Skip to main content

சரணாகதி....!



சில நேரங்களில் வாழ்க்கையின் போக்கு நமக்கு பிடிபடுவதில்லை.  திட்டமிட்டு செய்தேன் என்று சொல்வது எல்லாம் வாழ்க்கையின் போக்கோடு பொருந்தி நடக்கும் ஒரு சில செயல்களைத்தான் மற்றபடி ஒரு ஆற்றில் மிதக்கும் மரக்கட்டையைப் போலத்தான் வாழ்க்கையின் நகர்வு இருக்கிறது.

வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம்.

சரணாகதி என்பது என்பதின் தூய தமிழாக நான் நினைப்பது ஒப்புக்கொடுத்தல். இந்த ஒப்புக் கொடுத்தல் என்னுமிடம் வேசம் போடும் இடம் அல்ல, மாய வார்த்தைகளைக் காட்டி வசீகரிக்கும் வித்தையல்ல, காரியம் ஆகவேண்டி காலைப் பிடிக்கும் யுத்தியும் அல்ல....ஒப்புக் கொடுத்தல் என்பது மிகப்பெரிய புரிதல். தான் எதைச் சார்ந்திருக்கிறோமோ அல்லது எவரிடம் நம்மைக் முழுதுமாய் அர்ப்பணிக்கிறோமோ அந்த செயலிலோ அல்லது மனிதரிடமோ நாம் வைக்கும் நம்பிக்கை.

நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடேயே வாழும் வாழ்க்கை ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை. தன் மீதும் தனது தீர்மானித்தின் மீதும் அவநம்பிக்கை கொண்ட மனிதர்கள்தான் எதிலுமே நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். கணிக்கத் தெரிந்த மனிதன், விசுவாசத்தாலும், புத்தியினாலும் மனிதர்களை எளிதில் கணிக்கிறான். அந்த கணித்தலை புரிதலாக்கி, புரிதலை நம்பிக்கையாக்கி தன்னை ஒப்புக் கொடுக்கிறான் அல்லது சரணாகதி அடைகிறான்.

வாழ்க்கையிடம் சரணாகதி அடைதலும், இறைவன் என்ற ஒரு மறை பொருளிடம் சரணாகதி அடைதலும் ஒன்றுதான். பிறப்பையும், இறப்பையும் உணர்ந்தவன், சக மனிதர்களின், காலத்தின் மற்றும் சூழல்களின் நகர்வுகளை உணர்ந்தவன், வாழ்க்கையின் அடர்த்தி என்னவென்று பிடிபட்டுப் போய் வாழ்க்கையிடம் தன்னை சரணாகதி கொடுக்கிறான். என் செயல்களைச் செம்மையாய்ச் செய்வேன். வாழ்க்கை என்ன வேண்டுமானலும் கொடுக்கலாம்...எனது விருப்பு வெறுப்புக்கள் இன்றி அவற்றை ஏற்று நகர்வதே எனது புரிதல் என்ற நகர்வுதான் வாழ்க்கையிடம் தன்னை ஒப்புக் கொடுத்தல் ஆகிறது...

தன்னை தானே மனிதர்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வது இல்லை. தனது தகுதிகளாக ஏதேதோ குப்பைகளை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஏலம் போடும் மடத்தனத்தையே மிகைப்பட்ட பேர்கள் செய்வதால் அவர்களால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பது கடைசி வரை இயலாமலேயே போகிறது.

வாழ்க்கையைப் புரியவில்லையா... சரி, இதோ இங்கே வா... இதோ பார் இவர்தான் உன் கடவுள் இவரைப் பற்றிக் கொள். இவரிடம் உன் குறைகளைக் கூறு, இவர் சரி செய்வார் என்று ஒரு மாற்று வழியை மன திடம் இல்லாதவர்களுக்கும், வாழ்க்கையைப் புரியாதவர்களுக்கும் சில நல்லவர்கள் உண்டு பண்ணிச் சென்றிருக்கின்றனர். இதைச் சரியாக புரிந்து கொண்டு தன்னை இறைவனிடம் சரணாகதி கொடுத்து திருப்தியின் எல்லையை தொட்டவர்களும் இருக்கின்றனர்....

இந்த வழி முறையிலும் சறுக்கி விழுந்து விலங்குளைப் போல அடித்துக் கொண்டு கடைசிவரை ஒரு மிருகத்தைப் போல வாழ்ந்து மரித்தவரும் இருக்கின்றர்.

இந்த இரண்டு வழிமுறைகளையும் கடந்த ஒரு மிக உன்னதமான வழிமுறைதான் மனமற்ற நிலையில், இப்பிரபஞ்சத்தின் எல்லா நகர்வுகளும் தன்னோடு தொடர்புள்ளது என்று புரிந்து தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சரியான பாதையைக் காட்டும் ஒரு குருவிடம் தன்னை ஒப்புக் கொடுத்தல்.

குருநிலை என்பது ஆதியில் இருந்த சூன்யத்திற்கும் முன்பிருந்த ஒரு கருத்து வடிவம். குரு நிலை என்பது மேலே சொன்ன இரண்டு வழி முறைகளையும் விட மிகவும் எளிதானதும், மிகப்பெரிய புரிதலைத் தரக்கூடிய ஒரு உன்னத வழிமுறை. காரணம்....இங்கே உருவமாக குரு இருப்பார் ஆனால் அவர் உருவமற்றதை அடைய அல்லது உணர, அதாவது நமது உண்மை இருப்பை அறிய வழிகாட்டவும் செய்வார்.

இங்கே குருவின் விரலினை சந்தேகத்துடன் பிடிக்கும் ஒருவன் புலியின் வாயில் சிக்கிய இரையாய் குருவாலேயே அழித்தொழிக்கப் படுகிறான். அதாவது மனமற்ற நிலையில் பிரபஞ்சத்தின் இருப்பாய் இருப்பவர்தான் குரு...! இப்படியான குருவை தனது சுயநல பயன்பாட்டுக்குப் ஒரு பொருளாய் பயன்படுத்த நினைக்கும் ஒருவன்..தனக்கு தானே அந்த விளைவினைப் பெற்றுக் கொள்கிறான்.

வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு காறி உமிழும் ஒருவனின் நிலையை, பிரபஞ்ச இருப்பில் இருப்பவர்களை வியாபரத்திற்காக பயன்படுத்தும் போது அப்படி பயன்படுத்துபவனே வியாபாரமாகிப் போகிறான்.

எப்படிப் பார்த்தாலும் சரணாகதி என்று சொல்லுமிடம் ஒருவனின் நம்பிக்கையின் உச்சம். நான் வாழினும், கொடுமையாய் வீழினும் நான் பற்றிய கையை விடேன் என்று ஒருவன் சரணாகதி அடைவதற்கு முன் தன் தீர்மானத்தின் மீது நம்பிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்.

தன்னை சரியாகப் புரிந்து கொள்ளதாவன், தெளிவில்லாவதன், முட்டாள், மடையன், மூர்க்கன், மூட நம்பிக்கையை பின் பற்றுபவன், பேராசைக்காரன், முன் கோபி, பொறாமைக்காரன், தற்பெருமை பேசுபவன் இவர்களால் சரியான படி வாழ்க்கையையோ, இறைவனையோ, அல்லது குருவையோ உணரவே முடியாது. இப்படி தன்னை ஒரு தெளிவில்லாதவனாக வைத்துக் கொண்டு இவர்கள் பற்றும் கரம் ஒரு திருடனுக்கும், ஏமாற்றுக்காரனுக்கும், ஆன்மீகம் என்ற பெயரில் திருட்டு போகத்தில் திளைப்பவனுக்கும் சொந்தமானதாகியே போகிறது.....

இதையும் அவர்கள் சரணாகதி என்றே கூறுவார்கள்...ஆனால் அது ஒரு ஞானத் திருட்டு அல்லது குருட்டுப் புரிதல் என்றே கூறவேண்டும். இப்படியான ஒரு செயல் சரணாகதி அல்ல...கிட்டத் தட்ட தற்கொலை.

தன்னை உணராதவன் இந்த உலகத்தில் தெளிவான காட்சிகளை காண முடியாது. சரியான மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது. ஒரு மாதிரியான மன நிலை பேதலித்தது போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தன்னைப் பற்றியும், தன் செயல்கள் பற்றியும் இடைவிடாது பேசிக் கொண்டே ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் இறுதியை எட்டி மரணித்துப் போகிறார்கள்.

என்னை சரணாகதி கொடுத்திருக்கிறேன்...இந்த மனிதரிடமோ அல்லது விசயத்திடமோ அல்லது செயலிடமோ நான் முழுமையாய் நம்பி என்னை கொடுத்திருக்கிறேன். நான் சார்ந்திருக்கும் விடயம் என்னை கடைத்தேற்றும் என்று கூறுபவர்கள் அத்தனைப் பேரும் முதலில் தங்களைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்....

அப்படியான புரிதலில்.......நீங்கள் வாழ்க்கையிடமோ, புரிதலுடன் கூடிய ஒரு கருது பொருளான கடவுளிடமோ அல்லது தெளிந்து விளங்கிய ஒரு குருவிடமோ உங்களை ஒப்புக் கொடுக்கும் போது...

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் ஒரு சிம்மமாய் அதை அறுத்தெறிந்து வெளியே வருவீர்கள் என்பது முக்காலமும் உண்மை.

தேவா. சு

பின் குறிப்பு: வாழ்க்கையும், இறைவன் என்ற ஒரு கருது பொருளும் கூட குரு நிலையின் செயல் வடிவங்களே...!



Comments

உங்கள் தெளிவான எழுத்தை மிகவும் ரசித்தேன்.
எழுத்தறிவித்தவன்
இறைவன்..
வைகை said…
வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம்//////////////



சரணாகதி அடைதல் அல்லது நீங்கள் சொல்லுவது போல் ஒப்புக்கொடுத்தல் இதில் நாம் எதை செய்தாலும் தேங்கிவிட மாட்டோமா? ஓடிகிட்டே இருக்கிற வரைதான் அதற்கு ஆறுன்னு பேரு..தங்கிவிட்டால் அது குட்டைதான், நாமளும் அப்பிடித்தானே? ஏதாவது ஒரு தேடல் இருந்துகிட்டேதான் இருக்கவேண்டும் அதைவிட்டு வாழ்க்கையின் போக்கிலோ அல்லது இறைவன் அல்லது குருவிடமோ நம்மை ஒப்படைத்துவிட்டால் நம் மனதும் தேங்கிவிடாதா? தேடல் இல்லையென்றால் நம் மனதும் கூட குப்பைகளின் கூடாரம் ஆகி விடாதா? உதாரணமாக நானோ நீங்களோ விரும்பி வெளிநாட்டில் இல்லை.. நாம் இங்கு வரும்போது குறைந்த பட்ச தேவைகளுக்காக வந்தோம் ஆனால் இப்போது அந்த குறைந்த பட்சத்தையே நம்மால் தீர்மானிக்க முடியவில்லை.. இந்த நேரத்தில் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு நானோ நீங்களோ தாய்நாடு செல்ல முடியுமா? இந்த சரணாகதி எல்லோருக்கும் சாத்தியமா? :-)
dheva said…
வைகை @ வாழ்க்கையிடம் ஒப்புக் கொடுக்குமிடம் வாழ்க்கை விட்டு விலகிப் போதல் அல்ல...வாழ்க்கையின் இயல்போடு ஒன்றி வாழுதல். வெளிநாட்டில் இருப்பது நியதி இதை ஏற்றுக் கொண்டு அந்த சூழலோடு இயைந்து நகர்தலே...உண்மையான வாழ்க்கையை ஏற்றல் ஆகிறது.

மறுத்து சொந்த ஊருக்கு நகரவேண்டும் என்ற நியதியில் நீங்கள் நகர விரும்பாமல் அங்கேயே இருக்க முடியாது..அப்படி நினைத்தால் அது முரண். இப்போது இருக்க வேண்டிய நிலை...அது இயல்பு..இதை மீற நினைத்தால் முரண்...!

ஒப்புக் கொடுத்தல் என்பது தேங்கிக் கிடத்தல் அல்ல...சுதந்திரமாய் இன்னும் வேகமாய் இயங்குதல் என்றுதான் ஆகிறது.

நன்றிகள் வைகை...!
//ஒப்புக் கொடுத்தல் என்பது தேங்கிக் கிடத்தல் அல்ல...சுதந்திரமாய் இன்னும் வேகமாய் இயங்குதல்//

அருமையான விளக்கம் அண்ணா. உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த