Pages

Tuesday, November 1, 2011

சாட்சி...!


மெளனத்தின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் சிற்றோடையாய் சம கால நினைவுகள் புத்தியில் படுத்துக் கிடக்கின்றன. வார்த்தைகள், நேசங்கள், பாசங்கள், உறவுகள் என்று எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு எதார்த்தம் என்ற வார்த்தையை அனுபவமாக எதார்த்தம் என்றால் என்ன என்று சமகால வாழ்க்கை காட்ட பிரமித்துப் போய் நிற்கிறேன்.

ஆமாம்...! நான் ஒரு நீண்ட நெடிய பயணத்திற்கு சொந்தக்காரன். எதை எதையோ என் அடையாளமாகக் கொள்வதும், பிறகு ஒரு நாள் காலம் அவற்றை அழித்து விட்டு செல்வதும் வழமையாகிப் போய் விட்டது. பற்று அறுக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன், ஏகாந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறேன்.

எதார்த்தத்தை தாண்டி என் மனம் எங்கோ எப்போதும் லயித்துக் கிடக்கும் அதே நேரத்தில் மிகப்பெரிய பயத்தையும் தவறாமல் கொண்டிருப்பதையும் கவனித்து இருக்கிறேன்.

வாழ்க்கையை வாழப் பிடிப்பது வேறு....வாழ்க்கையை விட்டு விலக முடியாமல், இதை நான் விட்டு விடக்கூடாது என்று எண்ணும் பிடிப்பு நிலையோடு இருப்பது வேறு. பல்வேறு சூழல்களில் எனக்கு இறக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் திடமாக எழ, இறந்தால் என்ன ஆவோம்...? என்ற எண்ணம் அதைவிட வலுவாய் பயமுறுத்த, 8 மணிக்கே படுத்து விடும் என் வீட்டின் இரவு பத்து மணி நடு நிசியில் போர்வைக்குள் கண்களைத் திறந்து கொண்டு இருட்டினை வெறித்திருக்கிறேன்.

இறந்து விட்டால் விளையாட முடியாது, சாப்பிட முடியாது, அம்மா, அப்பா, தம்பி, அக்கா, மாமா, அத்தை, என்று எல்லா உறவுகளையும் நான் பார்க்க முடியாது என்ற பயத்தில் கண்களை இமைகள் மூடவே பயந்து, பயந்து...

நினைவுகள் வலுக்கட்டாயமாய் கொண்டு வந்து போடும் கனவுகளில் நான் இறந்து போயிருக்கிறேன். கதைகளும், திரைப்படங்களும் கொடுத்திருந்த கற்பனா சக்திகளின் உதவியோடு நான் என் குடும்பத்தாரோடு இருந்தும் அவர்கள் என்னை பார்க்கவும், என் குரலை கேட்கவும் முடியாமல் இருக்க நான் அம்மா, அப்பா என்று கதறியிருக்கிறேன். எனது கதறலின் உச்சத்தில் அலறி அடித்து விழித்தெழுந்து...இறுக்க அம்மாவை அணைத்து உறங்கியும் இருக்கிறேன்.

அம்மாவின் கத கதப்பில் என்னை ஆட்கொண்ட உறக்கத்தினை கொடுத்த காலங்களும் மறைந்து போகக்கூடிய மாயா நாட்கள்தான் என்ற எண்ணங்களற்று நிதர்சனமாய் அதை எடுத்துக் கொண்டு உறங்கியிருக்கிறேன். மரணம் என்ற ஒன்றின் பயம் இல்லா மனிதர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

மரணம் என்பது நிசப்தம் என்று இப்போது மெல்ல என் மனதிற்கு படுகிறது

அக்காவைப் பார்க்க சிங்கப்பூருக்கு சென்றிருந்த அந்த 2001ல், என்னை விசா மாற்றுவதற்காக ஜோகூரில் வந்து அத்தான் விட்டு விட்டு சென்றார். ஒரு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் சீங்கப்பூருக்குள் செல்லும் போது அவர்கள் மறுபடியும் ஒரு பதினான்கு நாட்கள் விசா தருவார்கள் என்று கூறி என்னை ஒரு ஹோட்டலில் தங்க வைத்து விட்டு அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.

பேச்சு துணைக்கு கூட யாருமற்ற அந்த தனிமையில் என்னோடு இருந்தது சு. நல்ல பெருமாள் எழுதிய பிரம்ம ரகசியம் என்னும் ஒரு புத்தகம். ஒவ்வொர் சமய வழிமுறைகளைப் பற்றி அவற்ற நிறுவியவர்களிடம் நசிகேதன் கேள்வியாய் கேட்டு பதிலைப் பெறுவது போன்று எழுதியிருப்பார். தத்துவங்களும், தத்துவங்களின் மூலமும் என்னவென்றறியா ஒரு மனோநிலையில் அதை வாசித்த போது, அது இன்னும் என் தனிமையின் அடர்த்தியை அதிகமாக்கிதான் போட்டது....!

பேச்சு துணைக்கு யாருமற்று இருந்த அந்த சூழலை பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு மனம் வேடிக்கை பார்த்து ஏற்படுத்திய ஒரு வித்தியாசமான உணர்வினை விளங்கிக் கொள்ள முடியாமல் மனம் அதை பயம் என்று எனக்கு அடையாளப்படுத்தியது. மூன்று வேளை உண்டு, மூன்று பொழுதுகளை கடந்து வெறுமனே ஒரு அறைக்குள் அடைப்பட்டு கிடப்பதும், எந்த ஒரு பந்தமுமின்றி ஜொகூர் மார்க்கெட்டுக்குள்ளே ஒரு பார்வையாளனாய் சுற்றி வந்த போதும் நான் தனிதான்.

மரணம் இப்படித்தான் இருக்குமோ? என்ற ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது அதை சரி செய்ய பக்கத்தில் இருந்த ஒரு மாரியம்மன் (மாரியம்மன் என்றுதான் நினைக்கிறேன்) கோவிலுக்கு செல்வதை மாலை வேளைகளில் பழக்கமாக்கிக் கொன்டேன்.

3 நாளில் திரும்பிச் செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மூன்றாம் நாள் அத்தான் வந்து இன்னும் ஒரு நான்கு நாள் இருந்து விட்டு வா, ஒரு வாரமாவது மொத்தமாய் இருந்து விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு செல்லும் போது மறுபடியும் சோசியல் விசிட் அனுமதி கொடுப்பார்கள், இல்லையெனில் விசா கொடுக்காமல் மறுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி விட்டுச் சென்றார்.

ஜொகூரில் இருந்த அத்தானின் நண்பர்களை அறிமுகப்படுத்தியும் தேவையென்றால் அவர்களை அழைக்கும் படியும் கூறிவிட்டு எனக்கு தெம்பாக இருக்கவேண்டும் என்று சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்கள் முழுதும் மலேசிய ரிங்கிட்களை திணித்து விட்டு சென்றார். பணம் இருந்தது ஆனால் பயமுமிருந்தது. இந்த மெளனத்தை நான் நிராகரிக்க கூடாது, இந்த அமைதி எனக்கு திணிக்கப்பட்டது இது எப்படி இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

அந்த வெறுமையை இப்போதும் என்னால் உணர முடியும். அது எனக்கு பிடிக்காததாக இருந்தாலும் காலத்தின் போக்கில் அதுதான் உண்மை என்று இப்போது அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. வாழ்க்கை ஆர்ப்பாட்டமாகத்தான் ஆரம்பிக்கிறது எல்லோருக்கும். இப்படியான ஆரம்பத்தில் குதூகலமும், நண்பர்களும், உறவுகளும் என்று செழிப்புடன் எல்லாம் நகர்வதைப் போலத் தோன்றினாலும்...

பொருளாதாய உலகம் மனித மனங்களுக்குள் புகுந்து பேயாட்டம் போடும் பொழுது மெல்ல மெல்ல உறவுகள், நட்புகள் எல்லாவற்றின் நடுவிலும் சைத்தானாய் கோரப்பல்லினைக் காட்டிக் இளித்துக் கொண்டு பணம் நிற்கும். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் திருப்புமுனையாக அமையுமிடம் அவன் வாழ்க்கையை தொடங்குமிடம். வாழ்க்கை தொடங்குமிடம் அல்லது லெளகீகத்திம் மிக முக்கிய கட்டம் திருமணம். திருமணம் முடிந்த பின்புதான் உறவுகளின், நட்புகளின் பலம் என்ன என்று காலம் மெதுவாய் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கிறது.

ஏதேதோ சூழல்கள், துரத்தும் வாழ்க்கை என்ற பல பரிமாண மாற்றங்களில் நாம் நிறைய பெற்றுக் கொண்டிருப்பதைப் போல தோன்றும். இதுதான் மாயா... ஆனால் காலம் மெதுவாய் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்கிக் கொண்டிருக்கும். பெறுகிறேன் பேர்வழி என்று எல்லோரும் திரும்ப கொடுத்துக் கொண்டிருப்பார்கள்,

சந்தோசத்தின் எல்லை துக்கம். அடர்த்தியான துக்கம் சந்தோசம் என்ற இந்த இரண்டு முனைகளுக்கும் நடுவே அங்கேயும் இங்கேயும் விட்டில் பூச்சி விளக்கினைப் பிடிக்க அலைவது போல நகரும் மனித வாழ்க்கையை ஒரு கணம் நிறுத்திப் பார்த்து எல்லா செயல்களுக்கும் பின்னால், ஏன் இதைச் செய்கிறோம்...? என்று ஒரு கேள்வியைப் பொறுத்திப் பார்த்தால் ஒன்றுமில்லை என்ற பதில் கிடைக்கும்.

ஆமாம் ஒன்றுமில்லாததற்குத்தான் ஓட்டம். ஒன்றும் இல்லாததற்குத்தான் ஆட்டம். அதற்குத்தான் சண்டை. பொருள் ஈட்ட வேண்டும், திறமைகளால் நான் சிறந்தவன் என்று காட்டிக் கொள்ள வேண்டும், குறைந்த பட்சம் எல்லோரும் என்னை கவனிக்க வேண்டும் என்று இடைவிடாமல் மனித மனம் நினைக்கிறது.

அதற்காகவே பல நடிப்புக்களை நடிக்கிறது. பல் இளிக்கிறது, படிப்பு என்கிறது, அறிவு என்கிறது, சேவை என்கிறது, தலைவன் என்கிறது, தொண்டன் என்கிறது, பக்தி என்கிறது கடவுள் என்கிறது......அழகு என்கிறது, அறிவு என்கிறது, தத்துவம் சித்தாந்தம் வீரன் என்றெல்லாம் பல வேசங்களைப் போடுகிறது....

இறுதியில் கடை வாயில் எச்சில் ஒழுக...நாக்கு இழுத்துக் கொள்ள, தொண்ட வரள...கண்கள் சொருகி....வாழவேண்டும் என்ற ஆசையோடு தெரு நாயைப் போல செத்துப் போகிறது. இதுதான் வாழ்க்கை.

தனிமையாய் யாரும் பேச்சு துணையின்றி வேறு ஒரு நாட்டில் வெறுமனே சுத்தி வந்த போது உடலாய் சுற்றி வந்தேன். உடலின் உபாதைகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன், மனம் விவரித்துப் பார்க்க ஒன்றுமின்றி ஓரிரு நாளில் சுருண்டு போய் கிடந்தது. காணும் புறக்காட்சிகளை பதிவு செய்த விழிகள் புத்திக்கு அனுப்பியது வெறும் பிம்பங்களை மட்டுமே....!

காட்சிகளை உள்வாங்கிக் கொண்ட மூளை அதை காட்சிகளாகவே புத்தியில் வைத்திருந்தது விவரிப்பு தேவைப்படவில்லை. விவரித்து பார்த்து அதில் கற்பனைகள் கொண்டு மமதையோடு அதைப் பகிர யாரும் அருகில் இல்லையே என்பது கூட ஒரு ஆழ் மன சிந்தனையாயிருக்கலாம்.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கூற விரும்புகிறேன். மனம் இயங்கும் வேகம் எப்போது தெரியுமா அதிகரிக்கும்....? நம்மைச் சுற்றி கூட்டம் இருக்கும் போது, ஆமாம். நாம் சொல்வதை கேட்க நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் போதும் இந்த மனதிற்கு, அது போடும் குத்தாட்டமே தனிதான். தன்னை தன்னிகரில்லாத தலைவனாய், தலைவியாய் கற்பனை செய்து கொள்ளும் இந்த மனம் ஒவ்வொரு மனிதனையும் தான் தான் சிறப்பானாவன், தான் மட்டுமே எல்லாம் தெரிந்தவன் என்றும் தப்பாமல் எண்ண வைக்கிறது.

சொல்லவும், கேட்கவும் யாருமில்லையெனில் மனதிற்கு அங்கே வேலை கிடையாது. பட்டினி கிடக்கும் நாயைப் போல சுருண்டு கிடக்கும். இப்படி சுருண்டு கிடக்கும் போது ஆடாமல் அசையாமல் எரியும் சுடர் விளக்காய் நமது உள்ளுணர்வு எனப்படும் ஆன்மா மிளிரத் தொடங்கும். ஆன்மா கற்பனை செய்யாது. ஆன்மா கூச்சல் போடாது. ஆன்மா நான் என்ற அகங்காரம் கொள்ளாது. ஆன்மா ஒரு சாட்சியாய் நிற்கும். ஆன்மா ஒரு கண்ணாடியாய் வாங்கியதைப் பிரதிபலிக்கும். ஆன்மா அனுபவத்தை மட்டும் மென்று அதன் சாற்றினை குடித்துக் கொள்ளும்.

அந்த ஜொகூரின் 10 நாள் தனிமையில் நான் சாட்சியாயிருந்தேன்....! சலனமில்லாமல் இருந்தேன். சலனமற்று இருக்கையில் எது நடக்கிறதோ அதன் இயல்பில் நகரத்தான் வேண்டும் என்ற ஒரு பேருண்மையை என்னால் உணர முடிந்தது. விடியலும், அந்திப் பொழுதுகளும் வந்து வந்து செல்லும் ஒரு பொது நிகழ்வாய் இருந்தது.

காலம் நின்று போயிருந்தது. செயல்களை அதிகப்படுத்துகையில் காலம் ஓடத்தொடங்கும். லெளகீகத்தில் காலமே பேரரசன். தானே தன்னையறியும் முழுமையான நிலையில் காலம் என்ற ஒன்றே கிடையாது. காலையும் மாலையும் வெறும் பொழுதுகளாய் வந்து செல்லும் கற்பனா நிகழ்வுகள். நிஜத்தில் காலையுமில்லை, மாலையுமில்லை.

மீண்டும் கூறுகிறேன். மரணம் என்பது நிசப்தம். மனதினை நிறுத்தியவனுக்கு அது ஓய்வு. ஆளுமில்லை, பேருமில்லை, பொழுதுமில்லை, கீழுமில்லை, மேலுமில்லை. அது ஒரு திருப்தியான நிலை. கருவி போன்று மனதினை லெளகீகத்தில் உபயோகம் செய்து விட்டு, சாப்பிட்டவுடன் எறிந்து விடும் எச்சில் இலையைப் போல வீசி விடவேண்டு. இலையை வைத்து சாப்பிட்டோம்.....உணவு உண்ட நிறைவு போதுமே நமக்கு எச்சில் இலை எதற்கு....தூக்கி கடாசி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க செல்வது போல நகர்ந்து விட வேண்டும். இந்த வித்தையை உணர காலமே மனிதர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்.

எழுத்துக்களாய் என் அனுபவத்தை பகிர்தலிலேயே நான் எழுதியதின் சாரம் எல்லோருக்கும் சென்று சேர்ந்து விட வேண்டும் என்ற பிரயாசை என்னிடம் இல்லை. சாட்சியாய் நிற்கும் ஆன்மா எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எழுதுபவனுக்கும் எழுத்தை வாசிப்பவனுக்கும் இதனால் பலன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்....

ஆனால் அறிந்ததை அனுபவமாக்கி ஒரு தரம் எழுதிப் பார்த்த திருப்தியில்....அந்த அனுபவம் என்னும் எச்சில் இலையை எறிந்து விட்டு நகரும் செயலாய் இந்தக் கட்டுரையையும் கடந்து செல்கிறேன்...

காலத்தின் வழி நடத்தலில்......காலமற்ற பெருவெளியை என் பெருந்துணையாய்க் கொண்டு.....மேலும் நகர்கிறேன்...!


ஓம் நமசிவாய!


தேவா. S

2 comments:

சே.குமார் said...

//மரணம் என்பது நிசப்தம். மனதினை நிறுத்தியவனுக்கு அது ஓய்வு. ஆளுமில்லை, பேருமில்லை, பொழுதுமில்லை, கீழுமில்லை, மேலுமில்லை. அது ஒரு திருப்தியான நிலை.//

அருமையாக உங்கள் எழுத்தில் சொல்லியிருக்கிறீர்கள். வாசிக்க வாசிக்க மனசுக்குள் (சு)வாசம் செய்யும் எழுத்து.... பகிர்வுக்கு நன்றி அண்ணா.

தங்கம்பழனி said...

உங்கள் எண்ண ஓட்டங்களை அப்படியே எழுத்தில்தந்திருக்கிறீர்கள். படிக்க , படிக்க பரவசம் அடைந்தேன்.. அத்தனை யதார்த்தமான , எளிய வார்த்தைகள்.. ரசித்துப் படித்தேன்.. பாராட்டுகள்.. மீண்டும் வருவேன்..!!