Skip to main content

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...!



















ஒரு வித தாள கதியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை. எப்போதும் சுற்றியிருக்கும் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டார்கள். இருப்பவர்களும் சென்று விடுவார்கள். நாளை நானும் இருக்க மாட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் எல்லாம் மாறும்.

காலங்கள் கடந்தும் ஏதேதோ ரகசியங்களை தன்னுள் அடக்கிக்கொண்டு எப்போதும் மெளனமாய் பார்த்துச் சிரிக்கிறது அந்த பிரமாண்ட வானம். மெளனமாய் சூரியனைச் சுற்றி வரும் இந்தப் பூமிக்குத் தெரியும் அதன் மூலமும் மூலத்தின் ஆழமும்.

வெற்றுப் பிண்டமாய் ஜனித்து விழுந்து யாரோ இட்டப் பெயரை நானென்று கொண்டு, ஐம்புலன்களும் சுவீகரித்த அனுபவத் தொகுப்புகளை நான், நான் என்று கூவிக் கூவி நான் கோபம் கொள்கிறேன்,காதல் கொள்கிறேன்,காமம் கொள்கிறேன், சிரிக்கிறேன்? ரசிக்கிறேன், நடிக்கிறேன், உரக்க, உரக்க சப்தமாய் பேசுகிறேன், உறக்கமும் விழிப்புமாய் மாறி, மாறி உணர்வுகளுக்குள்ளேயே வேடங்களிட்டுக் கொள்கிறேன். விடாமல் துரத்தும் இரவும் பகலும் கூடி மாற்றங்களை வயதென்று எனக்குப் போதிக்கின்றன.

நான் விரும்பி நகரும் பாதையென்று நினைத்துக் கொண்டிருப்பது எல்லாம் திணிக்கப்பட்டது அல்லது தீர்மானிக்கப்பட்டது. கடவுளென்று கூறி முட்டி, முட்டி வணங்கச் சொன்னது என் சூழல். வணங்கிய கடவுளைப் பார்க்க வேண்டும் என்று தேடிய போது சுக்கு நூறாய்ச் சிதறிப் போனது ஓராயிரம் கற்சிலைகள். கடவுளுக்காயும், வாழ்க்கைத் தேவைக்காயும் கோவிலுக்குப் போய் போய் அலுத்து திணறி நிற்கையில் உள்ளுக்குள் சூழ்ந்த வெறுமையை உற்றுக் கவனிக்கையில் உருவமாய் கடவுள் என்ற ஒன்று தனித்து இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மெல்ல புத்திக்கு உறைத்தது.

புத்திக்குள் உறைத்தது மனதின் கற்பனையா? இல்லை சத்தியத்தின் புரிதலா என்றொரு கேள்வி எழுந்தது. புத்தி கூறுவதை எல்லாம் கேட்கிறேன் என்று நான் பல தடவை இது போலக் கூறி மனதிடம் ஏமாந்து போயிருக்கிறேன். புத்தியோ, மனதோ எது என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி விட்டு என் முன் நின்ற வாழ்க்கையை மட்டும் பார்க்க தீர்மானித்தேன். மிகப் பிரமாண்டமாய் வாழ்க்கை என்னைப் பார்த்துச் சிரித்தது.

வாழ்க்கை என்று சொன்ன உடனேயே அது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது என்பதும் விளங்கியது. என்னைச் சுற்றியிருக்கும் எவன் ஒருவன் பின்பற்றும் எந்த சித்தாந்தமும் எனக்கு உதவாது என்பதும் பிடிபட்டது. நான்....என்னும் இந்த உடலைச் சுமக்கும் சக்தி....இந்த பிரபஞ்சத்தில் நான் மட்டுமே...! எனக்கான வாழ்க்கையின் வழிகளில் தெளிவுகளை என்னால்தான் உணர முடியும். எனக்கான நகர்வை நானே தீர்மானிக்க முடியும்.

கடவுள் இல்லை என்று ஒரு கூட்டமும்.... இருக்கிறது என்று ஒரு கூட்டமும் முஷ்டிகளை மடக்கிக் கொண்டு, குரல் உயர்த்தி மாறி மாறி போட்டி போட்டு வாதங்கள் செய்வதையும் காண முடிந்தது. ஆமாம் இது காலங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதன் நாகரீகம், விஞ்ஞானம் என்றெல்லாம் பண் படும் முன் இது வேறு விதமாய் இருந்தது.

அதாவது உன் கடவுள் பெரியவரா? இல்லை என் கடவுள் பெரியவரா? என்பதிலிருந்து அதன் பரிணாம வளர்ச்சி என் மதம் பெரியதா இல்லை உன் மதம் பெரியதா என்று மாறி......பகுத்தறிவு கூடிப் போன காலத்தில் கடவுள் இருக்கிறார் என்று அடித்துக் கூறி ஒரு பிரிவும், இல்லை என்று உரக்க கூவிய படி இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர்.

இது ஒரு மிகப் பெரிய மடத்தனம் என்று என் புத்தி சொன்னாலும் இது தேவைதான் அல்லது இது இப்படித்தான் இயங்கும் என்பதும் தெளிவாகப் புரிகிறது. ஏனெனில் முரண் என்ற ஒன்று இருக்கும் வரைதான் இயக்கம் இருக்கும். அதே நேரத்தில் இயற்கையில் சமம் என்று எதுவும் கிடையாது. சமப்பட்ட இரு விசைகள் இயங்க முடியாது. அது நிலையாய்த்தான் நிற்கும்.. அதனால் சக்தி ஓட்டமாய் இருக்கும் வாழ்க்கை வெவ்வேறு அளவினாலான சக்திகளாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு சக்தி கடவுள் இல்லை என்று புத்திகளில் செல்களாய் துடித்துக் கொண்டிருக்கிறது வேறு சாராருக்கு கடவுள் உண்டு என்று.

இருக்கிறார் என்று சொல்பவர்களையும் இல்லை என்று சொல்பவர்களையும் நாம் மென்மையாய் கடந்து சென்று விடத்தான் வேண்டும். இரண்டு பேருமே பொய் சொல்கிறார்கள். இருவர் கூறுவதும் சத்தியம் இல்லை. இரண்டுமே நம்பிக்கை. இருவருமே நம்பிக்கையாளர்கள். ஒருவர் இருக்கிறது என்று நம்புவர் இன்னொருவர் இல்லை என்று நம்புவர்.

நான் உங்கள் முன் இருக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. நான் இருக்கிறேன் அல்லது இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம். நம்பிக்கை என்று சொல்லும்போதே அது பார்க்காத விடயம் அல்லது காணாத விடயம் ஆகிறது. வாழ்க்கையில் நாம் வைக்கும் ஒரே நம்பிக்கை நமது மீதாகத்தான் இருக்க வேண்டும்.

வேறு எது மீது வைக்கும் நம்பிக்கையும் உங்களையும் என்னையும் குப்புறக் கவிழ்த்து விடும். உணர்ச்சிப் பூர்வமாக நம்பிக்கை வைப்பவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பொய்த்து விடும் போது அப்படி நம்பியவனைக் குற்றம் சொல்லிப் புலம்புவார்கள்.

நான் இருக்கிறேன். என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நாம் ஆரம்பிக்கும் இடமே வாழ்க்கை என்னும் காரினை சாவி போட்டு முடிக்கி நாம் ஸ்டார்ட் செய்யுமிடம். எந்தக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் சென்று நாம் ஏன் மாட்டிக் கொள்ள வேண்டும். எந்த தத்துவக் குப்பைகளையும் ஏன் நாம் எப்போதும் சுமந்து கொண்டே திரிய வேண்டும்? என் இன்றைய உணவினை எந்தக் கற்பனைகளும் கொண்டு வந்து எனக்குக் கொடுக்கவில்லை. என் உணவிற்கான போராட்டத்தை நானே செய்கிறேன். என் வாழ்க்கையின் தரம் கீழே போவதும் மேலே வருவதும் எனது உழைப்பில் இருக்கிறது.

சில நேரங்களில் என் இலக்குகளை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது. அது கடவுளால் அல்ல. அல்லது வேறு எவராலும் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது அல்ல...! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சார்பு வாழ்க்கையில் பல சூழல்களால் எனது இலக்கினை அடையும் போக்கு தடைப்பட்டிருக்கலாம்.

அதற்காக விரக்தி அடைந்து கொண்டு.. ஓடவேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்டம் இப்படித்தான். எப்போதும் வெற்றியையும் தோல்வியையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நான் வெற்றிகளின் போது சந்தோசமாய் இருக்க அந்த வெற்றி தரும் சூழல் உதவுகிறது. தோல்வியால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விடுவேனோ என்ற பயம் இருப்பதால் அதைக் கண்டு மிரள வேண்டியிருக்கிறது.

பல வெற்றிகளையும் மனம் எளிதில் மறந்து போய் விடுகிறது. ஆனால் சில தோல்விகளை எப்போதும் எனக்கு எடுத்துக் காட்டி பயமுறுத்துவதின் பின்ணனியில் மரண பயமமே மிகுந்திருக்கிறது. தோல்விகளின் போது யாராவது ஆறுதல் சொல்ல வேண்டும், சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும் அவ்வளவே.... அது ஒரு இளைப்பாறுதல்... அந்த இளைப்பாறுதலில் சக்தி திரட்டி மீண்டும் இலக்கினைத் தாக்கி அழித்து வெற்றி கொள்ள வேண்டும்.

இப்படி நிதானித்துக் கொள்ள மனிதர்கள் தோள்களைப் பெரும்பாலும் கொடுப்பதில்லை. அப்படி கொடுப்பதற்கு லெளகீகம் இடம் கொடுப்பதில்லை. ஏனெனில் எல்லோரும் தன்னைக் காத்துக் கொள்ளும் ஓட்டத்தில் இருக்கிறார்கள். இப்படியான சூழல்களில் கடவுள் என்ற ஒரு கற்பனா மாய சக்தி ஆறுதலாய் இருக்கிறது. இதற்காக பல நேரங்களில் இந்த மாயா சக்தியை நான் தோள் சாயும் இடமாக நினைத்து சாய்ந்து இளைப்பாறி முழு மூச்சுடன் போராடி என் அளவில் வென்றிருக்கிறேன். இது ஒரு மாதிரி போலியாய் ஒரு ஆதரவை மனதளவில் வடித்துக் கொண்டு இளைப்பாறி மீண்டும் போராட நான் வைத்திருக்கும் யுத்தி.

மற்றபடி எப்போதும் கட்டுக்கள் கடந்த ஒரு சுதந்திர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தீராக்காதலோடுதான் நகர்ந்து கொண்டிருக்கிறேன். என் கண் முன் இருப்பது கடவுள் இல்லை. வாழ்க்கை. அந்த வாழ்க்கையை தீரத் தீர வாழ நான் யாரென்று முதலில் உணர வேண்டும். பொருளை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் எப்படி அதை அனுபவிப்பது? நான் என்னை அறிந்தால்தான் என் வாழ்க்கை சிறக்கும்.

நான் யாரென்று அறிய சப்தங்கள் எனக்கு உதவியதில்லை. அவை எப்போதும் என்னைப் புறம் நோக்கி வேறு மையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஏமாற்றி விடும். என்னை உணர முடியாது. இதற்காகவே தனித்து அமர்ந்து என் பேச்சுக்களை நிறுத்தி மூச்சினை உற்று நோக்குகிறேன். சுவாசம் பார்க்க பார்க்க சிந்தனைகள் புறம் நோக்கிச் செல்வது தடைப்படுகிறது. புறம் செல்லாத சிந்தனைகள் மெல்ல புத்திக்குள் வலுவிழந்த ஒரு புலியாய் மெல்ல மெல்ல அயர்ந்து கால் நீட்டிப் படுத்துக் கொள்கின்றன.

சீரான வேகத்தில் பிராணன் உட்சென்று வெளி வருகையில் முதுகுத்தண்டு நிமிர்ந்து கொள்கிறது. உடல் நேராகிறது. ஒரு மாதிரி அப்பளத்தை நொறுக்குவது போல உள்ளுக்குள் ஏதேதோ உடைகிறது. மெளனமான சாட்சியாய் நான் என்னும் ஒரு உணர்வு மட்டும் எஞ்சியிருக்கிறது. செத்துப் போன நினைவுகள் இருந்த இடமே தெரியவில்லை.

இந்த நிலை ஒரு சிறிய அகல் விளக்கு மெலிதாய் எரியும் போது ஆடாமல் அசையாமல் எரிவதை ஒத்து இருக்கிறது. எனக்குள் ஏதோ ஒரு உணர்வு சட்டென்று தாயின் அருகாமையை உணரவைக்கிறது. பட்டென்று ஒரு தாயின் வாசத்தோடு கருப்பைக்குள் இருந்த கதகதப்பான சூழலை உணர முடிகிறது. நான் என்னும் உணர்வு சுகமாயிருக்கிறது. மிக பாதுகாப்பாய் இருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில் உடலின் சக்தி செலவாவது நின்று போய் எல்லா சுரப்பிகளும் தன்னைத் தானே சுத்திகரித்துக் கொண்டு உடலின் இரத்த ஓட்டம் சீராய் நகர்கிறது. இதயம் சீராய் துடித்து என் இரத்த ஓட்டத்தை சரியாய் நடத்த, நடத்த புத்திக்குள் பரவிக் கிடக்கும் பிராணன் சக்தியாய் மாறி ஒரு வலுவினை உடலுக்குக் கொடுக்கிறது.

நான் என்னும் உணர்வும் உடம்பும் தனித்தனியே பிரிந்து நின்று புற உலகின் பிரச்சினைகளை பார்க்கும் போது வெளியே ஒன்றுமே இல்லை. அவை வெறும் காலி பாத்திரமாய் மட்டுமே இருக்கிறது. பிரச்சினை என்பது வெளியில் இல்லை, நமது புத்தியில்தான் என்று உணர முடிகிறது.

மெளனத்தோடான நீண்டதொரு மெளன சம்பாஷனையில் எண்ணமற்ற இடத்தில் எனக்கு ஒரு தோள் கிடைக்கிறது. அந்த தோளாய் நானே இருக்கிறேன். பிரச்சினைகளின் சூட்சுமங்களை அறுக்கும் தெளிவுகள் மெல்ல மெல்ல எனக்குள் பிறக்க, பிறக்க மீண்டும் புத்திக்குள் ஓய்வாய் படுத்துக் கிடக்கும் சிந்தனைப் புலி சீறிக் கொண்டு எழுகிறது. மெல்ல விழிகள் திறக்கிறேன். சக்தி நிறைந்தவனாய் என்னை உணர்கிறேன்.

வாழ்க்கையின் அடுத்த நகர்விற்கு என்ன செய்ய வேண்டும் என்று என்னுள் காய் நகர்த்தி எனக்குள் திட்டமிடுகிறேன். மெல்ல தியானமென்ற நானே நானாய் இருக்கும் நிலை கடக்கிறேன். ஒரு வெள்ளைப் பேப்பரில் பென்சிலால் என்ன, என்ன செய்ய வேண்டும் என்று எழுதுகிறேன். ஆக்சன் பிளான் தயார் செய்து அதை செயற்படுத்த அந்தக் கணத்திலிருந்து தொடங்கி என் திட்டமிடலை நகர்த்துகிறேன்.

கடவுள் என்னை சோம்பேறியாக்கவில்லை, தியானம் என்னை முட்டாளாக்கவில்லை, தேடல் என்பது வெட்டிப் பேச்சு அல்ல, நான் என்ற அகங்காரம் கொண்ட கொக்கறிப்பு அல்ல....தேடலும் தன்னை உணர்தலும் வாழ்க்கையை முழுமையாய் வாழ்பவர்களுக்கான வழிமுறை. மிகக்கூர்மையாக ஒரு தானியம் பொறுக்கும் குருவியைப் போல எனக்கான வாழ்க்கையை கோப்பையிலிருக்கும் பழரசமாய் விரும்பி, அணு அணுவாய் ரசித்து அருந்துகிறேன்.

ஆமாம்...நான் வெற்று நம்பிக்கைகள் கடந்த தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கையில் இருக்கிறேன். எது இருக்கிறதோ இல்லையோ....இப்போது என் கண் முன் எனக்கான வாழ்க்கை இருக்கிறது. ஒரு நிமிடமோ, ஒரு நாளோ அல்லது ஒரு வருடமோ .......

அது எனக்குத் தெரியாது ஆனால் இருக்கும் வரை தீரத் தீர என் வாழ்க்கையை வாழ்ந்தே தீருவேன்...! வெறும்அறிவை மட்டும் வைத்து கொண்டு வாழ்க்கையைத் தோற்க விரும்பவில்லை மாறாக அறிவால் வாழ்க்கையை வென்று அதை ரசிக்கவே விரும்பிகிறேன்.

ரசித்து ரசித்து அந்த ரசனை கொடுக்கும் நிறைவில் நிகழப் போகும் என் மரணம் கூட ரசனையானதுதான்....!

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா....!!!!!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா......!


தேவா. S


Comments

என்னங்க நீங்க.. பதிவு எழுத சொன்னா பரீட்சை எழுதுற மாதிரி பக்கம் பக்கமா எழுதி இருக்கீங்க.. :))

படிச்சு களைத்து விட்டேன்.. ஒரு டீ ப்ளீஸ்..!!!!

ஓகே ஓகே...! (நோ வயலன்ஸ்...)

அட்டகாசமான பகிர்வு.. பதிவு..!

//தோல்விகளின் போது யாராவது ஆறுதல் சொல்ல வேண்டும், சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும் அவ்வளவே.... அது ஒரு இளைப்பாறுதல்... ///

உண்மை.. அந்த இளைப்பாறுதல் Battery Recharge மாதிரி.

//அந்த இளைப்பாறுதலில் சக்தி திரட்டி மீண்டும் இலக்கினைத் தாக்கி அழித்து வெற்றி கொள்ள வேண்டும்.//

கரெக்ட்.. நம்ம வாழ்க்கைய நம்ம தான் தீர்மானிக்கணும்... தீர அனுபவிச்சு ரசிக்கணும்..!

நீங்க சொல்ற மாதிரி இதுக்கு போயி அலட்டிக்கலாமா?? தலைப்பும், இணையான பாடலும்.. சூப்பர்!
வாழ்த்துக்கள்!
அன்பின் தேவா

சிந்தனை செல்லும் விதம் நன்று - "நான்" - புத்தி - மனம் - கடவுள் - சுற்றம் - என அத்தனையையும் அலசி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்த உரை நன்று. நீளம் கொஞ்சம் அதிகம் தான். எழுதுபவனுக்குச் சுகம் - படிப்பவனுக்கு....

//அது எனக்குத் தெரியாது ஆனால் இருக்கும் வரை தீரத் தீர என் வாழ்க்கையை வாழ்ந்தே தீருவேன்...! வெறும்அறிவை மட்டும் வைத்து கொண்டு வாழ்க்கையைத் தோற்க விரும்பவில்லை மாறாக அறிவால் வாழ்க்கையை வென்று அதை ரசிக்கவே விரும்பிகிறேன்.//

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த