Pages

Friday, September 14, 2012

சம்போ.....!
நான் வாழ்க்கையைத் துரத்திக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது. எண் சாண் உடம்படி இது, வெறும் தோற்பையடி பெண்ணே, வயிற்றுப் பசிக்காய் வாழ்க்கையை விஸ்தாரித்துக் கொள்ளும் மட மானுட கூட்டமடி இது, சந்தோசைத்தை மட்டுமே குறி வைத்துச் செல்லும் சந்தையடி இது, உறங்கிப்போகையில் சகலமும் இழந்து போகும் தினசரி பாடங்களை வசதியாய் மறந்து போய்... விழித்துக் கொண்டிருக்கையில் பொருள் சேர்க்க, புகழ் சேர்க்க பேசித் திரியும் பதுமைகள் நிறைந்த பூமியடி....

நான் கனவு வாழ்க்கையை களைந்து விட்டு எங்கோ செல்ல முற்படுகையில் லெளகீகத்தில் சிக்கிக் கொண்ட பாவியடி..... தளை அறுக்க முயன்று, முயன்று அந்த முயற்சிகள் எல்லாம் புதிது புதிதாய் முடிச்சுப் போட.. மூச்சுத் திணறி எதுவுமற்று இருக்கையில், தானே முடிச்சுக்கள் அவிழக் கண்டு எதுவுமற்ற இந்தப் பிறப்பைக் கடந்து போக நினைக்கும் ஒரு பொதி சுமக்கும் கழுதையடி நான்...

உன்னை வசீகரிக்க என்னில் ஒன்றுமில்லை. வசீகரம் என்று நீ சொல்வது எல்லாம் எனது பலவீனங்கள். நான் கரடு முரடானவன். கட்டுக்கள் இல்லாமல் சீறிப்பாய்பவன். அப்படி சீறிப்பாய்வதாலேயே திமிர் பிடித்தவன் என்று, திமிரையே சுவாசிப்பவர்களால் அடையாளம் காட்டப்பட்டவன்..., நான் மூன்று வேளை உண்ண முன்னூறு பேரை நாசம் செய்பவன் இல்லை. பகட்டிற்காய் எப்போதும் சுயவிளம்பரம் செய்து கொள்ளும் சூத்திரதாரி இல்லை...

நானும் நீயும் கேட்டா பெண்ணே இந்த பிரபஞ்சம் ஜனித்தது? இல்லை உன்னையும் என்னையும் கேட்டா ஏதோ ஒரு பிரளயம் மூளப் போகிறது? ஆக்கமும் அழிவும் தனிமனித மனங்களைச் சார்ந்தது அல்ல அது பேரியக்கத்தின் பெரு விருப்பம். சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கு தனித்தனி காரணங்களைத் தேடி அழியும் பித்து மனிதர்களின் சத்திலிருந்து ஜனித்தவள் நீ.....

என் மொழி உனக்குப் புரியாது. என் ப்ரியங்களைத் தெரிந்து கொண்டால் நீ மூர்ச்சையாகிப் போவாய்...., என் விலா எலும்புகளை நொறுக்கி, என் உடல் நரம்புகளை அறுத்து, உடலில் இருக்கும் குருதியை எல்லாம் வெளிக் கொண்டு வந்து நினைவுக் குப்பைகளை எப்போதும் ஏந்தித் திரியும் திரவ மூளையை எரியவிட்டு, பார்வைகள் என்று பொய்யையே எப்போதும் காட்சிப்படுத்திய விழியென்னும் தசைகளை வீசி எறிந்து விட்டு....

நான் மரித்துப் போய்விட்டேன் என்று உலகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணர்வாய் விரிந்து நின்று மனிதர்களின் செவிகளுக்கு எட்ட முடியாத சப்தங்களால் பிரபஞ்சத்தில் அதிர்வுகளாய் பரவிக் கிடப்பேன். சராசரி கனவுகள் என்னும் சங்கடங்களை என்னிடம் திணிக்க முயலாதே பெண்ணே....!!!!! காதல் என்பதை உருவம் கடந்து நான் சுகிக்கத் தொடங்கி நாளாகி விட்டது, காமத்தை உடலுக்குள் தேடிக் கொண்டிருக்கும் போலிகளை நான் உடைத்துப் போட்டு விட்டு நான் அருவமான பெருவெளியில் கிடப்பவன் நான். அங்கே நானே நானாய் புணர்தலை விடுத்து புணர்ச்சியின் உச்சத்தை ஒத்த பெரு உணர்வில் மீளமுடியாத சுகத்தினை உடல் கடந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...

சுழற்சியின் ஓட்டத்தில், மனதுக்குள் குடித்தனம் நடத்தும் மனிதர்கள் பேரியக்கத்தின் பெருவிருப்பில் முழுமையை அடைய பிள்ளைகளை பெறுகிறார்கள். பிள்ளைகளும் பிறக்கின்றன. இது சுழற்சி, மனமாய் செயல்களைச் செய்தவன் மனமற்றுப் போய் மீட்டெடுக்க முடியாத பிரபஞ்சத்தின் ஆழ்மனதின் அங்கமாக வேண்டும் என்ற ஆன்ம விருப்பில்....ஜனவிருத்திகள் செய்கிறான். காமம் பிரபஞ்ச விருப்பம்.  இயக்கத்தின் சூட்சுமம். கர்மா அழிய காமம் ஒரு வழி என்றுதான் எல்லா உயிர்களிலும் நிறைந்து கிடக்கிறது காமம். காமத்தை உடல் வழிப் புணர்ச்சியாய் மட்டும் பார்ப்பவனும் ஆசைகள் கொண்டவனும், அகந்தைகள் கொண்டவனும் மீண்டும், மீண்டும் பிறக்கிறான்.

மரணத்தை அறிந்தால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும். மரணம் என்றாலே பெரும்பயம் கொள்ளும் மனிதர்களுக்கு அது எளிய வழிமுறையல்ல... ஆதலால் காமத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறேன். காமம் வெறுமனே உடல்களின் உரசல் அல்ல. மரணம் ஒரு ரகசியம். ஜனனம் ஒரு ரகசியம். யாரென்று இன்னாரென்று அறியுமுன்னே பெரும்பாலும் மரணித்து விடுகிறோம் அதனால் மரணத்தில் கொடுக்கபப்டும் துருப்புச் சீட்டை வாசிக்க முடியாமலேயே போகிறது.

ஆனால்...

காமத்தில் ஒரு ஜனனம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு உயிரை உருவாக்க இரண்டு உடல்கள் வெற்றுக் கருவிகளாகின்றன. கருவிகளின் புத்தி கலவியின்பத்தை மையமாய்க் கொண்டு இயங்குகையில் பிரபஞ்சத்தின் சூட்சுமம் மெதுவாய் சுழல ஆரம்பிக்கிறது. மனதை அங்கே நிறுத்தி இயங்கி இயங்காமல்..ஆமாம்.. உடல் இயங்கி மனம் இயங்காமல்,குரோதமில்லாத காமம் வழிவிட அங்கே என்ன நிகழ்கிறது என்ற உண்மையை ஆன்மா  மெல்ல உணர ஆரம்பிக்கிறது. அந்த உண்மையில் இயங்கும் உடலின் ஜன்மம் எப்படி ஜனித்தது என்ற பேருண்மை அலை அலையாய் அதிர்வுகளாய் மூளைக்குள் ஏற அந்த அதிர்வுகளை, மனம் சமகால புலன் உணர்வுகளுக்கு ஏற்றார் போல விஸ்தாரித்துப் பார்க்கிறது.....

ஆன்மா என்னும் விதை எங்கே இருந்து பிரிந்தது...? ஏன் பிரிந்தது? எங்கே பயணிக்கிறது...? என்ற விபரம் வார்த்தையாய் இல்லாமல் உணர்வாய் பிடிபட ஆரம்பிக்கிறது. புரியவில்லை என்றால் மீண்டும்.. காமம்... மீண்டும் இயங்கி இயங்காமல் அங்கே நின்று நிதானித்தல்.....! சரியான துணையோடு சீரான அதிர்வில் இதை உணரத்தான் ஏகபத்தினீயம் என்னும் ஒற்றை துணை நிறுவப்பட்டது. அதிர்வுகள் மாறி, மாறி மனிதன் காமம் கொள்கையில் அங்கே அவனின் மனம் புறத்தோற்றத்தில் லயிக்க, இவள் மாறி அவள், அவள் மாறி இன்னொருவள், அவன் மாறி இவன், இவன் மாறி இன்னொருவன்... என்று....,

தசையில்லா எலும்பினை கடித்து கடித்து வாய் கிழிந்து இரத்தம் வரும் ஒரு நாயாய், அதன் இரத்தத்தை அதுவே குடித்து அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருகிறது என்ற மாயையில் சிக்கி கடைசியில் பரிதாபமாய் அது செத்துப்போவது போல, மனிதனும் காமத்தில் இடம் மாறி மாறி சென்றால் தெருநாயைப் போல மனம் அமைதியற்றுச் செத்துப் போகிறான்.

காமம் ஜென்மங்களாய் நான் அறிந்து, புரிந்து, தெளிந்தது. காதலை மையமாய் வைத்து காமம் கொள்ளும் உலகத்தீருக்கு நடுவே நான் கொண்டிருக்கும் காதலும், காமமும் புலன்வயப்பட்டது அல்ல...! ஒரு பெளர்ணமி இரவில் நான் தனித்திருக்கையில் கோடாணு கோடி உணர்வுகள் என்னைத்  தாக்க கோடி முறை கூடினாலும் கிடைக்காத பெரும் கிளர்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்...., அடர்ந்த நிலவற்ற வெறுமையான அமாவாசையில் திசைகளை எல்லாம் தொலைத்துவிட்டு.....பல நாட்கள் கிளர்ந்தெழுந்த மனோநிலையில் எங்கோ கிடந்திருக்கிறேன்....

என் கர்மா இங்கே சில கடமைகளைச் செய்து நான் வெளியேற வேண்டுமென்பது, நான் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு, அவளிடம் காமம் கொண்டு பிள்ளைகள் பெற்று வாழ்க்கையை நுகர்ந்து அனுபங்களைக் கிரகித்துச் செல்ல வேண்டும் என்ற அவசியமற்று இருக்கிறேன். மனிதர்களுக்கு என்னை யாரென்று தெரியாமல் இருக்கலாம்,  என்னை எள்ளி நகையாடலாம், என்னை பைத்தியக்காரன் என்று சொல்லலாம், அவர்களின் பணம் மற்றும் அதிகார பலங்களை வைத்துக் கொண்டும், லெளகீக அனுபவங்களை  செரித்துக் கொண்டும் என்னை உதாசீனப்படுத்தலாம்...

ஆனால் எனக்கு அவர்களின் பயணம் எங்கே என்பது தெரியும். என் முன்னே வந்து செல்லும் ஒவ்வொரு மனிதனின் அந்திமமும் எப்படி இருக்கும் என்பதை அறிவேன். அவர்களின் உயிர் எப்படி போகும் என்ற சூட்சும முடிச்சு தெரியும். வார்த்தைகளின் வீச்சுக்களை வைத்தும், மமதையின் ஆழத்தை வைத்தும், பேசும் போது முகத்தில் விரியும் சுருக்கங்களின் அளவினை வைத்தும், குரலின் ஏற்ற இரக்கங்களை வைத்தும், விழிகளின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கும்  மனதின் விஸ்தாரிப்புகளை வைத்து  நொடிப்பொழுதில் எடை போட முடியும்....

செழிப்புகள் வறட்சியை நோக்கியும், வறட்சிகள் செழிப்பினை நோக்கியும் பயணிக்கும். இது பிரபஞ்ச நியதி. மனிதர்கள் மாற்ற முயலுகிறேன் என்று கூறுவதும் ஒரு விசித்திர விளையாட்டுதான். மாற்றம் என்பதை தீர்மானிக்கும் பெருஞ்சக்தியாய் இயற்கையையும் உள்ளடக்கிய ஒரு பிரமாண்டம் இருக்கிறது. அதுவே வானத்தை மழையற்று வரண்டு போகச் செய்கிறது. வானம் வரண்டு போக சூழலை உருவாக்கும் மனிதர்களையும், வானத்தை செழிக்க வைக்கும் மனிதர்களைக் கொண்டு வனங்களையும் படைக்கிறது....

அதுவே ' குன் ' என்ற மாத்திரத்தில் எதுவுமற்றதில் இருந்து எல்லாமாய் விரிந்தது. அதுவே அதிர்வுகளை மொழியாக்கி வேதங்களாய் பூமியில் நடை பயின்றது. அதுவே தேவனானது, மனிதரானது, அதுவே விலங்கானது, அதுவே மலையானது.....முரணாயும், தெளிவாயும் அதுவே இருக்கிறது. அதன் தேவை என்பது தனி மனித தேவை இல்லை....கூட்டு நிகழ்வின் சுமூக இயகத்துக்கான தேவை....

எனக்கு காதல் வராது. கட்டுக்குள் நின்று காதலிக்கும் அனுபவத்தை ஜென்மங்களாய் நான் அனுபவித்து இருக்கிறேன். எனக்கு அந்த உபாயம் தேவை இல்லை. விரல் விட்டு எண்ணி கூட்டிக் கழிக்கும் வித்தையை நான் எப்படி திரும்பச் செய்வது...? நான் மனதில் கணக்குகள் போடக் கற்றுக் கொண்டேன். பிரச்சினை உன்னிடம் இல்லை பெண்ணே.. பிரச்சினை என்னிடம் தான். என்னால் உனக்கு எப்போதுமே லெளகீக சந்தோசங்கள் கிடைக்காது. எரிமலையில் பேரமைதியை நீ ரசிக்கிறேன் என்று கூறும் அபத்தத்தை விளங்கிக் கொள். நான் வெற்றுக் கால்களுடன் முட்காடுகளுக்குள் பிரயாணம் செய்பவன்...

எனது இலக்கு எப்போதும் வாழ்க்கைக்குள் உழன்று கொண்டிருப்பவர்களுக்குப் புரியாது. லெளகீகத்தை விட்டு வெளியே நின்று, ஜட வாழ்க்கையைக் கடந்த பார்வையோடு  கொடுக்கல், வாங்கல், எதிர்ப்பார்ப்புகள்  கடந்து, புகழுக்காய் உறவுகள் கொள்வதைக் களைந்து, தன்முனைப்புக்கள் கடந்த, சுய தம்பட்டம் அற்ற மனிதர்கள் என்னை அடையாளம்  கண்டு கொள்வார்கள்....

முகஸ்துதி பாடும் உலகம் இது. முதுகிற்குப் பின்னால் புறம் பேசும் பூமி இது....இங்கே நான் காதலிக்க மனிதர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கிறது. அது எனது கர்மாவை கரைத்து எங்கோ என்னை அழைத்துச் செல்லும். நான் பிறப்பறுக்கும் பிஞ்ஞகனிடம் பெரும் காதல் கொண்டிருக்கிறேன். அதில் நீயும் அடக்கம்....ஆனால் நீ மட்டுமேல்ல....

நான் நீங்கள் காண்பவன் மட்டுமல்ல.....என்னால் உன்னை ஆசிர்வதிப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது.....

சம்போ.......!!!!!!!!!!

நான் எங்கோ நடந்து கொண்டிருந்தேன்....அவள் அங்கேயே நின்றாளா சென்று...விட்டாளா என்று யோசிக்கக் கூட தோன்றவில்லை...!

சம்போ.....!


தேவா. S
No comments: