Skip to main content

தேடல்.....22.12.2011!

























என் நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடக்கும் ஒற்றை வார்த்தையும் உணர்வாயிருக்கையில் ஓராயிரம் தரம் மூளை உச்சரிக்கும் அந்த மந்திரமும் ஆதியில் சப்தமான உச்சரிப்புகளாய் எம்மிடம் இருந்து, இருந்து உச்சரிப்புக்களை கடந்து மெளனமான மனதின் உச்சரிப்புக்களாக சப்தங்களை உடலுக்குள் இறைத்துக் கொண்டேதான் இருந்தது....ஒரு கட்டத்தில் அதுவும் நின்று போய் சுவாத்தினூடே பரவி மூளைகளுக்குள் எண்ணங்களைப் பரப்பும் பிராணனே அதுவாகிப் போனது.....

பிராணனே அதுவாகிப் போனதால் உடலின் தாது உப்புக்களும் அதுவாகிப் போய் உடலின் வேண்டிய, வேண்டாத எல்லாமாய் நிறைந்து போனபோது தனித்தே ஒரு மந்திரமும் இல்லை தனித்த ஒரு இறையும் இல்லை என்று எனக்கு விளங்க வைத்தது அது....வார்த்தைகளைக் கடந்து இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கிடக்கிறது என்பதையும் உணர வைத்து,

அதுவே அன்பாயும், இன்பமாயும், துன்பமாயும், பார்க்கத் தகுந்ததாயும், பார்க்க விரும்பாததாயும், வெற்றியாயும், தோல்வியாயும், நண்பனாகவும், எதிரியாகவும், சொல்லில் கொண்டு வரக்கூடிய அத்தனையாயும், சொல்லவொண்ணா பொருட்களாயும், பொருண்மை நிறைந்ததாகவும், சூட்சும அதிர்வுகளாகவும் விரவிப் பரவி கிடக்கிறது....என்று உணர்ந்த தருணத்தில்....

தடுமாறித் திகைக்கையில் உருவமற்ற ஒரு பேர்வாழ்வின் இடையே நகரும் அணுத்துகள் கூட்ட இயக்கத்தின் தோற்றமாய் மானுட வாழ்க்கையும், அந்த மானுடத்தின் அனுபவச்சேரல்கள் கூடி ஜனித்த உருவற்ற ஆனால் உருவத்தை ஆட்டிவிக்கிற மனமும் தோன்றி, மனதைப் பிடித்துக் கொண்டு ஓராயிரம் கற்பிதங்களையும், கற்பிதங்களின் இடைக்கால சொரூபங்களை நம்பி அந்த இயக்கத்தில் நகரும் இடைக்கால எல்லா நிகழ்வுகளையும் நாம் உணர முடிந்தது....

தேடலைத் தொடங்கிய கணம் எதுவென்று யோசித்து, யோசித்து மூளை மடிப்புக்களில் பொதிந்து கிடந்த அந்த பேருண்மையை நோக்கி உள்ளுணர்வாய் பயணித்த போது உண்மையில் தேடித் தேடியே நான் களைத்தேன். நேற்றா, கடந்த மாதமா? கடந்த வருடமா? 20 வயதா? 10 வயதா பால்யப் பருவமா? இல்லை பெற்றவளின் கருப்பையினுள் உணர்வாய் உந்திக் கொண்டு கண் மூடி மோன நிலையில் கால் உந்தி நீர்க் குடத்துக்குள் மிதந்து திரிந்த காலங்களா?

கேள்வியின் விடைகளை தெரிந்து கொள்ள கேள்வியை நிறுத்த வேண்டும் என்றறியாது பயணித்துப், பயணித்து கேள்விகள் அறுந்து வெறுமனே கிடந்த பொழுதில் பிறந்தது அந்த தேடல் தொடங்கிய இடம். ஒன்றுமில்லாமல் இருண்டு கிடந்து, ஏதோ ஒரு கணத்தில் வெடித்துச் சிதறி இந்த அண்டம் வெளிப்பட்டு பரந்து விரிந்ததே அப்போது தொடங்கியது எமது தேடல் என்று...., அது எதை ஒத்தது என்றால்...

தாயின் கருவறையில் கருவாய் கெட்டிப்பட்டு பிண்டமாய் இருந்து ஆனால் இல்லாமல் இருந்து, வளர்ந்து மெல்ல மெல்ல உணர்வாய் நின்று உணர்வுகள் கூடக் கூட கால்கள் உதைத்து, கைகள் ஆட்டி, ஒரு கணத்தில் நான் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு அழுத்தமாக, அந்த அழுத்தத்தை கருப்பைக்கு கொடுத்து கருப்பை வாய் பிளந்து உள்ளிருக்கும் நீர் அகன்று தாயின் கர்ப்பம் விட்டு வெளிப்பட்டு இம்மண்ணில் வந்து விழுந்து வீறிட்டு அழுது கத்தி கை கால்கள் உதைத்து கர்ண கொடூரமாய் வெளிப்பட்டோமே அதை ஒத்தது....

தாய், தந்தையருள் சத்தாய் இருந்து சத்திலிருந்து வித்தாய் மாறி, வித்திலிருந்து வெளிப்பட்டு யாம் வெடித்து விழுந்தது சத்தியமெனில் மூல உண்மையான அண்டத்திலிருந்து இந்தப் பெருவெளி வெடித்து எல்லாமாய் விரவியிருப்பதும் சத்தியமே...! அது சத்தியமெனில் நான் என் கண் முன்னால் காணும் யாவும், நானும் மூல உண்மையில் ஒன்றாய் இருந்ததும் சத்தியமே.....

யாவும் ஒன்றென அறிந்த பின் அவர் பாராட்டும் பேதங்களையும், நடை முறை வாழ்க்கை செயல்பாட்டு தன்மைக்கு விளங்கியோர் கூறிய கருத்துக்கள் எல்லாம் மதமாகிப் போன முரட்டு நிகழ்வுகளும், மதங்களின் அடர்த்தியால் நம்பிக்கைகளும், நம்பிக்கைகளால் நான் வேறு... நீ வேறு என்ற நிலையில், இருந்தது ஒன்றுதான், இருப்பதும் ஒன்றுதான், இருக்கப் போவதும் ஒன்றுதான் என்ற சத்தியம் மறந்து போனதும் காலத்தின் போக்கில் நடந்தேறியே விட்டது.

பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும், அளவுக்கேற்பவும்தான் அர்த்தங்கள் விளங்கும், வாங்கும் தன்மைக்கேற்ப சத்தியத்தின் பொருள் உணரப்படும் என்பதால் மாறுதல் அல்லது மாற்றுதல் என்பதும் ஆன்மீக ரீதியாக சாத்தியமற்றதாகிறது. ஒரு மனிதனின் அனுபவம் என்பது ஒரு சமகாலத்தில் ஏற்படுவது மட்டுமே என்றால் ஒரு ஆன்மாவின் அனுபவம் என்பது ஜென்மங்களைக் கடந்தது என்பதை அறிக.

அந்த ஆன்மா அதன் இயல்பிலேயே நகர்ந்து, நகர்ந்து அனுபவக் கோர்வைகளை மட்டுமே தாங்கி ஒரு உடலாய் ஏற்படும் அனுபவத்தின் விளைவை வேறு விளைவாய் நகர்த்திக் கொண்டேதான் செல்கிறது. இது ஒரு இயங்கு தன்மை.. ஆன்மா என்ற வார்த்தை கொஞ்சம் மதம் சம்பந்தமான உணர்வுகளை உங்களுக்குள் கிளறி விடச் செய்யும் என்று எனக்குத் தெரியும்....பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்...ஆன்மா என்பதை சக்தி என்று கொள்ளுங்கள்...

சக்தி இடைவிடாமல் ஆடிக் கொண்டும் இயங்கிக் கொண்டுமிருக்கிறது. அந்த சக்தி ஒரு அனுபவத்தால் ஏற்படும் விளைவினை காட்டவும்தானே செய்யும். நியூட்டனும், இராபர்ட் ஹூக்கும் ஒரு கணம் உங்கள் புத்திகளுக்குள் கூட வந்து செல்லலாம்....! வரட்டும். உள்ளது அழியாது... இல்லாதது தோன்றாது. அவர்களும் பேரண்டத்தின் பகுதிகளே...பேரண்டத்தின் உண்மைகள் எல்லோருக்குள்ளும் உள்ளது.... ஆனால்...

தேடித் தேடி ஓடும் போதும், ஆடிப்பாடி அலையும் போதும் அது தெரிவதில்லை. பெரும்பாலான உண்மைகளும், விஞ்ஞான ரீதியான கண்டு பிடிப்புகளும் நிகழ்ந்தேறியிருப்பது மனிதனின் மனம் ஓய்வு நிலையில் இருக்கும் போதுதான். ஆர்கிமிடிஸ் எப்போது மிதவை விதியை கண்டறிந்தார் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை...

மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய அந்த ஒற்றை வார்த்தைக்கு வருகிறேன்...

உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஒற்றை வார்த்தை, அந்த ஒன்றிலிருந்து எல்லாமே ஆனதை ஒவ்வொரு நொடியும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. உடல் கடந்த உணர்வானவன் என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

ஐம்புலன் என்னும் கட்டுக்களை உடைத்தெறிந்து ஒரு உத்வேகத்துடன் நகர அது உதவுகிறது. பூமியைச் சுற்றி பரவிக் கிடக்கும் காந்தக் அதிர்வுகளை அது தகர்த்தெறிகிறது, சூரியனின் ஆளுமை, மற்றும் பூமியைச் சுற்றிச் சுழலும் கிரகங்களிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் அதன் பலன்களை எல்லாம் நொறுக்கிப் போடுகிறது...

உடலாலும், மனதாலும் வாழ்க்கை நடத்துபவர்கள் எல்லாம் கட்டங்களுக்குள் வாழ்க்கையை நகர்த்திப் பார்த்து, கிராகாச்சார பலன்களையும், அவற்றின் நகர்வுகள் எனப்படும் பெயர்ச்சி பலன்களையும் பார்த்து அந்தக் கோள்களின் ஆதிக்கத்தால் மனம் கைப்பற்றப்பட்டு அந்த மனதின் குழப்பமான சிந்தனைகளால் புத்தி சாதுர்யம் அறுபட்டு, செயல்களில் தெளிவின்மை ஏற்பட்டு.....தெளிவில்லாத செயல்களால் மோசமான விளைவுகளைப் பெற்று, எல்லாம் என் நேரம், என் காலம், என் ஜாதகம் கிரகப்பலன் என்று நகர்ந்து கொண்டிருக்கையில்....

சிவம்...........(யாதுமானது)

என்ற மூன்றெழுத்து மூல உண்மையை மூளையில் இருத்தி அதையே சுவாசமாக்கி உடல் கடந்த அண்டப் பெருவெளியை ஆளும் எல்லாமான சிவமாய் யாம் நின்று எல்லா கட்டுக்களையும் பொடிப்பொடியாக்கி போடத்தான் செய்கிறோம்...

உடல் கடந்தவன், மனம் கடந்தவன், எல்லாமே தானாய் உணர்ந்தவன், அன்பே வடிவானவன், எப்போதும் நிலையாமையை புத்திக்குள் தேக்கி வைத்து எல்லா காரியங்களிலும் அடுத்தவர் நலனையும் நினைப்பவன், கட்டிடத்துக்குள் கடவுள் தேடா பராக்கிரமசாலி, ஏதோ ஒரு பொருளை மட்டும் மட்டுப்படுத்தி பேரியக்கமாய் பார்க்காத ஞானவான், இன்னமும் தானே தன்னுள் கிடந்து சுற்றிக் கிடக்கும் பொருட்களின் தன்மை உணர்ந்த மனிதம் ததும்பும் அத்தனை பேரும் இத்தகைய கட்டுக்களை உடைத்தவர்களே...

தேடலாய்த் தொடரும் எனது நெடுந்தூர ஜென்மாந்திரப் பயணத்தில் ஆழமாய் மூழ்கிக் கிடக்கிறேன் அவ்வப்போது தூக்கத்திலிருந்து விழித்தெழும் குழந்தையின் அழுகையாய் இது போன்ற கட்டுரைகளை எழுதுவதும் அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது....அந்த நிகழ்வும் பேரியக்கத்தின் தேவையுமாகிறது.

தேடலில் தொலைக்கும் தூரங்களை எல்லாம் இது போன்ற வெளிப்பாடுகள் குறைப்பதில்லை மாறாக கூட்டத்தான் செய்கிறது என்ற சத்தியத்தையும் கூறி தற்போது வலுக்கட்டாயமாக கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

ஓம் நமசிவாய.....!


தேவா. S


Comments

:-)

#செமையான எழுத்து நடை....
சிவா என்று உச்சரித்தாலும் நமிதா என்று உச்சரித்தாலும் உச்சரிப்பில் ஒன்றும் இல்லை :)
சிவா,நமிதா வார்த்தைகள் எல்லாம் ஏணிதான் :)

ஓம் நமிதா நமக
dheva said…
கிருஷ்ணா @ அண்ணா உச்சரிப்பில் ஒன்றும் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்...

நமீதா என்று உச்சரித்தால் நமீதா பற்றிய நினைவுகள் மூளையில் உதயமாகும்...

சிவம் என்ற வார்த்தை உச்சரிக்கையில் பிரபஞ்சத்தின் எல்லாவற்றையும் உள்ளடக்கி எதுவுமற்று இருந்த அந்த ஆதி சக்தியின் நினைவுகள் மூளையில் உதயமாகும்...

மற்றபடி உச்சரிப்பில் எந்த மாற்றமும் நிகழாது உச்சரிப்போடு தொடர்புடைய நிகழ்வுகள் நினைவுகள்... அதுதான் விசயம்.

நன்றிகள் அண்ணா!
சிவாய நம ஓம்
சிவாய நமஹ..
சிவாய நம ஓம்
நம சிவாய!
////நமீதா என்று உச்சரித்தால் நமீதா பற்றிய நினைவுகள் மூளையில் உதயமாகும்...

////

சரியா சொன்னிக தம்பி.....

///சிவம் என்ற வார்த்தை உச்சரிக்கையில் பிரபஞ்சத்தின் எல்லாவற்றையும் உள்ளடக்கி எதுவுமற்று இருந்த அந்த ஆதி சக்தியின் நினைவுகள் மூளையில் உதயமாகும்...///

தம்பி எனக்கு ஒரு சந்தேகம் ....சிவம் என்பது யாரு.....ஒரு கோமாளி சடை வச்சுக்கிட்டு ..தவம் செய்யுவானே அவனா....
எவ்வளவு சிவா சிவா என்று கூப்பிடாலும் இந்த மொன்னையன் நமக்கு உதவுவது இல்லையே தம்பி......
இப்போ நான் வண்டியில போய்கிட்டு இருக்குரப்ப அடிபட்டு சாவுற நிலைக்கு வந்து விடுகிறேன்......
அப்போ இந்த மொன்னையனை சிவா சிவா என்று அழைப்தாக வைத்து கொண்டால்.....இவன் என்ன வந்து விடவா போகிறான்........

நீங்க சொல்லுற சிவா ஏதுமற்று இருப்பவன் என்றால் ...அவன் தொடர்புடைய நினைவுகள் நமக்கு எதுக்கு.....
சிந்தனை என்பதே ஆன்மிகம் சார்ந்தது இல்லை தம்பி......

சிவா நமிதா என்ற எல்லா வார்த்தையும் கடந்து போனால் இருப்பது எதுவோ அதுவே நியும் நானும்.......
எல்லா பிம்பங்கலுமே தடை தான்......

அட அதுக்கு தான் முயற்சி செய்கிறேன்....நீங்க சொன்ன மாதிரி நமிதா நினைவுகள் தடையாய் தான் உள்ளது :)

நமீதாய நம ஓம்
நமீதாய நமஹ..
நமீதாயநம ஓம்
நமீதாய! :)
dheva said…
கிருஷ்ணா @

அண்ணா சிவம் என்பது உருவமல்ல. உருவமாய் இப்போது காட்டப்படுவது லே மேன் என்று சொல்லக்கூடிய பாமர்களை வழிநடத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை.

அந்த உருவத்தை வழிபட்டு வழிபட்டு இறுதியில் ஒரு நாள் கேள்வி கேட்பான் யார் இந்த மொன்னையன் என்று (உங்கள் பதத்தை கடனாக உபயோகித்துக் கொள்கிறேன்)? அந்த நிகழ்விற்குப் பிறகு புரியும்

சிவம் என்பது ஒன்றல்லா எல்லாமானது என்று. அருவம் +உருவம் இரண்டின் மூலமே சிவம் என்று. சிந்தனைகள் எல்லாம் அறுபட்டு சிந்தனையற்ற இடத்தில் இருக்கும் பிரமாண்ட உணர்வு நிலையை விளக்க முற்படுகையில் அதை உடலுக்குள் இருந்து சிந்தித்துதான் உணர முடியும். உணரும் கணத்தில் உணர்வாய் பரவிக்கிடக்கையில் சிந்தனையுமில்லை சிந்தையுமில்லை அண்ணே...!

எல்லாமான சிவத்துக்குள் நமீதாவும் அடக்கும். ஆனால் நமீதா என்னும் ஒரு உருவம் சிவத்தின் ஒரு சிறு துகள் அவ்வளவே....!

நன்றிகள் அண்ணே...!
நட்சத்திர வாழ்த்துகள் தேவா :]

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த