Skip to main content

பதிவுலகம்.....?!

















மீண்டும் ஒரு முறை வருடம் பிறந்திருக்கிறது. வழக்கம் போலவே நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு 2012 வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். கடந்த வருடத்தின் தெளிவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து செம்மையான அடுத்த வருடத்திற்கு நம்மை இட்டுச் செல்லட்டும்.

அனுபவம் மிகப்பெரிய ஆசான். காலம் மிகப் பெரிய தோழன்.

எந்தக் கடவுளரும் மனிதர்களும் சொல்லிக் கொடுக்காத பாடத்தை காலம் குறைவில்லாமல் எப்போதும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சூழலையும் கடந்து வந்தவுடன் பெரும்பாலும் மனிதர்கள் அதை மறந்து போய் விடுகிறார்கள். அதை நின்று நிதானித்து குறை, நிறைகளை சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் பொறுமையை தனது குணமாக்கிக் கொன்டு தேவையின் அடிப்படையில் செயலாற்றி வெற்றியைப் பெறுகிறார்கள்.

நிஜத்தில் காலம் என்ற ஒன்றே கிடையாது. காலம் என்பது மட்டுப்பட்ட மனோநிலையின் விரிவாக்கம். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது அப்படி முழுதாய் சுற்றிக் கொள்ள இருபத்தி நாலு மணி நேரம் ஆகிறது என்று கணக்கிட்டு முதலில் சொன்னவருக்கு ஒரு மணி நேரம் என்பது ஒரு அனுமானமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இப்படி பூமி சூரியனை முழுதாய் சுற்றி வர முன்னூற்று அறுபத்தைந்தே கால் நாள் ஆகிறது. இந்த முழுச் சுற்றே வருடமாகிறது. சரி...சுற்றாமல் இருக்கும் சூரியனின் வயதை எப்படி கணக்கிடுவது...? அங்கேதான் இயக்கமே இல்லையே...காலமற்றுப் போயிருக்கிறதே? காலம்தானே வயது என்றெல்லாம் நான் யோசித்து இருக்கிறேன்.

உண்மையில் சொல்லப் போனால் பூமிக்கும், பூமியில் இருக்கும் மனிதர்களுக்குமே காலமும் வயதும் கிடையாது. சுற்றிச் சுற்றிப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பேரியக்க நிகழ்வின் தொடர் நிகழ்ச்சியின் சிறு மாறுபாட்டைத்தான் நாம் வயது என்று கூறுகிறோம். இல்லாத ஒன்றை இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வருடமாய் கடந்து எங்கோ செல்வதாக ஒரு மாயா உணர்வில் நகர்கிறோம்.

நிஜத்தில் எங்கும் நாம் செல்வது இல்லை. இருக்கிறோம். இறப்போம். அப்போதும் இருப்போம் ஆனால் வேறு வடிவத்தில். ஒரு காகிதத்தை எரித்து காற்றில் பறக்க விட்டால் காகிதம் என்ற ஒன்று தனித்து இருக்காது ஆனால் அதன் மூலக்கூறுகள் காற்றில் விரவி, பரவி வேறு பரிணாமத்திற்கு சென்று விடும். மனித வாழ்க்கையும் இப்படித்தான். மிகப்பெரிய அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒன்று.

ஒட்டு மொத்த பிரபஞ்ச நகர்விலும் குறிப்பாக மானுட வாழ்க்கையின் இரண்டு தலையாய தேவைகளாய் பிரபஞ்சம் நியமித்திருப்பது இரண்டு. ஒன்று காமம் ...இன்னொன்று பசி....! எப்படிப் பார்த்தாலும் இதன் விரிவாக்கமாகவே எல்லாப் பிரச்சினைகளும் இங்கு பரந்து விரிந்து கிடக்கிறது.

நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உறவினர்கள் என்று மிகைப்பட்ட பேர்கள் வாழ்த்துச் சொன்ன வருடமாக 2012 அமைந்து விட்டது. வாழ்க்கையின் மிச்சமாக நாம் எதுவும் கொண்டு செல்லப் போவது இல்லை. சுகமான அனுபவங்களும், நல்ல நினைவுகளுமே நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஒரு பொருள்.

கடந்த காலத்தில் ஏதேதோ சூழல்கள் மற்றும் புரிதலின்மைகளால் பல உறவுகளை நாம் பிரிந்திருந்திருக்கலாம். இந்த வருடத் துவக்கத்தில் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து அவற்றை நாம் புதுப்பித்துக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் இது போன்ற பண்டிகைகளும் விழாக்களும் மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவே ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்ப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்து அதனால் எனக்கு கிடைத்த உறவுகளின் எண்ணிக்கை அதிகம். நேருக்கு நேராய் சந்திக்காமல் இருந்தாலும் மனதளவில் அவர்கள் கொடுத்திருக்கும் ஆதரவு அளப்பரியது. இணைய உலகில் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களே...! இங்கே நான் பெரியவனா இல்லை நீ பெரியவனா என்று ஒரு போட்டி வரும் போது அது தேவையில்லாத முரண்பட்ட சூழல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி விடுகிறது.

ஒருவர் போல இன்னொருவர் சிந்திக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒரு தனி விதம். என்னைப் போல இன்னொருவன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய புரிதலின்மையால் ஏற்படுவது. வலைப்பதிவில் எழுத வந்த காலத்தில் எனது பதிவுகளுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டமும், வாக்குகளும் எவ்வளவு அவசியமானது என்பதை நான் அறிவேன். புதிதாய் எழுதுபவர்கள் அந்த பின்னூட்டம் மற்றும் வாக்குகளின் உந்துதலால் மேலும் சிறப்பாக எழுதக் கூடும்.

பெரும்பாலும் நல்ல கட்டுரைகளை வாசித்து அவற்றுக்கு பின்னூட்டமும் வாக்குகளும் இட்டு விடுகிறேன். ஆனால் பெரும்பாலும் நல்ல கட்டுரைகள் சமீபகாலமாக எந்த ஒரு திரட்டியிலும் மேலே வருவதே இல்லை. இதற்கு காரணமாய் குழுவினராய் சேர்ந்து கொண்டு பதிவுகளுக்கு வாக்குள் அளித்து தங்களின் நட்புக்களை நிறைய பேர் நிறுவும் இடமாக திரட்டிகளைக் கொண்டு வந்ததுதான்.

ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பதிவுகள் திரட்டிகளில் இணைக்கப்படும் போது அவற்றை நெறிப்படுத்தி சிறந்த கட்டுரைகளை மேலே கொண்டு வருவது திரட்டிகளால் இயலாத காரியம்.

இது முழுக்க முழுக்க தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தனிமனித ஒழுக்கமும், பொறுப்புணர்ச்சியும் நிறைந்த மனிதர்கள் சேர்ந்ததுதான் ஒரு நல்ல சமுதாயமாய் இருக்க முடியும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், தமிழ் வாசிக்கத் தெரிந்த மக்களும் வாசிக்கும் ஒரு களமாக தமிழ் வலைப்பதிவுலகம் இருக்கிறது. இதன் தரத்தை நிர்ணயம் செய்வதும் நல்ல கட்டுரைகளை ஆதரிக்க வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமை.

நல்ல கட்டுரை என்று நான் சொல்வது புரட்சியான விழிப்புணர்வு கட்டுரைகளையும் சீரியஸ் கட்டுரைகளையும் மட்டுமல்ல....! நகைச்சுவையுடன், வாசிக்க ஆரம்பித்த உடனேயே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் பதிவுகளும், செய்திகள், படங்கள் என்று புதிய செய்திகளைப் பகிரும் பதிவுகளும் நல்ல பதிவுகளே.....

பதிவுலக மொழியில் நல்ல கட்டுரை என்றால் சீரியஸ் கட்டுரைகள்தான் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லிச் சொல்லி நிறையப் பேர் அதையே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் முழுதும் அலுவலக அயற்சியும் அழுத்தமும் நிறைந்து கிடைக்கையில் சில வலைப்பூக்களை எடுத்து வாசித்து விட்டு வாய் விட்டு சிரித்திருக்கிறேன். ஒரு நாளின் அத்தனை மன வலியையும் அந்த நகைச்சுவைகள் தூக்கி தூர எறிந்து உற்சாக மூட்டியிருக்கின்றன.

நகைச்சுவை என்பது ஒரு வரம். ஹாஸ்யம் என்பது புலன்களைப் பூக்கச் செய்யும் ஒரு வழிமுறை. அது மிகையாக சமகாலத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சில வலைப்பூக்களின் தலைப்புக்களை திரட்டிகளில் பார்த்து விட்டு வேகமாய் வலைப் பக்கங்களுக்குள் சென்று இருக்கிறேன். உள்ளே சென்றால் தலைப்போடு சம்பந்தப்படாத ஏதேதோ எழுதி விட்டு கடைசியில் ஒரு நையாண்டி செய்து முடித்திருப்பார்கள். இது மிகப்பெரிய மோசடி. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மனித மனம் போடும் ஒரு அருவறுப்பு மிகுந்த செயல்.

தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் சமீப காலமாக நல்ல கட்டுரைகளை மேலே காண முடிவதே இல்லை. தமிழில் ஆகச் சிறந்த கலை, இலக்கிய, வரலாற்று, நகைச்சுவை, செய்திகள் நிறைந்த பதிவுகளை எல்லாம் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு நேரே சென்று வாசிக்க வேண்டியிருக்கிறது. இப்படியான ஆகச் சிறந்த வலைப்பதிவுகளை பின் தொடர்பவர்களும் மிகக் குறைவாக இருப்பது மிகவும் வேதனையான விடயம். பின் தொடர வேண்டுமெனில் அறிமுகம் வேண்டுமல்லவா...? திரட்டிகளில் முன்பக்கத்தில் வராமல் எப்படி அறிமுகமாக முடியும்....

முத்துக்களைப் போன்ற வலைப்பதிவுகளை அங்கும் இங்கும் தேடித் தேடி வாசிக்க வேண்டி இருக்கிறது. நிறையப் பேருக்கு இவை சென்று சேர்வதில்லையே என்ற வலியும் ஏற்படுகிறது. இவையெல்லாம் மாற வேண்டும் காழ்ப்புணர்ச்சிகள் இன்றி, சாதி, மதம், அரசியல் மற்றும் குழு மனப்பான்மைகள் அற்று ஒவ்வொரு பதிவுகளையும் நாம் வாசித்து நல்ல பதிவுகளுக்கு வாக்குகள் அளிக்கவும் செய்யத்தான் வேண்டும்.

இது தமிழ் வலைப்பதிவுகளின் தரத்தை உயர நாம் செய்யும் முயற்சி மட்டுமல்ல நமது மொழியின் நிலைப்பாட்டுத் தன்மைக்கும் எதிர்கால சந்ததியினர் வாசிக்கையில் அவர்களுக்கு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க நாம் செய்யும் உதவி. இது தனிமனித முயற்சியால் விளையும் என்பது திண்ணம்.

இதை எல்லாம் ஒரு வாசகன் என்ற கண்ணோட்டத்தில் பதிய வேண்டியதை எனது கடமையாக நினைக்கிறேன். தமிழ்பதிவுலகம் அற்புதமான படைப்பாளிகளால் சூழப்பட்டது, அன்பான நண்பர்களால் ஆனது. இது ஒரு குடும்பமாய் தமிழர்களை இணைக்கும் ஒரு மிகப்பெரிய நவீனத்தின் வரம். இதனை சரியான வகையில் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனும் கடமையாகக் கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக தமிழ் மணம் நிர்வாகத்தினர் நட்சத்திர பதிவர் என்ற மேடையினைக் கொடுத்து என்னுடைய கருத்துக்களை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்க்க உதவி செய்தனர். தமிழ் மணம் நிர்வாகத்திற்கு எனது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில்....

தொடர்ந்து எனது வலைப்பூவினை வாசித்து வரும் அன்பான நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துதான் ஆக வேண்டும்.

மிகப் பெரிய போட்டிகளும், அரசியல் விளையாட்டுக்களும் நிறைந்த இந்த பதிவுலகத்தில் வசீகரிக்கும் எந்த விடயத்தையும் கையாளாமல், எந்த வித சந்தைப்படுத்துதலையும் கைக்கொள்ளாத, எனது ஆக்கங்களை தொடர்ந்து நீங்கள் வாசித்து வருவதே எனது அடுத்த அடுத்த கட்டுரைகளை பிறப்பிக்கும் மிகப்பெரிய காரணியாகிறது.

உங்கள் அத்தனை பேருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களோடு எனது அன்பான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.....!

ப்ரியங்களுடன்....

தேவா. S


Comments

மீண்டும் ஒரு முறை வருடம் பிறந்திருக்கிறது.///

நார்மல் டெலிவெரியா? சிசேரியனா? :)
vinthaimanithan said…
//எனது ஆக்கங்களை தொடர்ந்து நீங்கள் வாசித்து வருவதே//

ஓ பிதாவே.. இவர்களை ரட்சியும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தாரில்லை. ஆமென்!

:))))
Kousalya Raj said…
கடந்த ஒரு வாரமாக எழுத்துக்கள் பற்றிய உங்களின் பல்வேறு பார்வைகளை பகிர்ந்த விதம் அருமை.

அதிலும் பதிவுலகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை ஒரு வாசகன் என்ற கண்ணோட்டத்தில் பதிந்தமைக்கு பாராட்டுகள்.

சிறந்த எழுத்துக்கள் திரட்டிகளில் இடம் பெறவில்லை என்றாலும் அவற்றை தேடி சென்று படிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்...தாமதமாக படிக்க நேர்ந்தாலும் நல்ல எழுத்துக்கள் வாசகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது தான் உண்மை.

வாழ்த்துக்கள்.
திரட்டிகளின் தரவரிசைகளை குறிவைத்தே பதிவுகள் எழுதப்படும் காலம் இது. கொடுக்கல் வாங்கலாக போடப்படும் டெம்ப்ளேட் கமெண்ட்டுகளும், ஓட்டுக்களும், கமெண்ட்டில் பதிவுகளுக்கான விளம்பரங்களும் வெகுவாக அதிகரித்துவிட்டன. முன்பு ஓரிருவர் செய்து கொண்டிருந்தார்கள், இப்போது பெரும்பாலோனோர் செய்கிறார்கள்.

பொதுவாக ஒரு வலைப்பூவிற்கு வருகை தருபவர்களில் 30% பேர் எதையும் படிப்பதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படியாவது ஹிட்ஸ் கிடைத்தால் சரி என்று விரும்புபவர்கள் அதிகம். திரட்டிகளும் இந்தப் போக்கை ஊக்குவிக்கும் முகமாகவே நடந்துகொள்கின்றன.

சமீபகாலமாக புதிதாக வரும் பதிவர்களிடமும் இந்தப் போக்கை அதிகமாகக் காண்கிறேன். எது எப்படியோ அடுத்தவரை பாதிக்காதவரை அது அவர்கள் சுதந்திரம், நாம் எதுவும் சொல்ல முடியாது!
Sivakumar said…
நல்ல பதிவுகளை தேடிப்படிக்க நேரம் ஆகலாம். வேறு வழியில்லை. திருத்த முயற்சித்தால் நம் மண்டைதான் காயும்.
ப.ரா. அவர்களின் கருத்தை நான் முழுவதுமாக ஆமோதிக்கிறேன்.
ஒரு வாரமாக.. உங்களுக்கு கொடுக்கப் பட்ட பணியை சிறப்பான பதிவுகளின் மூலம்... பூர்த்தி செஞ்சிட்டீங்க.

வாழ்த்துக்கள்! :))

புது வருடத்திலும்.. உங்கள் எழுத்துப் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//Blogger Palaniappan Kandaswamy said...

ப.ரா. அவர்களின் கருத்தை நான் முழுவதுமாக ஆமோதிக்கிறேன்.//


அப்படியே நானும் :-))

புது வருட வாழ்த்துக்கள்
அனுபவம் மிகப்பெரிய ஆசான். காலம் மிகப் பெரிய தோழன்.

அருமையான வரிகள் நன்றி
நட்சத்திர வாழ்த்துகள்
உண்மையில் சூரியன் சுற்றவும், சுழலவும் செய்கிறது..
rajamelaiyur said…
//உங்கள் அத்தனை பேருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களோடு எனது அன்பான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.....!
//

வாழ்த்துகள் நண்பா
Anonymous said…
பதிவுலகத்துக்கு ஒரு வாசகியாகத்தான் நான் வந்தேன். ஒரு அடையாளத்திற்காகவே ப்ளாக் வச்சுருக்கேன்.. அதில் 2 , 3 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.. அதற்க்கு கமெண்ட்ஸ் வரும்பொழுது நமக்கு ஒரு சந்தோசம் கிடைக்குது. இன்னும் நிறைய பேர் படிக்கணும் படிக்க வைக்கனும்னு ஒரு உணர்வு வருது.. அதனால நானும் சிலரெல்லாம் லிங்க் குடுக்கறத பார்த்துட்டு எப்படி குடுத்த தப்பிலன்னு குடுத்தேன்.. ஆனா அப்படி குடுக்கும் போது ஒரு நெருடல் வரும், அப்புறம் குடுக்கறத நிறுத்திட்டேன்..

ஆனா நான் இப்போ புதுசா எதும் எழுதலை.. என்ன எழுதரதுனும் தெரியலை.. எதையாவது எழுதறதுக்கு சும்மா இருக்கலாம்னு பழையபடி எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு வரேன், ஆனா என்னதான் தேடுனாலும் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 பதிவு தான் நல்லா இருக்கு..

நான் இந்த 5 மாதமாகத்தான் பதிவுகள படிக்கறேன் அதனால எல்லாருடைய பழைய பதிவுகள படிச்சிட்டு இருக்கேன்........

நல்ல பதிவர்களே நல்லா எழுதுங்க நிறைய எழுதுங்க படிக்கறதுக்கு என்ன மாதிரி நிறைய பேர் இருக்காங்க...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த