர்ந்து கொண்டவர்கள்

வெகு சாதாரணமாகவே வாழ்ந்து முடிக்கிறார்கள்.

நான் பேசிக் கொண்டே இருப்பேன் உறவுகளே...அவ்வளவு சொல்லலாம். சம காலத்தின் பணிச்சுமையும், பிற பொறுப்புகளும் என்னை சூழ்ந்து கொண்டிருக்க என் எண்ணக் கிடைக்கை எல்லாம் எழுதி வைத்து விட்டு செல்லலாம் என்ற ஒரே ஒரு ஆர்வம் மட்டும் வெற்று மனதில் தாமரை இலை தண்ணீரில் மிதப்பது போல மிதந்து கொண்டிருக்கிறது.

எனது கணிப்பில் நான் தனித்திருந்து எல்லா சூழலையும் தாண்டி யாருமற்ற சாலையில் பயணித்துக் கொண்டே இருப்பேன் எழுதி எழுதி வார்க்தைகள் தீரும் போது...என்னை நீங்களும், உங்களை நானும் தேடப் போவதில்லை என்ற உண்மையை உணர்ந்த படி.....!

நிறைய பேசுவோம்...காத்திருங்கள்!


தேவா. S

4 comments:

சமுத்ரா said...

good one

தனி காட்டு ராஜா said...

//காலப் போக்கில் கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்று தெரிந்தவுடன், வெளிப்பட்டு இருக்கும் எல்லாமே கடவுளின் தன்மையில் இயங்குகிறது கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தெரிந்தவுடன் அரைகுறை அறிவோடு இருக்கும் ஜந்துக்கள் எல்லாம்

' நானே கடவுள் " என்னை வணங்குங்கள் என்று கொக்கரிக்கின்றன. நீ பிறந்தாய், கடவுள் தன்மையை உணர்ந்தாய், பக்கவப் பட்டாய் ...போய்க் கொண்டே இரு மானிடா? ஏன் இந்த தற்பெருமை. சத்தியத்தில் தன்னை கடவுளின் தன்மையோடு உணர்ந்து கொண்டவர்கள்

வெகு சாதாரணமாகவே வாழ்ந்து முடிக்கிறார்கள்.//

:)

Karthik said...

Can't I vote ?

Kousalya said...

எப்போது படித்தாலும் அன்றைய சூழலுக்கு ஒரு படிப்பினையை கொடுப்பது போலவே இருக்கிறது...!

உங்களின் ஆன்மிகம் பற்றிய படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும் போது ஒரு தியான நிலையில் அமர்ந்து எழுவதை போன்ற உணர்வு இருக்கிறது !

என்னை தெளிவுபடுத்தி கொள்கிறேன் இன்னும் அதிகமாய் !

நன்றிகள் தேவா