Skip to main content

கோமானாகப் பார்க்கும் சீமான்...!


















திருவிழா காலங்களின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடைகள் முளைப்பது போல ஏதேதோ பிரச்சினைகள் நாட்டை தாக்கும். அப்போதெல்லாம் யார் யாரோ போராடுவர், யார் யாரோ புயலாக கிளம்பி உக்கிரத்தின் உச்சியில் நின்று மக்களின் நலனுக்காக கூக்குரலிடுவர். இதற்கு சமீபகால உதாரணம் சினிமா டைரக்டர் திருவாளர். சீமான் அவர்கள்.

தேர்தல் முடிந்து விட்ட சூழலில், ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் செய்யத் தொடங்கியிருந்த சீமான் இனி என்ன செய்வார் என்ற எனது மனதை அரித்த கேள்விக்கு பதிலாய் சீமானும் நிஜ அரசியல் செய்ய தொடங்கியிருக்கும் சம கால நிகழ்வுகள் பதில்களாய் நம்மிடம் வந்து விழுகின்றன.

ஈழத்தில் நடாத்தப்பட்ட வன் கொடுமைச் சம்பவங்களுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது நம் ஊர் தெருக்களில் கோலிக் குண்டு விளையாடும் சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். அதை எதிர்த்து ஈழத்தில் நடந்த மனித நேய முரண்களை கண்டிக்கும் வண்ணம் சீமான் எதிர் கொண்டு நடத்திய போராட்டங்களும், அதனால் அவரை பல முறை இறையாண்மைக்கு எதிராய் பேசியதாய் குற்றம் சாட்டி மத்திய அரசின் கைப்பாவையாய் இருந்த தி.மு.க சிறையிலடைத்ததும் நாம் அறிந்த விடயம்தான்..!

ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு....

சீமானின் அரசியல் கொள்கை என்ன? இனத்தின் பெயரால் மனித உணர்வுகளை தூண்டி விட்டு தான் முன்னெடுத்து செல்லும் ஒரு இயக்கத்தின வேர்களில் செழிக்கும் பாதை தெளிவானதாய் இருக்குமா?

நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வினை கொண்டிருப்பது எவ்வளவு சரியோ அவ்வளவு தவறானது நாம் தமிழர்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று இவ்வுலகை பார்ப்பதும்.

உலகமயமாக்கள், இணையத் தொடர்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி என்று விரிந்து பரந்திருக்கும் இக்கால கட்டத்தில் நான் தமிழன் எனக்கு பாரம்பரியம் இருக்கிறது என்று பேசுவதும், அதன் பெருமைகளைக் கொள்வதும் நாம் நம்மை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டுமேயன்றி அரசியல் நடத்தவும் அடுத்த மாநில அல்லது தேசத்து மக்களுக்கு எதிராகவும் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க அதனை ஒரு ஆயுதமாய் கொள்தல் எப்படி சரியாகும்?

ஈழத்தில் நடந்த இன அழிப்பு கொடுமைகளுக்கு எல்லாம் தாய்த்தமிழர்களாகிய நாம் நம் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவிக்கலாம். இந்திய அரசை வலியுறுத்தி ராஜபக்சேக்கும் அவரது நிலைப்பாட்டிற்கும் எதிரான செயல்கள் செய்ய போராட்டங்கள் நடத்தலாம் ஆனால் தமிழக அரசியலையும் தமிழ் நாட்டு மக்களுக்கு தேவைப்படும் வளமான எதிர்காலத்திற்கும் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் செய்தால் அது அறிவுப் பூர்வமான விடயமா?

அதைத்தான் சீமான் செய்கிறார்.

ஈழப்பிரச்சினைக்கு போராடுதல் வேறு. ஈழமக்களுக்கு ஆதரவாய் நாம் கோஷமிடுதல் வேறு. தமிழ் நாட்டு அரசியல் வேறு. சீமானுக்கும் இது தெரியும். இருந்தாலும் நரம்பு புடைக்க பேசி உணர்ச்சிக் கத்தியின் முன்னால் தமிழகத்திலிருக்கும் 7 கோடி பேரையும் நீ எல்லாம் தமிழன் ஒன்று கூடு என்று கோரிக்கை வைப்பதில் எவ்வளவு பகுத்தறிவு இல்லையோ அவ்வளவு பகுத்தறிவு அற்றது தமிழக முதல்வரின் சோ கால்ட் லேட்டஸ்ட் ஸ்டண்ட் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் நடத்தப்போகும் பொதுக்கூட்டமும்.

ஏன் சீமான்..? தமிழக முதல்வர் அவர்கள் ஏன் இந்த கண்துடைப்பு வேலை செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? ஈழப்போரின் போது இதே முதலமைச்சர் எத்தனை போராட்டங்களை நடத்தினார் தனது கட்சியின் சார்பில். ஒரு திரைப்பட இயக்குனராய் இருந்த நீங்கள் உணர்ச்சியின் உச்சத்தில் கொந்தளித்து மேடை மேடையாக குமுறிய போது ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவாராய் இருந்த செல்வி. ஜெயலலிதாவின் ஈழத்திற்கு ஆதரவான போரட்ட முகம் எப்படியிருந்தது?

விடுதலைப்புலிகளின் செயல்பாட்டை அடக்கி ஒடுக்கியதோடு அல்லாமல் வை.கோ போன்றவர்களை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்தது எந்த அம்மையார்? பொடாவில் உள்ளே சென்று வருடக்கணக்கில் சிறையில் இருந்த வை.கோ... எந்த வகையில் உங்களை விட தாழ்ந்தவராகிறார்? என்ற கிளைக்கேள்வியையும் இங்கே வைத்துச் செல்கிறேன்.

வை.கோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார் அதனால் அவரை உள்ளே தள்ளியது அப்போதைய அ.தி.மு.க அரசு. நீங்கள் யாருக்கு ஆதரவாய் செயல்படுகிறீர்கள்? அரசியல் ஸ்டண்ட் அடிக்கும் அம்மையாரை ஆழமான ஈழ நேசர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நீங்கள் எப்படி ஆதரிக்கலாம்?

அரசியல் திருப்பங்களில் இன்னும் ஐந்து வருடம் நீங்கள் சுகமாய் ஜீவிக்க இந்த பொதுக்கூட்டங்கள் உங்களுக்கு உதவும் என்பது என்னவோ சரிதான் ஆனால் நீங்கள் நாம் தமிழர் என்ற ஒரு இயக்க கொண்டிருகிறீர்களே... தமிழக தமிழனின் ஆதாரமான பிரச்சினைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெளிவான தமிழ்நாட்டினை படைக்க உங்களிடம் செயல் திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா? நன்றாக உணர்வுப் பூர்வமாக பேசத்தெரிந்தவரெல்லாம் நாடாள முடியாது திரு. சீமான் அவர்களே.. அப்படியிருந்தால் தமிழகத்தை 13 வருடங்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆண்டிருக்க மாட்டார். கருணாநிதிதான் ஆண்டிருப்பார்.

தி.மு.க விற்கும் அ.தி.மு.கவிற்கும் ஒரு மாற்று அரசியலை தமிழக தமிழன் பெரும் கனவாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு வகையில் உங்களின் செயல்பாடுகளில் இருக்கும் இன உணர்வினை மெய்யென்று நம்பி ஏதோ இவர் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கிறான்...!நீங்கள் என்னவென்றால் தேர்தல் முடிந்தவுடன் ஆளும் கட்சி தீர்மானம் போட்டது நாங்கள் பாராட்டுகிறோம் என்று வெடித்து முடித்த புஸ்வானம் போல கருகிக் கிடக்கிறீர்கள்....

அரசியல் ஸ்டண்ட்ஸ் எல்லாம் பார்த்து காதில் புகை வரும் அளவிற்கு கடுப்பில் இருக்கும் தமிழக தமிழனின் கண்களில் வளரும் இத்தருணத்தில் மாட்டித் தொலைக்காதீர். கத்துக்குட்டி தீர்மானங்களையும் உமது ஆளுங்கட்சி ஆதரிப்புகளையும் மூட்டைத் கட்டிப் போட்டு விட்டு .. ஒரு தனிப்பெரும் தலைவனாக.. தமிழக தமிழனின் பிரச்சினைகளையும் அதன் மூலங்களையும் ஆரய்ந்து தெளிவான ஒரு செயல் திட்டத்தையும் கொள்கையையும் அறிவியுங்கள்....!

இப்படி கதை கதையாக சீமானுக்கு நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம் எனது சொந்தங்களே...!

காலத்திற்கும் ஈழப்பிரச்சினைப் பற்றி பேச வேண்டுமெனில் தாய்த்தமிழனுக்கு உடம்பில் கொஞ்சம் உயிரும் சொரணையும் வேண்டுமல்லவா?

சீமான்கள் வருவார்கள் போவார்கள்....எம் மக்கள் விழிப்போடு இருந்தால் அதுவே போதும் எமக்கு...!


தேவா. S



Comments

பலத்த கைதட்டல்கள் பதிவுக்கு...!
jagadeesh said…
சீமான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் செய்வது தவறாக இருக்கலாம், ஆனால் இங்கே அவர் செய்யும் அரசியல் சரியாகத் தான் இருக்கிறது. அதுவும் தி மு க விற்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்தது மிகவும் போற்றத்தக்கது. அம்மையாரைப் பற்றி தவறாக வர்ணித்துள்ளீர்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா? விடுதலைப் புலிகளை எப்போதும் அ தி மு க அரசு எதிர்த்தே வந்துள்ளது. இலங்கை தமிழர்கள் இறந்தது விடுதலைப் புலிகளால் தான். ஒருக் காலும் அவர்களுக்கு ஆதரவாய் பேசவே முடியாது. இப்பொழுது அம்மையார் போட்டுள்ள தீர்மானம் சரியானது. ஏதோ ப்ளாக் இருக்குனு இதெல்லாம் படிக்க வேண்டி இருக்கு.
dheva said…
ஜெகதீஸ் @ அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆதரிப்பு எதிர்ப்புகளை கொஞ்சம் நகர்த்தி வையுங்கள்....

தி.மு.கவை எந்த அளவு ஈழத்திற்கு எதிரானவர்களாக சீமான் குற்றம் சாட்டினாரோ அதற்கு எந்த வகையிலும் அ.தி.மு.க குறைந்தது அல்ல அதை எப்படி நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்... இது கட்டுரையின் சாரம்.

//ஏதோ ப்ளாக் இருக்குனு இதெல்லாம் படிக்க வேண்டி இருக்கு.//

இதற்கு நானொன்றும் பதில் பகிர வேண்டியதில்லை.. இங்கே இக்கட்டுரையை வாசிப்பவர்கள் பார்க்க இதை நான் காட்சிப்படுத்தி மட்டும் வைக்கிறேன்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரம்!
சீமானிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது... ஆனால் அவரும் மற்ற அரசியல் வாதி போல் தான் செய்யல்பட்டு கொண்டுயிருகிறார்...!!!

ஒரு அரசு தன் கடமையை செய்கிறது அதற்கு ஏன் நன்றி தெரிவிப்பு...? பாராட்டு விழா எல்லாம் ..??
chandru2110 said…
சீமான் பற்றிய உங்கள் கருத்து மதிக்க தக்கது.
//சீமானிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது... ஆனால் அவரும் மற்ற அரசியல் வாதி போல் தான் செய்யல்பட்டு கொண்டுயிருகிறார்...!!!

ஒரு அரசு தன் கடமையை செய்கிறது அதற்கு ஏன் நன்றி தெரிவிப்பு...? பாராட்டு விழா எல்லாம் ..??//

அப்போ பாச தலைவனுக்கு பாராட்டு விழா ..நடக்கும் பொழுது டி வி முன்னால இருந்த சௌந்தர் இத சொல்லி இருக்கணும் ..மக்கள் வரி பணத்தில் இலவச டி வி கொடுத்ததை ..முன்னூறு வாட்டி போட்டாங்களே அது எதுக்கு ? ..தன் கடமைன்னு பேசாம இருக்கலாம் இல்லையா ..?
அப்போ பாச தலைவனுக்கு பாராட்டு விழா ..நடக்கும் பொழுது டி வி முன்னால இருந்த சௌந்தர் இத சொல்லி இருக்கணும் ..மக்கள் வரி பணத்தில் இலவச டி வி கொடுத்ததை ..முன்னூறு வாட்டி போட்டாங்களே அது எதுக்கு ? ..தன் கடமைன்னு பேசாம இருக்கலாம் இல்லையா ..?////



அப்போதும் நான் அதுதான் சொன்னேன். அந்த அரசு தான் அதையெல்லாம் அனுமதித்தது என்றால் இவர்கள் ஏன் அதையே செய்கிறார்கள்..???
நம் தமிழனுக்கு எப்போதுமே பழங்கதை பேசி பழக்கம் ...சரி விசயத்துக்கும் வாரேன் விடுதலை புலிகளை வளர்த்தவர்கள் யார் ..?மத்தியில்இருந்த இந்திரா காந்தி அம்மையாரும் தமிழகத்தில் எம் ஜி ஆறும் தான் ..அதாவது காங்கிரஸ் அண்ட் அ தி மு க ..சரி இந்திரா காலம் முடிந்த பின் என்ன நடந்தது ராஜீவ் வந்தார் ..விடுதலை புலிகளை எதிர்த்தார் ..இங்கே ஜெயலலிதா வந்தார் எதிர்ப்பை காட்டினார் ..

எம் ஜி ஆர் விட்டதை கருணாநிதி பிடித்து கொண்டார் ..அப்போ தான் ராஜீவ் கொல்லபட்டார் .எதிர் கட்சி வரிசையில் ஜெ இருந்தார் வேறு வழி கிடையாது எதிர்ப்பை காட்டினார் ..

இப்போ கலைஞர் சரி இல்லை இந்த விசயத்தில் ..அதனால் பல எதிர்ப்புகள் கருணாநிதிக்கு கிளம்பியது ..இந்த வாட்டி ஜெ சரியாக பிடித்து கொண்டார் அதை அவருக்கு உணர்த்தியது சீமான் அண்ட் வைகோ வாக இருக்கிறார்கள் .

ஏன் ஒருவர் திருந்தி நல்லது செய்தால் பழையது பேசி ஓட விட்டுருவீங்க போல இருக்கே ?.ஏன் ஜெ வை திருத்தியது சீமானாக அல்லது வைகொவாக இருக்க கூடாது ..?ஒருவர் திருந்தி ரெண்டு தீர்மானம் நிறை வெற்றி இருக்காங்க ..ஒன்று கச்ச தீவு மீட்பது ..இன்னொன்று பொருளாதார தடை ..?திருந்திவரகளை பாராட்டுவதால் இன்னும் சில நல்ல செயல்கள் செய்வார்கள் அல்லவா ..?ஏன் இதில் குறை கண்டுபிடிக்க வேண்டும் ..பழைய சாக்கடைகளை ஏன் கொம்பு கொண்டு கிளற வேண்டும் ..அதில் இருந்து மறுபடியும் வரும் துற நாற்றத்தை ..நம் சமூகத்தை சுவாசிக்க விட வேண்டுமா ?...
Mohamed Faaique said…
///நன்றாக உணர்வுப் பூர்வமாக பேசத்தெரிந்தவரெல்லாம் நாடாள முடியாது திரு. சீமான் அவர்களே.. அப்படியிருந்தால் தமிழகத்தை 13 வருடங்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆண்டிருக்க மாட்டார். கருணாநிதிதான் ஆண்டிருப்பார்.///
இது மேட்டரு.. தமிழனின் பலகீனமே அதுதான்.. பேச்சில் மயங்குரது...
dheva said…
பாபு @ தமிழக முதல்வர் திருந்தியிருக்கலாம்.. அது வரவேற்புக்குடையது ஆனால் விடுதலைபுலிகளை அவர் எக்காலமும் ஆதரித்தது இல்லை. உண்மையில் ஈழப்பிரச்சினையையும் ஈழத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது.

விடுதலைப்புலிகளின் தீவர ஆதரவாளாரான திரு. சீமான் போன்றவர்கள் பொறுத்திருந்துதான் தனது கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும். ஈழப்பிரச்சினையில் திருவாளர் கருணாநிதி கூட ஏராளமான ஸ்டண்ட்களை நிகத்திக் காட்டினார்.....அப்போது எல்லாம் அதை சட்டை செய்யாத சீமான் சடாரென ஒரு நிலைப்பாட்டை எடுத்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக முதலைமச்சரின் இந்த செயல்பாடு சரியானதே என்றாலும்...மிகப்பெரிய பாராட்டு விழா அல்லது பொதுக்கூட்டம் நடத்தி புகழ் பாட வேண்டிய தருணம் இதுவல்ல இன்னும் காத்திருந்து நோக்க வேண்டும்!
baleno said…
தமிழக அரசியலையும் தமிழ் நாட்டு மக்களுக்கு தேவைப்படும் வளமான எதிர்காலத்திற்கும் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் செய்வது தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லதா என்று அறிவுப் பூர்வமாக சிந்திக்கும் உங்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். சொகுவு வாழ் புலம் பெயர் தமிழர்களின் விருப்பத்தை தமிழகத்தில் செயல்படுத்துபவர் தான் சீமான். அவரால் தமிழக மக்களுக்கும் நன்மை இல்லை, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் நன்மையில்லை.

தமிழக முதலைமச்சரின் இந்த செயல்பாடு சரியானதே-dheva
இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை கொண்டு வரப்பட்டால் அதிகம் பாதிக்கபட போவது யார் என்பதையும் சிந்திக்கலாமே!
Anonymous said…
சீமானின் சாயம் வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. அதைத் தான் தெளிவாக கோடிட்டுக் காட்டியிருக்கின்றீர்கள். நல்ல அலசல்.
ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கான அனுபவத்தை நீங்கள் (வளரும் ஒரு புல்லிடம்) அவரிடம் எதிர்பார்த்தால் நிச்சயம் மக்களின் அறியாமையே.. உங்களின் விமர்சனம் நிச்சயம் அவர்களையும், அந்த இயக்கத்தையும் கூராக்கும் ஒரு கத்தியாய் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. கொள்கைகளில் உறுதியாய் நிற்க்கும் ஒரு இயக்கத்தை கட்டமைத்தால் மட்டுமே அன்றாட மக்களின் தேவைகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் நின்று களமாடமுடியும் அதைத்தான் நாம்தமிழர் இயக்கமும் செய்கிறது என்பது என் தாழ்மையான கருத்து. கோலிக் குண்டு விளையாடும் சிறுவன் வரை ஈழ பிரச்சினை தெரிந்திருப்பது அவர்களின் முதல் வெற்றி.
மொழியையும், கலாச்சாரத்தையும் நேசிக்காத மக்களால் நாட்டை ஒரு போதும் நேசிக்க முடியாது, நாடு என்பதே மொழி மற்றும் கலாச்சாரங்களின் கூடுகை தானே...!!

மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு... நினைவுபடுத்துவது அவர்களின் கடமை..!!

உங்களின் கட்டுரை... ஆரோக்கியமானது.
Unknown said…
தமிழன் என்ற ஒரு குறுகியவட்டத்தில் இருப்பதை சுட்டிகாட்டியதற்க்கு நன்றி ஆனால் ஜெயலலிதாவின் இப்போதைய நிலையை கண்டிபாக பாரட்டவேண்டும் பழமை பாராமல்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த