Skip to main content

வானம் பார்த்த பூமி....!



















காலத்தின் ஓட்டத்தில் எல்லாமே நிகழ்ந்தேறி விடுகிறது. ஆமாம் எந்த வித கலை, இலக்கிய பாரம்பரியமும் இல்லாத நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பதைப் போல. புத்தங்கள் வாசித்ததை விட வேறு பெரிய இலக்கிய ஞானம் எனக்குக் கிடையாது. ஒரு கதை, மற்றும் கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எந்த வித இலக்கிய மரபுகளும் தெரியாமல்....

தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதை அறிந்து ஆங்கில விசைப்பலகையை தட்டிய போது தவழ்ந்து வந்த என் தாய்த்தமிழைக் கண்டு, அந்த வியப்பிலேயே என் எண்ணங்களை எழுத்தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பாமரன் நான். அதுவும் பதிவுலகம் என்றால் என்ன என்று தெரியாமலேயே கூகிளுக்குள் நுழைந்து பார்க்கையில் ஏதோ பிளாக் ஸ்பாட் என்று ஒன்று உள்ளது இதில் நாம் ஒரு வலைத்தளம் தொடங்கலாம் என்று அறிந்து 2006லேயே வலைப்பூவைத் தொடங்கி விட்டு அதில் எப்படி எழுதுவது என்று தெரியாமலேயே 4 வருடங்களை ஓட்டியும் விட்டேன்.

எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு காரணமாய் என் குருக்கத்தி கிராமம் இருந்தது. அது என்ன உங்கள் ஊர் உங்களை எழுதச் சொன்னதா என்று புருவம் உயர்த்துகிறீர்களா?

ஆமாம்...

21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னமும் 200 வருடங்களுக்குப் பின் தங்கிய அதே நேர்த்தியோடு பேருந்து வசதியில்லாமலும், ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டுமானாலும் கூட சற்றேறக்குறைய ஒரு 6 கிலோமீட்டர்கள் முன்பெல்லாம் நடந்தும் சென்று தற்போது சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று அருகில் இருக்கும் கொல்லங்குடி என்னும் இன்னுமொரு சிற்றூரின் கதவுகளைத்தான் நாங்கள் தட்ட வேண்டும்.

அப்பாவின் பணி நிமித்தமாக எனது வயது எட்டு மாதமாயிருக்கும் போதே நாங்கள் வந்து தற்போது முழுதாய் செட்டில் ஆகி இருக்கும் ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தாலும்....குருக்கத்தி என்ற அந்த குக்கிராமத்தில்தான் என் உயிர் முடிச்சு இருப்பதாக எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன்.

50 வீடுகள் கூட இருக்குமா என்று தெரியாது அதற்குள்ளாகவேதான் இருக்கும். ஊருக்குள் இருக்கும் ஒரே ஒரு கண்மாய்தான் அந்த ஊரில் வசிக்கும் ஒரு 200 பேருக்கு ஜீவாதார மூலம்.. என்றால் அந்தக் கண்மாய்க் கரையில் இருக்கும் குருக்கத்தி ஐயா கோவில் என்னும் ஒரு பனை ஓலை முடைந்த கூரையோடு கூடிய ஒரு மண் மேடைதான் அந்த மக்களின் காவல் தெய்வம்...!

வானம் பார்த்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு இனிமையானதும் கூட.... என்றுதான் சொல்வேன். அது ஒரு இயற்கை சார்ந்த வாழ்வு....என்ற ரீதியில் மேகம் கருக்கையில் அதை பார்த்து சந்தோசப்படுதலும், பெய்யும் மழையை தேக்கி கண்மாயில் வைக்க அதன் கரையை உயரப்படுத்துதலும், சேற்றிலும் சகதியிலும் கிடந்து மரம், மட்டை, ஆடு, மாடு, புல்,முள் என்று சுற்றிலும் விரிந்து கிடக்கும் புன்செய் நிலங்களும், காட்டு வேலிக் கருவை மரங்களும்தான் அந்த மண்ணில் இருப்பவர்களின் வாழ்க்கை.

வயல்வெளிகளுக்குள் ஊடுருவிச் செல்லும் போது கருவேலம் மற்றும் பனை மரங்களினூடே ஆங்காங்கே மிகப்பெரிய கிணறுகளையும் அதன் பக்கத்திலேயே கிணற்று நீரை பகீரதப் பிரயத்தனம் செய்து மேலே கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கும் டீசல் மோட்டர்களையும் அதைத் தொடர்ந்த பரந்த பொட்டல் வெளிகளில் கடலை, கம்பு, மிளகாய் என்று விதைக்கப்பட்டிருக்கும் விளை நிலங்களையும் காணும் போது அந்த செம்மண் சூட்டோடு சேர்ந்து நமது கண்களும் சிவந்துதான் போய் விடும்.

ஆறு என்ற ஒன்றும் உண்டு... அதில் எப்போதாவது தண்ணீர் வருவதும் உண்டு. முல்லைப் பெரியாற்று நீர் ஆங்காங்கே போய் விட்டு போனால் போகுது போ என்று சிவகங்கை மாவட்டத்தின் உள்ளே சுருண்டு கிடக்கும் என் குருக்கத்திக்கும் அவ்வப்போது ஓரிரு துளிகளை கொடுத்து எங்கள் தொண்டைக் குழிகள் வரண்டு போய் விடாமல் இருக்கச் செய்வதும் உண்டு.

பிள்ளைகள் படிக்க இந்த நவீன யுகத்தில் கூட ஒரு பள்ளிக்கூடம் இல்லாத என் குருக்கத்தி 1947க்கு முன்பு எப்படி இருந்திருக்கும், என்று யோசித்துப் பார்க்கையில் டக் என்று கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

அடிச்சு பிடிச்சு எங்க அப்பா அந்த கிராமத்துக்குள்ள இருந்து படிச்சு ஒரு கவர்மென்ட் வேலைக்கு வந்துட்டாங்க...அதோட தொடர்ச்சியா நாங்களும் நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கிட்டோம்...அப்பா பிடிஓ ஆகிட்டாங்க...நாங்க எல்லாம் ஆளுக்கொரு திசையா பிரிஞ்சு துபாய், சிங்கப்பூர்னு வாழ்க்கையோட வேறு பக்கத்துக்கு வந்து உக்காந்துட்டோம்...

நவீனத்தின் நாக்குகளை எல்லாம் தொட்டுப் பார்த்து சுவைத்துப் பார்த்து அதன் உச்சம் என்னவென்று சொக்கட்டான் போட்டு நாங்கள் விளையாட தொடங்கி இருக்கும் இந்த காலத்திலும் கூட எங்க குருக்கத்தி இன்னமும் அப்டியேதாண்ணே இருக்கு...!!!!

சந்ததிகளை உருவாக்கிகிட்டே இருந்த அந்த மண்ணுல காலப்போக்குல மழை, தண்ணி எல்லாம் இல்லாமப் போக பொழப்பு தலைப்பு இல்லாம எங்கூரு சனமெல்லாம் திருச்சி, மெட்ராசுன்னு பொழப்பு தேடி போயிட்டாங்க...! ஊருல இருக்குற நிலமெல்லாம் விதைக்கவும், அறுக்கவும் ஆளுக இல்லாம கட்டாந்தரையா கண்ணீர வடிச்சுகிட்டே பக்கத்துல இருக்குற கருவை மரங்க கிட்ட அந்த்தக்காலத்து கதைகள மெளனமாவே சொல்லிக்கிட்டு கிடக்குங்க...!

போன போக்குல, நவீனமும் நாகரீகமும் ஒரு முரட்டு அரக்கனா நின்னு எல்லாத்தையும் முழுங்கிப் போட்டுறுச்சு....மண்ணொட மக்க மாருக அத்தனை பேரும் குருக்கக்திய இன்னிக்கு தேதிக்கு முழுசா மறந்தே போயிட்டாங்க..

இந்த இணைய உலகத்துல பகிர்ந்திக்கிற அளவுக்கு நிறையவே ரகசியங்கள் குருக்கத்திய சுத்தி புதைஞ்சு கிடக்குதுன்றது ரெண்டாவதா இருக்கட்டும்.... ஆனா சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி அப்டீன்ற குக்கிராமத்த வெளில கொண்டு வந்து காட்டணும் அப்டீன்ற ஒரு எண்ண உந்துதல்லதான் இந்த வலைப்பூக்கள் பக்கமே நான் வந்தேன்...

6 பொம்பளைப் புள்ளைகளையும், 1 ஆம்பளைப் புள்ளையையும் எங்கய்யா அந்த மண்ணுக்குள்ள நின்னுதான் காப்பாத்தி இருக்காங்க...! மழை தண்ணி இல்லாம போன காலத்துல ஆத்துப் பாசனமும் இல்லாத நேரத்துல (முல்லைப் பெரியாறு ஆறு தமிழகத்துக்கு வராத காலங்கள்) மர மட்டைகள எல்லாம் மனுசப்பயக வெட்ட ஆரம்பிக்க, ஆரம்பிக்க மனுசனுக்கு மழை வெளையாட்ட காட்ட ஆரம்பிச்ச நேரம்... 1850 வாக்குல எங்க பாட்டையா எல்லாம் பர்மா பக்கம் போயி இரங்கூன்ல கடை கண்ணி வச்சி ஊர்ல இருந்த புள்ளைக் குட்டிக எல்லாம் பொழைக்க காசு பணம் அனுப்பி இருந்து இருக்காங்க...

அந்த காலத்துலதான் கொடுமையான பஞ்சம் அப்போதைய ஒருங்கிணைந்த இரமாநாதபுரம் மாவட்டத்துல தலை விரிச்சு ஆடி இருக்கு. எங்கப்பத்தா சொல்லும் ...காசு இருக்குமப்பு ஆனா வயித்துப் பசி ஆத்த நெல்லு, புல்லு கிடைக்காது. ஒரு வேள நெல்லுச் சோறுதான் சாப்பிடுவோம், அதுவும் போகப் போக கொறஞ்சு ஒரு மாசத்துக்கு ரெண்டு தவணைதேன் நெல்லுச் சோறு சாப்பிடுவோம்.. மத்தபடிக்கு கம்பு, கேப்பை (கேழ்வரகு ) கூழுதேன் குடிப்போம்....

அம்புட்டு பஞ்சத்துலயும் அஞ்சாறு புள்ளைக் குட்டியள வச்சுகிட்டு நாங்க பொழச்ச பொழப்பு இருக்கே அப்பு..அதச் சொன்னா....அம்மூரு கம்மா நெறஞ்சு போகுற அளவுக்கு கண்ணுத் தண்ணி இருக்குமப்பு, அம்புட்டு கஷ்டம்....அப்புறந்தேன் ஆத்து தண்ணி அப்போ, அப்போ வரயில ஏதோ நெல்லுப் புல்ல விதைச்சு பொழைச்சு வந்தோம்....

காசு கண்ணி இல்லாத மக்க எல்லாம் நடந்தே தஞ்சாவூர் சீமைக்கு கருதடிக்க போயிருவாக...செல பேரு ஆட்டுக் கிடைய பத்திக்கிட்டுப் போயிருவாக....! ஊரே வெறிச்சோடிப் போயித்தேன் கெடக்கும்...! எங்குட்டுப் பாத்தாலும் பெரிய மனுசகள்ள இருந்து புள்ளைக் குட்டிய வரைக்கும் பசி...பசி..பசிதேன்....! நல்லா இருக்குற ஆளுகள பாத்து எல்லா சனமும் வேற ஒண்ணும் வேணாம் ஒரு கை சோறு போடுங்கய்யான்னு கேக்குறத என் காதால கேட்டு இருக்கேன்..., ஒரு மனுசனுக்கு எம்புட்டு கஷ்ட நஷ்டமும் வரலாமப்பு ஆன வவுத்துக்கு மட்டும் கஷ்டம் வரவே கூடாது....

அம்புட்டு கஷ்டத்துலயும் நம்ம கெணத்து தண்ணி முழுசா வத்தலப்புன்னு பெருமையா தண்டட்டி ஆட எங்கப்பத்தா சொல்லும்...! எந்த அடிப்படை வசதியும் இல்லாம இன்னமும் இருக்குற குருக்கத்தி கிராமத்துக்குள்ள இருந்து இந்த இணையத்தை எட்டிப் பிடிச்சு அப்பன், பாட்டன் முப்பாட்டன் பொறந்த ஊரை பத்தி எழுதுறத என் வாழ்க்கையோட பெரும் பேறாத்தான் நான் நினைக்கிறேன்.

"மருதுபாண்டிய ராசா செஞ்ச தேர் ஓடலையாமப்பு....அப்போ எங்க பெரிய அய்யா (அப்பத்தாவோட முப்பாட்டன்) நல்ல கவி பொனைவாராம், எப்பவும் காவிய கட்டிகிட்டு சடா முடியோட வேலிக்காத்தானுக்குள்ள கண்ண மூடிக்கிட்டே ஒக்காந்து இருப்பாராம்....அவரை கூட்டியாந்து கவிபாடச்சொல்லி தேர ஓட்டுனா ஓடும்னு மந்திரிமாருக யாரோ சொல்ல, காளையார்கோயில்ல இருந்து ராசா இவர கூட்டியாரச் சொன்னாராம்....

எங்க பெரியய்யா வீரமுத்தானந்தம் போயி தேரை பாத்து அதுல இருந்த என்னமோ சிக்கல சரி பண்ணச் சொல்லி...ஒரு கவியைப் பாடி தேர இழுக்கச் சொன்னதும் தேரு கட கடன்னு ஓட ஆரம்பிசுடுச்சுப்பு....! ராசா சந்தோசப்பட்டு ஒரு யோகியா இருக்குற உமக்கு என்ன கொடுக்கறதுன்னு தெரியலை என்ன வேணும்னாலும் கேளும்ன்னு சொல்லி இருக்காரு...

அப்போ அவரு நிஷ்ட (தியானம்) செஞ்ச நம்மூரு இருக்க லக்குல (இலக்குல) எல்கை வரைஞ்சு இந்த குருக்கத்திப்பூ வெளஞ்சு கிடக்குற எடத்தைப் பூரா என் சந்ததிக எல்லாம் வாழறதுக்கு ஒரு கிராமமாக்கிக் கொடுங்க ராசன்னு கேட்டு இருக்காரு....

ராசாவும் அப்படியே எழுதி கொடுத்துட்டாக...

அந்த கம்மாக் கரையில இருக்குற பனை ஒலை மட்டைக முடைஞ்சு கூரை போட்டு சாணம் மொழுகி இருக்குற மண் திண்ட என்னான்டு நீ நெனைச்ச....? அதுல வீரமுத்தானத்தம் ஐயா உசுரோட எறங்கி இருக்காகப்பு......"ன்னு அப்பத்தா அன்னைக்கு என்கிட்ட சொன்னப்ப அந்த லாந்தர் வெளக்கு வெளிச்சதுல அவுங்க கண்ணு அவ்ளோ பளீர்னு பிரகாசமா இருந்துச்சு ஆனா எனக்கு அதோட அர்த்தம் அப்போ புரியலை....

காலப் போக்குல தெரிஞ்சுகிட்டேன் வீரமுத்தானந்தம் என்னும் குருக்கத்தி ஐயா அங்க ஜீவ சமாதி அடைச்சு இருக்காங்க....! அதோட மட்டும் இல்லாம என்னைய படமா வச்சு எவனும் கும்பிடக் கூடாதுன்னும் கண்டிச்சு சொல்லி இருக்காங்க...! ஊருக்குள்ள கோயிலு, கீயிலு எவனாச்சும் கட்டினாலோ, அல்லது நான் அடங்கி இருக்குற இந்த எடத்தை எடுத்துக் கட்டி கோயிலா ஆக்கினாலோ, கல்லு வச்சு கட்டினாலோ, என்னைய கும்பிட்டாலோ அவன் குடும்பத்தை அழிச்சே புடுவேன்னு கடுமையா சொல்லி இருக்காரு....

நாயி, நரி, பூனை, கழுதை, ஊரு சனம் அம்புட்டுப் பேரும் பொதுவா இருந்துக்கிடுங்க....சாமி, கோயில்னு இந்த ஊருக்குள்ள ஒண்ணும் வரக்கூடாதுன்னு தீர்மானமா சொல்லிட்டு.....வீரமுத்தானந்தம் ஐயா அங்க ஜீவசமாதி அடைஞ்சுட்டாங்க.....

காலப்போக்குல ஊருச்சனம் அவரை இன்னிக்கு கும்பிட ஆரம்பிச்சுட்டாலும்... இன்னமும் குருக்கத்திக்குள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோயிலு கூட கிடையாதுன்றது ஒரு ஆச்சர்யமான உண்மை தானுங்க....

ஐயா கோயிலுன்னு சொல்லி பொங்கல் அன்னிக்கு விமர்சையா பொங்கல் வச்சு கொண்டாடினாலும் அங்க இருக்கறது ஒரு சாணம் மொழுகின மண் திண்டும் பனை ஓலை முடைஞ்ச கூரக் கொட்டகையும்தான்....!(இப்போ சமீபத்துல அங்க சிமிண்ட் போட்டு இருக்கறதா அப்பா சொன்னாங்க...)

ஆமாங்க, பொறந்த ஊர்னு சொல்லிக்கிறதுல பெருமை ஒண்ணும் இல்லையின்னாலும்.... அந்த ஊரும் பாட்டன் முப்பாட்டானுக சுவாசித்த காத்தும், அவுங்க வாழ்ந்த வாழ்க்கையும் அதிர்வுகளா அங்கதான் சுத்திகிட்டு இருக்கும்....அந்த மண்ணுல பல தாதுப் பொருட்களா விரவிக் கிடந்துதான் தாய், தகப்பனோடோ ஜீவ சத்தா நான் ஆகி இருப்பேன், அதனால அந்த்த மண்ணோட ஈர்ப்பு எனக்குள்ளே இருக்கறதும் இயல்புதான்னு வச்சுக்கோங்களேன்..!

இன்னிக்கும் குருக்கத்தி ஒரு குக்கிராமம்தான்..., கரண்ட் வசதி வந்ததே 1990கள்ல தான்... கடகண்ணி ஒண்ணும் கிடையாது, இரைச்சல் கிடையாது.... எப்படி பார்த்தாலும் நானும் மண்ணைச் சேர்ந்த கிரமத்தான் தான்னு சொல்றதோட மட்டும் இல்லை.... இன்னும் ஒரு பத்து வருசத்துக்குள்ள வருசத்துல அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாய வாழ்க்கைய வாழப் போறதுதான் என் லட்சியமும் கூடங்க......!

ஏதேதோ ஆசைகள் இருந்தாலும் நவீன யுகத்தில் எல்லாமே புது புது தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்துட்டாலும் மனிதம் ரொம்ப நீர்த்துப் போனதோட மட்டும் இல்லாம, மனிதர்கள், மனிதர்களோட இணைஞ்சு வாழும் ஒரு இயற்கையோட இயைந்த வாழ்க்கை முறை இப்போ தொலைஞ்சு போயிதான் இருக்கு.

நாகரீகப் பெருக்கம் அறிவு வளர்ச்சின்னு சொல்லிகிட்டு மனுசன் தன்னை தனித்தனியா கூறு போட்டுக்கிடுறதை என்னால ஏத்துக்கிட முடியலை. மாமா, அத்தை, பங்காளி, அங்காளி, மச்சினன், மாப்பிளை, சின்னம்மா, பெரியம்மான்னு ஜனக்கட்டுகளோட கல்யாணம், சாவுன்னு சொல்லி ஒண்ணா சாப்பிட்டு, சிரிச்சு, சண்டை போட்டு, உரிமைய கொடுத்து, உரிமைய கேட்டு, திமிரா ஒரு ரத்த பாசத்தோட வாழ்ந்த வாழ்க்கை இன்னிக்கு தொலைஞ்சுதான போச்சு...! இன்னமும் குத்துயிரும் குலை உயிருமா இந்த ஒரு வாழ்க்கை முறையும், அங்க அங்க சில கிராமங்கள்ள இருந்தாலும்....

மனுசங்க கிட்ட சுயநலம் கூடிக் கூடி போட்டி பொறாமையில உறவு முறைகள் நீர்த்துப் போயிகிட்டுதான் இருக்கு....! ஆயிரம்தான் நகரத்து வாழ்க்கையில் சில சுகங்களை நாம அனுபவிச்சாலும், நம்ம ஊரு வயக்காட்டுல கருக்குன்னு ஒரு முள்ளு குத்தி அதை பிடிங்கிப்போட்டு அந்த வலியை அனுபவிக்கிற சுகத்தை பட்டணத்து வாழ்க்கை கொடுத்துடுச்சுனு சொல்லிர முடியாது..., சுகம்ங்கறது உடம்புக்கு மட்டும் கிடைச்சா அது மிகப்பெரிய வலியா மாறிடும்ங்க, சுகம் மனசுக்கு கிடைக்கணும் அதுதான் நிஜமான சந்தோசம்.

இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு எல்லோரும் சொல்லுவாங்க...ஆனா அக்கரையிலயே அக்கரை பச்சைதான்னு நான் அடிச்சு சொல்லுவேன். தன்னை ஒரு விவசாய நாடா வரிஞ்சு கட்டிகிட்டு அடையாளம் காட்டிக்கிற நம்ம நாட்டோட உயிர்துடிப்பே கிராமங்கள்லதான் இருக்குன்னு மகாத்மா காந்தி சொன்னத இப்போ இருக்குற மக்களும் புரிஞ்சுக்கல அரசியல்வாதிகளும் புரிஞ்சுகல...

ஏதேதோ திட்டங்கள தீட்டி இலவசங்கள அறிவிக்கிற அரசுகள் எல்லாம் விவசாயம் நலிவுறாம இருக்கறதுக்கு என்ன என்ன செய்யலாம்னு ஒரு விழிப்புணர்வை கொடுக்கறதும் கிடையாது, படிச்சு முடிச்சு பட்டணத்து வேலைக்குப் போறது மட்டும் முன்னேற்றம் இல்லை படிச்சு முடிச்சு விவசாயம் செய்றதும் முன்னேற்றம்தான்னு இளைஞர்களுக்கு புரிய வைக்கிறதும் கிடையாது... (புரிஞ்சு இருந்த்தா எதுக்கு வெளிநாட்டுக்கு வந்து இருக்கப் போறோம்...???!!!!)

பாட்டன் முப்பாட்டன்னு செஞ்சுகிட்டு இருந்த ஒரு தொழில் விவசாயம். அது நம்ம அப்பாங்க காலத்துல இருந்து தடம் மாறிப் போயி இன்னிக்கு அதோட தொடர்ச்சியா நம்மள்ள நிறைய பேரு விவசாயம் செய்றது எல்லாம் ஒரு பிற்போக்குத்தனம்னு புரிஞ்சுகிட்டு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வந்து ஒக்காந்துட்டோம்....

கீழை நாடு, கீழை நாடுன்னு சொல்லி சொல்லியே நம்மள கீழ அமுக்கப்பாக்குற, அல்லது கீழ அமுக்கிப் போட்டு இருக்கும் மேலை நாட்டு நாகரீகத்தைதான் நாம உசத்தியா பாக்குறோம்...ஆனா அதை விட உயர்வான நமது கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பிச்சுட்டோங்கிறது வேதனையான விசயம்தான்....

போன தலைமுறை வரைக்கும் கூட்டம் கூட்டமா, நம்ம பாட்டன், முப்பாட்டன்னு, நம்ம சொந்தகிராமங்களை மையப்படுத்திதான் வாழ்க்கைய வாழ்ந்து இருக்காங்க....ஆனா சடார்னு 1960களுக்குப் பிறகு சொந்த கிராமங்களை எல்லாம் விட்டு வெளியே வந்ததோட மட்டும் இல்லாம திரும்ப அந்த கிராமங்களுக்கே நாம போறதே இல்லை என்பது வலிக்கக் கூடிய கனமான உண்மை என்ற ஒரு செய்தியை ஒரு வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு குற்ற உணர்ச்சியோடு கனத்த மனதோடுதான் எழுதுகிறேன்....

இன்னும் வரப்போகிற சந்ததிகளுக்கு எல்லாம் நம் சொந்தக் கிராமங்களின் மதிப்பினை எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். தலை முறைகள் கடந்த நமது மூதாதையர்களின் வாழ்க்கைகள் அங்கே மண்ணோடு மண்ணாக கலந்து கிடக்கின்றன அவற்றை நாம் விட்டு விடக் கூடாது....

இலைகளையும் கிளைகளையும் எங்கெங்கோ நாம் பரப்பினாலும் நமது வேர்கள் நம் சொந்த மண்ணை விட்டு விடக் கூடாது என்ற என் ஏக்கத்தை இந்தக் கட்டுரைக்குள் விதைத்து கட்டுரையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன்.


தேவா. S


Comments

Kousalya Raj said…
தன் மண்ணை பற்றிய உணர்வுகளை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது சிரமம் என்ற என் எண்ணத்தை சிதறடித்து விட்டது உங்களின் இந்த படைப்பு.

மிக அழகாக சொன்ன விதம்,மனதை தொட்டது, கரைத்தது...!!!

வரிக்கு வரி மண் மீதான பாசம் அக்கறை தெரிகிறது.விவசாயம் பற்றிய ஆதங்கம் கொஞ்சம் அதிகமாகவே !!

//சந்ததிகளுக்கு எல்லாம் நம் சொந்தக் கிராமங்களின் மதிப்பினை எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும்.//

இந்த வரிகளை மிக மதிக்கிறேன்.

பொருத்தமான பாடல்.

மற்றபடி,படைப்பின் தாக்குதலால்(!) வேறு கருத்து ஒன்றையும் சொல்ல தோன்றவில்லை...
Kousalya Raj said…
இந்த வார தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு என் வாழ்த்துக்கள்.

'வானம் பார்த்த பூமி'க்கு என் பாராட்டுகள்.
Unknown said…
நட்சத்திர வாழ்த்துக்கள் தேவா :)))
ஆஹா தேவரே.. வாழ்த்துகள்... நட்சத்திர முதல் இடுகையே மண்சார்ந்த அசைபோடல்.. படிக்கபடிக்க குருக்கத்தி நினைவில் ஆடுகிறது..நீங்க தலைமுறைகளாக வாழ்ந்த வாழ்க்கையும். மண்ணும் நன்மனிதர்களுமே என்றும் நினைவுகளுக்கு தீனி..
நட்சத்திர வாழ்த்துகள் தேவா...

உங்களின் வழக்கமான நெஞ்சம் தொடும் எழுத்துகள் மண் வாசனையுடன்.,

பாராட்டுகள்...
Amudhavan said…
உலகின் எந்த மூலைக்குச் சென்றபோதிலும் தங்களின் வேர்களை விட்டுவிடாமல் இருப்பவர்களால்தாம் ஊர்களும் வாழ்க்கையும் அர்த்தத்தோடு நகர்ந்துகொண்டிருக்கின்றன. நட்சத்திரப்பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
//புத்தங்கள் வாசித்ததை விட வேறு பெரிய இலக்கிய ஞானம் எனக்குக் கிடையாது//

//எங்க பெரியய்யா வீரமுத்தானந்தம் போயி தேரை பாத்து அதுல இருந்த என்னமோ சிக்கல சரி பண்ணச் சொல்லி...ஒரு கவியைப் பாடி தேர இழுக்கச் சொன்னதும் தேரு கட கடன்னு ஓட ஆரம்பிசுடுச்சுப்பு//

இலக்கிய ஞானம் ஜீன்லேயே இருக்கே தேவா! அதான் வெளுத்து வாங்குகிறீங்க!! வாழ்த்துக்கள்!!!
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்
நட்சத்திர வாழ்த்துகள் தேவா
நல்ல ஆழ்ந்த கருத்துக்கள் ... உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்
dheva said…
கெளசல்யா..@ ஆழமான வாசிப்புக்கும் உணர்வுக்கும் நன்றிகள்ங்க!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில் @ நன்றிகள் செந்தில்!
dheva said…
பாலசி..@ உண்மைதான் பாலசி...குருக்கத்தி நினைவில் ஆடத்தான் செய்கிறது...! நன்றிகள் பாலாசி!
dheva said…
நிகழ்காலத்தில் சிவா @ நன்றி சிவா!
dheva said…
அமுதவன் @ மிக்க நன்றிகள் சார்!
dheva said…
சைதை அஜிஸ்...@ நன்றி அஜிஸ்!
dheva said…
அது ஒரு கனாக்காலம் @ நன்றிகள் சார்!
வாழ்த்துகள் தேவா. ரொம்ப அருமையாக வந்துள்ளது. குருக்கத்தி எந்த ஊருக்கு அருகே உள்ளது?
அருமையான பதிவு.
மனசை நெகிழ வைத்து விட்டது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா..
Intha Vaara Star ku manamaarntha vaalthukkal. Kurukkathi kiramam manathil pathinthu vittathu Sago. Vaalthukkal.
dheva said…
ஜோதிஜி @ தேங்க்ஸ் பாஸ்...!

குருக்கத்தி சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் கொல்லங்குடி என்ற ஊருக்கு அருகே இருக்கிறது... !
dheva said…
ரத்னவேல் @ நன்றிகள் ஐயா!
dheva said…
துரை டேனியல் @ நன்றி சகோ.
dheva said…
குணா @ நன்றி நண்பா!
வாழ்த்துக்கள் :)
கானம் கலந்து தந்த
வானம் பார்த்த பூமிக்கு
நன்றி..!

உங்களுடன் உங்கள் ஊர் வந்து சுற்றிய திருப்தி கிடைத்தது.. அருமையான அனுபவப் பகிர்வு..! வாழ்த்துக்கள்..! :)
நட்சத்திர வாழ்த்துக்கள்.

மண்வாசனை மனத்தைத்தொட்டு நிற்கின்றது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த