Pages

Friday, September 21, 2012

தேடல்...21.09.2012!முன்பு ஒரு காலத்தில் கடவுளைத் தேடி ஓடிக் கொண்டிருந்தேன். நேர்த்திக்கடன்களை வாங்கிக் கொண்டு அந்தக் கடவுள் வாழ்க்கையை சீரமைத்து விடுவார் என்று நம்பினேன். நான்கு வயதில் கோவில் உண்டியலில் காசு போடச் சொல்லி கொடுத்த போது, காசு நிறைய போட்டா சாமி நிறைய கொடுப்பார் என்று கற்றுக் கொடுக்கப்பட்டது. நாளடைவில் நூறு ரூபாய் போடுபவனுக்குத்தானே சாமி நிறைய கொடுப்பார் என்று கையிலிருந்த பத்து ரூபாயை மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்த நாட்களும் உண்டு.

சிதறு காய் உடைத்து தேங்காய் நேர்த்திக் கடனாய் கடவுளுக்கு கொடுக்கலாம் என்று சொல்லப்பட்ட போது இது கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறதே என்று அடிக்கடி தேங்காய் நேர்ந்து கொண்டு பின் அது ஒரு தோப்பையே விலைக்கு வாங்கும் அளவு அதிகமாகிப் போக நேர்த்திக்கடன் செய்யாவிட்டால் கடவுள் தண்டிப்பாரோ என்ற பயத்தில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனிலிருந்து மெதுவாய் வெளியே வந்து விட்டென். பத்தாவது படித்த போது பொதுத் தேர்வு முடித்து விட்டு மதுக்கூர் காளியம்மன் கோவில் கர்ப்பகிரகத்துக்குப் பின்னால் எண்ணெய் பிசுக்கான பலிபீடத்திலிருந்து ஆட்காட்டி விரல் தொட்டு கருப்பு நிற மசியை எடுத்து  என் பரீட்சை நம்பரை எழுதி இருக்கிறேன். அப்படி எழுதும் போது நிறைய காதலர்களின் பெயரைப் பார்த்து கடவுள் காதலைச் சேர்த்தும் வைக்கிறார் எனும் போது ஊருக்குள் பெரியவர்கள் எதற்கு காதலிக்கக் கூடாது என்கிறார்கள் என்றும் யோசித்து இருக்கிறேன்....

வேண்டுதல் எல்லாம் கோவில், கோவிலாக நிறைய, நிறைய கொஞ்சம் பயம் வந்தது. அந்த பயம் பகுத்தறிவை உசுப்பி விட....கடவுளுக்குத் தெரியாதா நமது தேவை என்னவென்று நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள், படைத்தவனுக்குத் தெரியாதா என்ன கொடுப்பதென்று எண்ணி நேத்திக்கடன்களை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். கற்பூரம் வாங்கிச் சென்று கொளுத்துவது மிகவும் வசதியாய் இருந்தது. கற்பூரத்தோடு கண்மூடி கடவுள் வழிபாடு செய்து விட்டு கோவில் சுற்றியதின் பரிணாம வளர்ச்சி கல்லூரி காலங்களில் சைட் அடிக்கச் செல்வதாய் மாறியது. சாமிக்கு சாமியும் ஆச்சு... சைட்டுக்கு சைட்டும் ஆச்சு.

பேராவூரணியிலிருந்து வந்து திருப்பத்தூரில் படித்த என் சீனியர் அண்ணன் ராவுத்தரப்பாதான் தினமும் கோவிலுக்கு போகவேண்டும் என்று அடம் பிடிப்பார். சாமி கும்பிடவும் சைட் அடிக்கவும்தான். கோவிலுக்குப் போய்ட்டு வரும் போது ஒரு நிம்மதி இருக்குல்லடா என்று அடிக்கடி அவர் சொல்வார். நிம்மதி சாமியிடம் இருந்ததா... சைட்டிடம் இருந்ததா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உடலுக்குள் ஹார்மோன்கள்  திருவிழாவே நடத்திய காலங்கள் அவை.

கடவுளைத் தேடி மனிதர்கள் பயத்தின் காரணமாகத்தான் செல்கிறார்கள். பிரச்சினைகளை அங்கே கூறிவிட்டு எல்லாம் அவன் செயல் என்று திரும்பி வரும் போது பிரச்சினைகள் எல்லாம் மைக்ரோ லெவலில் போய்விடுவதாக ஏற்படும் கற்பிதத்தில் நிம்மதி விஸ்வரூபம் எடுக்கிறது. இந்து மதத்தின் ஆரம்பம் சிலை வழிபாடு என்றால் உச்சம் அருவ வழிபாடு.  அருவ வழிபாட்டிலும் உச்சம் நாத்திகம் என்னும் நம்பிக்கையையும் கடந்த மெளனம். அறிவின் நிலைக்கேற்ப கற்றுக் கொடுத்துக் கூட்டிச்சென்று......... நத்திங் இஸ் எவரித்திங் என்று உணரவைக்க...என் கடவுள், என் சாமி, என் மதம், எங்கள் வேதம் என்ற எல்லா மட்டுப்பட்ட நிலைகளும் அழிந்து போய்விடுகின்றன. சகல மதத்தினரையும் மதம் என்ற நிலைகடந்து மனிதன் என்று நேசிக்க  சட்டென்று ஒரு பக்குவம் வந்து விடுகிறது.

கோவில்கள் எல்லாம் இதை உணரத்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். எல்லோரும் கோவிலுக்குள் கர்ப்பகிரகம் நோக்கிச் சென்று கை கூப்பி வணங்கி கோரிக்கைகள் வைப்பதை பார்த்திருக்கிறேன். நான் கர்ப்பகிரகத்தில் இருக்கும் கடவுள் என்று சொல்லப்பட்டவரை பார்த்துக் கொண்டே, கடவுளிடம் பேரம் பேசும் புத்திசாலி மனிதர்களையும் ஒரு சேர பார்த்திருக்கிறேன். இவன் கேட்பான், அவர் கொடுக்க வேண்டும் என்பதுதான் அங்கே நடக்கும் ஒரு நிகழ்வு. கருவறைக்குள் மந்திரம் என்று பெரியவர்கள் கம்போஸ் செய்து கொடுத்த நல்ல அதிர்வுகள் திம்..திம்... என்று பரவிக் கிடக்கும். கர்ப்பகிரகத்துக்கு மேலே இருக்கும் ஐம்பொன் கலசம் பூமி என்னும் பெரும் பந்தினைச் சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பேரமைதிக் கதிர்களை உள் இழுத்து அங்கே குறுகிய வடிவில் திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கும் அந்த கருவறைக்கு கொடுத்து அங்கிருந்து அது எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் சுவாசம் வெளியே அவர்கள் அறியாமலேயே உட்செல்லும்.

பேரமைதிக் கதிர்கள் என்னும் அதிர்வுகள் மனிதனின் உள் சென்று அவன் மனம் என்னும் ஒரு விசயத்தை  உடைத்துப் போட்டுவிடும். மனம் இல்லாமல் இவனுக்கு எண்ணம் எழாது. எண்ணம் எழாமல் இருக்கும் போது அடுத்தவனை பற்றிய அல்லது புறம் பற்றிய நினைவுகள் அறுபட்டுப் போகும். சட்டென்று தன்னை யாரென்று பார்க்கும் ஒரு நிலையை அங்குள்ள சூழல் அவனுக்குள் திணிக்க... 

பக்குவமுள்ளவன் அதை பரிபூரணமாய் உள்வாங்கிக் கொண்டு நிம்மதியின் நுனியினைப் பற்றிக் கொண்டு விடுகிறான். பக்குவமில்லாத தன்முனைப்பு நிறைந்த மனிதர்கள் அந்த சூழல் என்ன என்று பிடிபடாமல் சுகானுபவத்தில் கதறி அழுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயிலுக்குப் போனால் நிம்மதி என்பதும் அதைக் கொடுத்தவர் அங்கே இருக்கும் கடவுள் என்பதும் மட்டும்தான். இதில் தெளிவுகள் இல்லாதவனை மதம் பிடித்துக் கொள்கிறது. அது பேயாய் ஆட்டுவிக்கிறது. என் மதம், என் கடவுள், என்றும் பேச வைக்கிறது.

முன்பெல்லாம் நான் கடவுளைத் தேடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தேன். இப்போது கடவுளைத் தேடினேன் அல்லது தேடுகிறேன் என்று கூற கூச்சமாய் இருக்கிறது. நான் கடவுள் தேடலை விட்டு விட்டேன். இப்போது மனிதர்களை தேடத் தொடங்கி இருக்கிறேன்.  ஆமாம்... மனமில்லாத கர்வம் இல்லாத, தன் முனைப்புகள் இலலாத செத்துப் போவோம் என்று தெரிந்தும் புஜம் தட்டி கொக்கரிக்காத, சிக்கலில்லாத மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எல்லாமாக இருக்கும் சூழல்களில் நீ வாழப் பழகவேண்டும் என்று அறிவுரை கூறுபவர்கள் எல்லா சூழல்களோடும் ஒத்து வாழ்வதாய் கூறிக் கொள்கிறார்கள். 

ஒத்து வாழவும் செய்கிறார்கள். பிடிக்காததை ஏற்றுக் கொள்வது போல நடித்து, பிடித்ததை மறுத்து விட்டது போல பாசாங்கு செய்து....ஒத்து வாழ்வது போல நடிக்கத்தான் செய்கிறார்கள். சகமனிதர்களை கேலி பேசும் மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். அப்படி பேசுவதை சரி என்ற நிறுவவும் மனிதர்கள் இருக்கிறார்கள். கேலி பேசப்பட்டவனும் இதில் என்ன இருக்கிறது என்று ஏமாற்றிக் கொண்டு அவனும் வேகமாய் இந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு நடிக்க ஆரம்பிக்கிறான்.

முகத்துக்கு நேரே புன்னகை செய்து விட்டு மனதுக்குள் ரெளத்ரமான ஒரு பழிவாங்கும் உணர்வோடு, அல்லது ஏளன உணர்வோடு வாழ்வதைத்தான் ஒத்துப் போகுதல் என்று சொல்லி...,  விட்டுக் கொடுத்துக் கொள்வதாய் சொல்கிறான் அதிசூதுகள் நிறைந்த கபடமனிதன். இயற்கை எங்கேயும் விட்டுக் கொடுத்துப் போகாது. அது எப்போதும் இயல்பாய் இருப்பது. கபடம் அற்று நகர்வது. சகிப்புத்தன்மை என்பது மனிதனின் ஆறாவது அறிவு கண்டுபிடித்த நாடகம்.

வலிக்கும்போது திருப்பி அடிக்காத மனிதன் உணர்வற்றவன். சுயநலம் இல்லாமல் பொதுநலம் பேசும் ஒரு மனிதர் கூட இந்த பூமியில் இல்லை. மகாத்மாக்களின் பொது நலங்கள் கூட அவர்களின் சுயத்தை திருப்தி செய்துகொள்வதற்காகவே ஏற்படுகிறது. என்ன ஒன்று அவர்களின் சுய நலமும் பொது நலமும் நேர்கோட்டில் ஆச்சர்யமாய் ஒன்றாகவே இருந்து விடுகிறது.  அப்படியானவனை வரலாறு தத்து எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் அவர்களை வைத்து அரசியல் செய்வார்கள், பணம் சம்பாரிப்பார்கள். 

புரிதலோடு என் தேடல் கடவுளை  விட்டு இப்போது நகர்ந்திருக்கிறது. கடவுள் தேடப்படுவவர் அல்ல. அறியப்படவேண்டியவர். கடவுள் கட்டிடங்களுக்குள் மட்டும் இல்லை. அவர் என்னும் விகுதியை அழித்து அது என்று மாறிய இடத்தில் தடம் புரண்ட உணர்வுகள் எல்லாம் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து விழும் அருவியாய் அதளபாதாளத்தில் ஓ..என்று விழ.....கடவுள் என்னுள் பூர்த்தியாகிப் போனார்.


இப்போது கடவுளை விட்டு நான் மனிதர்களிடம் நகர்ந்திருக்கிறேன். இல்லாத கடவுளைத் தேடி அவர் இல்லாமல் இருப்பவர் என்றறிந்தது போல....இருக்கின்ற மனிதர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இல்லாதவர்கள் என்று உணரும்போது.....

நான் இல்லாமல் போயிருப்பேன்....!

சம்போ....!


தேவா. S11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// கடவுள் தேடப்படுவவர் அல்ல. அறியப்படவேண்டியவர். ///

நல்லதொரு சிந்தனை பகிர்வு...

கடவுள் = கண்ணாடி (முகம் பார்க்கும்)

ranga rajan said...

LOVE U!

Easy (EZ) Editorial Calendar said...

\\"இப்போது கடவுளை விட்டு நான் மனிதர்களிடம் நகர்ந்திருக்கிறேன். இல்லாத கடவுளைத் தேடி அவர் இல்லாமல் இருப்பவர் என்றறிந்தது போல....இருக்கின்ற மனிதர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இல்லாதவர்கள் என்று உணரும்போது.....

நான் இல்லாமல் போயிருப்பேன்....!"//

அருமையாக சொன்னீங்க.....உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

கடவுள் என்பது நம்மிடமுள்ள நம்பிக்கை மட்டும் தான்...நல்ல சிந்தனை தான் கடவுள்...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

சுபத்ரா said...

அருவ வழிபாட்டிலும் உச்சம் நாத்திகம் என்னும் நம்பிக்கையையும் கடந்த மெளனம்//

சரியா புரியல..அருவ வழிபாட்டின் உச்சம் மௌனம்னு புரியுது. நாத்திகம் என்னும் நம்பிக்கையையும் கடந்த மௌனம்னா என்ன?

//நத்திங் இஸ் எவரித்திங்// அருமை.

சுபத்ரா said...

இல்லாத கடவுளைத் தேடி அவர் இல்லாமல் இருப்பவர் என்றறிந்தது போல....இருக்கின்ற மனிதர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இல்லாதவர்கள் என்று உணரும்போது.....

நான் இல்லாமல் போயிருப்பேன்....!

சூப்பர்ப் தேவா

கௌதமன் ராஜகோபால் said...

எல்லாம் கடந்து உள்ளிருப்பவன் கடவுள்.
எதற்குள் இருக்கிறான் என்ற ஆராய்ச்சி தொடங்கும்போது,
உன்னுள்ளிருந்து தொடங்கு.
இறைவன் விஸ்வரூபமானவன். ஆம் அவனை அளவிட முடியாது.
அவனால் படைக்கப்பட்ட ஓரோர் அணுவும் அவனால் இயங்குகிறது.
"அவனின்றி ஓரணுவும் அசையாது"
ஒரோரணுவும் ஒரு சிறு பிரபஞ்சம்.
அணுவின் அணுவாய் அதை இயக்குபவன் இறைவன்.
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-ஆசான் திருமூலர்-
இதை உணர தொடங்கும் நேரம் ஒவ்வொரு மனிதனும்
தன்னுள் கடந்து கட- வுள் உணர தொடங்கும் நேரம்
நீங்கள் தேடும் மனிதர்களையும் காண நேரிடலாம்.
மனித நேயம் மட்டுமல்ல, உயிர் நேயம் வேண்டும் இங்கு.
உடல்களின் எடையும் உருவ அமைப்பும் மாறலாம்,
உயிரின் எடை ஒன்றேன்றறிக.. பகவத் கீதை.
சமயம், புராணம், சம்பரதாயம், இன்னும் பிற வழிகள் அமைத்ததெல்லாம்
இவைகளை உணர்த்துவதர்க்கே, ஆனால் இங்கு நடப்பது வேறு.
புரிதலின் வேறுபாடு. உன்னை அறிந்துகொள், உண்மை புரிந்துகொள்.
கடவுளின் அடுத்து நிற்கும் உணர்வை பெறுவாய்.

அண்ணா நானும் முயற்சி செய்து பார்த்தேன்.
உங்க கிட்ட கத்துக்கிட்டதுதான்.
ஊருக்கே சொல்லுவேன் என்னோட ஒரு குரு தேவா அண்ணா தான் :)
தப்பா இருந்த திருத்துங்க :)

dheva said...

சுபத்ரா @ கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்று நாம் கூறுமிடம் கிட்டதட்ட நாத்திகத்தை ஒத்தது. இதனால் நாத்திகர்கள் எங்கள் நிலைப்பாட்டிற்கு நீங்கள் வந்து விட்டீர்கள் என்று கூறும் வாய்ப்பு இருக்கிறது...

ஆனால்..ஜஸ்ட் லைக் தட் இல்லை என்பதற்கும் மேலான பேரமைதி ஒன்று இருக்கிறது. அது அதிர்வுகளால் நிறைந்தது. அதானல் நாத்திகத்திற்கும் மேலே... என்று கூறினேன். நாத்திகம் சனாதான தர்மம் என்னும் வழிமுறையின் ஒரு நிலையே...!

dheva said...

கெளதம் ராஜகோபால்..@ நன்றிகள் தம்பி...!

ஆழமான அமைதியை விட நல்ல வழிகாட்டி வேறில்லை...!

சுபத்ரா said...

:-)

சிட்டுக்குருவி said...

வ்லையுலகைல் உங்க பதிவுகள் ரொம்ப ரொம்பவே வித்தியாசம்..
அழகான அர்த்தமுள்ள பதிவுகள் சார்