
ஒரு கணம் நின்று நிதானித்த நினைவுகளின் ஆழங்கள் சமப்பட்டுப் போய்க்கிடந்த ஒரு விடியலில், மிகைப்பட்ட மனித முரண்களின் இருப்பிடம் எது? என்று ஆராயத்தொடங்கியிருந்தது என் மூளை. தீரா தாகத்தில் தேகம் தகிக்க இரு குவளை குளிர் தண்ணீரால் தற்காலிக உடல் சூடு தணிந்தது ஆனால் உள்ளச் சூடு?
வழி தவறிப் போயிருந்தால் வழிகாட்ட முடியும் ஆனால் நானும் என்னைப் போன்ற என் நண்பர்களும் வாழ்க்கை மாறிப் போனதற்கு யார் காரணம்? வகுப்பறையில் ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்து படிக்கச் சொல்லிக் கொடுத்த சமூக சூழ்நிலை வீட்டில் பொருளாதாரம் வேண்டி படிக்க பயின்று கொடுத்தது.
என் தகப்பனுக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கும் ஏற்கனவே அவர்கள் வாழ்ந்து வளர்ந்த சூழலும், பழக்கப்பட்டுப் போயிருந்த பொது புத்தியும் சாட்டைகளாய் தங்களின் கையிலிருக்க அதை வீசி, வீசி, ஓடு... ஓடு.... என்று துரத்த அடிக்குப் பயந்து ஓடி வந்து சேர்ந்த இலக்கில் இருந்த எல்லாமே என்னின் குணாதிசயத்துக்கு முரண்பட்டு இருந்தது.
நான் நானாக வளர்வதில் இந்த சமுதாயத்திற்கு எந்த ஒரு சம்மதமும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று யோசிக்க புரிதலின்மை மேலும் சமுதாய நிர்ப்பந்தம் என்ற இரு வார்த்தைகள் என்னுள் பூத்துச் சிரித்தன.
பக்கத்து வீட்டுக்காரன் டிவிஎஸ் 50 வாங்கிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு தேவையில்லாத ஒரு வாகனத்தை என்று ஒருவன் கடன் கொடுத்து வாங்கி தன் வீட்டு வாசலில் நிறுத்துகிறானோ அங்கே மீண்டும் கிளர்ந்தெழுகிறது புரிதலின்மை. இந்த வாழ்க்கை எனது வசதிபோல ஆனால் சத்தியத்துக்கு உட்பட்டு மூன்றாம் மனிதருக்கு இடைஞ்சல் கொடுக்காமல் வாழ வேண்டும் என்று ஏன் இதுவரையில் என் சக மானுடர்க்கு புரியவில்லை என்று தோன்றிய கேள்வியைக் கேட்க கேட்க எனக்கு சமுதாயம் கொடுத்த பெயர் திமிர் பிடித்தவன்.
வீட்டிலிருக்கும் குப்பைகளை எல்லாம் ஒரு இடத்தில் கொட்டவும் அதை துப்புரவு செய்ய ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் இருந்த போது அரசு இயந்திரங்களின் செயல்பாடுகள் என்ன என்று வாசிக்கத் தோன்றியது. நம்மிடம் சட்டமிருக்கிறதும், நம்மிடம் சிஸ்டம் எனப்படும் ஒழுங்கு முறைகள் இருப்பதும் அதை செயல்படுத்த ஜனநாயக ரீதியாக மனிதர்களும் அரசு அதிகாரிகளும் இருப்பதும் அறிந்து ஆச்சர்யத்தில் திகைத்தேன்...!
ஆனால்..
பின்பற்ற ஒரு மனிதர் கூட இல்லையே என்று எண்ணி கூச்சமும் வேதனையும் பட்டேன். 100 கோடி பேருக்கு மேலிருக்கும் தேசத்தின் உள்நாட்டு தேவைகளை உள்நாட்டில் உள்ளவர்களே உற்பத்தி செய்வதின் மூலம் நமது தேசத்தின் பணப்புழக்கம் அதிகமாகியிருக்க வேண்டும் ஆனால் ஆகவில்லை. ஏன் என்று சாமானியர்கள் சிந்திக்க கூட அருகதையில்லை என்று ஒரு சூழல் நமக்கு விதைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேசத்துக்கும் தனி மனிதனுக்கும் உள்ள ஒரே தொடர்பு தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே என்ற ஒரு புரையோடிப் போன ஒரு மனோவசியம் மிக நேர்த்தியாக நமக்கு நிகழ்ந்தேறியிருக்கிறது. அரசியல் என்றால் சாக்கடை என்றொரு படிமாணமும் என் தேசத்து இளைஞனின் மூளையில் இலச்சினை குத்தப்பட்டிருக்கிறது. இப்படி குத்தியவர்கள் எல்லாம் அரசியலால் ஆதாயம் அடைந்தவர்கள் என்று கொள்க;
நமது ஊர் கடைத்தெருவில் விற்கும் வியாபாரி பொருளை அதிக விலை வைத்து விற்கிறார் என்று நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் எல்லாம் சுட்டி அவரைக் குறை சொல்லி கிண்டல் செய்து சிரித்திருப்போம் அவரைப் பேராசைக்காரர் என்று வசை பாடியிருப்போம் ஆனால் ஒரே ஒரு முறை அந்தக் கடைகாரரின் கண்களை நேருக்கு நேராய் பார்த்து ஐயா தங்களின் விலை கூடுதலாய் இருக்கிறது, ஏன் இப்படி கூடுதலாய் விற்கிறீர்கள்? என்று நம்மின் நிலைப்பாட்டை கூறியிருக்க மாட்டோம்.
இந்த சமுதாயத்தில் எல்லோரும் கருத்து சொல்ல வேண்டும். ஏதோ ஒரு கட்சியையோ அல்லது சித்தாந்தத்தையோ இறுகப் பிடித்தப்படி தான் சார்ந்திருக்கும் அமைப்பின் எல்லா முரண்களையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்....சுற்றியுள்ள மனிதர்களுக்கு எல்லாம் இப்படி இருங்கள், அப்படி இருங்கள் என்று சொல்வதோடு மனித செயல்பாடுகளால் விளையும் முரண்களை எல்லாம் கேலி பேசி சிரிக்க வேண்டும் என்றே பயிற்றுவிக்கப் பட்டு பழக்கப்பட்டு விட்டோம் ஆனால்.. தன்னை உற்று நோக்கி சரி செய்துகொள்ள எந்த ஒரு நிலைப்பாட்டினையும் நாம் கொண்டிருக்க வில்லை...!
மக்கள் என்றும் சமுதாயமென்றும் நாம் கூறுமிடத்தில் இவர்தான் சமுதாயம், அவர்தான் மக்கள் என்று சுட்டிக் காட்ட இயலுமா? தனி மனித தொகுப்புதான் சமுதாயம், தனி மனித தொகுப்புதான் மக்கள்...
என்னை இந்த சமுதாயத்திலிருந்து நான் விடுவித்துக் கொண்டு தனித்தமர்ந்து கருத்து சொல்லி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று சூளுரைத்தால் அதன் பின்னணியில் இருக்கும் அபத்தம் என்னவென்று நான் சொல்லித் தெரிய வேண்டாம். முதலில் நான் மாற வேண்டும் பிறகு ஊரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
" உழைத்து வாழ வேண்டும் என்று பொதுவில் சொல்ல வருபவன் முதலில் உழைப்பிற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாயிருக்க வேண்டும்..."
தனக்கென்று ஒரு சுய தன்மை இல்லாமல் சமுதாயத்தை குற்றம் சொல்வது மிகப் பெரும் தீங்கான ஒரு செயல். இயன்றவரையில் தன்னையும் சுற்றுப்புறத்தையும் சரி செய்ய ஒவ்வொரு மனிதனும் தன்னார்வம் கொண்டவராய் இருத்தல் வேண்டும்...
" இதற்கு தேவை முழுமையான விழிப்புணர்வு...."
கொஞ்சம் நடை மாற்றிக் கொள்கிறேன்... ஏனென்றால் கழுகு இப்போது உள்ளே வருகிறது.
கட்டுக்குள் நின்று கவனிப்புகளை கூர்மையாக்காமல் மேம்போக்காய் வாழ்ந்துவிட்டு போவதிலென்ன நிம்மதியிருக்கிறது உனக்கு என்று எம்மை உற்றுப் பார்த்து எரித்து விடுவது போல எமதின் உள்ளமை கேள்வி கேட்ட கணத்தில் ஜனித்தது கழுகு என்னும் ஒரு போர்வாள் எமது கையில்...
இங்கே சத்தியத்தின் மூலமென்ன, பிரச்சினைகளின் வேர்தான் என்ன? எங்கே ஜனிக்கிறது மனித அபத்தம்? எம்மக்களின் தீராப்பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணம் என்று சிந்தித்த நொடியில் நவீன தொழில் நுட்ப பயன்பாட்டில் இலவசமாய் எல்லா இடத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் வலுவான ஆயுதத்தை எமது கையில் எடுத்தோம்...
அதற்கு கழுகென்று பெயரிட்டோம்....
விழிப்புணர்வு என்னும் ஒற்றை நோக்கை இரு விழிகளுக்கு மத்தியில் கருத்தாய் வைத்து முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்று போதிக்க போதிய திரணியை எம்மிடம் சேர்க்க ஒத்த கருத்துள்ள இறகுகளை ஒன்றிணைத்தோம்...
ஒவ்வொரு இறகுகளாய் ஒன்றிணைந்து எமதின் சிறகான பின்பு விழிப்புணர்வு என்னும் ஒற்றை உயிர் ஏந்தி இன்று கழுகினை சிறகடிக்கச் செய்து கொண்டிருக்கிறோம்... உச்சத்தில்...!
தான் யாரென்றும், தன்னின் கடமைகள் யாதென்றும், தம்மின் பொறுப்புக்கள் என்னவென்றும் மனிதர்கள் தங்களின் குடிமையியல் பற்றி அறியவொண்ணா வண்ணம் சிதறிக் கிடக்கும் சித்தாந்தங்களும், கட்சிகளின் கொள்கைகளும் மனிதர்களின் மனோ நிலையை ஆக்கிரமித்துக் கொண்டு தெளிவான பார்வைகளை பார்க்க விடுவதே இல்லை.
ஏதோ ஒரு நிலைப்பாடும், கொள்கைகளும் எல்லா சூழலுக்கும் பொருந்தி வராது என்பதை என் சக மானுடர் அறிய வேண்டும். இனி வரும் காலங்களில் கட்சிகளுக்குள் தொண்டர்களும், சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபெற்றுக் கிடக்கும் மனிதர்களும் இருத்தலே கூடாது.
சூழலுக்கு ஏற்ப உண்மைகளை பயன்படுத்தும் யுத்தியை எம் மக்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். சரிகளையும் தீமைகளையும் கணிக்க வேண்டிய இடத்திலா இன்று நாம் இருக்கிறோம்...? இல்லையே, குறைந்த தீமை எதில் உள்ளது என்று தானே இன்று வாதிட்டு கொண்டிருக்கிறோம்.
சக மனிதரை மதிக்கத் தெரியாத, சக மனிதரை அன்புடன் நடத்தத் தெரியாத, வாழ்க்கையின் சுபீட்சத்துக்கு உதவாத எந்தவொரு கருத்தாய் இருந்தாலும் அதை தீயிட்டுக் கொளுத்துவோம். எதிரே வரும் மனிதரிடம் சினேகமாய் சிரிக்கச் சொல்லித் தராத எந்த ஒரு தலைவனையும் நாட்டை விட்டே துரத்துவோம்.
என் வீடு, என் வாசல், என் மக்கள், என்று நம்மை சரி செய்யும் செயல்களால் சுற்றியிருப்பவர்களுக்குத் தீமை ஏற்படுமெனில் நாம் செய்வது சரியா என்று கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டுக் கொள்வோம். இதைத்தான் கழுகு விவாதக் குழுவும், கழுகு வலைப்பூவும் செய்து கொண்டிருக்கிறது. முரண்கள் இருந்தால் நயமாய் தனி மனித உணர்வுகளைப் பாதிக்காத வகையில் கூறுங்கள் மனிதர்களே....
எம்மின் தவறுகள் உங்களால் திருத்தப்படுமெனில் நாங்கள் பாக்கியவான்கள்.
அதே நேரத்தில் முரண்களைச் சுமந்து கொண்டு வந்து கொட்டி விட்டு இதை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி வெற்று வியாக்கியானங்களை எம்மீது விசிறியடிக்க யாரேனும் முயன்றால்... அறிவென்னும் வாள் எடுக்க நாம் தயங்கப்போவது மட்டுமில்லாமல், எந்த நிலையில் இருந்து முரண்கள் வருகின்றனவோ அதே நிலைக்குச் சென்று அவற்றை அழித்தொழிக்கவும் தயங்கப் போவதும் இல்லை.
கழுகு என்னும் போர்வாளின், பால பருவத்து பணியாக இணைய பயனீட்டாளர்களிடம் விழிப்புணர்வையும், நாம் வாழும் சமுதாயத்தில் காணப்படும் முரண்களையும் எடுத்தியம்பி வருகிறோம். முழுக்க முழுக்க சிதறிக் கிடக்கும் இளையர்கள் நிறைந்த தமிழ் இணைய உலகினுள் சத்தியத்தை கூறி அவர்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறோம்.
போராட்டங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், என்று கணித்துக் கொண்டு அதே முறைகளை நீங்கள் இதுவரையில் பின்பற்றி இருக்கிறீர்களா? என்று வரும் கேலிகளால் நிறைந்த கேள்விகளை இழுத்துப் பிடித்து வளைத்து நெளித்து மீண்டும் அவற்றை கேட்டவர்களுக்கே பரிசளிக்கிறோம்.
காலங்கள் தோறும் பிரச்சினைகளைத் தீர்க்க தெருவில் இறங்கி வாழ்க, ஒழிக கோஷம் போட்டு எத்தனை பிரச்சினைகளை நாம் வேரறுத்துள்ளோம்? எல்லா பிரச்சினைகளுக்கும் கோசங்கள் இடுவதும், சாலை மறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் தீர்வாகாது என்பதோடு மட்டுமில்லாமல் எமது போராட்ட வடிவங்கள் கற்பனையிலும் உதித்திராத வகையில் நவீன தொழில் நுட்பத்தையும், மக்களின் அறிவுத்திறனையும் கொண்டு செயல்படும் விதத்தில் இருக்கும் என்றும்,
ஒவ்வொரு தனிமனிதரும் செம்மைப்பட்டு போகையில் எமது போராட்ட வடிவங்கள் அடக்குமுறை செய்பவரையும், எதேச்சதிகாரம் செய்யும் மனிதர்ளையும், சுயநல அரசியல்வாதிகளையும் அதிரடியாய் ஆட்டம் காண வைக்கும் என்பதையும் உறுதியாக அறுதியிட்டு அறிவிக்கிறோம்.....
இன்று 35 பேர்களாய் வியாபித்து நிற்கும் இந்த சக்தி, லட்சங்களாய், கோடிகளாய்ப் பற்றிப் பரவும். ஆமாம்.....நெருப்பின் இயல்பு பற்றிப் பரவுவதுதானே...!
சமுதாய நேர் நோக்காளர்களையும், இனி வரும் சந்ததியினராவது செழிப்புடன் வாழ ஆத்மார்த்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிந்தனாவாதிகளையும், சுயநல அரசியலால் விக்கித்துப் போயிருக்கும் பொதுநல வாதிகளையும் இரு கரம் கூப்பி, நீட்டி கழுகு விவாதக்குழு அழைக்கிறது....
எந்த விதமான ஒரு நிர்ப்பந்தமுமின்றி...தீரத் தீர கழுகினை கேள்வி கேளுங்கள்...பதில்களால் நீங்கள் திருப்தியுறும் வரை.., கழுகு என்னும் போர்வாள் யாரோ ஒரு தனிப்பட்ட மனிதருக்கோ ஒரு அமைப்புக்கோ சொந்தமானது அல்ல...! இது ஒவ்வொரு மானுடரின் கையிலும் பள பளக்க வேண்டிய விழிப்புணர்வு வாள்...!
கழுகு யாரின் செயலோ அல்லது யாருக்கோ ஆன செயலோ அல்ல இது நமக்கு, நாமே செய்யும் விழிப்புணர்வு போர். இதில் உங்களையும் இணைத்துக் கொள்வது உங்களின் தார்மீகக் கடமை என்று உணருங்கள்...!
கழுகோடு இணையுங்கள்...! விழிப்புணர்வுற்ற சமுதாயத்தின் அங்கமாயிருங்கள்...!
கழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்...!
கழுகு பற்றிய மேலதிக விபரங்கட்கு kazhuhu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கேள்விகளை அனுப்புங்கள்!

தேவா. S
Comments
....... உண்மையை சொல்றீங்க.....
உண்மைதான் அண்ணா :)
//தனக்கென்று ஒரு சுய தன்மை இல்லாமல் சமுதாயத்தை குற்றம் சொல்வது மிகப் பெரும் தீங்கான ஒரு செயல். இயன்றவரையில் தன்னையும் சுற்றுப்புறத்தையும் சரி செய்ய ஒவ்வொரு மனிதனும் தன்னார்வம் கொண்டவராய் இருத்தல் வேண்டும்...//
அருமையான கருத்து :)
//ஒவ்வொரு தனிமனிதரும் செம்மைப்பட்டு போகையில் எமது போராட்ட வடிவங்கள் அடக்குமுறை செய்பவரையும், எதேச்சதிகாரம் செய்யும் மனிதர்ளையும், சுயநல அரசியல்வாதிகளையும் அதிரடியாய் ஆட்டம் காண வைக்கும் என்பதையும் உறுதியாக அறுதியிட்டு அறிவிக்கிறோம்.....
இன்று 35 பேர்களாய் வியாபித்து நிற்கும் இந்த சக்தி, லட்சங்களாய், கோடிகளாய்ப் பற்றிப் பரவும். ஆமாம்.....நெருப்பின் இயல்பு பற்றிப் பரவுவதுதானே...!/
கழுகு சட்டப்படி பேசுது அண்ணா
எம்மின் தவறுகள் உங்களால் திருத்தப்படுமெனில் நாங்கள் பாக்கியவான்கள்.//
:) Superb...!
உணர்வுபூர்வமான வரிகள்..!!
ஆம் உண்மை தான்... ஆனால் இந்த சூழ்நிலை எப்படி வந்தது? தொண்டர்களின் மாற்றுக் கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தலைமை கட்சிக்கு இருக்கிறதா? மாற்றுகருத்து சொன்னால் அவர்களை எதிர்கட்சிஆளாக ஆக்கி விடுவார்களே (பயம்).
ஆரம்பத்தில் கையில் பிடித்து வைத்த கொள்கையையே கடைசி வரை செயல்படுத்த்னும்ங்கற அவசியம் இல்லை...காலத்திற்கேற்ப அவர்கள் கொள்கை அமைய வேண்டும்.
சில சமயம் நம் கருத்து ஆளுங்கட்சியோடு ஒத்து போகும், சில சமயம் அதுவே எதிர்கட்சியோடு ஒத்து போகும். இந்த கருத்தை சொல்லும் போது வரும் முரண்பாடு என்னவென்றால் அப்ப அந்த கட்சிக்கு ஆதரவா பேசுனாங்க, இப்ப இந்த கட்சிக்கு ஆதரவா பேசுறாங்கன்னு தான் நினைப்பார்களே ஒழிய அந்த கருத்துக்கு தான் அவங்க ஆதரவு கொடுக்கிறார்கள்னு நினைக்கும் மனநிலை நம்மிடம் இல்லை.
=======
மகாத்மாகாந்தி காலத்து அரசியல் வேறு, நம்ப காலத்து அரசியல் வேறு...
அப்ப உண்மையில் அரசியல் வாதிகளிடம் கொள்கை இருந்தது...இப்ப எல்லா அரசியலிலும் கொள்ளை தான் இருக்கு. இதில் யார் சிறிய கொள்ளையர், யார் பெரிய கொள்ளையர் என்பதில் தான் போட்டியே, கொள்ளையை தடுக்கவே முடியாது என்ற நிலைக்கு போயாச்சு.