Pages

Saturday, March 3, 2012

முடிவில்லாத பயணம்.....!அது ஒரு ஒற்றையடிப்பாதை, யாருமற்ற வெளி, கடும் கானகத்திற்குள் நான் நகர, நகர நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதை. எனக்கு ஏதோ ஒன்று வேண்டும், ஏதோ ஒன்றை நான் அடைய வேண்டும். இலக்கு எதுவென்று தெரியவில்லை ஆனால் எங்கோ நான் செல்ல வேண்டும்.

மனித சஞ்சாரம் அற்ற மரங்கள் அடர்ந்த பட்ட பகலிலும் இருளினைச் சுமந்த ஒரு பெருங்காடு. மனித தொடர்புகளைக் கடந்து நான் வந்து எத்தனை நாளானது, எவ்வளவு மணியானது என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆமாம். நவீனத்தின் எந்த ஒரு கருவியையும் என்னோடு நான் இணைத்துக் கொள்ளவில்லை. நானும் மானம் மறைக்க உடுத்தியிருக்கும் ஒற்றை நாலு முழ வேஷ்டியும், ஒரு சட்டையும் காலணியும் எனது உடைமைகளாக் தொற்றிக் கொண்டிருந்தன. அதுவும் கூட ஒரு கட்டத்தில் தேவையற்றுப் போகலாம்.

நிறைய பேசிவிட்டேன். நிறைய ஆனந்தித்து விட்டேன். நிறைய அழுது விட்டேன். நிறைய கொடுத்து, எடுத்து, ஏதேதோ செய்து, செய்து வாழ்க்கையின் மிகைப்பட்ட நுழைவுகளில் நுழைந்து நுழைந்து வெறுமைகளை கூலிகளாய் பெற்று நிறைவினை எட்ட முடியாமல் தோற்றுதான் போயிருக்கிறேன். உறவுகளில் சந்தோசம் இருந்தது ஆனால் அதைவிட ஒரு படி மேலாக சுயநலங்களும் போலி பகட்டுகளும், எதார்த்தமில்லாத பாசம் என்னும் வேசங்களும் இருந்தது.

பெற்றுவிட்டோமே என்று பெற்றோர், கூடப்பிறந்து விட்டோமே என்று உடன் பிறப்புக்கள், கணவனாய் ஏற்றுக் கொண்டோமே என்று மனைவி, பெற்று விட்டோமே என்று பிள்ளை, கூடப்பழகி விட்டோமே என்று நட்புகள்..என்று எல்லாமோ ஏதோ ஒரு  எதிர்பார்ப்பு நூலிழையில் முடிச்சிட்டு எனக்கு ஏதேதோ அடையாளம் கொடுத்து அன்பையும் வெறுப்பையும் மாறி மாறி எனக்கு பரிமாறியது.

எத்தனையோ பேர்கள் என் வாழ்க்கையில் உடன்வருவது போல வந்து வழியிலேயே பிரிந்து சென்றிருக்கிறார்கள். என்னை பெயராய் தொழிலாய், மனிதர்களின் தேவையாய் கணக்குப் போட்டுப் பார்க்கத் தெரிந்த உறவுகளுக்கு என் சுயத்தைத் தொட்டு உடலினைக் கடந்த வேட்கைகள் கடந்த ஒரு ஆன்மாவாய் பார்க்கத் தெரியவும் இல்லை. அவர்களை அப்படி பார்க்க என்னைப் விடவில்லை....

இறுமாப்பிலேயே இயங்கிக் கொண்டிருந்த உலகம் எப்போதும் உயிர்வாழ வேண்டும், சிரஞ்சீவியாய் இந்த பூமியில் ஜீவித்துக் கிடக்கவேண்டும் என்றே எப்போதும் கணக்குப் போட்டு காய்கள் நகர்க்த்கிக் கொண்ருந்தது. பிறப்பின் முன்னால் நாம் இந்த உடலாய் இல்லாதவர்கள், இறப்பிற்கு பிறகு இந்த உடலாய் இருக்கப் போகாதவர்கள் என்று நான் கூறும் போதெல்லாம் என்னைப் பார்த்து பித்தன் என்றும் வேசமிடும் புத்தன் என்றும் முகத்துக்கு நேரேயே இகழ்ந்திருக்கின்றனர்....

ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படை அறிவு. பகுத்தறிதலின் உச்சம். ஆன்மீகம் என்பது கடவுள் என்ற பெயரிட்டு மானுடர்கள் கற்பிதம் கொண்டிருக்கும் உருவங்களை துதிபாடும் வேலை அல்ல. எதையோ எதிர்பார்த்து எதையோ செய்யும் தொழில் அல்ல....கோயில்களுக்குள் வாழ்க்கையைத் தேடும் வழிமுறை அல்ல, காவடி எடுப்பது அல்ல, பெருஞ்சக்தி என்று யாரோ ஒருவருக்கு காலம் எல்லாம் பயந்து நடுங்கி வாழும் வழிமுறை அல்ல....மொத்தத்தில் மூடநம்பிக்கைகளின் மூல வடிவம் அல்ல...

என்று சொல்லிச் சொல்லி என் நாவுகள் அயர்ந்து போனது பற்றிக் கூட எனக்குக் கவலை இல்லை, ஆனால் எப்போதும் என் வார்த்தைகள் வேறு அர்த்தங்களை மானுடர்களின் மனதில் பூக்க வைத்துதான் எனக்கு ஆச்சர்யம். கடவுள் இல்லை என்று சொல்லிக் கொள்பவர்கள் என்னை பொய்யான கடவுளை பரப்பும் சாமியார் என்று அவர்களை அறிவின் உயரத்தில் வைத்துக் கொன்டு என்னை ஏளனப் பார்வைகள் பார்த்தனர்....

கடவுள் இருக்கிறார் என்று தேங்காய் பழம் உடைத்து கையெடுத்து கும்பிட்டும், தொழுதும் உருவ அருவ வழிபாடுகள் நடத்திக் கொண்டு ஐதீகங்களையும், சட்ட திட்டங்களையும் தங்களின் வாழ்க்கையைச் சுற்றி கம்பிகளாய் கட்டிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள்....

ஆன்மிகம் என்ற பெயரில் நாத்திகம் பேசும் முட்டாள் என்று என்னை ஒதுக்கியே வைத்திருந்தனர்.

பகுத்தறிவு என்றால் என்ன? பகுத்து அறிந்து இருக்கும் உண்மையை மூளை ஏற்கும் பட்சத்தில் ஏற்று, மறுக்கும் பட்சத்தில் மறுத்து நகர்வதுதானே? மனித அறிவு என்பது தனது அனுபவத்தையும் புரிதலையும் பெற்றுக் கொண்ட ஞானத்தையும் வைத்து புறக்காட்சிகளையும் செய்திகளையும் அனுமானித்து, ஆலோசித்து நாளும் நகர்வதுதானே....

அதில் எப்படி இறுதி உண்மை என்று ஒன்று எப்போதும் பதியும். மாறிக் கொண்டேதானே இருக்கும். மாறிக் கொண்டே இருப்பதுதானே இயல்பு..ஒவ்வொரு மாறுதலிலும் ஒவ்வொரு வெளிச்சம் உதிப்பதுதானே இயற்கை. ஆரம்பத்தில் கடவுள் படத்தில் இருப்பது போலவும் கோயிலில் இருக்கும் சிலையைப் போலவும் இருப்பார் என்று நம்பி, வேண்டி விரும்பி துதி பாடினால் நேரில் வருவார் என்று உருகி....நாம் மனதில் வைத்திருக்கிறோம்.

கடவுள் வந்திருக்கிறாரா? நாம் பார்த்திருக்கிறோமா? 

காலங்கள் கடந்து சுழலும் இந்த புவியில் கடவுளைக் கண்டேன் என்று சொன்னவர்களில் எத்தனை பேர் தன்னைச் சுற்றியிருப்பவகளுக்கு காட்டி இருக்கிறார்கள் என்று யோசித்த போது கடவுள் என்று ஒருவர் தனித்து இல்லை. அவர் வரவேண்டிய அவசியமும் இல்லை, அவரைக் காட்டவும் முடியாது காரணம்...நம்மைச் சுற்றி வாய்ப்புகளும் வாழ்க்கையும் இருக்கும் போது அதை நகர்த்தும் சக்தியும் நம்மிடம் இருக்கும் போது கடவுளென்று ஒன்று தனியாய் எதற்கு....?

கடவுளை படைத்தது மனிதன் என்பது தெளிவாக விளங்கிய அதே நேரத்தில் கடவுள் என்ற ஒன்றை யாரும் படைக்க முடியாது.. அது எப்போதும் இருப்பது.... இயங்கிக் கொண்டே இருப்ப்பது.... நம்மையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய இயக்கம், அதற்கு தனித்த தேவைகள் என்றோ விருப்பு வெறுப்போ இருக்க முடியாது. ஒட்டு மொத்த நகர்வே அதன் நகர்வு...ஒட்டு மொத்த அசையும் அசையா வஸ்துகளின் கூட்டு அது.  தேவைகளற்ற இடத்தில் அதன் தேவையாய் இருப்பது என்று எதை தனித்து சொல்ல...

என்ற புரிதல் வந்த இடத்தை நான் பகுத்து அறிந்த போது பகுத்தறிவு என்றால் இதுதான் என்று உணர்ந்தேன். கோயில்களும் இன்ன பிற மத வழிப்பட்டுக் கூடங்களும் தனி மனித மனப்பயிற்சிக் கூடங்கள் மட்டுமல்ல அங்கே செல்லும் மனிதர்களின் மனங்கள் எழுப்பும் மன அதிர்வுகள் சீரான ஒத்ததிர்வாக இருந்து நல்ல விளைவுகளை மனித மனங்களுக்குள் நிகழ்த்திக் காட்டும் என்று உணர்ந்து வழிபாட்டுத் தளங்களில் இருந்து ஏதோ ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துவது கடவுள் என்ற மூன்றாவது மனிதரல்ல எனபதையும் உணர முடிந்தது.

உள் கடக்க..உள் கடக்க....கடவுள் யாரென்று விளங்க அதை மொழியாக்கி நாம் பறை சாற்ற கேட்க செவிகளில்லாத உலகமாய்ப் போனதும் இயல்புதானென்றும் உணர முடிந்தது.

இதோ....வாழ்க்கையின் வேறு பக்கத்திற்கு வந்து விட்டேன். ஒரே பிள்ளைக்கு ஆற்றும் லெளகீகக் கடமைகளை முடித்து விட்டேன்....! வாழ்க்கைத் துணையென்று வந்தவளும் வழியிலேயே வாழ்க்கையை விட்டு பயணித்து விட்டாள்...இந்த 60 வயதில் என் தேவை என்னவாயிருக்கும் இனி....?

எத்தனையோ முறை உண்டாயிற்று....எத்தனையோ முறை காமத்தில் கூடிக் கழித்தாயிற்று, சிரித்து சிரித்து சிரிப்பின் உச்சம் பார்த்தாயிற்று, போதும் போதுமென்ற் அளவிற்கு கோபமும், சோகமும், பட்டாயிற்று....பொருள் ஈட்டிப் பார்த்தாயிற்று...பூமியில் ஜனித்து விழுந்து வந்த வேலைகளை நிறைவேற்றியாயிற்று...

பேசிப் பேசி சத்தியத்தின் சொரூபத்தை விளக்க முடியாது. எழுதி, எழுதி வைத்தது எல்லாம் விளங்குபவர்களுக்கே விளங்கும்...இனி ஊருக்குள் என்னால் சராசரி மானுடர்களின் கபட திட்டங்களுக்கு முன்னாலும், போட்டி பொறாமைகளுக்கு நடுவேயும் என்னால் அலைக்கழிப்புகளை ஏற்று நகர முடியாது....

எப்போதோ இது அட்டை வீடு என்று உணர்ந்து விட்டேன். தெரிந்தேதான் அட்டை வீட்டுக்கு வர்ணமடித்தேன்.....அலங்காரம் செய்தேன், நொறுங்கி உடையும் என்று புரிந்தே எல்லாம் செய்தேன். இதோ இன்று உடலால் ஏற்பட்ட முடிச்சுக்களை எல்லாம் இயற்கையின் இயங்கு தன்மையின் ஓட்டத்தில் நிறைவு செய்து விட்டேன்.....

இன்னாரென்று தெரியாமலேயே ஒரு இருட்டு கருவறையில் உயிர் கொண்டு....ஜனித்து வெளியே விழுந்து பெயரிடப்பட்டு, தாலட்டி சீராட்டி ஓடி ஓடி ஓடி.........நான் வாழ்க்கையை வாழ்ந்து களைத்து விட்டேன். வாலிபத்தில் ஆன்மீகம் என்றால் என்ன என்று தேடித் தேடி ஓடி அலைந்து தியானித்து, படித்து விளங்கி நகர்கையிலேயே இந்த முதுமையில் ஓய்வு என்பதும் ஆசையை விடுதலும் விடமுடியாத சுற்றாக இருக்கிறது....

சத்தியம் இப்படி இருக்கையில் வாலிபத்தில் எல்லாம் ஆன்மீகம் வேண்டாம் வயதானல் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் மனிதர்களை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பசுமையான வயதில் பதிய வைக்க முடியாத விளங்க முடியாத விசயங்கள் வயோதிகத்தில் ஏறவே ஏறாதே....

காமத்தை வாலிபத்தில் அனுபவித்து கடக்காவிட்டால், உடல் சோர்ந்து கிடக்கும் வயோதிகத்திலும் புத்திக்குள் காமம் நின்று கொண்டு சீறுமே என்ன செய்வீர்கள்...? விருப்பப்பட்டதை செரிக்கும் வயதில் தின்று கழித்து திருப்தி அடையாமல் போனால் முதுமையில் மாமிசத்தையும் மதுவையும் மனம் தேடுமே என்ன செய்வீர்கள்...? 

புத்தியும், உடலும் கட்டுக்குள் இருக்கும் போது அமைதியாய் எல்லாம் அனுபவித்து கடக்காமல் போனால்..முதுமை கண்டியாய் நரகமாய்த்தான் போகும்....! பயிற்சி எடுக்கும் காலங்களில் படுத்துக் கிடந்து விட்டு....படுத்துக் கிடக்கும் காலங்களில் பயிற்சி எடுப்பேன் என்று சொல்லும் பைத்தியங்களை என் சிரிப்பின் மூலம் வெளியே தூக்கி எறிந்தேன்....

நான் நடந்து கொண்டிருக்கிறேன்....ஆமாம்...எங்கோ செல்ல வேண்டும்...எதையோ அடையவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாத இலக்கை நோக்கி....நகர்ந்து கொண்டிருக்கிறேன்...

பெயர் என்றும் ஊரென்றும், பணி என்றும் எதுவும் எனக்கு ஒன்றுமில்லை...பசித்தலும் புசித்தலும்...புசிக்க ஏதுமின்றி உடல்விட்டு மரித்தலும்...எப்போது வேண்டுமானலும் நிகழலாம்.....எனக்கு கவலைகள்..ஏதும் இல்லை....

நான் எங்கோ போய்க் கொண்டிருக்கிறேன்.....முடிவில்லா பாதையில் அடைய முடியாத இலக்கு நோக்கி....!


தேவா. சு.


1 comment:

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html