Skip to main content

என்னப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா!


















இறக்க முடியாத சிலுவைகளை காலம் சுமக்கச் சொல்லிக் கொடுத்திருக்கும் தூரங்களே தொலைவாய் இருக்கும் போது மீண்டும் மீண்டும் சிலுவைகள் வழி நடுகிலும் எனக்காய் காத்தும் கிடக்கின்றன தோளில் ஏறுவதற்கு. இந்த வழியை எனக்குக் கொடுத்திருக்கும் காலம் என்னை வெகு தொலைவில் கூட்டிச் சென்று ஒரு நாள் சிலுவையில் அறையலாம். எனது பாவங்களுக்கு மீட்பராய் இருந்து ஆன்மா காத்தருளவும் கூட செய்யலாம்.

கருவி நான். கர்த்தாவை அடையாளம் காணவேண்டி வாழ்க்கையை துறக்க விரும்பும், அடையாளங்களை அழித்துக் கொள்ள விரும்பும் பெரும் யாக்கைகள் கொண்ட மனிதன் நான். சுயநலக் குதிரையின் மீதேறிக் கொண்டு கடிவாளம் சுழற்றி வாழ்க்கையை கடந்து விடத்துடிக்கும் மானுட சமுத்திரத்தின் புள்ளி நான். மூலப்பிரகிருதி மங்கிப் போய் தன்னை மறந்து வடித்துக் கொண்ட ஆகிருதி நான். எழுதி, எழுதி என் எண்ணக் குப்பைகளை இறைத்து செல்கையில் அதற்காய் அங்கீகாரம் தேடும் மூடன் நான்.

சமூகத்தின் சட்ட திட்ட நெரிசல்களுக்குள் சிக்கிக் கொண்டு உறவுகள் அழைக்கும் பெயரை என் மீது ஏற்றிக் கொண்ட அடையாளமற்ற வஸ்து நான். வாழ்க்கை நகர்விற்காய் பொருள் சேர் என்று கற்பித்துச் சென்ற துஷ்டனை அவித்தை வடித்த துர் சக்தியாய் நினைத்து, அவனைத் தேடிக் கொல்ல அலையும் பித்தன் நான். கடந்து போன நொடியில் நான் வாழ்க்கையை விட்டு முழுதுமாய் விலகி விட்டேன். லெளகீக குறுக்கு, நெடுக்குகளை என்னிடம் கொண்டு வருபவர்களின் குரல்வளைகளில் மிருகமென என் பற்கள் பதியும் என்பது சர்வ நிச்சயம்.

எங்கோ சென்று, எதைத்தேடியோ அலைந்து செல்வம் சேர்த்து, காமத்தில் முயங்கி தலைமுறைகள் என்னும் மாயா பெருமைகளை பூமியெங்கும் இறைத்து விட்டு, உடல் சுருங்கி, புத்தி தடுமாறி, வலிகளோடு என்  அந்திமத்தை நான் ஏதோ ஒரு மூலையில் கழித்தேனென்றால் என் ஜென்மம் பாழ்...

பித்தனொருவன் தன்னை சித்தனென்று உணர்ந்து சத்தியத்தையும், பேருண்மைகளையும், வாழ்க்கை முடிச்சின் ஆதியை அனாதியாக பொதிந்து வைத்திருக்கும் பளிங்கு மலையொன்றுக்கு என்னை என் ஆகிருதி, அந்த மூலப்பிரகிருதியின் வேடதாரி இழுக்க.... மனமென்னும் வாகனத்தில் ஆன்மா வசதியாய் அமர்ந்து கொள்ள... உடல் என்னும் அறை விட்டு சட்டென்று வந்து வெளியே விழுந்தேன் நான்.

ஆகாயமெல்லாம் என்னுள் அடங்கிப் போக, திக்குகளெல்லாம் சுற்றிச் செல்லும் காற்றே என் சொரூபமாக, அண்டத்தின் அசைவினை பிண்டத்திலிருந்து கழற்றிக் கொண்டு.. சத்தியத்தின் சொரூபமாய் இன்னும் ஆடாமல், அசையாமல், வாழ்கையினூடே ஸ்தூலமாய் காட்சி தரும் அரூப ரூபத்தின் காலடி தேடி நான் கைலாயம் புறப்பட்டேன்.

உடலின் அனுபவத்தில் புறச்சூழல் காட்சிப்பட்டுப் போக, எதார்த்த வாழ்க்கையில் பூதவுடலை கர்ம சிரத்தையாய் ஏந்திச் செல்லும் ஆன்மாக்களுக்கு பெளதீக இடங்களும் பெயர்களும் சூழல்களும் முக்கியமாய்ப் போக அதையே அவர்கள் ஆவணப்படுத்தவும் செய்கிறார்கள். நான் என்னும் அகந்தை கழன்ற பிசாசாய் என் ஆன்மா உடல் விட்டு நகர்ந்து மனக்கருவியால் பயணிக்கையில் பெளதீக பேதமேது?  மேல், கீழ், ஏது? திசைகள் ஏது? எதுவுமற்று மனமென்ற உணர்வு மட்டும் ஒட்டிக் கொண்டிருக்க நான், நான் என்று இன்னமும் விட்டு வந்த உடலை எண்ணியே நான் நகர்ந்து கொண்டிருந்தேன்...

உடலை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. கோடாணு கோடி உணர்வுகளை விளங்கிக் கொள்ள  படைக்கப்பட்ட பாத்திரம் அது. அதன் வாசனைகள் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்து போகாது. பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்களின் ஆட்டத்தை முழுமையாக வாங்கிக் கொண்டு அதை விஸ்தரித்து, விஸ்தரித்து பழக்கப்பட்ட மனது சட்டென்று ஒரு நாள் செயலற்றுப் போகும் உடம்பினைப் பார்த்து திடுக்கிட்டுப் போகிறது. பேராசை என்னும் இறைச்சியை போட்டு, போட்டு வளர்க்கும் மனம் என்னும் நாய் ஒரு நாள் சட்டென்று விளையாட மைதானமில்லாமல் தனக்கென்றும் ஒரு உருவில்லாமல் திணறிப் போகும் இடமாய் ஒவ்வொரு மனிதனின் மரணமும் அமைந்து போகிறது.

நாய்க்கு நானும் இறைச்சி போட்டிருக்கிறேன் ஆனால் அதன் இஷ்டத்துக்கு திமிராய் வளர்வதற்கு அல்ல... வாலைக் குழைத்து நான் சொல்லும் காரியங்களை நிறைவேற்ற....! வாலாட்டிக் கொண்டு உடலை வாஞ்சையாப் பார்த்த என் மனதை என் ஆன்ம சக்தி வருடிக் கொடுக்க அது சுட்டும் திசையில் பாயக் காத்திருந்தது. உடலுக்குள் இருந்த எனக்கு தேவா என்ற பெயர். அந்த உடல்தான் தேவா என்றால் அதற்குள் இருந்து வெளியேறி நிற்கும் இந்த சக்திக்கு என்ன பெயர். சரி இந்த சக்திக்குதான் தேவா என்ற பெயரென்றால் அந்த பிண்டத்துக்கு என்ன பெயர்....?

என் உருவத்திற்காய் என்னை சூழ்ந்த கூட்டம் என் அருவத்தில் என்னை விட்டு விலகிப் போகலாம். என் அருவத்தை உருவமாய் இருக்கையில் பார்த்த கூட்டம் அருவத்தில் என்னை விளங்கிக் கொண்டு புரிதலோடு புன்னகைக்கவும் செய்யலாம். உடல் என்பது இரண்டு பிண்டங்கள் உருவாக்கும் பிண்டம். அந்த பிண்டத்துக்குள் சக்தி என்னும் உயிர் ஆன்ம ரூபமாய் சீறிப்பாய அங்கே அசைவுகளும் இயக்கமும் ஏற்பட்டுப் போகிறது.

உடலுக்குள் இருக்கும் போது என் முகத்தையே பல கோணங்களில் சுளித்து, இளித்து, கண்களை பிதுக்கி, வாயினை கோணலாக்கி, பலவித அஷ்ட கோண லட்சணங்களை உருவாக்கி இந்த உடலை நான் உடலுக்குள் நின்றே வேறாய் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு கட்டமைப்பில் பிசையப்படும் இந்த உடம்பு, உடலுக்குள் செத்துப் போகும் செல்களுக்கு ஏற்றார்போல என்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. இங்கே நான் என்று சொல்வது எதை என்று எப்போதும் நான் யோசித்திருக்கிறேன். உடல் சார்ந்த நினைவுகளை நான் என்று நம்பி செயலாற்றிய அறியாமையை இதோ வெட்டவெளியில் நீந்தியபடியே நான் வெறித்துப் பார்க்கிறேன். மனம் என்னும் நாய் விசுவாசமான வேலைக்காரனாய் ஆன்மாவுக்கு அடிபணிந்து எனக்கு இப்படியெல்லாம் சிந்திக்க உதவிக் கொண்டிருந்தது.

நான் யாருமில்லை இப்போது. எனக்குப் பெயரில்லை. உறவில்லை. உடல் இல்லை. சக்திக் கூட்டம் நான். சடேர் என்று விழும் தண்ணீரை வேகமாய் சுற்ற உருவாகும் மின்சக்தியைப் போன்று ஏதோ ஒரு ஓட்டத்தில் குவிந்து கிடக்கிறது என் ஆன்மா என்னும் உயிர். எப்போது சிதறுகிறதோ அப்போது இந்த நான் என்ற எண்ணமும் அப்படி நினைக்கும் மனம் என்னும் நாயும் சேர்ந்தே சிதறிப்போகும்.

நான் கைலாயம் நோக்கி சூட்சுமமாய் நகர்ந்தேன் என்று ஏற்கெனவே சொன்ன வாக்கியத்தை நான் இங்கே சுருட்டிக் கொள்கிறேன். கைலாயம் என்னும் பெரும் சுழல் என்னை அங்கே இழுத்தது என்று திருத்திக் கொள்கிறேன். புறக்காட்சிகளை பற்றிய விவரணைகள் இல்லா காற்றில் பறக்கும் ஒரு அருவ பயணத்தில் ஏதேதோ சூழல்களைக் கடந்து தட்பவெட்பங்கள் மாறிப்போன பூமியின் ஏதோ ஒரு வசீகரமான பகுதிக்குள் நுழைந்த என் ஆன்மா சக்தியை ஏதேதோ அதிர்வுகள் சூழத்தொடங்கின...

ஆதியோகி அங்கே இருந்ததற்கான எல்லா சூழல்களையும் அங்கே அதிர்வுகளாக என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு ஞானம். கைலாயம் என்பது ஏதோ ஒரு இடம் அல்ல அது வார்த்தைகளால் விளக்க முடியாத ஞான பூமி என்று எனக்குள் பளீச் என்று ஒரு தீச்சுவாலயாய் எண்ணம் ஒன்று எட்டிப் பார்க்க.. .பிசு பிசுப்பாய் இறைச்சலோடு உடல் ஏந்தி ஆயிரக்கணக்கில் அந்த ஆன்மீக சக்திமையம் நோக்கி மனிதர்கள் நகர்வதையும் அதிர்வுகளாய் உணர்ந்தேன்.

நான் கண்டேன், நான் காணப்போகிறேன் என்று மிகைப்பட்ட பேருக்குள் நாய் குலைத்துக் கொண்டிருந்தது, பலருக்குள் வக்கிரமாய் கோரப்பற்கள் காட்டி கடைவாயில் எச்சில் ஒழுக சீறிக் கொண்டிருந்தது, சிலருக்குள் வாலை சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டும் இருந்தது. அப்படியாய் வாலை சுருட்டி மனம் என்னும் நாய் படுத்துக் கொண்டிருந்தவர்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. மனம் குவித்து கைலாயத்திலிருக்கும் பெரும் சூட்சுமம் பற்றிய யோசனைகளில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அப்படியான யோசனைகள் எல்லாம் நல்ல ஒரு சூழலை அங்கே விதைத்து சுற்றிலும் ஒரு ஒத்ததிர்வினை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன.

பெரும் தண்ணீர் சூழ்ந்த ஏரி ஒன்றை நெருங்கிய பொழுதில் எண்ணங்கள் ஒடுங்க ஆரம்பித்தது எனக்கு. அந்த ஏரி வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ள சூட்சுமமாய் அந்த நீருக்குள் நான் நுழைந்து கொண்டேன். கருவறையில் இருந்த போது ஏற்பட்ட உணர்வொன்றை மெலிதாய் எட்டிப்பார்க்கச் செய்த அந்த மானசோரவர் ... வெறும் நீர்ப்பரப்பு அல்ல. அது சக்தி நிரம்பிக் கிடக்கும் ஒரு மிகப்பெரிய அற்புதம். விவரிக்க முடியாத புனிதத்தை கொடுக்கும் பெரும் சக்தி. இந்த சக்தியைக் கடந்து போகும் ஒவ்வொரு மனிதர்களும், இங்கே அதிர்வுகளாய் சுற்றிக் கொண்டிருக்கும் சூட்சும ஞானிகளும், இந்த சக்தி நிலையை அடைந்து இயக்கம் என்னும் சக்தி விரிவாக்கத்தை தண்ணீரோடு விட்டு விட்டு சிவமாய் இன்னும் சொல்லப்போனால் சவமாய் கைலாயம் நோக்கி நகர்கிறார்கள்.

மானசோரவரில் உணரப்பட்ட சூட்சுமமான அதிர்வுகளின் நெருக்கடி, கைலாயத்தை நெருங்க நெருங்க இன்னும் நெருக்கமாக அலை அலையாய் என் ஆன்ம சக்தியைத் தாக்க.. மிகையாய் சூட்சும ரூபத்தில் அங்கே இடைவிடாத  தியானத்தில் எத்தனையோ என்னைப் போல ஆன்மாக்கள் இருப்பதை உணர முடிந்தது. சிறு பொறியாய் அந்த நெரிசலுக்குள் நான் நகர, நகர பெரும் தீச்சுவாலயாய் எத்தனையோ யுகங்களாய் அங்கே சுழன்று கொண்டிருக்கும் பேரான்மாக்கள் என்னை உணர்வால் தொட்டு தடவ உடல் இல்லாமலேயே ஒரு குறுகுறுப்பான உணர்வினை நான் எட்டிப் பிடித்திருந்தேன்...

உடலால் கூடியடையும் உச்சத்தை கோடியால் பெருக்கி இன்னொரு கோடியால் மீண்டும் பெருக்கி, இன்னும் இன்னும் இன்னும் பெருக்கி பெருக்கிக்கொண்டே போனாலும்   இந்த உச்சத்தின் அனுபவத்தை வாக்கியப்படுத்த முடியாது. உடல் ஒரு அழுக்கு அந்த அழுக்கில் இந்த பேரின்பத்தின் துச்சமொன்று கண நேரம் வந்து செல்வதற்காய் காமத்தை மையம் கொண்டு நகர்கிறனர் இந்த முரட்டு பூமியின் மிகைப்பட்ட மானுடர்கள்...

நீண்ட இடைவிடாத அதிர்வுக் குவியல் மின்சாரமாய் என் உணர்வுகளை அழுத்த, நான் மரமானேன், மண்ணானேன், மலையானேன், கல்லானேன், அத்தனை மானுடரிலும் நிறைந்திறுக்கும் பரம் பொருளானேன். தில்லை நாயகனின் ஆட்டம் எதுவென்று மெளனமாய் எனக்கு உணர்த்தப்பட உணர்த்தப்பட....

மனமென்னும் நாய் என்னுள் கதறத் தொடங்கி இருந்தது.....

இதோ இக்கணமே, கணப்பொழுதும் தாமதியாமல் நான் இங்கேயே இருந்து விட வேண்டும், என் நினைவழி, என் மனதைக் கொல், என் உடலை மறக்கடி, நான் ஆன்மா, நான் சக்திவடிவம் என்னை மீண்டும் உடலுக்குள் பூட்டிவிடாதே என் ஈசா.. என்னை உருவாய் ஆக்கி லெளகீகத்திற்குள் தள்ளி விட்ட மோசா....

கைலாயமென்னும் பனிமலையை நான் நெருங்க நெருங்க என் உடலோடு பிணைந்து கிடந்த ஏதேதோ மாயக் கயிறுகளை அறுத்தெறிய முனைந்த அந்த நொடியில்....

கர்மா என்னும் கயிறு கட்டிவைத்த போலிக்கட்டிடங்களும், பொய்யான இலக்குகளும், வேண்டுமென்றே என்னை அகப்பட பேரிறை கொடுத்த உறவுத் தொடர்புகளும், அந்த உறவுத் தொடர்புகளுக்காய் நான் கொண்டிருக்கும் மாயக் கடமைகளும் இதைக் கடந்து பிறகு போ.... என்று பிடித்து இழுக்க.....லெளகீக பந்தத்தின் ஒற்றை தொடர்பாய்  என் உயிர் நிரம்பிய ஒரு சிறு பிஞ்சு மகளென்ற உறவோடு கண்ணெதிரே வந்து போக....

உடலோடு இருந்த பிணைப்பினை அறுக்கமுடியாமல்.. திணறி நின்றேன்....

கைலாயம் வெறும் பனி மலையல்ல....!!!! அது முதல் முக்தன், முதல் ஜீவிதன், உடலுக்குள் நின்று தன்னை பிரம்மாண்ட சொரூபனாய் உணர்ந்து பகிர முடியாத ஞான வித்தைகளை படிமங்களாக்கி படியவைத்திருக்கும் பிரபஞ்சத்தின் ஸ்தூல அடையாளம். கைலாயத்தின் அருகே வரும் யாவருமே கைலாஸ்பதியாகிப் போகும் ஆச்சர்யமும்..தெளிவான மனோநிலையில் வருபவர்கள் இந்த அதிர்வுகளை மீண்டும் தங்களின் உடல் வழியே கொண்டு சென்று லெளகீகத்துக்கு நடுவே இந்த சுகானுபவத்தில் திளைத்தபடி வாழ்ந்து மரிப்பதும் இடைவிடாது யுகங்களாய் நடந்து கொண்டே இருக்கிறது.

நான் உடலற்று கைலாயத்தை சுற்றி சுற்றி வந்தேன். தழுவ முடியாமல் தழுவி தழுவி பின் உடலில்லாமலேயே பரிக்ராமாவை செய்து முடித்தேன்!

ஞானத்தின் சொரூபமே....! யுகங்களாய் அசையாமல் நின்று கொண்டு இந்த புவி எங்கும் பல விதமாய் பரவிக் கிடக்கும் ஒற்றை தத்துவமே...! உன்னருகிலேயே இருந்து, காலமற்று நான் கனிந்து போவது எப்போது என் அப்பனே....!

உருவமாய் உன்னை விளங்கி, இயற்கையாய் உன்னைப் பார்த்து, அருவமாய் உன்னைக் கற்பிதம் கொண்டு இதோ....எல்லாவற்றையும் கடந்த உன் விசுவரூபத்தை நான் கண்களின்றி  காணும் இந்தப் பேறினை நீட்டி விடு என் அய்யா....! பிண்டமென்னும் பெரும் பழியில் என்னைத் தள்ளாமல் உன்னோடு வைத்துக் கொள்...ஈசனே.....

என்னப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா...
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா....
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கச்சிதமோ என்ன அற்புதம் என்ன
அற்புதம் இதுவே...
ஆடிய பாதனே....அம்பலவாணணே...
நீ ஆண்ட கருணையை தேறி அறிவேனோ..????

நான் கதறிக் கொண்டிருந்த போதே என்னை உடலுக்குள் ஒரு  சக்தி தள்ளிவிட....கை கால் அசைத்து மெல்ல எழுந்து பார்தேன். நான் எனது அறையில் இருந்தேன். நிதர்சனமில்லாத வாழ்க்கைக்குள் மீண்டுமென்னை தள்ளிய பெருஞ்சக்தி ஒன்று எனக்குள் மெளனமாய்....இரு... இரு.......எப்படியும் வரத்தானே வேண்டும் என்று சொல்ல....

எழுந்து பால்கனிக்கு வந்து ஈசி சேரில் விழுந்து....மீண்டும் என் நீண்ட பயணத்தின் உடலற்ற சூட்சும அனுபவங்களை அசைபோடத் தொடங்கியிருந்தேன்.....

கனவாயிருக்கலாம் என்று புகட்டப்பட்ட பகுத்தறிவு சொல்ல....பகுத்தறிவினையும்  கொடுத்த ஒரு சக்தி உள்ளுக்குள் சம்மணமிட்டு சப்தமாய் சிரித்துக் கொண்டிருந்தது.


தேவா. S


Comments

Anonymous said…
deva,,,

valthukkal.... for ur 500 th post. Aaana konjam puriyala. enakku innum antha alavu pakkuvam varula nu ninaikiren.. will try to... keep posting.. - kalyani
உங்கள் எழுத்துக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு அண்ணா... அருமையான பகிர்வு...

500க்கு வாழ்த்துக்கள்....
SASIKUMAR said…
கோடாணு கோடி உணர்வுகளை விளங்கிக் கொள்ள படைக்கப்பட்ட பாத்திரம் அது.சரியாக சொன்னீர்கள்.நீங்கள் உணரும் அதுனையிம் இதில் தான் அடங்கி உள்ளது ...வார்த்தை வடிவமாகவும் .எழுதுவடிவமாகவும் கொண்டுவந்துலீர்கள் ..மிக அருமை. வந்த வேலை என்ன?அதை மிகச்சரியாக கண்டுபிடித்துவிட்டால் ,,அவஸ்தைக்கு வேலை இல்லை ..ஆத்மதிருப்தி என்று சொல்வார்கள் ...அது தவரிப்போகும்போதுதான் ...ஜன்மங்கள் தொடர வேண்டியுள்ளது ....கைலாயம் உங்களுக்கு அதை தவறாமல் இருப்பதற்கு வழி வகுக்கும் வாழ்த்துக்கள் ..

Unknown said…
500 வது பதிவு


வாழ்த்த வயது எல்லாம்
இல்லை

ஆனாலும் வாழ்த்துகிறேன்
1000 பதிவுகள் எழுத வேண்டி ...

ஏதோ ஒரு ஈர்ப்பு
எல்லாருக்கும்
வந்தததை போல ...
Unknown said…
500 வது பதிவு


வாழ்த்த வயது எல்லாம்
இல்லை

ஆனாலும் வாழ்த்துகிறேன்
1000 பதிவுகள் எழுத வேண்டி ...

ஏதோ ஒரு ஈர்ப்பு
எல்லாருக்கும்
வந்தததை போல ...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல