Pages

Sunday, November 13, 2011

ஹாய்....13.11.2011


நான் எழுத வந்து கொஞ்ச நாளாகி விட்டது என்று நினைக்கிறேன். எதை எழுதினாலும் யாரேனும் வாசிப்பார்கள் என்ற ஒரு அனுமானத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வியாபரமாய் தொடங்கிய இந்த எழுத்துப் பயணத்தின் ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கலாய் கருத்துரைகளும் திரட்டிகளின் வாக்குகளும் இருந்தன.

ஒரு கட்டத்தில் அது அலுத்துப் போகவே விரும்பும் வலைப்பூக்களுக்கு மட்டும் செல்வதும் அவ்வப்போது தாக்கத்தின் அடிப்படையில் மட்டும் அவ்வப்போது கருத்துக்கள் இடுதலும் என்று தொடர்ந்து கொண்டிருக்கையில் அது எனக்கு வரும் மறு மொய்களை பாதித்து மட்டறுக்கும் என்று எனக்குத் தெரியும்.

கட்டுரைகளையும் கருத்துக்களையும் சமகால ஊடகங்களில் வாசித்து விட்டு அதே செய்தியை பகிர எப்போதும் எனது தளத்தில் நான் வருவதில்லை. ஒரு வேளை அவற்றால் பெரும் தாக்கங்கள் ஏற்பட்டு அதன் பொருட்டு ஏதேனும் கிறுக்கி இருப்பேன். வாசகர்கள் மொய்க்கும் ஒரு படைப்பாளி அல்ல நான். வசீகரிக்க என்னிடம் வார்த்தைகளை தவிர வேறு ஒன்றும் கிடையாது. வாசகனின் ரசனைக்கு தீனி போட எப்போதும் எனது கட்டுரைகளோ அல்லது கதைகள் என்று நான் கிறுக்கும் நடை முறைகளோ முயன்றிருக்காது.

இந்த தேதி வரையில் ஏதோ கிறுக்குகிறேன், முகம் தெரியாத எத்தனையோ பேர் வந்து வாசிக்கிறார்கள். இந்த எத்தனையோ என்ற வார்த்தைக்குள்ளே மிக சொற்பங்கள் மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

உள்ளத்தின் கிடக்கையினை உடலுக்குள் இருந்து எழுத்தாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதனால் உடலோடு ஒட்டிக் கிடக்கும் அகங்காரமும் அவ்வப்போது எழுத்தோடு சேர்ந்து வந்து விடுவது உண்டு. அதற்கு பெயர் திமிர் என்றும் எனக்குத் தெரியும். தவிர்க்க அறிந்தும் தாவி வெளியே வருகையில் அது வெளியேறட்டும் என்று அனுமதித்து விட்டு எனது வெறுமைக்காக காத்து கிடப்பதை வழமையாக்கிக் கொண்டேன்.

எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணமும் நிர்ப்பந்தமும் அற்று எனது வெறுமையை எழுத முயலும் போது அதில் நானே கரைந்துதான் போய் விடுகிறேன். விடியலில் எழுந்து வானம் பார்ப்பது மிகவும் அலாதியானது... அதே சுகத்தை எழுத்தும் எனக்கு கொடுத்திருக்கிறது. அதிக ஆடம்பரம் இல்லாத சில எழுத்துக்களை வாசிக்கும் கொடுப்பினை எனக்கு சமீபத்தில் கிடைத்திருக்கிறது. கோணங்கி போன்றவர்களின் எழுத்து இன்னும் அதிகமாய் கற்றுக் கொடுக்கிறது.

பெரும்பாலும் ஆன்மீகத்தை அதன் மூலம் கிடைத்த ஒரு அனுபவத்தை நான் எழுத்தாக்க முயலுகையில் அது அதன் இருப்பு நிலையிலேயே வந்து விழுந்து வரிகளுக்குள் தங்கள் ஜீவனை பாயவிடுவதால் புரிதல் என்பது அந்த தளத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிப் போகிறது. ஆன்மத் தேடலில் இருப்பவர்களுக்குப் பளிச் என்று புரிந்தும், புறம் நோக்கிய பார்வைகள் மட்டுமே உள்ளவர்களுக்கு அது புரிபடாமலும் போய் விடுகிறது. அதனால்தான் எழுத்துக்கள் புரியவில்லை என்று பலர் சொன்ன போதும் நான் அதை மாற்றிக் கொள்ளவில்லை.

சத்தியங்கள் அதிர்வுகளாகி மூளையினுள் சென்று எண்ண வடிவம் கொண்டு, அவை எழுத்தாய் மாறி வரும் போது அதன் அழகிலேயே இருக்கட்டும். விளங்குமிடத்தில் விளங்கட்டும் விளங்காத இடத்தில் நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று விட்டு விட்டு பெரும்பாலும் நகர்ந்து விடுகிறேன். காரணம் எந்த ஒரு கட்டுரையையும் செய்ய அமரும் போது இதைத்தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு திட்டவட்டமும் இல்லாமல் எழுத ஆரம்பிப்பவன் நான்(இந்தக்கட்டுரையும் தான்....)

சில கருத்துக்கள் மனதிலே முடிச்சிட்டுக் கொள்ளும் போது கூட திட்டமிலின்றி எழுத்துக்களை கோர்க்க அமர்கிறேன். வார்த்தைகள் எனக்கு வார்த்தைகளைப் பெற்றுத் தருகின்றன.மிகைப்பட்ட வாழ்வியல் நிகழ்வுகளை எளிமையான வார்த்தைகளுக்குள் கோர்த்து விடலாம். ஆனால் ஆன்மீக விடயங்களை கொண்டு வருதல் என்பது வேகமான ஆற்று நீரில் எதிர் நீச்சல் அடிப்பது போன்று...விளங்க முடியாத ஆனால் உணர முடிந்த விசயத்தை எழுத்தாக்கி காட்ட வேண்டிய ஒரு சவால் எழுதுபவனுக்கு முன்னால் வந்து நின்று விடுகிறது...

இதை லாவகமாய் செய்வதில் எனது எழுத்துல குருநாதர் திரு. பாலாகுமாரன் அவர்கள் வல்லவர். அவரின் எழுத்துக்கள் கன கம்பீரமானதாய் போனதற்கு காரணம் சூட்சுமத்தை ஸ்தூலத்துக்குள் அவர் கொண்டு வந்து மெட்டிரியலாக்கி காட்டும் விதம் அலாதியாயிருப்பதுதான்.

இதையும் தாண்டி...சிலர் என்னிடம் கேள்வி கேட்பதும் உண்டு. ஒரு சாராருக்குத்தான் நீங்கள் எழுதுகிறீர்களா....? ஏன் உங்களால் சராசரி வாழ்க்கையின் நிகழ்வுகளை மையப்படுத்தி எளிமையாய் எழுத முடியவில்லை அல்லது கூடாது என்றும் கேட்டிருக்கிறார்கள்.

அனுபவங்களை செய்திகளாக்கி கொடுக்கையில் நான் என்ற ஒருவன் இருப்பது இல்லை. ஆனால் வரிக்கு வரி நான் இதை செய்தேன்..., எனக்கு இது பிடிக்கும்...,என்னை விமர்சித்தவர்களுக்கு நான் இதைப் பதிலாய்ச் சொன்னேன்..., நான் இங்கே சென்றேன் அங்கே சென்றேன்..., அவர் செய்வது சரி என்று நான் கூறுகிறேன்... அல்லது தவறு என்று நான் கூறுகிறேன்..., எனது அபிப்ராயம்..., எனக்கு வரும் வாசகர்கள் கடிதம், என்று சொல்ல வரும் போது எல்லாம் நீங்களே பாருங்கள் எத்தனை "நான்" கள் அணி வகுக்கின்றன என்று...

எழுத வந்ததை ஒரு பெரிய விசயமாய் நினைத்துக் கொண்டும், அதற்கு இன்னும் கவர்ச்சியை கூட்ட இந்த வலையுலகம் அல்லது வலைப்பதிவுகள் என்ற ஒரு சிறு உலகத்திற்குள் மட்டுப் படுத்திக் கொண்டு முரசு கொட்டி எனது ஈகோவை திருப்திப்படுத்த எனக்கு விருப்பமில்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் 2000 வாசகர்கள் வந்து இவர் அப்படி இவர் இப்படி என்று என்னை புகழத் தேவையில்லை, அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.

மாறாக தேவா என்ற ஒருவன் முற்றிலும் கரைந்து போக எழுத்துகளோடு சம்பாஷனை கொள்ளும் ஒரு நிலைக்கு ஒரு பத்து பேர்கள் இருந்தார்களானல் அது எனக்கு மகிழ்ச்சி தரும். அந்த மகிழ்ச்சி எனக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். திருப்தியால் மன அமைதி கிடைக்கும் அமைதியால் எண்ணங்களை சீராக கவனிக்க முடியும். எண்ணங்களை கவனிக்க, கவனிக்க என் அருகதை என்ன என்று எனக்கு பிடிபடும். மெளனமாய் ஒடுங்கிக் கொண்டு செம்மையாய் வாழ அது உதவும்...

இப்படி செம்மையாய் வாழ எனக்கு உதவி செய்பவர்கள்தான் இந்த வலைப்பூவினை வாசிக்கும் வாசகர்கள். அப்படி முத்துக்களை போன்ற வாசகர்களை இந்தத் தளம் பெற்று இருக்கிறது என்று எண்ணும் போது மீண்டும் ஒரு பேரமைதி என்னைச் சூழ்கிறது. புதிதாய் ஒருவர் இந்த தளத்தை வாசிக்க வந்தால் ஒன்று அவர் வழி தவறி வந்தவராய் இருப்பார் அல்லது ஏற்கனவே வாசித்து லயித்து இருப்பவர்கள் பகிர்ந்து அழைத்து வந்து வாசிக்கச் சொன்னவராய் இருப்பார்....

ஆமாம்...இந்த தளம் ரிப்பீட்டட் வாசகர்களால் சூழப்பட்டது. முகம் அறியாமல் எழுத்தால் அறிமுகம் செய்து கொள்ளப்பட்டது...! இப்படி நிரம்பிக் கிடக்கும் அன்பான உறவுகளின் எதிர்பார்ப்பும், வாசிக்கும் ஆர்வமும் மட்டுமே மீண்டும் மீண்டும் என்னை எழுதத் தூண்டுகிறது. நான் எழுதுவதற்கு என் புறச்சூழல் எள் அளவும் உதவாது என்று எனக்குத் தெரியும்.

துபாய் மட்டுமில்லை இன்னும் இருக்கும் எல்லா இயந்திர நகரங்களின் கான்கிரீட் பெட்ரோல் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்... ! இங்கே தாக்கங்கள் கொடுக்கும் சம்பவங்கள் நிகழ்வதில்லை.. சம காலமோ ஓடு ஓடு என்று துரத்தி துரத்தி ஹைப்பர் டென்சனையும், பி.பிஐயும் எகிர வைக்கிறது. எனக்கும் வைத்திருக்கிறது....

இப்படியான சூழலில் இளைப்பாறும் ஒரு நிழல் படர்ந்த மரமாய் எனக்கு இந்த தளம் உதவுதற்கும், எனது தாகம் தணிய நீராயும், ஆழமாய் சுவாசிக்க காற்றாயும் இந்த தளத்தை தொடர்ச்சியாய் வாசிக்கும் உறவுகளும் இருப்பது எனக்கு இறைவன் அளித்த ஆசிர்வாதம் என்றுதான் சொல்வேன்...!

எழுத்து என்பது படிப்பினை..! எழுத்து என்பது சந்தோசம்....! எழுத்து என்பது பகிர்வு...! எழுத்து என்பது தொடர்பு கொள்ளல்......

என்ற பாடத்தை மெளனமாய் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த தளத்தின் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, தொடர்ந்து எழுதும் எழுத்துகளில் ஜீவனாய் இருப்பது நீங்கள்தான் என்று கூறி ...கட்டுரை முடிச்சுக்கலாம்னு நினைக்கிறேன்...!

பாருங்க நம்மள கேக்காமலேயே இந்த பொது புத்தி ஒரு மேடைப் பேச்சை முடிக்கிற மாதிரி கட்டுரையையும் முடிச்சு வச்சுருச்சு.....கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க...!

அத்தனை உறவுக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் ப்ரியங்களும்....!

தேவா. S

Photo Courtesy: Ramya Kumar4 comments:

Rathnavel said...

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

வெளங்காதவன் said...

//சத்தியங்கள் அதிர்வுகளாகி மூளையினுள் சென்று எண்ண வடிவம் கொண்டு, அவை எழுத்தாய் மாறி வரும் போது அதன் அழகிலேயே இருக்கட்டும்///

:-)

கிருஷ்ணா said...

:)

சே.குமார் said...

தொடர்ந்து எழுதுங்கள்...

நிறைய எழுதுங்கள்...

வாழ்த்துக்கள்.