Skip to main content

சிதம்பர ரகசியம் - 2


























சிவன் என்ற உடனேயே சிறுவயதிலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட ஜடாமுடியும், தலையில் கங்கையும், நெற்றிக்கண்ணும், கருணையைச் சுரக்கும் விழிகளும், விடத்தை கண்டத்தில் கொண்டு, கழுத்தில் பாம்போடு புலித்தோலை உடுத்திக் கொண்டு கையில் டமருகத்தோடு சாம்பல் பூசிய மேனியோடான ஒரு தோற்றமும் ஒருவித கிறக்கத்தைக் கொடுத்து விட.. யார் இந்த சிவன் ? ஏன் இப்படி இருக்கிறார் ? எல்லா கடவுளர்களும் தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்கரித்துக் கொண்டு பகட்டாய் இருக்கும் போது என் சிவன் மட்டும் ஏன் சுடுகாட்டில் இருக்க வேண்டும்..? ஞானத்தின் கடவுளாய் ஏன் சிவனைச் சித்தரிக்கிறார்கள்...? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன்.

இப்படியாய் யோசித்ததே சிவனை என் முன்னால் ஒரு சூப்பர் பவராய் எனக்குள் நிறுவி விட... ஆக்கவும், அழிக்கவும் தெரிந்த எல்லாம் வல்ல சக்தியாய்ப் பார்த்து, பணிந்து சிவன் யார் என்ற கேள்விக்கு விடையைத் தேடினேன். எப்போதும் என் தேடலுக்கான பதில் மனதை மட்டும் நிறைவு செய்து விடக்கூடாது.... அது எப்போதும் என் அறிவினையும் பூர்த்தி செய்ய வேண்டும். என் எதிரே கடவுளே வந்தாலும்... படக்கென்று காலில் விழுந்து சரணாகதி ஆகிவிடமாட்டேன்.....யார் என்ன? எப்படி என்று விசாரித்து என் அறிவுக்கும் ஆன்மாவுக்கும் புரிதலை உண்டு பண்ணாவிட்டால் அவரை மறுதலித்து விட்டு வேறு திசை நோக்கி நான் அமர்ந்து விடவும் கூடும்...!

காரணம் என்னவென்றால் எனக்குள் புரிதலை உண்டு பண்ண முடியாத கடவுள் என்ன கடவுள்? என்ற கோபமென்று கூடக் கொள்ளுங்கள். இப்படித்தான் சிவனை நான் அறிய எனக்கு கொடுக்கப்பட்ட பதில் மற்ற கடவுள்களுக்காய் சொல்லப்படும் கதைகளிலிருந்து வேறுபட்டு அறிவுக்கும், புத்திக்கும், மனதுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்க...நெக்குருகிப் போய் கடும் சிவபக்தனாகிப் போனேன்.

அறிவு, புத்தி, மனம், ஆன்மா என்றெல்லாம் சொல்லிவிட்டு நான் வெறுமனே கடந்து போகமுடியவில்லை. அறிவு என்பது உலகத்தில் புலன்களின் நுகர்ச்சியால் அறிந்து, தெளிந்து உணர்ந்து கொள்வது, புத்தி என்பது அறிவின் அடித்தளம் அது எப்போதும் இருக்கும் பிரபஞ்ச இருப்பு நிலை, மனம் என்பது புலன்கள் சேகரித்த அனுபவத்தை அறிவின் நிலையிலிருந்து விவரித்துப் பார்த்து கற்பனைகள் செய்து கொள்வது, ஆன்மா என்பது மேலே சொன்ன எல்லா அனுபவங்களையும் உள்ளுக்குள் சாரமாய் தேக்கிக்கொண்டு சக்தி ரூபமாய் உள்ளுக்குள் நிறைந்து கிடப்பது.

புறத்திலிருக்கும் சக்தி ரூபத்திலிருக்கும் அதிர்வுகளுக்கும் ஆன்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புறத்தில் இருக்கும் அதிர்வுகள் அதன் மூல நிலையில் சம்பூரணமாய் இருக்கின்றன. ஆனால் நம் உடலுக்குள் இருக்கும் ஆன்மா என்னும் சக்தி பல உடல்களின் வழியே பயணப்பட்டு அனுபவங்களை சாரமாய்க் கொண்ட வேறு நிலையில் இருக்கிறது. வெளியே இருக்கும் ஆன்மா தண்ணீர் என்றால், உடலுக்குள் இருக்கும் ஆன்மா பனிக்கட்டி போன்றது. இரண்டும் ஒன்றே...ஆனால் வேறு வேறு நிலை.

யார் சிவன்...?

மனிதராய் உருக்கொண்ட.... பிரபஞ்சம்  காலச் சுழற்சியில் உடலுக்குள் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்த ஆதிகாலம் அது. பசிக்கையில் அது பசி என்று அறியாமல் கதறியழுது ஏதோ ஒன்றை கடித்து தின்று அதனால் திருப்தியுற்று, அப்படி திருப்தியுறவே மீண்டும், மீண்டும் ஏதேனும் ஒன்றை மிருகமாய் மனிதன் புசிக்கத் தொடங்கியிருந்த கற்காலத்திற்கும் முற்காலம் அது...! உணர்வுகளுக்கு வடிகாலாய் என்ன என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் மனிதன் செய்து செய்து அவற்றை அனுபவமாக்கிக் கொண்ட காலம் அது. தன்னால் முடியாததை எல்லாம் கண்டு மிரண்டு ஓடி அழுது புரண்டு அதைக் கண்டு பயந்து அந்த பயம் வழிபாடாய் மாறிக் கொண்டிருந்த சூழல் அது. மனிதர்கள் உண்ணவும், உயிர் வளர்க்கவும் வேட்டையாடத் தொடங்கி, தன் நிலம், தன் இனம் என்று ஒதுங்க ஆரம்பிக்கும் முன்னரே.....ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது....? 

என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்...? ஏன் எனக்குப் பசிக்கிறது? ஏன் எனக்குப் பயம் வருகிறது? காற்றை ஏன் நான் சுவாசிக்கவேண்டும்? வானிலிருந்து பெரும் மழை பெய்யவும், பெரும் புயல் உண்டாகி பூமியை சூறையாடவும், பெருவெள்ளம் நகர்ந்து எல்லாவற்றையும் அழித்துப் போடவும், கடும் நெருப்பு எல்லாவற்றையும் கருக்கிப் போடவும் யார் பணித்தது?  கடல்களையும் நிலத்தையும் யார் உண்டாக்கியது? இதை எல்லாம் நான் ஏன் யோசிக்கிறேன்..? என்னை எது யோசிக்கவைக்கிறது....?

என்றெல்லாம் யோசித்த ஆதி யோகி அவன்....! 

இந்த பூமி எங்கும் இன்று பரவிக்கிடக்கும் ஞானத்தினை அதிர்வுகளாய் எங்கும் விதைத்து வைத்த ஆதி குரு அவன். அவன் உணர்ந்த அத்தனையும்தான் இன்று பல சமூகத்து மக்களின் வேதங்களாய் ஆகி இருக்கிறது. அவன் புத்தி, புலன்களை அடக்கி பிரபஞ்ச ரகசியங்களை உணர ஆதி நிலையோடு சங்கமித்து அவன்  அந்த மூல உண்மையான சிவத்தோடு சிவமாய் இருந்ததால் அவன் சிவத்தை உணர்ந்த பெருமான் ஆனான். அவன் வாய் திறந்து போதனைகள் எதுவும் செய்யவில்லை என்றாலும் இன்று அவனின் ஞான ரகசியத்தை ஏந்திக் கொள்ளாத வேதங்கள் இல்லை. மதங்கள் என்ற பெயரில் மனிதர்கள் இன்று பிரிந்து  பிரிந்து தங்களை ஏற்றிக் கொள்வதாக எண்ணி பேசிக் கொண்டிருப்பது எல்லாம் அவனின் பிரக்ஞையிலிருந்து வெளிப்பட்ட அதிர்வுகளில் இருந்து வெடித்துச் சிதறியதுதான்.

அவன் யோகியாய் தன்னை உணர்ந்து தானிருக்கும் சூழல் உணர்ந்து சாந்த சொரூபியாய் இருந்த போதுதான் அவன் யார் என்ன என்று விசாரித்து அவனிடம் ஏதோ இருக்கிறது என்று கற்றுக் கொடுங்கள் என்று வந்த தேடல் நிறைந்த ஏழு மனிதர்கள் அவனைத் தேடி வந்தார்கள். சற்றேறக்குறைய 84 வருடங்கள் ஆதியோகியான சிவன் ஒரு புறம் திரும்பி இருக்க, இந்த ஏழு பேரும் அவரின் பின் பக்கம் மெளனமாய் அமர்ந்த படி என்றேனும் ஒரு நாள் எங்களை நோக்கி நீ திரும்ப மாட்டாயா அய்யனே...., நீ உணர்ந்த உண்மையை உறைக்க மாட்டாயா  என்று உருகிப் போய் அமர்ந்திருக்கையில்....

சட்டென்று ஒரு நாள் தெற்கு  பக்கம் அமர்ந்திருந்த அவர்களை நோக்கி திரும்பி அமர்ந்து கொண்டான் அந்த ஆதியோகி.  அவர்கள் எதுவும் கேட்கவுமில்லை...சிவன் என்ன வேண்டுமென்று  கேட்கவும் இல்லை. தேவை என்னவென்று கேட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டுமெனில் அவன் என்ன யோகி? சொல்லித்தான் தெரியப்படுத்தவேண்டும் எனில் அவன் எப்படி பரிபூரணன் ஆவான்..? அங்கே கேள்வியும் பதிலும் இல்லாமல்... உபதேசம் நடந்து கொண்டிருந்தது. அந்த பரப்பிரம்மத்தை உணர்ந்த பெருமானான சிவன்....குருவாய் வீற்றிருக்க..... மெளனத்தில் அங்கே பாடம் நடந்து கொண்டிருந்தது....

இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டி...தேடலோடு வந்தவர்களின் கேள்விகளை எல்லாம் பொடிப்பொடியாக்கிப் போட்டான் அந்த ஆதி சிவன். தேவாதி தேவன் அவன். அவன் மனிதனாய் பிறந்த  அத்தனை பேரும் கடவுள்தானென்றான். கடவுளாய் உணர்கையில் உபதேசிக்க ஒன்றுமில்லை என்று  நீங்கள் உணரவேண்டும். கடவுளின் பகுதி நான் என்பது உண்மையானால் முழுமையானவனாய் நான் மாற பேச்சு அறுக்கவேண்டும். பேச்சு நின்றால், தன்னைப் பற்றிய சுய பகிர்தல் நிற்கும். சுயபகிர்தல் நிற்க, தன் முனைப்பு உடைபடும். தன் முனைப்பு நின்று போக விசயங்கள் தெளிவாய் உணரப்படும். கற்பனைக் கலக்காத அனுபவங்கள்  எது உண்மை என்று எடுத்துச் சொல்லும். உண்மையை உணர்ந்தவன்... மனமற்றுப் போவான். மனமற்றுப் போனால் ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லை என்றவுடன் தேவைகள் எதுவென்று தெளிவாய்ப் புரியும். தேவைகளை முடித்த பின்.....தேவைகளற்ற பரப்பிரம்மம் ஆவோம்.

இதுதான் ஆதி சிவனின் சூத்திரம். உள்ளது அழியாது, இல்லாதது தோன்றாது ஆனால் சுட்டி உணரப்படும் யாவும் அழியும் என்றான். சுட்டி உணரப்படாதது கடவுள். அது எப்போதும் அழியாது. கடவுளை அறிய உன் உள் கிடக்கும் ஆன்மாவை அறி. சிவன் என்ற உடலில் இருந்து பிரம்மம் பேசாமல் பேசி ஞானத்தை உலகிற்கே கொடுத்துச் சென்றது. உருவமில்லா அந்த பெருஞ்சக்தியினை உடலுக்குள் இருந்து உணர்ந்தவனின் உருவம்தான் நாம் வணங்கும் காலங்கள் கடந்தும் எல்லோரிடமும் பயணித்துக் கிடக்கும் அந்த சிவபெருமான் படம். 

சரியான சிவவழிபாடு ஒரு கட்டத்தில் படத்தையும், கற்சிலைகளையும் வழிபடுவதை விட்டு வெளியே வருகிறது. உருவமாய் இருக்கும் அருவமாம் சிவலிங்க வழிபாட்டை நோக்கி அது நகர்கிறது. பிறகு அதுவும் இல்லையென்று சிதம்பர ரகசியமாய் வெட்டவெளியைச் சுட்டிக் காட்டி உருவமில்லா பெரும் இயக்கம்தான் உன் சிவனென்று சுட்டிக் காட்டவும் செய்கிறது.

இப்படியான அறிவுக்கு எட்டும் விளக்கங்கள் என்னுள் சிவனை முதலில் ஸ்தூலமாக்கி இப்போது சூட்சுமமாய் நிறைத்து வைத்திருக்கிறது.

உருவம் இல்லாத கடவுளை உருவமற்றவர் என்று ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டியதுதானே.. ஏன் அதை ஒரு உச்சநிலையாகச் சொல்கிறீர்கள்....? இன்னமும் கற்சிலைகளை வழிபடுபவர்களையும் நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள்....?

என்பதுதானே உங்களின் கேள்வி இப்போது...?  

(தொடர்ந்து பேசுவோம்....)


தேவா. S

Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...