Skip to main content

காலம் கொடுத்த ஓய்வும் கலைஞர் கருணாநிதியும்!



தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. இவரா? அவரா என்ற கணிப்புக்களுடனும், கற்பனைகளுடனும் இருந்த எல்லோருக்கும் ஒரு விடை கிடைத்தாகி விட்டது. அ.தி.மு.க அட்டகாசமான ஒரு பெரும்பான்மையினைப் பெற்று ஆட்சிப் பொறுப்பிலேறி விட்டது. அ.தி.மு.க என்னும் ஒரு அரசியல் கட்சியின் சிறப்புக்களைக் கைக்கொண்டு அது மேலே வந்து விட்டது என்று கூறுவதை விட நடைமுறையில் இருந்த தி.மு.கழக அரசின் திருப்தியில்லாத செயல்பாடுகளாலும், கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்த முரண்பாடுகளாலும் வெறுப்புற்ற மக்கள் மாற்று அரசியலுக்கு வேறு ஆளின்றி, வேறு வழியின்றி இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

எதேச்சதிகாரமான மனப்போக்கும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்த சிரமங்களைப் பற்றிய சிரத்தையுமின்றி, இலவசங்களை கொடுத்ததாலேயே மக்களின் ஆதரவு தமக்குத்தான் என்று கணித்திருந்த தி.மு.கவின் எண்ணம் சுக்கு நூறாகிப் போனதின் பின் புலத்தில் மக்களின் தெளிந்த பார்வைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தான் மட்டும் கனவில் இல்லாது மீடியாக்களின் மூலம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கனவில் வாழ வைத்து, மனிதர்களின் மூளைகளை மைண்ட் இலுசன் என்னும் வித்தையை காட்டி மயக்க முயன்ற தி.மு.க.வின் பெருங்கனவு உடைந்து போய் விட்டது.

ஈழப்பிரச்சினையில் தி.மு.கவின் நிலைப்பாட்டினை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்ததும், குடும்ப அரசியலின் பெரும் ஆதிக்கமும் ஒன்று சேர்த்து கழகத்தை குப்புறக் கவிழ்த்தே விட்டது.

அறிஞர் அண்ணா என்ற பெருந்தகையால் தொடங்கப்பட்ட தி.மு.க என்னும் கட்சி கடந்து வந்த பாதைகளும் அவற்றின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஏராளமான நேர்மறையான மாற்றங்களும் தமிழனுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். கடுமையான போராட்டங்களை சந்தித்துள்ள ஒரு பெரும் இயக்கத்தில் சிந்தனாவாதிகள், அருமையான பேச்சாளர்கள், என்று ஆரம்பித்து போர்க்குணம் கொண்ட கடும் தொண்டர்கள் என்று மிகப்பெரிய கோட்டை அது. மிசா சட்டம் கொண்டு வரப்பட்டப் போது தி.மு.க என்னும் மிருக பலம் கொண்ட கட்சியினை எதிர்கொள்வது மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

தமிழ் மொழியின் வளமும், தமிழ் மொழியின் பெருமையும் இன்னமும் கொஞ்சமேனும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள்தான். அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த படியாக நாவலர் நெடுஞ்செழியன் கழகத்தில் இருந்த போதும் தம்முடைய அயராத கடும் உழைப்பால் எல்லோரையும் பின்னோக்கி தள்ளிவிட்டு மேலேறி வந்த திருக்குவளை தந்த திரு. தட்சிணாமூர்த்தி என்னும் சாமானியன் கலைஞர் கருணாநிதியாக தன்னை பரிணமித்துக் கொண்டு இன்று வரை தமிழக அரசியலின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கடும் போராட்டங்களையும், கற்களையும், முற்களையும் கடந்துதான் அவர் தி.மு.க என்னும் கட்சியின் தலைமைக்கு வந்தார் என்பதும் அவரது ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பச் சூழலும் வறுமை சூழ்ந்தது என்பதும் அனைவரும் அறிந்த விடயம். கட்டாந்தரையிலிருந்து உச்சி வானுக்கு அவர் ஏறிவர பட்ட சிரமங்களும் விடா முயற்சியும் பொது வாழ்க்கையில் தனக்கென்று ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொள்ள அவர் கொண்ட முயற்சிகளும் சந்தேகத்துக்கிடமின்றி பாராட்டுதலுக்குரியது.

காலங்கள் கடக்க கடக்க தி.மு.க என்ற பெருங்கடலை திசை திருப்பி தமது இல்லமிருக்கும் கோபாலபுரத்திற்கு கொண்டு வர அவர் பட்ட பெரும்பாட்டில் கடந்த காலப் பெருமைகள் எல்லாம் காற்றில் கரைந்த பெருங்காயமாய் பட்டுப் போக குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாம் வளர, வளர தன்னையறியாமலேயே இந்த தமிழினத்தலைவன் தமது குடும்பத்தின் கிடுக்குப் பிடிக்குள் போனதை இன்று வரை அந்த தலைவன் அறிந்திருப்பானா? என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு கட்சியும் குடும்பமும் பின்னிப் பிணைந்து போய் விட்டது.

அறிஞர் அண்ணா என்ற மிகப்பெரிய, மிக நீண்ட தொலை நோக்குப்பார்வைகள் கொண்ட மனிதரால் தொடங்கப்பட்ட கழகம் மொத்தமாக மறைந்து போய் கலைஞர் கருணாநிதியின் குடும்ப அரசியல் ஆரம்பித்த இடத்தில் தொடங்கியது ஒரு பெரும் சரிவு. மகன், மகள், மருமகன், மூத்த தாரம், இளையதாரம் என்று சுற்றிச் சுற்றி குடும்பத்தின் சூழலை சரிக்கட்டவே நேரம் சரியாக இருந்ததில் கட்சியும், அந்த மிகப்பெரிய கட்சியின் தலைவர்களும், பெரும் தொண்டர்களும் கேலிக்குரிய பொருட்களாக மாறிப் போனதையும் வரலாறு கவனமாகத்தான் தனது குறிப்பிலேற்றிக் கொண்டது.

தன்னின் தமிழார்வம், பழுத்த அரசியல் அறிவு, கடும் உழைப்பு இவையெல்லாவற்றையும் தன் குடும்பம் தின்று விட இன்று இழந்து விட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க முடியுமா என்று யோசிக்க இயற்கையே அவருக்கு நேரத்தினை இன்று வழங்கிவிட்டது. ஆழமான நீண்ட அமைதியினை அவரது இந்த தள்ளாத வயதில் கொடுத்திருக்கும் இயற்கை அவருக்கு இது எல்லாம் கடந்த காலச் செயல்களால் தமக்கு கிடைத்தது என்று எண்ண வைக்குமா? என்று தெரியவில்லை.

அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து இனியொரு தேர்தலை தான் சந்திக்க முடியுமா? சந்திக்கும் போது இதே திறனோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் காலம் சம்மட்டியால் அடிக்கும் கேள்விகளை மெளனமாய் அவரது காதுகளுக்குள் ஓதிக் கொண்டுதானிருக்கும். ஈழப்பிரச்சினையில் தான் திருப்திகரமாக மக்களுக்கு செய்யும் படியான நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்க வில்லையே....!!! குறைந்த பட்சம் தனது அமைச்சரவை ராஜினாமா செய்யும் என்ற பகிரங்க ஒரு மிரட்டலை கூட மத்திய அரசுக்கு நான் வைக்கவில்லையே....!!!! பிள்ளைகள் பிள்ளைகள் என்று மூத்தவனையும் இளையவனையும், சுற்றத்தையும் சூழலையுமே கருதி நான் செய்த பிழைகள் எனக்கு கொடுத்திருக்கும் பரிசு.. ஓய்வும், மெளனமும்...!!!!!

ஓய்வும், மெளனமும் வாழ்க்கையைச் சரியாக வாழ்ந்தவர்களுக்கும் நானென்ற தன் முனைப்பு அற்று வாழ்ந்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆனால் முன்னாள் முதல்வர். திரு. கலைஞர் கருணாநிதி போன்று நான், நான் என்று அதிகாரம் போகத்தில் வாழ்ந்தவர்களுக்கு அது ஒரு தண்டனை.

காலம் இப்போது அவருக்கு ஓய்வையும் மெளனத்தையும் கொடுத்திருக்கிறது. மீண்டும் உயிர்த்தெழுதல் ஒரு கோடி பேரை உறுப்பினராகக் கொண்ட ஒரு கட்சிக்கு பெரிய விசயமே இல்லை ஆனால் இது எல்லாமே குடும்பம் சாராத ஒர் அரசியலை தி.மு.க செய்யும் போதுதான் முழு வீரியத்தோடு சாத்தியமாகும்.

மறுபக்கத்தில்....

எம்.ஜி.ஆர் என்ற மனிதரின் புகழினைக் கொண்டு அரசியல் களத்திற்குள் நுழைந்த ஜெயலலிதாவிற்கு பாடமாக போதும் போதுமென்று அவர் செய்த கடந்த காலத் தவறுகளே இருக்கின்றன. மீண்டுமொரு முறை மக்கள் தன்னை ஏற்றி வைத்திருப்பது தன் மீது கொண்ட நம்பிக்கை என்று ஆணவம் கொள்ளாது, தானே சிறந்த அரசியல் தலைவர் என்ற மமதை கொள்ளாது, பழிவாங்கல், மற்றும் தனது சுயநல எதேச்சதிகார அரசியல் நகர்வுகளை விடுத்து...

மக்களின் தேவைகளை மனதில் கொண்டு, ஊழல் என்ற கரையான் தன்னை அரித்து விடாமல், இலவசங்கள் கொடுத்து விட்டால் மட்டும் மக்கள் மயங்கிவிடுவார்கள் என்று கருதாமல்....ஒரு நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதை மறக்காமல் வரும் ஐந்தாண்டுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

இப்போது பெற்றிருப்பது வெற்றியில்லை செல்வி. ஜெயலலிதா அவர்களே..இது வெற்றி என்னும் துப்பாக்கி முனையில் மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு...! நீங்களும் பிழை செய்தால்...தயவு தாட்சண்யம் இன்றி மக்களால் சுடப்படுவீர்கள் என்பதை கனவிலும் கூட மறக்காதீர்கள்...!!!

உண்மையில் சொல்லப் போனால் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம்.!!!!!

முதல்வர்.செல்வி. ஜெயலலிதா.. பாடம் விளங்கி பயணம் செய்வாரா? இல்லை அவரும் பாடம் ஆவாரா....? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!!!!


தேவா. S






Comments

சரியான கட்டுரை... இந்த தேர்தல் முடிவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்ததை நம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற தவறான சிந்தனையுடனே இருந்தேன்.. ஆனால் தேர்தல் முடிவில் தெளிவாகிவிட்டேன்.. மவுனமாக இருந்து (துரோகிகளுக்கு) திமுகழகத்திற்கு சரியான பாடம் புகட்டிவிட்டார்கள். நமது ஆட்சியாளர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் படித்ததாக எனக்குத்தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை வைப்பதைத்தவிற வேறு ஏதுமில்லை. கருணாநிதியிடமிருந்து கட்சி வெகு தூரத்திற்கு சென்றுவிட்டது. மீண்டும் அது நீரோட்டத்திற்கு வருவது கருணாநிதியின் கையில் இல்லை என்றே தோன்றுகின்றது. வெற்று வாய் சவடால்களுக்கு இனி வேலையில்லை.
நல்ல எழுத்து நடையோடு தேர்தல் முடிவுக்குப் பின் கருணாநிதி பற்றிய மதிப்பீடு நன்றாக உள்ளது.5 ஆங்கிலப் பத்திரிகைகள்,5 தமிழ் பத்திரிகைகள் சொல்லும் செய்திகளை வைத்தே கணிப்பீடு செய்பவர்களுக்கு இருக்கும் திறனை விட பத்திரிகை,தொலைக்காட்சி,பணம்,கட்சி,புலனாய்வுத் துறை,காவல்துறை,மத்திய அரசின் நேரடி நெருக்கம்,அனுபவம்,முதல்வர் பதவி என இருக்கும் ஒருவருக்கு ஒரு பிரச்சினையை துள்ளியமாக எடை போடும் வசதிகள் ஏராளம்.இதற்கென்று தனியாக ராஜதந்திரமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.ஆனால் அனைத்து வசதிகளும் இருந்தும் மனம் பிறழ்ந்த நிலைக்கு காரணமாக குடும்ப சுயநலம்,ஊழல் சகதிக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது காரணம்.

பாராளுமன்றத் தேர்தலின் போதே அனைத்து எம்.பிக்களின் ராஜினாமாக் கடிதங்கள் வாங்கியும்,உண்ணாவிரதக் குழப்பங்கள் செய்த நிலையில் துவங்குகிறது தி.மு.க வின் வீழ்ச்சி.
சொந்த மகளே பயப்படுமளவுக்கு (ராடியா தொலைபேசி)இடித்துரைக்க இயலா மன்னன் கருணாநிதி.
அருமையான....தெளிவான...பதிவு. மக்கள் கொடுத்த பதவி வாய்ப்பை, சுயநலமின்றி உபயோகித்து... எதாச்சும்.. நல்லது பண்ணினா சரி தான்..!!
இப்போது பெற்றிருப்பது வெற்றியில்லை செல்வி. ஜெயலலிதா அவர்களே..இது வெற்றி என்னும் துப்பாக்கி முனையில் மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு...! நீங்களும் பிழை செய்தால்...தயவு தாட்சண்யம் இன்றி மக்களால் சுடப்படுவீர்கள் என்பதை கனவிலும் கூட மறக்காதீர்கள்...!!

அருமையான பதிவு தேவா.
உங்களைத் தான் எதிர்பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.
kumar said…
அண்ணாவின் வாரிசுகளை தமிழகத்தில் யாருக்கேனும் தெரியுமா?
Anonymous said…
Really a thought provoking post. should be read by karuna and jaya

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த