காலையில் கண்கள் விழித்த போதே மூளையைப் பற்றிக் கொண்ட ஒரு பரபரப்பை அட.. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று உடனே அணைத்துப் போட்டேன். வழக்கமாய் காலையில் அரக்கனைப்போல எழுப்பி விடும் அலாரத்தை சமாதானமாய் பார்த்தேன் மணி 7 ஆக இன்னும் ஐந்து நிமிடம் என்று சாதுவாய் சொன்னது.
படுக்கையில் புரண்டேன்....உடலெல்லாம் கடுமையான ஒரு வலி இருந்தது. மெல்ல கைகால்களை நீட்டி சோம்பல் முறித்து உடலை வளைத்து கோணி ஏதேதோ செய்து கொண்டிருந்தேன் ஆனால் சுத்தமாக படுக்கையில் இருந்து எழ மனதே இல்லை. பெட்சீட்டை எடுத்து காலில் இருந்து இழுத்து தலைவரை முக்காடு போல போர்த்தி காதுகளை இறுக்க அடைத்து ஜனவரி மாதக் குளிர் கண்ணாடி ஜன்னலைத் தாண்டி உள்ளே வந்தாலும் எனக்குள் செல்ல முடியாதவாறு தடையிட்டேன்...
உறக்கம் முழுதாய் வரவில்லை இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு அப்படியே வெறுமனே படுத்திருப்பது சுகமாய் இருந்தது. தனியாக இருப்பது ஒரு மாதிரி கஷ்டம்தான் என்றாலும் அது ஒரு மாதிரி வலியோடு கூடிய சுகம்தான். சுகம் என்பதை விளங்கிக் கொள்ள மனம் ஒத்துக் கொள்ளாது. ஏனேன்றால் மனதுக்கு தனியே இருப்பது எப்போதும் பிடிக்காது. அது கூட்டத்திற்கு நடுவே நின்று எப்போதும் கெக்கே பிக்கே என்று வாய் இளித்து கோணி சிரித்து தன்னை எப்போதும் மானுட கூட்டத்தின் மையம் என்று நிறுவவே முயன்று கொண்டிருக்கும்.
மேதாவித் தனத்தைக் காட்ட எப்போதும் தனது புலமையைக் கடை பரப்பும். ஒரு என்சைக்கிளோபீடியாவைப் போன்று விபரங்களை மனிதர்களிடம் வாரி இறைத்து உள்ளுக்குள் நான் இம்புட்டு செய்திகளை தெரிஞ்சவனாக்கும் என்று சந்தோசப்பட்டுக் கொள்ளும். இந்த அற்ப சுகத்தை விளங்கிக் கொண்டு அதில் இருக்கும் மடமை விளங்கி விட்டால் தனிமையின் உன்னதத்தை மனம் விளங்கிக் கொள்ளும்...
மனம் அடங்க அறிவுரைகள் உதவாது. மனம் அடங்க அனுபவித்தலும், உணர்தலும், சலனமில்லாமல் வேடிக்கைப் பார்த்தலுமே உதவுகிறது. நாம் எப்போதும் நம்மை வேடிக்கை பார்ப்பது கிடையாது. எப்போதுமே வேடிக்கை பார்ப்பதை மற்றவர்களிடமே நிகழ்த்துகிறோம். அதனாலேயே நம்மைப் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விடுகிறது.
விடுமுறை என்றால் நாய் போல சுற்றி இருக்கிறேன். சினிமா, பீச், நண்பர்கள் சந்திப்பு, பார்ட்டி, என்று மூச்சிறைக்க சுற்றி விட்டு இரவு பதினோரு மணிக்கு படுக்கையில் விழும்போது விடுமுறையை ஏதேதோ செயல்களால் அனுபவிக்காமல் விட்டது போலத் தோன்றும். புறம் நோக்கிய பாய்ச்சலில் புலன்களுக்கு நாம் சந்தோசத்தை கொடுக்கிறோம்... ஆனால் எப்போதும் ஆத்ம திருப்திக்காக ஏதாவது செய்திருக்கிறோமா என்று துல்லியமாக யோசித்துப் பார்த்தால்... உதட்டைப் பிதுக்கி நோ.....அப்டினா என்ன பாஸ் என்றுதான் கேட்க தோன்றும்....
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொழில் மேம்பாட்டு அதிகாரியாக இருக்கிறேன். என்ன முழிக்கிறீங்களா...? அதான் பிஸினெஸ் டெவலப்மெண்ட் எக்ஸ்கியூட்டிவ்....! ஊரைச் சுற்றி கொண்டே இருக்கையில் ஓராயிரம் மனிதர்களை நான் சந்திக்க வேண்டிய உத்தியோக அவசியத்தின் பின்னால் கண்ணில் தெரியாத விற்பனை இலக்கு நின்று கொண்டு பயமுறுத்தும். ஒவ்வொரு நிறுவனத்திடமும் முன் அனுமதி வாங்கி அவர்களிடம் சென்று நான் படித்த எம்.பி.ஏ என்னும் பட்டப்படிப்பின் அறிவுச் சாரத்தையும் என் நிறுவனம் கற்றுக் கொடுத்த தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, அவர்களை எங்களது வாடிக்கையாளராக்க வேண்டும்...
வாடிக்கையாளரான பின்னால் எங்கள் நிறுவனத்தோடு அக்ரீமண்ட் அது இது என்று இத்யாதிகளை முடித்து விட்டு கடைசியில் காசோலை வாங்கிக் கொண்டு வந்து நான் பணி செய்யும் நிறுவனத்தில் கொடுக்கும் வரை நமது பொறுப்புதான். வாராவாரம் நடக்கும் தொழில் மேம்பாட்டுக் கூட்டத்தில் மேலாளர் வைக்கும் ரிவிட்... அடுத்த வாரம் நாம் வேலையில் இருப்போமா இல்லையோ என்ற மறைமுக பயத்தை மூளைக்குள் பரவவிட்டு அதை இரத்த அழுத்தமாய் மாற்றி உடம்பு முழுதும் பரவவிடும்.
படுக்கையில் படுத்துக் கொண்டு அலுவலக தினத்தின் அன்றாடப்பகுதிக்கு உங்களையும் சேர்த்துக் கூட்டிச் சென்ற என் மூளையை வன்மையாக கண்டித்து விட்டு விடுமுறைக்குள் நுழைவோம்...
பொதுவான என் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு மனிதத் தொடர்புகளை மெல்ல மெல்ல விடுமுறை தினத்தில் உள்ளிழுத்துக் கொண்டு அன்றைய தினத்தை நிஜமான ஒரு விடுமுறையாய் ஆக்கிக் கொள்வதில் கிடைக்கும் சந்தோசம் இருக்கிறது பாருங்கள்....அது எதோடும் ஒப்பிடமுடியாது....
சிங்கப்பூரில் இருக்கும் அக்காவும் அத்தானும் வருடம் ஒரு முறை வந்து போகும் இந்த போரூர் பிளாட்தான் என்னுடைய ஜாகை. யாருமே கிடையாது... நானே ராஜா....நானே மந்திரி...நானே எல்லாம்...! கல்யாணம் ஆகுறவரைக்கும் நீ என் ஜாய் பண்ணுடா ராஜான்னு அக்கா அடிக்கடி கொடுக்கும் மிரட்டலின் பின்பக்கம் எப்படி இருக்கும் என்பதை திருமணம் ஆனவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று அது பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது.
பத்து மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து பிரஷ் செய்து விட்டு முகம் கழுவி, பால்கனிக்கு வந்து நின்றேன்... ஞாயிற்றுக் கிழமையை பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் விளையாட்டாய் கழித்து கொண்டிருக்கையில், அவ்வப்போது பார்த்துக் கொள்ளும் அந்த அப்பார்ட்மென்டின் அங்கிள்ஸ் எல்லாம் கீழே மரத்தடியில் நின்று இந்திய அரசியலை ஒரு காட்டு காட்டிக் கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக் கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயவு தாட்சணியமின்றி எல்லா வீட்டு தொலைக்காட்சிகளும் காற்றில் பரவவிட கூடவே விடுமுறை தினத்தின் ஸ்பெசல் சமையலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறி மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது
கீழ் வீட்டு மாமி.....குப்பையைக் கொட்ட வெளியே வந்தவள்....ஏண்டா அம்பி காத்தால எழுந்து இன்னும் குளிக்கவே இல்லையாடா நீ....லீவு நாளுதானே.. தனியாத்தானே இருக்கே ....காத்தால எழுந்து மாமா கூட கோயிலுக்கு போயிட்டு வந்தா என்ன? என்று உரிமையோடு கேட்டு விட்டு அந்த ஐம்பது வயதிலும் தனது சுறுசுறுப்பை எனக்கு விளம்பரப்படுத்தாமல் படுத்தி விட்டு உள்ளே சென்று விட்டாள்....
வாரம் முழுதும் நாயாய் எல்லோரும் உழைக்கிறார்கள். வாரக் கடைசியில் அதை கழிப்பதற்கு பிசாசாய் திட்டமிடுகிறார்கள். அலுத்து சலித்து விட்டு இரவு நடு ஜாமத்தில் கதவு திறந்து அடுத்த தினத்தை நொந்து கொண்டு மரக்கட்டையாக படுக்கையில் சரிகிறார்கள்.
வெளியே செல்லாமல் இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதற்காக மாதம் முழுவதுமா...? இன்னும் சொல்லப்போனால் வீட்டு அத்தியாவசிய வேலைகளை முடிக்க கூட ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அந்த வேலைகளைச் செய்யலாம். தவிர்க்க முடியாத குடும்பத்தேவைகளுக்கு நாம் நேரம் செலவிடத்தான் வேண்டும்....
அது இல்லாமல் வெறுமனே வீக் எண்ட் பிளான் போடுகிறவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுதான் இருக்கிறேன்.
விடுமுறை என்பது வழக்கமான பரபரப்புகளை மூளைக்கு கொடுக்காமல் நாம் எடுக்கும் ஓய்வு. அந்த ஓய்வு என்பது ஒரு பேட்டரி ரீசார்ஜ் போலத்தான் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை. தவறாகக் கூட இருக்கலாம்....
பதினோரு மணிக்கு கொஞ்சம் பசி எடுத்தது...கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு, குளிக்கப் பிடிக்காமல் ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தேன். டிவியைப் போடு என்று சொன்ன மனதை அடக்க முடியாமல் எல்லா சேனலையும் ஒரு முறை சுற்றி விட்டு என்னுடைய அலை பேசியை எடுத்துப் பார்த்தேன்...15 மிஸ்ட் கால்ஸ்.....
எல்லா அழைப்பும் ஒவ்வொரு முறை அழைக்கப்பட்டது. அவசரமாய் பேசவேண்டியவர்கள் இல்லை. அவசரமாய் இருந்தால் என் விடுமுறை தினத்தில் எனக்கு என் நண்பர்கள் தொலை பேசியில் அழைத்து தொல்லை கொடுக்க மாட்டார்கள். இரண்டு வரியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விசயத்தை தெரிவித்தால் நான் திரும்ப கூப்பிடுவேன்....அதுவும் விசயத்தின் முக்கியத்துவத்தை பொறுத்து....
இல்லையேல்.....விடுமுறையில் தொலைபேசியோடு பந்தமில்லாமல்தான் இருப்பேன். ஆமாம் வாரம் முழுதும் அதோடு கட்டிக் கொண்டுதானே அழுகிறோம்.
வாழ்க்கையின் நிலைப்பாடுகளை சூழலைப் பொறுத்துதான் நாம் எடுக்கிறோம். ஆனால் எந்த நிலைப்பாடாய் இருந்தாலும் சரி அது நமக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்க வேண்டும். மாறாக அயற்சியைக் கொடுக்கிறது என்றால் அந்த உறவுகளும், சூழலும் கண்டிப்பாய் பரீசிலிக்கப்பட வேண்டியவையே....
வீட்டினை சுத்தம் செய்து விட்டு துவைத்துப் போட்டிருந்த துணிகளை எல்லாம் மடித்து வைத்தேன். கையில் எனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கையிலேயே உறக்கம் மெல்ல மீண்டும் கண்களை இறுக்க.... வயிறு இதுக்கு மேல் பொறுக்க முடியாது என்று சமையலறைக்கு விரட்டியது. இரண்டு நிமிடத்தில் செய்யும் நூடுல்சை ஒரே நிமிடத்தில் செய்து துணைக்கு கொஞ்சம் ஊறுகாய், ஒரு ஆம்லெட் என்று ஒரு பதினைந்து இருபது நிமிடத்தில் பசியடங்கிப் போனது.
அவ்வளவுதான்...!
பசி என்பது உடலின் தேவை. உடலின் சக்தி பரிமாற்றத்துக்கு நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டம். அதை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் போதும் இதற்காக மெனக்கெட்டு தேடி தேடிப் போய் அங்கே அங்கே சாப்பிட்டு அங்காலாய்த்து நாக்கை வளர்த்துக் கொள்வது கிடையாது. தேவைக்கு உண்பவன் என்ற அளவிலேயே ருசியை நான் பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது என்று விரும்பி விரும்பி சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்த உடன்... அந்த உணவு தேவாமிர்தமாய் இருந்தாலும்....வேண்டாம் என்றுதான் சொல்லியாக வேண்டும்....
ஒரு குட்டித் தூக்கத்தோடு மதியத்தைக் கடந்து 4 மணிக்கு சில்லென்று தலைக்கு தண்ணீரை வாங்கிக் கொண்டு குளித்து முடித்தேன். மதிய உறக்கத்திற்கு பிறகான மாலைக் குளியல் நிஜமாகவே சுவர்க்கம்தான். உடம்பு முழுதும் ஒரு வித மதமதப்பு இருக்கும். சில்லென்று தண்ணீர் பட்டவுடன் பட்டென்று புத்தி விழித்துக் கொள்ள உடம்பு முழுதும் ஒரு உற்சாகம் பரவ ஒரு வித சோம்பல் கலந்த புத்துணர்ச்சியில் ஒருவிதமான சுகம் கிடைக்கும் ......அனுபவித்துப் பாருங்கள்..!
5 மணிக்கு வேஷ்டியை உடுத்திக் கொண்டு செருப்பிட்டு வீட்டுக் கதவை அடைக்கப் போகையில் பக்கத்து வீட்டு லாரன்ஸ் மாமா... வேகமாய் ஓடி வந்து அவர் வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். மறுபடி போணும் சதீஷ்.... காலைல வெளில போனோம்....ஈவினிங் ஷோ படம் பார்க்க ரிசர்வ் பண்ணின டிக்கெட் எடுக்காம போய்ட்டேன்....அதான்....கதவை மோதிக் கொண்டு உள்ளே ஓடினார்....
படியிறங்கி கீழே வந்தேன்....! பகுருதீன் அண்ணன் கடை வாசலுக்குப் போன உடனேயே வாங்க சாமியார் சார்....பட்டினியா கிடந்து யாருக்கு காசு சேக்குறீங்க என்ற நக்கலோடு சூடாய் டீயை என்னிடம் நீட்டினார். சிரித்தபடி டீ கிளாசுக்கு உதடு கொடுத்து மெல்ல உறிஞ்சினேன்.... ஜனவரி மாத மாலை நேரத்து ஞாயிற்றுக் கிழமை சென்னை குளுமையாய் ஓய்வாய் கிடந்தது...., பரபரப்பில்லாமல் கேசம் கலைத்த காற்று உடலுக்குள் புகுந்து சில்மிஷங்கள் செய்து விட்டு என்னையே சுற்றிச் சிரித்துக் கொண்டிருந்தது.......
தொண்டையை இனிப்பும் ஒரு துவர்ப்பும் கலந்த டீ சுகமாய் கடந்து செல்ல உடம்பெல்லாம் ஒரு வித சூடு பரவியது. கடைசி உறிஞ்சலில் காலியான கோப்பையை பகுருதீன் அண்ணனிடம் சில்லறையோடு கொடுத்து விட்டு....பேருந்து பிடித்து ஒரு 30 நிமிடத்தில் கோவூர் வந்து விட்டேன். கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சுந்தரேஷ்வரர் அல்லது திருமாணீஸ்வரர் என்று சிவனை இங்கே அழைக்கிறார்கள்.
வார இறுதியாதலால் கூட்டம் கொஞ்சம் மத்திமமாய் இருந்தது. மூலவரை சம்பிரதாயமாக சந்தித்து விட்டு... சுற்று ஓரமாய் இருந்த மண்டபத்தில் போய் அமர்ந்தேன். குண்டு பல்பின் மங்கிய மஞ்சள் ஒளி ஏதோ மனசை செய்ய.....
சம்மணமிட்டேன்....! மெல்ல கண்களை மூடி....கோயிலின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு , மெல்ல நகர்கையில், இரைச்சலான வாரநாட்களும் டை கட்டிக் கொண்டு ஒரு ஆக்ரோஷ விலங்காய், சென்னை நகரின் பரபரப்பான வாகன நெரிசலுக்குள் பைக்கை நுழைத்து வளைத்து, கோணி மாணி நகர்ந்து, பேசி சிரித்து, பொய் சொல்லி, மெய் சொல்லி, சத்தியம் செய்து, கூவி கூவி என்னை முன்னிலைப்படுத்தி, யார் யாருக்கோ முகஸ்துதி பாடி.....திட்டு வாங்கி, பாராட்டுக்கள் வாங்கி, பெண்களிடம் குழைந்து, ஆண்களிடம் பெருமை பேசி......
கச கசவென்று என்ன ஒரு வாழ்க்கை..? தினசரி இப்படி நகர்வது எல்லோருக்குமே வாடிக்கையாகிப் போய்விட்டது.....இது வாழ்க்கை இது இப்படித்தான் ஆனால் இந்த சுழற்சி ஏன்? எங்கே செல்கிறது....? எப்படி விடுபடுவது...? ஏன் இது எனக்குப் பிடிக்கவில்லை....?
கேள்விகளைக் கடந்த போது.....ஒரு பெரிய வெட்டவெளிக்குள் வந்து விழுந்தேன். அங்கே மெளனமே பதிலாய் ஒன்றுமில்லை என்றது. ஆழமாய் மூச்சினை இழுத்து சுவாசித்தேன்....உள்ளே இழு...த்....து........வெளியே மெதுவாய் வி....ட்...டு.... மாறி மாறி மூச்சு உள்ளே போய், போய் வெளியே வர....
முதுகெலும்பு நேராக உடல் நேரானது. முதுகெலும்பின் நுனியில் மெல்ல ஒரு வலி பளீர் என்று பரவ.....உடலின் இருப்பு மட்டும் உணர்ந்து....சூழல் உணர்ந்து, சுற்றி இருக்கும் சப்தங்கள் உணர்ந்து....நான் இருந்தேன். உருவம் இல்லாமல் மிக அழகாய் என்னை நான் உணர்ந்தேன் அந்த உணர்தலில் பெறும் வெறுமையாய் நான் படர்ந்தேன். சுகமாய்....ஒரு பஞ்சு காற்றில் பறப்பது போல...காற்றில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பஞ்சும் மறைந்து போக வெறுமனே நீந்துதல் மட்டும் நிகழ.....
....
....
....
....
மெல்ல கண் விழித்து....உறுதியான அமைதியை உணர்ந்தபடி மெல்ல எழுந்து நடந்தேன். உடலுக்குள் சக்தி ஏறிப்போயிருக்க அப்படி சக்தியும் தன்னம்பிக்கையும் ஏற கோயிலைப்படர்ந்திருந்த ஏதோ ஒரு சக்தி உதவியிருப்பதை உணர முடிந்தது.
இரவு உணவை முடித்த திருப்தியில் மெல்ல படுக்கையில் விழுந்து....காலை 5மணிக்கு அலாரத்தை வைத்தபடி....மெளனமான நிறைவோடு நான் உறங்கியே போனேன்...!
தேவா. சு
Comments
ஆனால் முன்பு அனுதினமும் அதிகாலை சுமார் அரைமணி முதல் ஒரு மணிவரை செய்யும் தியானத்தால் இப்போதுவரை எந்த அமைதியும் கிடைக்கவில்லை.
அது அலையும் மனதின் ஓயாத கூச்சலை கட்டுப்படுத்தவே இல்லை. திருவண்ணாமலை பயணங்களில் மட்டுமே அத்தகைய உணர்வு கிடைத்திருக்கிறது.
ஆனாலும் யு.ஜி கிருஷ்ணமூர்த்தி படித்தபிறகு வாழ்வினை மிக எளிதாக பார்க்க கற்றுக்கொண்டேன்.
இது தொடர்ச்சியாக ஆன்மிகம் பக்கம் நான் சாய்ந்ததின் விளைவாகவும் இருக்கலாம்!
பாராட்டுக்கள் தேவா!!
இப்படி எத்தனைபேரால் சொல்லமுடியும் ?
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
விடுமுறை என்பது உடலுக்கானதல்ல,
மனதுக்கானது .,
சூழல் மனதை ஓய்வெடுக்கவைத்து சக்தியூட்டி விடுமுறையை நிறைவாக கழிக்க வைத்துவிட்டது.,
பகிர்வு அருமை தேவா :)
கெக்கே பிக்கே கெக்கே பிக்கே :))
ரொம்ப சாயாதிங்க ...விழுந்துடுவீங்க.... கெக்கே பிக்கே கெக்கே பிக்கே :))