Pages

Monday, May 9, 2011

மஞ்சு....!


வண்டி ஓட்டுவதே ஒரு அலாதியான விசயம். காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற வரைக்கும் அப்பா பைக் வாங்கிக் கொடுக்கல....வண்டி வாங்கி கொடுக்க அவருக்கு பிரச்சினை இருந்த மாதிரி தெரியலை ஆனா நான் வண்டி ஓட்டும் போது கண்ட குரங்குச் சேட்டை எல்லாம் செய்வேனாம். அட... நீங்க வேற நான் அப்டி ஆளு இல்லங்க... ஆனால் அப்பாவோட நம்பிக்கை அப்டி.... அதுக்கு ஒரே ஒரு காரணம் இருக்கலாம் அது என்னனு உங்ககிட்ட சொல்லிடுறேன் இல்லனா படிச்சு முடிக்கிற வரைக்கும் நீங்களும் சந்தேகமாவே படிப்பீங்க...

புடிச்சு வச்ச புள்ளையாரு மாதிரி ஒரே இடத்துல உக்கார்ந்து இருந்தா என்னங்க சுவாரஸ்யம் இருக்கு. நான் சும்மா இருக்க மாட்டேன் எதாச்சும் செஞ்சுகிட்டே இருப்பேன்....ஒரு தடவை அப்பாவோட டி.வி.எஸ் 50 -ஐ எடுத்துட்டு போயி அதை ஒரு ரேஞ்சுல ஓட்றேன்னு ஓட்டி அந்த வண்டியோட சேர்ந்து விழுந்து கால் முட்டிய பேத்துகிட்டு வந்தது... இவருக்கு பெரிய விசயம் இல்லங்க...வண்டி முன்னாடி மெர்காட் பெண்ட்டா போச்சுன்னு மனுசன் மொண மொணன்னு மொணங்கித் தள்ளிட்டாரு....இது நடந்தது நான் +2 படிக்கிறப்ப....

குமார் சின்ன பையங்க... பக்கத்து வீடுதான் 4வது படிக்கிறான். ஒரு நாள் அவனை கூட்டிட்டு வந்து டென்னிஸ் பால்ல கிரிக்கெட் வெளையாடினேன்...ஒரு ஃபோர்ஸ்ல பால வேகமா அடிச்சுட்டேன்..அது ஹால்ல செல்ஃப் மேல இருந்த டேப்ரிக்கார்டர்ல பட்டு....அது கீழ விழுந்து..அப்புறம் என்னாயிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.. அந்த குமார் அம்மா ராணி அக்கா முன்னாடி மரியாதை இல்லாம பேசிட்டாரு....

சரி அதை விடுங்க.. என்னோட பல்சர் பைக்குக்கு வாங்க பாஸ்! வண்டிய எடுத்து ஆக்ஸிலேட்டர் திருகினேன்னா....கல்லல் தாண்டி ஒரு ரயில்வே கேட் வரும் அந்த ரயில்வே கேட்ல காலையில் கம்பனோ, பாரதியோ எதோ ஒரு எக்ஸ்ப்ரஸ் கடந்து போறவரைக்கும் வண்டிய கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்...8:35 மணிக்கு சரியா கேட் போடுவான். பக்கத்துல முறுக்கு விக்கிறவங்க, பூ விக்கிறவங்க, பலாச்சுளை விக்கிறவங்க... கேட்டு ஓரமா இளநீர் விக்கிற பெரியவர் இவுங்க எல்லாம் மேட்டர் இல்ல பாஸ்.....

அதோ கத்தரிப்பூ தாவணி போட்டுகிட்டு ஒரு கறுப்பு கலர் ஜாக்கெட் போட்டு, படிய வாரி ஜடை போட்ட தலையோட தெளிவான கறுப்பு கலரா ஒரு சின்ன ஸ்டிக்கர் பொட்டும், ஒரு பூ போட்ட பாவாடையும் கட்டி ஒரு மஞ்ச கலர் ரிப்பனும், ஒரு வெள்ளை பாசியும் போட்டுகிட்டு....வெள்ளரிக்காய் விக்கிதே பொண்ணு.....

அதுதான் இப்ப சப்ஜக்ட்........பாத்தீங்களா..??? பாத்தீங்களா....? அதுக்குத்தான் பாக்கச் சொன்னேன்..இப்டிதான் ஒரு வாரமா ஓரக்கண்ணால என்ன பாக்குது. எல்லோர்கிட்டயும் போய் வெள்ளரிக்கா விக்குது ஆனா என்னோட பைக்க பாஸ் பண்ணி போகும் போது தலை குனிஞ்சு கிட்டு போகுது. என்னை தாண்டி போய் மெதுவா தலை திருப்பி ஓரக்கண்ணால பாக்குது...! எனக்கு எப்டி எடுத்துக்கறதுனே தெரியலை. என்னோட வயசுதான் இருக்கும்னு நினைக்கிறேன்....

யோவ் உன் வயசு எத்தனையான்னு யாரோ கத்துறாங்க பாருங்க.. ! ஏன் பாஸ் காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறேன்.....எத்தனை வயசு இருக்கும் நீங்களே கணக்கு பண்ணிக்கோங்க...! கேட் தொறந்துடுச்சு......சரி நான் மூவ் பண்றேன்......பாத்துக்கோங்க.. தூரத்துல நின்னு என்னைதான் பாக்குது. பாத்துட்டீங்களா...? அதுக்குத்தான் கூப்பிட்டேன்... இப்டியே நீங்க பாத்துட்டு இருந்தா எனக்கு கூச்சமா இருக்குல்ல...? சோ உங்கள இங்க ட்ராப் பண்ணிட்டு நான் ஃபர்தரா மூவ் பண்றேன்!!!!

காற்றில் பறந்த என் கேசத்தோடு சேர்ந்தே பறந்தது மனது...! யாரிவள்? என்னை உற்று நோக்கும் அவளது விழிகளுக்குள் இருக்கும், உடைகளில் இருந்த வறுமையும் என்னை ஒன்று சேர ஏதோ செய்து கொண்டிருந்தது. நைந்து போன உடைகளுடன் இவள் வெள்ளரிக்காய் விற்பது மனதுக்குள் வந்து கொஞ்சம் ஒரு தயக்கத்தை உண்டு பண்ணியது, ஆனாலும் அவளது கண்களில் இருந்து பரவியிருந்த ஒரு உணர்வினை தடுக்க விரும்பாமல் உடல் அனுபவித்துக் கொண்டிருந்ததை நான் தடுக்க விரும்ப வில்லை.

கல்லூரிக்குள் அன்றைய தினத்துக்குள் நுழைந்த நான், வழக்கமான செயல்களைச் செய்து கொண்டுதானிருந்தேன்....கலர் கலர் உடைகளோடு என்னுடன் பயிலும் மாணவிகள், காதலிக்க முயலும் சக மாணவர்கள், அனுமதிக்க மறுத்து கடைக்கண்ணால் கர்வம் காட்டும் பெண்கள், அனுமதித்து விழிகளாலேயே பேசிக் கொள்ளும் பட்சிகள், பெண்கள் என்றாலே கோபம் கொண்டு மதுவுக்கும், புகைக்குமே முன்னுரிமை கொடுக்கும் கடைசி டெஸ்க் மாப்ஸ் கூட்டம் என்று கல்லூரியின் அன்றைய எல்லா நிகழ்வுகளும் பெரும்பான்மையாகவும் சிறுபான்மையான வகுப்பறை பாடங்களும், புரபஸர்களின் வருகையும் என்று எந்த குறையுமில்லாமல் எல்லாம் நகர....

என் மனதினுள் கருங்கற் சுவரில் அடித்த ஆணியாய் அந்த வெள்ளரி விற்கும் பெண்....மீண்டும் மீண்டும் அவளது பணிவான காதல் பார்வை என்னமோ செய்ய...சக நண்பர்களிடம் போய் டேய் மச்சான்...ஒரு பொண்ணு என்ன பாத்து சிரிக்குதுடா.....அடிக்கடி என்கிட்டவே வந்து என்ன பாக்குது..ஆனா பேச மாட்டேங்குதுடா என்று சொல்லி முடிக்கையில் நண்பர்கள் கூட்டம் என்னிடம் கேட்ட கேள்வி...." எந்த டிப்பார்ட் மெண்ட் டா மச்சான்..??? நம்ம காலேஜா இல்ல பள்ளத்தூர் சீதா லட்சுமியா? இல்லை திருப்பத்தூர் அப்ஸாவா....?சொல்லுடா மச்சான்..."னென்று என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் கேட்டு.....அவர்கள் கேலி செய்து சிரித்த போது .....எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது....

ஏன் ஒரு வெள்ளரிக்காய் விற்கும் பெண்ணை நான் காதலிக்க கூடாதா? இல்லை அந்த பெண்தான் என்னைக் காதலிக்க கூடாதா? என்னை பிடித்திருந்தும் தயக்கமாய் அவளைத் தூர நிற்கவைத்தது எது? என்னைப் பார்த்து இந்த காதலை கேலி செய்ய வைத்தது எது? வாழ்க்கையினூடே இருக்கும் சாதியா? சமூகச் சூழலா? பணமா?

நான் ஏன் அவளைக் காதலிக்க கூடாது? ஒரு பெண்ணை ஒரு ஆண் நேசிப்பதின் பின் புலத்தில் காதல்தான் உள்ளது புற அழகினைப் பார்க்க கூடாது என்று சொல்லும் பெருந்தன்மை புத்திகளை இங்கே பரீசிலிக்காமல் விட்டு விட்டு பார்த்தால் புற அழகுதான் ஒரு ஆணையும் பெண்ணையும் ஈர்க்கும் சக்தியாக பெரும்பாலும் இருப்பதை நாம் காண முடியும். அப்படி புறத்திலே அழகாய் தோன்றும் ஒருத்தியிடம் சாதாராணமாகவே பொருளாதரத்தை கணக்குகள் கூட்டி, ஏற்றத்தாழ்வுகளை வரிசைப் படுத்தி காதல் என்ற ஒன்று எங்கே ஓடி ஒளிந்து கொள்கிறது?

ஆழமாய் ஒரு சிகரட்டை புகைத்து முடித்திருந்தேன்... நாளை அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்த படி...

மறு நாள்....வழக்கம் போல அதே ரயில்வே கேட்....அதே சூழல் அதே பெண் ஆனால் அரக்கு கலர் தாவணி, கருப்பானாலும் பளிச் முகம், பார்த்தும் பார்க்காதது போல பார்வை... இடை இடையே வியாபாரம்....!!! ட்ரெயின் போய் விட்டது கேட் திறந்து விட்டார்கள், பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் போய் விட்டது, சிறு வியாபாரிகள் பக்கத்திலிருக்கும் கடைத்தெருக்கு இடம் பெயருகிறார்கள்,

நான் போகவில்லை...,அவள் அரை மனதோடு திரும்பிப் பார்த்தபடி மெல்ல போகிறாள்...!!!! ' ஏய் ..இந்தாம்மா வெள்ளரிக்கா...' நான் கூப்பிட்டே விட்டேன்!!! " என் பேரு வெள்ளரிக்கா ஒண்ணும் இல்ல மஞ்சு.......எதுக்குங்க கூப்ட்டீங்க; இம்புட்டு நேரம் இங்கனதானே யாவரம் பாத்தாக அப்போ என்ன தூங்கி கிட்டு இருந்தீகளா? அவளும் கேட்டுக் கொண்டே என்னருகில் வந்து விட்டாள்.

பொதுவாக கேட் போடும் நேரம் தவிர அந்தப் பக்கம் யாரும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்கு வசதியாய்ப் போய் விட்டது. பக்கத்து வயலுக்கு ஆட்டை ஓட்டிக் கொண்டு போன சிறுவன் மட்டும் டவுசரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஒழுகும் மூக்கை சட்டை செய்யாது எங்களையே குறு குறுவென்று பார்த்துக் கொண்டே நகர்ந்தது இலேசாக உறுத்தியது.....!

"எதுக்கு கூப்டீங்க...? " அவள் வெட்கமாய் கேட்டாளா? இல்லை கோபமாய் கேட்டாளா? என்று கணிக்கும் முன்...வெள்ளரிக்கா வேணுமா? என்று குரலை இறக்கி அதில் ஒரு வித பாசத்தை கலந்து தந்தாள். என்னை எதற்கு பார்த்தாய்? என்ற என் கேள்விக்கு விழி விரித்து என்னைப் பார்த்தாள் சொன்னாள்..." ஏன் சார் உங்களை பாக்க கூடாதா? பிடிச்சு இருந்துச்சு....ச்சும்மா பாக்க கூடாதா? என்று சொல்லி விட்டு தனது தாழ்வு மனப்பானமையை இப்போது எனக்கு பரிசளித்தாள்.

வெகு நேரம் பேசினேன்..!!! பேச்சினூடே தன்னுடைய அழகிற்கு எப்போதும் காதல் பரிசாய் கிடைப்பதை வறுமை தடுத்து விட்டிருக்கிறது என்றும்... அது எப்போதும் வேறு ஏதோ ஒன்றைத்தான் தன்னிடம் மனிதர்களிடம் தேடச் சொல்லியிருக்கிறது என்றும்... வக்கிர புத்தி படைத்த மனிதர்கள் தன்னை தவறான உறவுக்கு அழைத்ததை என்னிடம் சொல்லும் போதே கண்கள் கலங்கியிருந்ததில் அவளின் வலியை உணர முடிந்தது.

எனக்கு உங்கள புடிச்சுருக்கு அதான் பார்க்குறேன்....ஆனா நீங்க எல்லாம் என்ன மாதிரி ரோட்ல வியாபரம் பண்ற பொண்ண பாப்பீங்களா மாட்டீங்களான்னு தெரியாதே சார்.... அப்பா ரோடு போடுற வேலை பாக்குறாரு, அம்மா நடவுக்கு போகும், நான் மூத்தவ எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா அம்புட்ட்டுதான்....படிப்பு வரலன்னு சொல்ல முடியாது ஆனா பள்ளிக்கொடத்துக்கு போகாம வீட்டுல வேல செய்ய ஆளு வேணும்னு படிப்ப நிறுத்தி புட்டாங்க....அம்மா கூட நடவுக்கு போவேன் சீசன்ல இது மாறி எதையாச்சும் வித்துகிட்டு இருப்பேன்...

நெதமும் பாப்பேன்.. நீங்க பைக்ல போகும் போது எனக்கு புடிச்ச மாறி இருக்கும் ...ஆனா நீங்க என்ன பாக்கவே மாட்டீங்க..இப்போ கூட ஆச்சர்யமாத்தான் இருக்கு....நீங்க பேசுறது...ஆச்சர்யமா இருக்கு..நானும் ஏதோ ஒரு தெகிரியத்துல பேசிக்கிட்டு இருக்கேன்....

"ஆத்தி லூசு சிறுக்கி நான்.... இருங்க வெள்ளரிப் பிஞ்சு தாரேன்....."

அவள் பேசியது எனக்கு கவிதையாய்த் தெரிந்ததற்கு காரணம் எனது வயசா... என்ன ஏது என்று தெரியவில்லை..ஆனால் எனக்கு பிடித்திருந்தது. பேசிய படியே அவளின் முன் நெற்றி முடியை பின்னுக்கு தள்ளி விட்ட லாவகத்தில் நான் கிறங்கி கிடக்கும் போதே வெள்ளரிக்காயை சீவி..உப்பும் மிளகாய்ப் பொடியும் வைத்து ஆசையாய் கையில் அவள் கொடுத்த போது அவளின் கண்கள் பள பளத்தது.

தின்று கொண்டே வெள்ளரிக்காய் நல்லா இருக்கு என்று சொன்ன எனது நாக்கு அவளை எனக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் மனதோடு வார்த்தைளை தேக்கி வைத்ததின் பின்னணியில் எனது குடும்பம், கெளரவம், வாழ்க்கைத் தரம், பதவி, அந்தஸ்து, ஊர், சமுதாயம், சொந்தகாரங்க, ப்ரண்ட்ஸ், என்று எல்லா பொது புத்தியும் இருந்ததை யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நான் ஒத்துக் கொள்கிறேன்.

பேசி கொண்டே இருந்தவள் ஆத்தி...எங்காத்தா தேடும் நான் வெள்ளரிப் பிஞ்ச முருகேசு அண்ண கடையில கொடுத்துட்டு நடவுக்கு போகணும்... நாளைக்கு வாரேன்..னு சொல்லி விட்டு உதட்டோரம் மட்டுமே வந்து எட்டிப் பார்த்த ஒரு சிரிப்பை எனக்கு கொடுத்து என்னை சிதறடித்து விட்டு ஓடியே போய் விட்டாள்......!

நாளை என்று அவள் சொன்ன நாளை நான் அடைய எனக்கு சனி ஞாயிறு என்ற இரு அரக்கன்களோடு சேர்ந்து சித்தி பொண்ணுக்கு நடந்த சடங்கும் என்னை அந்தப் பக்கம் போக விடாமல் தடுத்து விட்டது. மூன்றாம் நாள் திங்கள் காலையில் .....வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறேன்...மனதில் என்னை கேட்காமலேயே ஒரு பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.

" நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ "

ரயில்வே கேட்.........!!!! முறுக்கு விற்கும் சிறுவன், பலாப்பழம் விற்கும் தடித்த பெண்மனி, இஞ்சி மொரப்பா விற்கும் கெச்சலானவர், பூ விற்கும் பாட்டி, சமோசா விற்கும் தாத்தா....என்று எல்லோரும் என் விழிகளுக்குள் சிக்கி விட்டார்கள்.....வெள்ளரிக்காய் பெண்...ச்ச்ச்சே ச்ச்சே..மஞ்சு அங்கில்லை! பதை பதைப்போடு என்னாச்சு என்று ஏங்கி ஏங்கி கம்பன் எக்ஸ்பிரஸ் கடக்க...திறந்து கொள்ளும் ரயில்வே கேட்டின் மீது எரிச்சலோடு கிக்கரை உதைத்து கடுப்பை ஆக்ஸிலேட்டரிடம் காட்டினேன்.

மறுநாள் செவ்வாய்க் கிழமை... மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளும் மட்டுமே நிகழ.... அவளில்லை....! என்னவாயிருக்கும் உடம்பு சரியில்லாம இருக்குமா? என்ற எண்ணத்தோடு அந்த இடம் கடந்தேன்.

மறுநாள் புதன் கிழமை..........மீண்டும் அவள் இல்லை. எனக்குள் ஒரு சந்தேகம் ஒரு வேளை தொழிலை விட்டு விட்டு அவளின் அம்மாவோடு நடவுக்குப் போயிருப்பாளோ...? கேட் திறந்த பின் மெல்ல பைக்கை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு...கலைந்து செல்லும் அந்த சிறு வியாபாரக் கூட்டத்தில் முறுக்கு விற்ற பையனை அழைத்தேன்....

" தம்பி இங்க வெள்ளரிக்கா விப்பாங்களே அந்தக்கா எங்கப்பா? அவுங்க வீடு எங்க இருக்கு...? நான் கேட்டு முடிக்கும் முன்பே....

"அண்ணே அந்தக்கா சனிக்கிழம யாவாரம் இல்லனு ஆடு மேச்சிகிட்டு இருந்தப்ப..ரயில்ல அடி பட்டு செத்துப் போச்சுன்னே......." இந்தா அங்கனக்குள்ளே....ரயில் செல்லும் வழியைக் காட்டி....அவன் சொன்ன இடத்தில் செடிகள் மண்டிப் போய் கிடந்தது.

எப்டிப்பா?? ஏன்...? என்றெல்லாம் அறிவிலிருந்து கிளைத்த கேள்விகளை தொண்டை வாங்கிக் கொண்டு அதைக் கண்ணீராக மாற்றி வெளியே விட....பக்கத்திலிருந்த முறுக்கு விற்கும் பையன் ஏன்ணா அழுவுறீங்க? என்று கேட்க நான் சுதாரித்துக் கொண்டு ஒண்ணுமில்லப்பா என்றேன்....

இரண்டு நாட்களுக்கு முன் பேசி சிரித்தவள், மனதில் காதலை ஒளித்துக் கொண்டு மெளனியாய் இருந்தவள், வாஞ்சையாய் அவள் வறுமையைச் சொன்னவள், தயங்கி தயங்கி என்னோடு பேச்சை தொடங்கியவள் எங்கே இப்போது???

அவ்வளவு அவள் பேசியும் எனக்கு அவளைப் பிடிந்திருந்தும் அவளை நான் நேசிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாமல் போனது ஏன்? அவள் சாதி என்னவென்றறியாததாலா? அவள் வெள்ளரிக்காய் விற்கிறாள் என்பதாலா? இல்லை படிக்கவில்லை என்பதாலா? ஏன்..? ஏன் ...? ஏன்...? ஏன்..? என் முற்போக்கு மூளை அழுகிப் போனது, ஊருக்கெல்லாம் விலாவாரியாய் தத்துவங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் அறிவு ஏன் பட்டுப் போனது? அவள் அழகாய்தானிருந்தாள்...என்னை எந்த எதிர்பார்ப்புமின்றி நேசித்தாள் என்னால் ஏன் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியவில்லை....ஒரு வார்த்தை நானும் உன்னை நேசிக்கிறேன் என்று கூறவில்லையே....

காதல் என்பது இங்கே பொய்யாய் உபயோகம் கொள்ளப் படுகிறது? காரில் போகும் ஒரு ஆடவனுக்கு கூலி வேலை செய்யும் பெண்ணின் மீது காதல் வருவதில்லை....பகட்டான ஒரு யுவதிக்கு....சைக்கிளில் செல்லும் பையன் மீது காதல் வருவதில்லை....!!!!!அங்கொன்றும் இங்கொன்றூமாய் உதாரணம் வேண்டுமானால் சொல்ல முடியுமேயன்றி பெரும்பான்மையில் காதல் என்பது இரு சம அந்தஸ்து உள்ளவர்களுக்கு இடையே நடக்கும் வியாபாரம்....

என் கண்ணீர் சட்டையை நனைத்து....த்தூ....என்னை நானே காறி உமிழ்ந்து கொண்டதில் என் இயலாமை வெளிப்பட்டது.

" மஞ்சு ஐ லவ் யூ....பட் ஐ மிஸ் யூ..." காற்றுக்கு பரிசாக நான் கொடுத்த வாசகங்கள் அவள் காதுகளுக்கு சென்று சேர்ந்திருக்காது....அவள் இல்லை!!!! அவள் போய் விட்டாள்......!!!! நான் நேசிக்கிறேன் என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை இறந்திருக்க மாட்டாளோ????? இல்லை ஏதோ ஒரு நிறைவில் இறந்திருப்பாளோ.....

அவள் விழிகளோடு
உறவாடிய கண நேரத்தில்
எனக்குள் யுகங்களாய்
நிறைந்து விட்டவள் எங்கே?

மெளனமாய் அழுதபடி ....வண்டியை எதோ ஒரு திசையில் செலுத்த.....

" என் பேரு வெள்ளரிக்கா ஒண்ணும் இல்ல மஞ்சு.......எதுக்குங்க கூப்ட்டீங்க; இம்புட்டு நேரம் இங்கனதானே யாவரம் பாத்தாக அப்போ என்ன தூங்கி கிட்டு இருந்தீகளா? " மஞ்சுவின் குரல்....காற்றோடு வந்து என் காதில் கிசு கிசுக்க....

அந்த கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ..?????
கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரத்தண்டும் பூப்பதெப்போ...?
கருவேளங்காட்டுக்குள்ள...
கருச்சாங்குருவி ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா ...
துணையத்தான் காணோமுன்னு "

நான் சப்தம் போட்டு அழத் தொடங்கியிருந்தேன்....!

தேவா. S

7 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உணர்ச்சிகரமான பதிவுங்க..! எங்கே இருந்து ஆரம்பிச்சு சொல்றதுன்னு தெரியல.. அவ்ளோ நல்லா இருக்கு..!

arunrajamani said...

amsam

Chitra said...

very touching!

சௌந்தர் said...

ரொம்ப நல்ல கதை ...சமூகம் பற்றி கதையில் சொல்லி இருப்பது...ரொம்ப சூப்பர்..அவங்க இறந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமா சொல்லி இருந்திருக்கலாம் தோணுது....

காரில் போகும் ஒரு ஆடவனுக்கு கூலி வேலை செய்யும் பெண்ணின் மீது காதல் வருவதில்லை....பகட்டான ஒரு யுவதிக்கு....சைக்கிளில் செல்லும் பையன் மீது காதல் வருவதில்லை....!!!!!///

காதலும் அவர்களின் பின்பலம் பார்த்து தான் வருகிறது..இவை காதலா..?? இல்லை...

தனி காட்டு ராஜா said...

//காரில் போகும் ஒரு ஆடவனுக்கு கூலி வேலை செய்யும் பெண்ணின் மீது காதல் வருவதில்லை....பகட்டான ஒரு யுவதிக்கு....சைக்கிளில் செல்லும் பையன் மீது காதல் வருவதில்லை....!!!!!அங்கொன்றும் இங்கொன்றூமாய் உதாரணம் வேண்டுமானால் சொல்ல முடியுமேயன்றி பெரும்பான்மையில் காதல் என்பது இரு சம அந்தஸ்து உள்ளவர்களுக்கு இடையே நடக்கும் வியாபாரம்....//

Good one..

ஹேமா said...

உண்மையோ இல்லை கதையோ மனதைத் தொடுகிறது.எத்தனையோ விஷயங்கள் சமூகத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது !

Karthik said...

Good One.