
நீ எழுதி வைத்த
பழைய கவிதைகளை
மீண்டும் எடுத்து வாசிக்கிறேன்
கடந்து போன வாழ்க்கையை
மீண்டுமொரு முறை பார்க்கும்
ஒரு புகைப்படத் தொகுப்பை போல
ப்ரியங்களை நாம் சுமந்து திரிந்த
அந்தக் தருணங்களை மீண்டும்
மீட்டெத்துக் கொடுக்கும் வரிகளை
வாசித்துக் கொண்டிருக்கையில்
என்னை மீறி வரும் கண்ணீரில்
ஒளிந்திருப்பது உன் மீதான காதலா
இல்லை
உன்னை பிரிந்த ஏக்கமா
என்ற கேள்வியொன்று எட்டிப்பார்த்தது....
நான் அதன் முனை ஒடித்து எறிந்து விட்டு
மீண்டும் உன் வரிகளுக்குள் மூழ்குகிறேன்...
உன் வார்த்தைகளுக்குள் முதல் முதலாய்
நான் உன்னைத் தேடாமல்
என்னைத் தேட ஆரம்பித்திருந்தேன்
நீ விட்டுச் சென்றிருக்கும் இந்த நீண்ட நெடிய
மெளனத்தில் என்னையே நான் பார்க்க
நீ....கற்றுக் கொடுத்திருப்பதாய் எனக்கு தோன்றுகிறது;
ஒரு பெருமூச்சுடன்.....
என் வீட்டுச் ஜன்னலைத் திறக்கிறேன்....
அப்போதுதான் பெய்து முடித்திருந்த
மழையை சேகரித்து வைத்திருந்த
மல்லிகைச் செடியொன்று....
ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது...,
ஜன்னல் கம்பிகளில் முகம் புதைக்கிறேன்
வேகமாய் உன் ஞாபகங்கள் ஓடி வந்து
என்னை சூழ்ந்து கொள்கின்றன....
மிட்டாய் விற்பவனைச் சூழும்
சிறுபிள்ளைகளைப் போல....;
யாரோ ஒரு பெண்ணொருத்தி
கையில் காய்கறிக் கூடையுடன்
பிள்ளையை இடுப்பில் சுமந்து
என் ஜன்னலைக் கடந்து செல்கிறாள்
அவள் உன்னைப் போலவே இருக்கிறாள்..
நீயாகவும் இருக்கக் கூடும்...,
என் நினைவுகளைக் கலைத்துப் போட்டு
அதிரடியாய் என் அறைக்குள் நுழைந்த காற்றொன்று
உன் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறது...
எதேச்சையாய் ஏதோ ஒரு பக்கத்தில்
நான் உனக்கு யாருமில்லை என்று
தலைப்பிட்டு நீ எழுதியிருக்கும் கவிதை ஒன்று
நீ எனக்கு யாருமில்லை என்று சொல்கிறது....
என் வீட்டு மல்லிகைச் செடி இன்னமும்
சொட்டிக் கொண்டிருக்கிறது...
சேமித்து வைத்திருந்த பெரு மழையின்
சிறு துளிகளை....!தேவா. S
Comments
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அழகான கவிதை
அப்போதுதான் பெய்து முடித்திருந்த
மழையை சேகரித்து வைத்திருந்த
மல்லிகைச் செடியொன்று....
ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது...,//
அதுவோ என்று நினைக்க வை
த்தது
//என் வீட்டு மல்லிகைச் செடி இன்னமும்
சொட்டிக் கொண்டிருக்கிறது...
சேமித்து வைத்திருந்த பெரு மழையின்
சிறு துளிகளை....!//
அதுவே என்று உணர்த்தியது....
மல்லிகையின் வாசனையை மழை அதிகப்படுத்துகிறது.
சோகங்களால் இழையோடிய காதல்க் கவிதை வரிகள் மிகவும் சிறாப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் சகோதரரே .
உங்கள் கவிதையினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம்
செய்துள்ளனர் .மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .மிக்க நன்றி பகிர்வுக்கு .
http://www.kousalyaraj.com/2012/10/2.html
தனிமை பெரு வெளியில் அற்புதமான படைப்பு சூழலுக்கு அழைத்து செல்கிறது படிப்பவர்களை .........உங்கள் தளம் தோழி கௌசல்யா மூலம் அறிமுகம் .....தொடருகிறேன்