Skip to main content

கரைகிறேன்....!

















இந்தக் கணத்தை பூரணமாய் ரசிக்கும் ஒரு மனிதன் நான். முக்காலமும் தெரிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. வார்த்தை அலங்காரங்களைக் கொண்டு என்னை எடுத்தியம்ப நான் விரும்புவதில்லை எல்லா அலங்காரச் சொற்களையும் தயவு செய்து என் வீட்டு வெளியே உங்களின் காலணிகளைக் கழட்டிப் போடுவதைப் போல கழற்றி எரிந்து விட்டு என்னிடம் வாருங்கள்.

ஆசைகள் அற்றவன் நான் என்று சொல்லி உங்களின் ஆச்சர்யத்தை பரிசாய்ப் பெற எந்த விதமான முட்டாள்தனமான செயல்களிலும் நான் ஈடுபடப்போவதில்லை. நான் இருக்கிறேன்....இதுதான் எனது சத்தியம். எனது உணர்வுகள் பரிசுத்தமானவையாக இருக்க ஒவ்வொரு நொடியிலும் தானியம் பொறுக்கும் ஒரு சிட்டுக் குருவியாய் என் நினைவுகளை நானே அலசுகிறேன் அவ்வளவே....

பசிக்கும் போது புசிக்கிறேன். புலால் உண்ணேன் என்று ஒரு கருத்தினை நான் உங்களிடம் பகிரேன். இன்று புலால் உண்கிறேன். நாளை உண்ணாமலும் இருப்பேன். அப்படி உண்ணாமல் இருக்க புலால் மீதான ஆசையே வரக்கூடாது என்பதற்காக விரும்பியே உண்கிறேன். வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கையில் ஒரு பொருளின் மீது ஆசை வந்தால், அதை திருட்டுத் தனமாய் நான் அடக்கிக் கொண்டு உங்களிடம் உத்தமன் என்று பெயரெடுக்க முனைந்தால் அதில் என்ன நேர்மை இருக்கிறது.

நான் உங்களுக்காக வாழ வில்லை. எனக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று சொல்லும் போதே என்னை சுயநலவாதி என்று சொல்ல நீங்கள் கற்பிதம் கொண்டிருக்கும் விடயங்கள் தூண்டி விடும். என்னளவில் என் பசி, என் தாகம், என் தூக்கம், எனது சந்தோசம், எனது துக்கம் என்று நான் திருப்திப் படவேண்டும் முதலில்...நான் நிறைந்து வழியும் போதுதானே அதை மற்றவர்களுக்குப் பகிர முடியும்.

நான் அடிப்படையில் அன்புள்ளவனாக இருக்க வேண்டும். அன்பில் நானே என்னை நேசித்து நிரம்பி வழிந்தால்தானே...நான் அன்பைப் பகிர லாயக்கானவன். என்னளவில் நான் வெறுப்பாய் இருந்து கொன்டு உங்களுக்கு அன்பு பற்றிய பாடத்தை எடுக்க வந்தால் நான் எவ்வளவு பெரிய முட்டாள். அதனால் நான் என்னை முதலில் நேசிக்கிறேன். நான் விழிப்புடன் இல்லாத விடயங்களை அனுபவமில்லாமல் தத்து பித்து வென்று உங்களிடம் கூறி கூட்டம் சேர்த்தால் அதனால் என் நிம்மதியல்லவா குலைந்து விடும்.

வாழ்க்கையில் பொருளும், இடமும், அடிப்படை வசதிகளும் அவசியம். எனக்கான பொருளினைத் தேடிப் பிடித்து பெற்றுக் கொள்ள எல்லா வாய்ப்புக்களையும் சூழல் எனக்கு வழங்கி இருக்கிறது. அதை வைத்து நான் என்னை முன்னேற்றிக் கொள்வேன். அதனால்தான் நீங்கள் நிபந்தனைகள் வைத்து உங்களின் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு இடமாக கோவிலைப் பார்க்கிறீர்கள், உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கப் போகும் ஒருவராக இறைவனைப் பார்க்கிறீர்கள்.....

தெளிந்த வாழ்க்கை வாழ நாமே போதுமானவர்களாக இருக்கும் போது எப்படி உதித்தது இந்த இறைவன் என்ற ஒரு யுத்தி என்று யோசித்துப் பார்க்கையில் அங்கே மன வலுவில்லாதவர்களைப் பயிற்றுவிக்க ஒரு பெரும் தந்திரம் செய்யப்பட்டிருப்பதையும் அறிய முடிந்தது. யாம் யாமாய் இருக்கிறோம்...இது எமது இயங்கு விதி..! நீவீர் உமது உள்ளமையோடு இருக்கிறீரா? உமது சுயத்தோடு இருக்கிறீரா என்பது உமது சமத்து....

இருக்கும் வரையில் இருப்போம். இல்லாத அன்று இல்லாமல் போவோம் என்று எண்ணும் போது பெரும்பாலும் இருக்கும் வரையில் வாழ்க்கையை வாழத்தான் மனம் ஆசை கொள்கிறது. இங்கே ஆசையை ஒழி என்று கூறிய இடமும், அத்தனைக்கும் ஆசைப்படு என்று கூறிய இடமும் சட சடவென்று உடைந்து நொறுங்கத்தான் செய்கின்றன.

தேவையின் அடிப்படையில் ஆசைப்படு என்ற ஒற்றை வார்த்தையை யாம் எமக்கான வார்த்தையாய் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவை என்று கூறியவுடன் எதனுடைய தேவை என்று ஒரு கேள்வியும் வருகிறதா? என உடல் தேவையா? மனத்தேவையா? அல்லது சூழலின் தேவையா? என்று ஒரு கணம் யோசிக்கிறேன்...

பசி எதன் தேவை? கண் இமைத்தலும் சுவாசித்தலும் எதன் தேவை? தாகம் எதன் தேவை? தூக்கம் எதன் தேவை? தாகம் எதன் தேவை? மழை எதன் தேவை? காற்று எதன் தேவை? பள்ளம் நோக்கிய நீரின் ஓட்டம் எதன் தேவை? கனத்தால் மழை பெய்யும் மேகத்தின் செயல் எதன் தேவை? பூமியின் இயக்கம் எதன் தேவை? சுனாமியும் பூகம்பமும் எதன் தேவை?

இப்படியான தேவைகள் எல்லாம் எதன் பொருட்டு நிகழ்கின்றன? இயங்குவியலின் விதிகளில் பிரபஞ்சதின் இயக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் இவை எல்லாம் தேவை. இவை எல்லாம் ஒரு தனி நபருக்கான தேவைகள் அல்ல. அப்படித்தான் நமது செயல்களும் இருக்க வேண்டும். நீங்களும் நானும் ஒரு கூட்டு இயக்கத்தின் பகுதி....அந்த முழுமையின் இயக்கத்திற்கு தேவையானவை எல்லாமே பிரபஞ்சத் தேவைகள்.

கண் விழித்து ஒருவர் படித்துக் கொண்டிருக்கிறார்....அதே நேரத்தில் கண் விழிக்க முடியாமல் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறார், இன்னொருவர் செகன்ட் ஷோ சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்றினையும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளாக நீங்கள் பார்க்கலாம். ஆனால் இந்த மூன்றும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அவசியமாகிப் போகிறது.

மனித மனங்களின் இயக்கம் பிரபஞ்ச இயக்கத்திற்கு முரணாகப் போகும் போது அங்கே எதிரிடையான செயல்கள் நிகழ்கின்றன. கோபம், சண்டை, எரிச்சல், வன்முறை, அடக்குமுறை, ஆதிக்கம், அடுத்தவரை துன்புறுத்துதல், பெருமை பேசுதல், அடுத்த மனிதரை மதியாமை, பொய் சொல்லுதல், கோள் மூட்டுதல், புறம் பேசுதல், கொலை செய்தல், இவை எல்லாம் பிரபஞ்ச இயக்க விதிக்கு எதிராய் இருப்பதால்....

இவை பிரபஞ்சத்தின் இயக்கத்தை எதிர் திசையில் பயணிக்க வைக்க முயல்கின்றன. ஆனால் பிரபஞ்சத்தின் நேரியக்கம் இவற்றை எல்லாம் ஒழித்து அழித்து கரைத்து விட்டு நேரே தன் இயக்கத்தை தொடர்கிறது.

மேலே கூறியதின் சிறிய சாராம்சம்தான் " பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவான் " என்னும் விடயம். இன்ன பிற எதிர்மறையான மனிதர்களும் நிகழ்வுகளும் இயற்கையால் அழிக்கப்பட்டு அவை நேர் இயக்கமாய் மாற்றம் கொள்கின்றன. ஒரு மனிதன் புறம் கூறிக் கொண்டே இருந்தால் அவன் அப்படி புறம் கூறுவதாலேயே...துன்பங்களை விளைவுகளாகப் பெற்று அதை அனுபவித்து உணார்ந்து நேரிடையான நல்ல செயல்களைச் செய்யத் தொடங்குவான்.

இப்படியாக பிரபஞ்ச இயக்கமே எல்லாவற்றையும் கட்டியாள்கிறது. இடையறாதா சக்தி ஓட்டம் எங்கும் நிகழ்கிறது. அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதர்களும் மனிதர்களற்ற பொருள்களும் அணுக்களின் தொகுப்பே. ஒவ்வொரு அணுவிலும் இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. மையக் கருவினை சுற்றி, சுற்றி புரோட்டானும் எலக்ட்ரானும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இது நான், நீங்கள் அந்த கல், இந்த மண், தூசு துரும்பு, என்று எல்லாவற்றிலும் நடந்து கொண்டே இருக்கிறது.

அணுவின் உள்ளே அணுவானது பொருளாயும் பொருளற்றதாயும் இருக்கிறது. அப்படி பொருளாய் இருக்கும் நேர், எதிர் மின் அயனிகளைச் சுற்றி வரச் செய்ய வெற்றிடம் உதவுகிறது. அதாவது வெற்றிடமே இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த வெற்றிடமே வெட்டவெளி.

ஒரு அறைக்குள் நீங்களும் நானும் சுற்றி வரக் காரணம் எது...? அந்த அறையில் இருக்கும் வெற்றிடம். வெற்றிடத்தை எல்லாம் நிரப்பி விடுங்கள். உங்களால், என்னால் நகர முடியுமா? முடியாதுதானே? இயக்கத்திற்கு பொருள் இல்லாத வெற்றிடம் அவசியம். பிரபஞ்ச நகர்வில் இந்த வெற்றிடமே இயக்கத்தினை தீர்மானிக்கிறது.

எல்லாமான அது எதுவுமே இல்லாமல் இருப்பதோடு எல்லாமாகவும் இருந்து இயங்கச் செய்கிறது அப்படி இயங்க..எதுவே இல்லாமல் இருக்கும் வெற்றிடம் உதவுகிறது.

வெற்றிடம் - சிவம்

பொருள் அல்லது அணுக்கள் - சக்தி

சிவ சக்தி நடனமே நிகழ்கிறது என்ற் இதைத்தான் கூறுகிறார்கள். அர்த்த நாரீஸ்வரராய் வரைந்து காட்டியிருப்பது வெறும் ஆண் பெண் உடல்கள் அல்ல. இந்தப் பிரபஞ்சம் பொருளாயும் பொருளற்றதாயும் இருக்கிறது என்பதன் ஸ்தூல வெளிப்பாடு அது.

இப்படி என்னளவில் நானே என்னுள் மூழ்கி ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருகையில் அதை கிறுக்கவும் செய்து கொண்டிருக்கிறேன். இதை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை நான் எப்போதும் ஏற்படுத்திக் கொள்வது இல்லை. காரணம் விருப்பமுள்ள விழிகள் பதியட்டும். விருப்பமற்ற விழிகள் வெறெங்காவது செல்லட்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

எழுத்துக்கள் எல்லாம் புறத்திலிருந்து புறப்பட்டு எமது அகத்திலே ஏறும் போது அது அனுபவமாகிறது ஆனால் எமது அகத்திலிருந்து வெளிப்பட்டு புறத்திற்கு செல்லும் போது அந்த அனுபவம் அழிந்து போகிறது...!

அழிக்க அழிக்க...மெல்ல அமிழ்ந்து மொத்தமாய் நான் கரையத்தானே வேண்டும்..!


தேவா. S



Comments

கரைவது ஒரு சுகானுபவம். நல்லா கரைந்து இருக்கிறீர்கள, கூடவே படிப்பவர்களை கரையவும் வைத்திருக்கிறீர்கள்.
////உங்களின் காலணிகளைக் கழட்டிப் போடுவதைப் போல கழற்றி எரிந்து விட்டு என்னிடம் வாருங்கள்////
இயேசு இச்சே மன்னிக்கவும் தேவா அழைக்கிறார்...வாருங்கள் :))

////இன்று புலால் உண்கிறேன். நாளை உண்ணாமலும் இருப்பேன். அப்படி உண்ணாமல் இருக்க புலால் மீதான ஆசையே வரக்கூடாது என்பதற்காக விரும்பியே உண்கிறேன்.////

செட்டிநாடு சிக்கென் கடையை பார்த்தா உள்ளே பூந்துடுவீங்க...அப்படிதானே தேவா அண்ணே :)
////மனித மனங்களின் இயக்கம் பிரபஞ்ச இயக்கத்திற்கு முரணாகப் போகும் போது அங்கே எதிரிடையான செயல்கள் நிகழ்கின்றன. கோபம், சண்டை, எரிச்சல், வன்முறை, அடக்குமுறை, ஆதிக்கம், அடுத்தவரை துன்புறுத்துதல், பெருமை பேசுதல், அடுத்த மனிதரை மதியாமை, பொய் சொல்லுதல், கோள் மூட்டுதல், புறம் பேசுதல், கொலை செய்தல், இவை எல்லாம் பிரபஞ்ச இயக்க விதிக்கு எதிராய் இருப்பதால்....////

பிரபஞ்சத்திற்கு முரண் இயக்கம் உள்ளது போல தெரியவில்லை அண்ணே...

மனித மனம் தான் முரண் இயக்கம் என்று நெனைக்கிறது...

பிறப்பு நல்ல இயக்கம் என்று மனித மனம் நினைக்கிறது...அதனால் சாவு முரண் இயக்கம் போல மனித மனதிற்கு தோன்றுகிறது

பிரபஞ்சதுக்கு எல்லா இயக்கமும் தேவையாய் உள்ளது

தெளிவா சொல்ல போனா பிரபஞ்சம் என்பது "மங்காத்தா" படம் போல ..it's a game :)
////எல்லாமான அது எதுவுமே இல்லாமல் இருப்பதோடு எல்லாமாகவும் இருந்து இயங்கச் செய்கிறது அப்படி இயங்க..எதுவே இல்லாமல் இருக்கும் வெற்றிடம் உதவுகிறது.

வெற்றிடம் - சிவம்////


பிரம்ம வெளி :)

இப்போ எல்லாம் எனக்கு வெற்றிடம் அதிகமாகி வருது....

அட என் மண்டையில எல்லாமே காலியாகி விட்டது நு சொல்ல வந்தேன்...ஒரு மண்ணும் கிடையாது :))
///இப்படி என்னளவில் நானே என்னுள் மூழ்கி ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருகையில் அதை கிறுக்கவும் செய்து கொண்டிருக்கிறேன்.////

வரலாறு முக்கியம் அண்ணே :)
அன்பின் தேவா - பொறுமையாகப் படித்து - நீண்ண்ண்ண்டதொரு கருத்துப் பதிவு செய்தேன் - வாக்கும் அளித்தேன் - பதிவினைப் பதியும் போது Input error: Cookie value is null for FormRestoration எனக் கூறி விட்டதே என்ன செய்வேன் - மறுபடி எழுதுவதா ? ம்ம்ம்ம்ம் - பார்ப்போம்
அன்பின் தேவா - அருமை அருமை -இடுகை அருமை

பூசி மெழுகும் சொற்கள் விரும்பாத தேவா அவற்றை இடுகையில் எங்குமே பயனபடுத்தவில்லை. தன் நினைவுகளை தானே அலசிப் பார்ப்பது நல்ல செயல். ஆதம பரிசோதனையும் தத்துவ விளக்கங்களை அலசுவதும் நன்று.

புலால் உண்பதும் உண்ணாமல் இருப்பதும் தனது விருப்பம் - ஆகவே உண்ணாமல் இருக்கும் காலத்து நான் புலால் உண்ணுவதில்லை எனப் பொதுவில் கூறும் பழக்கம் இல்லை என்னும் கொள்கை நன்று.

அனைத்திற்கும் ஆசைப்பட்டு - அவை நிரம்பி வழியும் போது தான் மற்றவர்களிடம் பகிர இயலும் என்ற கொள்கையும் நன்று. அன்பு பண்பு ஆகிய அனைத்துமே நிரம்பி வழிய வேண்டும்.

இருக்கும் வரை இருப்போம் என எண்ணும் போதே வாழ்க்கையினை வாழ்ந்து பார்க்க மனம் ஆசைப்படும்.

பிரபஞ்சத்தின் இயக்க அடிப்படை விளக்கமும் நன்று.

சிவ சக்தி நடனம் - பிரபஞ்சத்தின் ஸ்தூல வெளிப்பாடு என விளக்கும் வரிகளும் அருமை.

அகமும் புறமும் எழுத்துகள் தொடர்ந்து பயணம் செய்வதால் அனுபவம் கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது. அவை எப்பொழுதுமே ஒரு வழிப் பாதையாகச் சென்று முற்றிலுமாக அழிவதில்லை தேவா.

அப்படியே அழியும் நிலை வந்தால் தான் கரையும் நிலை வரும். அது அவ்வளவு எளிதில் வராது.

நல்ல சிந்தனை - நல்ல சூழ்நிலை - நல்ல சுற்றுப்புறம் - மன அமைதி - இவை அனத்தும் ஒன்று கூடுகையில் எழுந்த எழுதப்பட்ட இடுகை இது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//மேலே கூறியதின் சிறிய சாராம்சம்தான் " பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவான் " என்னும் விடயம். //

...இத முதல்லயே சொல்லியிருந்தா.. இம்புட்டு நேரம் முழு கட்டுரையும் படிக்காம... பஸ் பிடிச்சு வெரசா ஊரு போயி சேர்ந்து இருப்பேன்ல :)

(சரி..சரி.. கோவப் படாதீங்க... :) )


//இயக்கத்திற்கு பொருள் இல்லாத வெற்றிடம் அவசியம். பிரபஞ்ச நகர்வில் இந்த வெற்றிடமே இயக்கத்தினை தீர்மானிக்கிறது.//

...ஒரு விதத்துல.. மனசுல எந்த வித கோபமோ, வெறுப்போ இல்லாத வெற்று உணர்வு இருந்தா நிம்மதியா இருக்க முடியும்ன்னு தோணுது.


//எல்லாமான அது எதுவுமே இல்லாமல் இருப்பதோடு எல்லாமாகவும் இருந்து இயங்கச் செய்கிறது அப்படி இயங்க..எதுவே இல்லாமல் இருக்கும் வெற்றிடம் உதவுகிறது.//

...ஆக எல்லாமான சக்தி, வெற்றிடமான சிவனில்.. எல்லாமுமாய் இயங்குகிறது. அழகான விவரிப்பு.


//காரணம் விருப்பமுள்ள விழிகள் பதியட்டும். //

...விரும்பி வாசித்து பதிந்தும் விட்டேன். :)

உங்கள் கரைதல் தொடரட்டும்..!
நான் நானாக இருப்பது தான் எவ்வளவு கடினம்!
rajamelaiyur said…
நல்ல பதிவு

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த