Skip to main content

தேடல்....28.12.2012!



எனது தேடல் முடிந்து போகவில்லை... என்றாலும் தேடும் ஆவல் குறைந்து போனது உண்மைதான். எதையுமே ஆச்சர்யமாய் பார்க்கத் தோன்றாத மனோநிலையும், எவர் எதைப் பேசினாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளுமொரு மனோபாவம் பளீச் என்று ஒரு குரங்கு குட்டியாய் என் முன் துள்ளிக் குதித்து அவர்களை அடையாளப்படுத்தி விடுவதாலும்.. எனக்குள் இருக்கும் குரங்குக் குட்டியை கட்டி மேய்க்கவே நேரம் எனக்கு சரியாய் இருப்பதாலும் தேடல் பற்றி எழுதும் தூரம் அதிகமாகிப் போய்விட்டது..

எனது இருப்பை நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்திலிருந்து கிளைத்து எழும் ஓராயிரம் வேசங்கள்தான் மனிதர்களின் செயல்களாகிப் போகிறது.  நான் எதையாவது எழுதுவதை தயவு செய்து என் புலம்பலாய், நான் எனக்குள் பேசும் ஒரு பாவனையாய் ஆக்கிக் கொள் என் மனமே என்ற என் வேண்டுதல் பல நேரங்களில் பலிக்காமலும் சில நேரங்களில் பலித்தும் போயிருக்கிறது. எழுதுவது இங்கே மிகப்பெரிய வித்தையாய் பார்க்கப்படுகிறது. எழுதுபவன் மட்டும் இங்கே தன்னை வேற்றுக்கிரக வாசியாய் நினைத்துக் கொள்வது கிடையாது, வாசிப்பவர்களும் அப்படியே நினைக்கிறார்கள்.

சுற்றி நிகழும் நிகழ்வுகளை, ஏதேதோ புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை, உள்ளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வலிகளை, வாழ்க்கை போதிக்கும் பாடங்களை முழுமையாய் வாங்கிக்கொண்டு அந்த உணர்வினை தனக்குள் வகைப்படுத்தி, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் கோர்வையாய் கொண்டு வரத்தெரிந்தவன் இங்கே எழுத்தாளன் ஆகிப் போகிறான். அதாவது சொல்ல வரும் விசயத்தை வார்த்தைகளில் சரியாய் அடுக்கி வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

எனக்குள் இருக்கும் உணர்வுகளை என்னை புரிந்த ஒரு மனிதரிடமோ, அல்லது நான் கற்பிதம் கொண்டிருக்கும் ஒரு கடவுளிடமோ அல்லது எனக்குள் நான் பேசியோ பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். பல நேரங்களில் ஓ...என்று சாய்ந்து அழ எனக்கு ஒரு தோள் தேவைப்படுகிறது. அந்த தோள் என் சோகத்தை ஆராயாமல் தன்னுடைய யோசனைகளை எனக்குச் சொல்லி என்னை ஆக்கிரமித்து விடாமல், வாங்கிக் கொள்ளும் தன்மைகளோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இங்கே வலி என்று பகிர முயலும் போதே மனிதர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். தத்துவாசிரியர்கள் நிறைந்த உலகமாய் இது போய்விட்டது. எல்லோரும் கருத்து சொல்கிறார்கள். பணம் சம்பாரித்தலைப் பெருமையாய் நினைக்கிறார்கள். கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே அவர்களும் கீழே விழுகிறார்கள். சுற்றிச் சுற்றிப் போனாலும் இருப்பது சுப்பருடைய கொல்லைதான் இருக்கிறது என்பதை மறந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு, இத்துனூண்டு வாழ்க்கை இதுக்கு ஏன் இவ்வளவு இறுக்கம்? தலைக்கனம்? திமிர்...? என்று...! ஆமாம்.. நாம் வாழும் வாழ்க்கையின் நீளம் பிரபஞ்சக் கணக்கின் முன்னால் தூசினை ஆயிரம் தடவை பகுத்துப் பார்த்து, அதையும் கோடி முறை பகுத்துப் பார்த்தாலும் அதைக்காட்டிலும் சிறியது. மனிதர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள இங்கே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...! நான் முந்தியா நீ முந்தியா என்ற போட்டி இடை விடாது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.   

போட்டியிலிருந்து நான் விலகி நிற்க எனக்கு காலம் உதவியது. நான் இங்கே இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் யாரிடமும் பகிர விரும்பவில்லை. இப்படியான என் மனோநிலையில் எனது இருப்பு சார்ந்த உணர்வுகளை யாரிடம் சொல்வது....? இறை என்ற விசயம் நான் என்னும் அகங்காரம் இல்லாத  உள்ளமை என்று உணர்ந்த பின்பு, தனியாய் கடவுளிடம் கதையளக்கும் வழமையை நான் கடந்து வந்துவிட்டேன். சாய்ந்து அழ தோள் கிடைக்காத ஒரு நிராயுதபாணியின் கதறலாய்த்தான் என் எழுத்துக்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே சிறப்பு என்று எதுவும் கிடையாது. பிரபஞ்சப் பேரியக்கம் இடும் பிச்சையை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நாம். இதில் பெரிய பிச்சைக்காரன் சிறிய பிச்சைக்காரன்,  அறிவாளி பிச்சைக்காரன், முட்டாள் பிச்சைக்காரன், அதிகாரம் கொண்ட பிச்சைக்காரன், என்றெல்லாம் வகைப்படுத்தி வேண்டுமானால் கொள்ளலாம்.

ஆனால்...அத்தனை பேரும் பிச்சைக்காரர்களே...! பிரபஞ்சப் பேரதிர்வின் அலைகள் கடந்து செல்லும் கருவிகள் நாம்.... அவ்வளவே...!

கடவுளை நோக்கிய என் தேடல் ஒரு இடத்தில் புரிதலோடு வாழ்க்கையை நோக்கி திரும்பிய கணத்தில்தான், அதுவரையில் எவ்வளவு தவறான புரிதல்களோடு வாழ்ந்திருந்திருக்கிறேன் என்ற உண்மை விளங்கியது. சத்தியத்தில் தொடர்பு கொள்ளுதலின் அழுத்தமான ஜோடனையாக உறவுகள்  என் முன் காட்சிப்பட்டுப் போயின. புலன்கள் இழுத்து வந்து போட்ட அனுபவக் கோர்வைகள் எல்லாம் அபத்தமாகி ஒடிந்து விழத் தொடங்கிய கணத்தில் ஆத்மார்த்தமான புரிதல்  கொண்ட ஒரு சிலர்  வார்த்தை பரிமாறல்களும், கவர்ச்சிகரமான பேச்சுகளும், பாவனைகளும், ஜோடனைகளுமின்றி என்னைச் சூழ ஆரம்பித்தனர்.

ஆத்மார்த்த உறவுகள் எப்போதும் புறச்சூழலை வைத்து நம்மிடம் தொடர்பு கொள்வது இல்லை. தேவா என்று பெயரிடப்பட்ட இந்த உடலுக்குள் இருக்கும் உள்ளமையை விளங்கிக் கொண்டவர்கள் எப்போதும் என்னைப் பற்றி யாதொரு அபிப்ராயமும் கொள்ளாமல், என் வார்த்தைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்று மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். என் சமகால வாழ்க்கையைப் பற்றி அவர்கள் யாதொரு கேள்வியும் கேட்பதில்லை. வாழ்க்கை எப்போதும் தேவைகள் நிறைந்தது இங்கே கொடுத்தலையும், பெறுதலையும் கடந்து நாம் நிற்கும் போதுதான் இதன் முழுமையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். குணம் என்பது சூழ்நிலை என்பதோடு மட்டுமில்லாமல் ஜீன்களின் தாக்கம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.  

மனித வாழ்க்கை சார்ந்து வாழும் வாழ்க்கை என்பதை தவறாகவே போதித்து தவறாகவே பழக்கி விட்டு விடுகிறார்கள். நானும் சார்ந்து வாழ்தல் என்பதை சக மனிதர்கள் மீது கொள்ளும் உரிமையாக எடுத்துக் கொண்டு அதனால் கஷ்டங்களை அனுபவித்தவன். யாரையும் சாராமல் நமது வாழ்வியல் தேவைகளை நாம் செய்து கொண்டே செல்லும் போது நமது செயல்களின் விளைவுகள் யாருக்கோ எப்படியோ சென்று சேர்ந்து விடும். நமது செயல்களுக்கான தர்மத்தையும், நீதியையும் நாம் வரையறுத்துக் கொள்ள எங்கிருந்தோ உதாரணங்களை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் இருந்து நகல் எடுத்து அதன் படியே வாழ முயல்கிறோம் அல்லது இந்த சமூகம் அப்படி நம்மை வாழச் சொல்கிறது.

என்னை சுயமாய் இருக்க ஒரு போதும் இந்த சமூகம் விடவில்லை எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டு அண்ணன், எதிர் வீட்டு அக்கா, மூணாவது தெரு மாமா, இல்லை யாரோ ஒரு பணக்கரான், யாரோ ஒரு பிச்சைக்காரன், யாரோ ஒரு தொழிலதிபர், ஒரு அறிவாளி, அரசியல்வாதி, நடிகன் என்றெல்லாம் எனக்கு உதாரணம் சொல்லி அது போல நீயும்....என்று ஒரு வசதி செய்து கொடுக்கிறது.

அது போல....நீயும் செய் அல்லது நான் செய்கிறேன் என்று யார் என்னிடம் சொன்னாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்கள் உறவை நான் துண்டித்துக் கொள்கிறேன்.  என் கண் முன் இருப்பது எனக்கான ஒரு வாழ்க்கை அதை எவ்வளவு நிறைவாய் நான் வாழ வேண்டும் என்பதற்கு எதற்கு ஏற்கெனவே வாழ்ந்து முடித்த ஒருவரின் செயல்களை மார்ச்சுவரியிலிருந்து உருவி எனக்கு நான் பாடமாக்கிக் கொள்ள வேண்டும்...?

எனது பார்வை புதியது...! எனது காதல் புதியது...! எனது கடவுள் தேடலும், வாழ்க்கையும் புத்தம் புதியது...! அது இதற்கு முன் யாராலும் வாழப்படாததாக முற்றிலும் புதியதாய் புத்துணர்வோடு என்னால் வாழப்படவேண்டும். வரலாறுகளையும் கதைகளையும் நான் என் அனுபவத்திற்காய் கேட்டுக் கொள்கிறேன். பெரிய மனிதர்கள் என்று இந்த சமூகம் கடை பரப்பி இருப்பவர்களின் வாழ்க்கையில் நடந்த நல்ல விசயங்களை மட்டும் வாசித்து விட்டு, சமூகப் பொது புத்தியின் படி...அவர் யாரு தெரியுமா என்று நரம்பு புடைக்க பேசுவது என் வேலையல்ல....

அந்த பெரிய மனிதரின் வாழ்க்கையில் நடந்த யாரும் பார்க்க விரும்பாத பக்கங்களையும் தேடி எடுத்து நான் வாசிக்கிறேன். இது அந்த மனிதரைப் பற்றிய முழுமையான புரிதலை எனக்குக் கொடுக்கிறது. பகவான் இரமண மகரிஷியை என் மனம் போற்றும் அதே நேரத்தில் இவர் ஏன் இப்படி மலையடிவாரத்தில் வந்து அமரவேண்டும் இயல்பாய் இருந்திருக்கலாமே.... என்ற கேள்வியும் எனக்குள் எழத்தான் செய்கிறது. அவர் மகான் என்பதிலோ அல்லது அவரது அனுபவத்தைப் பற்றி பேசும் அருகதையோ எனக்கு இல்லை என்பது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும்

எனக்குள் கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. துறவிகள் என்று தனிப்பட்டு காட்சியளிக்க வேண்டிய சூழலை விதைத்தது இந்த சமூகமா? அல்லது தனிப்பட்ட மனிதரின் விருப்பமா? என்றெல்லாம் நான் கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். இது யாரையும் அவமரியாதை செய்யும் ஒரு நிகழ்வாய் எனக்குத் தெரியவில்லை, மாறாக என் சுயத்தை நான் மரியாதை செய்யும் நிகழ்வாய்த்தான் பார்க்கிறேன்.

கர்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் நம்ப அறிவியல்தான் காரணமாகிப் போனது. எல்லா செயல்களுக்கும் ஒரு விளைவு இருக்கும் என்று அறிவியல் சொல்லும் போது, ஒட்டு மொத்த மனித வாழ்க்கையும் முடிந்து போகும் போது அதற்கு விளைவுகள் இல்லை  என்று சொன்னால் என் பகுத்தறிவு மூளை செத்துப் போனதாகிப் போகிறது. பகவான் இரமணருக்கும், விவேகானந்தருக்கும், வள்ளலாருக்கும் அவர்களின் வாழ்க்கை அமையப்பெற்றது கர்மாவின் காரணமாய் இருக்கலாம் என்று விடை எனக்கு  கிடைத்த  இடத்தில் என்னை அடர்த்தியான  மெளனம் சூழ்ந்து கொண்டது.

தொடர்புகள் வாழ்வதற்கு அவசியம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் என்று உங்களிடம் கூறும் அதே நேரத்தில் தொடர்புகள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவும் என்று என்னால் அறுதியிட்டு கூற முடியாது. மனித தொடர்புகள் பெரும்பாலும் நம்மை ஆளுமை செய்யவே செய்கிறது. என்னைக் கடந்து அடுத்த நபரிடம் நான் தொடர்பு கொள்ளும் போது அப்படியாய் நான் தொடர்பு கொள்ளும் நபரின் பக்குவமான நிலையும், பக்குவமில்லாத நிலையும் என்னை பாதிக்கச் செய்கின்றன.

குழப்பவாதிகள் குழப்பத்தையும், பேராசைக்காரர்கள் பேராசையையும், ஆணவக்காரர்கள் ஆணவத்தையும், பெருமை பேசுபவர்கள் சுய தம்பட்டத்தையும், கோபக்காரர்கள் கோபத்தையும் எப்படி எனக்கு  கொடுத்துச் செல்கிறார்களோ....

அதே போல.... நிதானமான யோசனை உள்ளவர்களும், தெளிவான புரிதல் உள்ளவர்களும் வாழ்க்கையின் நிலையாமையை விளங்கியவர்களும் அன்பையும், அமைதியையும் தங்களின் இயல்பாய் கொண்டவர்களும்....

அவர்களின் உணர்வுகளை எனக்குக் கொடுத்துச் செல்லவும் செய்கிறார்கள்.

நான் இரண்டாவது சொன்ன வகையினரை விட முதலில் சொன்ன வகையினரே இங்கே மிகுதி சதவீதத்தில் 99.99%. மிகைப்பட்ட பேர்களை விட்டு விலகி நின்று நான் மெளனித்துச் செல்வது ஏன் என்ற எனது கேள்விக்கு எனக்கே இந்த வரிகளை எழுதும் போது விடை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எழுதும் போது தோன்றும் எண்ணங்கள் எனக்குள் இருந்து எழுவது ஆனால் எனக்குச் சொந்தமானது அல்ல...

எனது தேடல் அபத்தங்களை விட்டு என்னை தூர இருக்கச் சொல்லி இருக்கிறது. விலகி இருக்கத்தான் சொல்லி இருக்கிறதே அன்றி கவனிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. நான் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் செயல்களோடு தொடர்பு கொள்ளாமல் இருக்கப் பழக்கப்படுத்திக் கொண்டது எனது நீண்ட நெடிய பயணத்தின் ஒரு மைல் கல்..

இலக்கு எங்கிருக்கிறது என்று தெரியாது..... ஒருவேளை இப்படி நான், எனக்கு என்று எழுதும் ஒரு மடமை ஒழியும் அன்று இலக்கை நான் தொட்டிருப்பேனோ என்னவோ...!

ப்ரியமாய் நான் எழுதுவதை வாசிக்கும் ஆன்மாவின் பாஷை தெரிந்த அத்தனை பேருக்கும் எனது வந்தனங்கள்...!


தேவா. S




Comments

தெளிந்த ஒரு நீரோடையை போல சலசலக்கிரது உங்கள் எழுத்து ஆனால் இந்த நீரோடை இப்படியே இருக்கும் என்று நினைக்க முடியாது இயற்கையின் மாறுதலில் மீண்டும் ஒரு கல் பட்டு அதிர்வுரலாம் அல்லது ஒரு சரிவில் குழம்பலாம் அல்லது அதிக வெப்பத்தில் வற்றிபோகலாம் மீண்டும் ஊற்றேடுகலாம் ஆனால் எந்த சூழல் வந்தாலும் அதை ஏற்றுகொள்ளும் பக்குவம் மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியது ................தேவா வார்த்தை ஒவ்வொன்றும் அனுபவத்தில் ஊறியது போல சிறப்பாக வெளிபடுதியிருகிறீர்கள் எனக்குள்ளும் இந்த தெளிவும் குழப்பமும் அவபோது வந்து செல்கிறது விருந்தாளியை போல
நல்லா எழுதி இருக்கீங்க.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
சம்போ சிவ சம்போ :)
பொதுவா ஒரு பதிவுல நமக்கு புடிச்ச வரிகள மேற்கோள் காட்டி நம்ம கருத்த சொல்லுவோம் இல்ல பாராட்டோ எதிர்ப்போ தெரிவிப்போம் . ஆனா இந்த பதிவுக்கு அப்டிலாம் பண்ண முடியாது . ஏன்ன மொத்த பதிவையும் அடைப்புக்குள்ள வக்கணும் . அவ்ளோ அருமை .

சந்தேகம் : இப்டி பிரமாதமா எழுதுற நீங்களே எழுதிப் பழகுபவன் ன்னா நானெல்லாம் ...?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல