Skip to main content

தேவனே.....என்னைப் பாருங்கள்...!




புனித வெள்ளி அதிர்வுகள் நிறைந்த ஒரு நாள். சத்தியத்தை உலகம் நிராகரித்ததும், அந்த நிராகரித்தலை உயரிய புரிதலுடன் சத்தியம் ஏற்றுக் கொண்டதும் நிகழ்ந்தேறிய ஒரு அற்புத நாள். பைத்தியக்கார உலகிற்குள் வந்த தேவனின் புனிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனித மிருகங்கள் அவரைச் சிலுவையில் ஏற்றி மகிழ்ந்த நாள். தேவன் ஒரு போதும் அவர்களை விரோதமாக பார்த்தவரில்லை. அவர் தேவன். தேவாதி தேவன். உள்ளவருக்கும், இல்லாதவருக்கும், நல்லவருக்கும் கெட்டவருக்கும் அவர் தேவன்.

அவரின் பிறப்பே ஒரு அதிசயம். மிகப்பெரிய அறிவிப்புகளை இந்த பிரபஞ்சம் தாங்கிப் பிடித்து உலகத்துக்கு அவரது வருகையினை தெளிவாக்கிய பின் தான் அந்த பாலகனை இந்த உலகிற்கு தருவித்தது. அந்த புனிதனைப் பெற்ற பின்பு அவள் கன்னி மேரி ஆனாள். கன்னித் தன்மை என்பது உடலோடு சம்பந்தப்பட்டது அல்ல அது உணர்வோடு தொடர்புகள் கொண்டது. மரியாள் புனிதமான உணர்வுகளோடு என்றும் ஜீவித்திருக்கும் கண்ணியத்தை ஏந்திக் கொண்டு புனிதமானவளானாள். பிறக்கும் போதே தனது தாய்க்கு புனிதத்தைக் கொடுத்து யுகங்களாய் காலம் எல்லா நினைவுகளையும் செரித்துக் கொண்டு முரட்டுத்தனமாய் நகர்கையில் தன்னோடு சேர்த்து தன்னை பெற்ற தாய்க்கும் ஒரு மிகப்பெரிய இடத்தை வரலாற்றில் பதிய வைத்த தேவன் அவர்.

இந்த உலகம் ஒருக்காலும் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை மறுக்க முடியாது. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஆன்ம ரீதியான புரிதல்களை பெற்று நாம் நகர அவரது வாழ்க்கையில் ஓராயிரம் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும் பரவி வாழும் கிறிஸ்தவர்களுக்கும், பாதிரியார்களுக்கும், மத குருமார்களுக்கு மட்டும் அவர் சொந்தமானவர் அல்ல...!!! இந்த பூமியில் இதுவரை ஜனித்த, இன்னமும் ஜனிக்கப்போகிற எல்லா ஜீவன்களுக்கும் வழிகாட்டும் தேவாதி தேவன் அவர்.

அவரது மந்தையிலிருக்கும் ஆடுகளுக்கு அவரைப்பற்றிய கவலைகள் ஏதும் இருந்திருக்க முடியாது. இன்னமும் சொல்லப் போனால் அவர் தேவன் என்றே அவைகள் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தவும், வழிகாட்டவும் கருணையுள்ளம் கொண்ட அந்த மேய்ப்பன் தவறுவதில்லை.  இன்னும் சொல்லப் போனால் இயேசு கிறிஸ்து, கிறிஸ்துவம் என்னும் ஒரு மதத்தையே ஸ்தாபிக்கவேயில்லை. தன்னுடைய கருத்துக்களையும் ஒரு வேதமாக தொகுக்க வேண்டும் என்றும் எண்ணியிருக்கவே இல்லை.  ஜீசஸின் சீடர்களே அவரைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்...தேவனின் வார்த்தைகள் மிகவும் ஆழமானவை. அவை எல்லாமே சூட்சுமக் குறியீடுகளாய்த்தான் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஆதியிலே தேவனிடம் வார்த்தை இருந்தது என்று பழைய ஏற்பாடு கூறும் ஒரு பதமே போதும் இந்த பிரபஞ்சத்தின் மூலத்தைப்பற்றி தெளிந்து கொள்ள. வார்த்தை என்பது சப்தம். அசைவற்று இருந்த சூன்யத்தில் முதலில் ஏற்பட்ட சப்தமும் பின் வெளிப்பட்ட பெரு வெடிப்பான தீப்பிழம்புமே பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆதி என்று சனாதான தருமத்தின் மூலம்  சொல்கிறது. 

" ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை "

அவர் இல்லாமல் ஒன்றும் உருவாகவில்லை என்னும் வார்த்தைகள் தியானிக்கப் படவேண்டிய வார்த்தைகள். வெளிப்பட்டது எல்லாம் பரப்பிரம்மம். இருப்பது ஒன்றுதான் என்று சைவ சித்தாந்தம் சொல்வதை பைபிளும் சொல்கிறதா இல்லையா? ஏனேன்றால் சத்தியம் என்பது ஒன்றுதான் அது உங்களுக்கு ஒன்றாய் எனக்கு ஒன்றாய் இருக்க முடியாதுதானே..? இதை மேலும் உறுதிப் படுத்த

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (யோவான்.1.1)

சகலமும் அவருக்குள் தான் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் வேறு இந்த பிரபஞ்சம் வேறல்ல. இருப்பது எல்லாம் அவருக்குள்...என்று பைபிள் கூறுகிறது என்றால்....நம்மைச் சுற்றி பரந்து விரிந்திருப்பது எல்லாம் யார்....? நீங்களும் நானும் யார்?  இப்படியான செய்தியை கொண்டு வந்த வல்லமை கொண்ட தேவன் யார்...?

உடலுக்குள் வந்திருந்த தன்னை யாரென்று உணர்ந்த பிரம்மாண்டமே....ஜீசஸ்!!!!!

ஜீசஸை கைது செய்ய கெத்சமனி தோட்டத்திற்கு யூதர்கள் வந்த போது தன் சீடர்கள் புடை சூழத்தான் அவர் அமர்ந்திருந்திருக்கிறார். யூதாஸ் வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக தன்னுடைய குருவை காட்டிக் கொடுத்திருக்கிறான் என்றால் அவனுடைய புரிதல் எத்தகையது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். சீடர்கள் அத்தனை பேருமே ஜீசஸை விட்டு பயத்தில் ஓடி விட்டார்கள். தலைமைச் சீடன் என்று அறியப்படும் பேதுருவிடம் முன்னமே ஜீசஸ் தெளிவாய் கூறி விடுகிறார் விடிவதற்குள் என்னை மூன்று முறை நீ யாரென்று தெரியாது என்று மறுப்பாய் என்று. பேதுருவும் மறுக்கிறார். இங்கே தனது சீடர்களின் வல்லமை என்ன, ஆன்ம வலு என்ன என்று தெரியாமல் தேவன் அவர்களை தன்னிடம் வைத்திருக்கவில்லை.

அவர்கள் தேவனை நேசித்தார்கள். அன்பு இருந்தது. அறிவு இல்லை. அறிவு என்பது ஞானம். அவர்கள் பிசைவதற்கு இளகான மாவாய் இருந்தார்கள். எழுத இடம் இருக்கும் வெள்ளைக் காகிதமாய் இருந்தார்கள். ஜீசஸை மட்டும் அப்போது சிலுவையில் அறைந்து துன்பப்படுத்தி இருக்காவிட்டால்....இன்று பெரும் ஞானத்தால் இந்த உலகை கட்டிப்போட்டு அன்பும் சகிப்புத்தன்மையும் மேலோங்கி இருக்க அவர் ஏதேதோ செய்து கூட இருக்கலாம். அவருக்குப் பின் அவருடைய சீடர்கள் அதை செய்யும் வண்ணம் ஜீசஸ் கண்டிப்பாய் அதை செய்து இருப்பார். அவர் பூனைகளைப் புலிகளாகும் அளவிற்கு வல்லமைக் கொண்டவர்.

உலகமெங்கும் காணும் ஜீசஸின் படங்கள் அவரை சோகமானவராய் காட்டுகின்றன. ஜீஸஸ் சந்தோசத்தின் உச்சத்தை தன்னுள் தேக்கி அலைந்த சக்தி மிகுந்த பிரமாண்ட ஆன்மா என்பதை உணர  அவருடைய வாழ்க்கைக்குள் விழிப்புணர்வோடு நாம் செல்ல வேண்டி இருக்கிறது. கூட்டம், கூட்டமாய் மக்களோடு மக்களாக அந்த பிரம்மாண்டம் அன்பை பகிர்ந்து அலைந்திருக்கிறது. திராட்சை ரசத்தோடும், அப்பத்தோடும், மிகுந்த உற்சாகத்தோடும் ஆன்ம ஒடுக்கம் கொண்ட மனிதர்களை அவர் தேடித் தேடிச் சென்று பேசினார். யாரையும் எதற்கும் கவலைப் படவேண்டாம் என்று சொல்லி வலுவூட்டிய அவர் எல்லோருமே தேவனுடைய பிள்ளைகள் என்று கூறி ஆன்மாவை ஒளியுறச் செய்தார். சூட்சும வார்த்தைகளைச் சொல்லி மனிதர்களை சிந்திக்க வைத்தார்.

கீழை நாட்டு விஞ்ஞானமான அஷ்டமா சித்திகளை எல்லாம் அவர் தனக்குள் அடக்கி வைத்திருந்திருக்கிறார். பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கும் அதிர்வுகளை தனது விரல் நுனிக்கு கொண்டு வந்து அவர் குருடர்களை பார்க்க வைத்ததும், செவிடர்களை கேட்க வைத்ததும்.....சாதாரண அறிவுக்கு எட்டவில்லை என்றாலும்...அவை எல்லாம் நடந்திருக்க ஓராயிரம் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பலவீனப்பட்ட மக்களைத் தேடித் தேடி சென்று அவர்களோடு இரவு பகலாய் திரிந்தவர் ஜீசஸ். 

சாதாரண மக்களுக்கு தனது ஞானத்தை கொண்டு செல்வதற்கான படிநிலைகளில் அவர் இருந்த போது மூடர்களால் அவர் அந்த சமுதாயத்தை விட்டு களையப்பட்டார். அவரை சுதந்திரமாக விட்டிருந்தால் பைபிள் என்ற ஒன்றின் அவசியமே இன்று இல்லாமல் போயிருந்திருக்கும். இருந்ததனை இருந்தது போல அவர் இருந்து காட்டியிருந்திருப்பார். புத்தகங்களைச் சுமந்து கொண்டு வேத விளக்கம் கேட்டுக் கொண்டு புத்தகத்துக்குள்ளும், கட்டிடங்களுக்குள்ளும் கடவுளைத் தேடும் வேலையே இருந்திருக்காது. பீட்டர் ஃபவுலுக்கும் இன்ன பிற போதகர்களுக்கும் வேலை இல்லாமல் போய்....பாதிரியார்களே இல்லாமல் இருந்திருப்பார்கள்.

உங்களில் யார் எல்லோருக்கும் தாழ நின்று ஊழியம் செய்கிறீர்களோ அவரே எனக்குப் பிறகு உங்கள் அனைவரையும் வழி நடத்துவார் என்று ஜீசஸ் சொன்னதை மெய்ப்பித்து நடைமுறையிலும் கொண்டு வந்திருப்பார். சனாதான தருமம் சொல்ல நினைத்ததை, புத்தரும், மகாவீரரும் உணரவைக்க முயன்றதை....லாவோட்சூவூம், கன்பூசியசும் வெளிப்படுத்த முயன்றதை....இன்னும் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை மதங்களும் குருமார்களும் போதித்துக் கொண்டிருப்பதை, போதிக்க நினைத்ததை.....

சர்வ நிச்சயமாய் ஜீசஸ் குட்டிப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல அவர் சொல்லிக் கொடுத்திருந்திருப்பார். 

அதோ அந்த வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை....அறுப்பதும் இல்லை....களஞ்சியத்தில் சேர்ப்பதும் இல்லை உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கு உணவளிக்கிறார்....என்று அவர் சொல்லும் வார்த்தையில் உளவியல் ரீதியாக பலவீனப்பட்ட மனிதர்கள் விஸ்வரூபமெடுத்து எழுந்து நிற்கும் சூத்திரம் இருக்கிறதா இல்லையா?

தேவனின் வார்த்தைகள் வீணாக எல்லோரும் பேசுவதைப் போன்று வெளிப்பட்டிருக்க வில்லை. அவையாவுமே தீர்க்க தரிசனம் கொடுக்கும், தனிமனித எழுச்சியை தரும் புரட்சி வார்த்தைகள். காட்டுப்பூக்களை பார்க்கச் சொல்லும் தேவன் அவற்றின் அழகை பாருங்கள்...நீங்கள் அரசனாகக் கருதும் சாலமனின் பட்டாடைகள் கூட இவ்வளவு அழகானதாய் இருக்க முடியாது....

மறுநாள் அடுப்பிலே எறிந்தால் எரிந்து போகக்கூடிய புற்களுக்கு கூட இப்படியான ஒரு அழகினை அந்த இயற்கை கொடுத்திருக்கிறதே...அதை விட அறிவு கொண்ட மனிதர்கள் நீங்கள்....தாழ்வு மனப்பான்மை கொள்ளலாமா? கவலைப்படலாமா? இப்படி எல்லாம் கேள்விகள் கேட்ட ஜீசஸ் ஏதோ ஒரு மதத்திற்கு சொந்தமானவராய் எப்படி இருக்க முடியும்...

அது பிரம்மாண்டம். பெருஞ்சத்தியம். தன்னை முட்கிரீடங்கள் வைத்து, தான் வாழ்ந்த சமூகம் காறி உமிழ்ந்த போதும் அறியாமல் தவறு செய்யும் அந்த ஆன்மாக்களுக்காக அவர் வருந்தி அவர்களை மன்னிக்கும் படி பேரிறையை இறைஞ்சுகிறார் என்றால்...உள்ளது அழியாது; இல்லாதது தோன்றாது..என்னும் தத்துவத்தை அவர் உணர்ந்தவர் தானே..? உனக்குள்ளும் எனக்குள்ளும் இருப்பது ஒன்றே...உடல் சார்ந்த அனுபவங்களும், உடலை உருவாக்கிய ஜீன்களும் நம்மை வெவ்வேறாய் பிரித்து வைத்து இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்த புனிதர்தானே அவர்..?

தேவனை ...மதத்திற்குள் மட்டுப்படுத்தி விடாதீர்கள் மனிதர்களே...!!!!! அவர் அகில உலகமும் போற்ற வேண்டிய சத்திய புருசர். தேவன் சுமந்த 
காரணத்தால்....இன்னமும் சிலுவைகள் அவரின் பெயராலேயே அறியப்படுகின்றன. தண்டனைகளுக்கான கொடும் கருவியான சிலுவைகள் அன்பின் வடிமாய் அடையாளம் பெற்றுக் கொண்டன.  சாதாரண மரச் சிலுவைகளே தேவனைச் சுமந்ததால் பரிசுத்தமடைந்து ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் புனிதத்தின் அடையாளமாய் இன்னமும் நிற்கிறது என்றால்....

பரிசுத்த தேவனை நம் இதயத்தில் சுமக்கும் போது, அவரின் ஆன்மீக விஞ்ஞானத்தை உணர்ந்து வார்த்தைகளின் ஆழத்தை அறியும் போது...அதற்கான விளைவுகள் நமக்கு கிடைக்காமலா போய்விடும்....?

ஜீசஸ் கிரைஸ்ட் என்னும் தேவன் சிலுவையில் அறையப்பட்ட பின்பு உயிர்த்தெழுந்தார் என்பதையும், சிலுவையில் அறையப்பட்ட பின்பு காப்பாற்றப்பட்டு அவர் முன்னமே வந்து சென்றிருந்த காஷ்மீருக்கு வந்து தியானம் செய்து பின் வயதாகி சமாதியானார் என்பதையும் நான் புறந்தள்ளுகிறேன்....

என்னைப் பொறுத்த வரையில் சிலுவையில் அறையப்பட்டது வரை....அந்த தேவனின் வாழ்க்கையிலும் வார்த்தைகளிலும் அறியப்படவேண்டிய பொக்கிஷங்கள் நிறைய நிறைய இருக்கின்றன...அந்த அதிசயத்துக்குள் சுற்றித் திரியும் அலாதியான சந்தோசத்திலேயே நான் இருந்து கொள்கிறேன் ஏனேன்றால் தேவன் விவாதிக்கப்பட வேண்டியவர் இல்லை...ஆன்மாவினுள் உணரப்படவேண்டியவர்....!!!!

“நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்." - மத் 6: 24-34


தேவா. S



Comments


அதோ அந்த வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை....அறுப்பதும் இல்லை....களஞ்சியத்தில் சேர்ப்பதும் இல்லை உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கு உணவளிக்கிறார்....என்று அவர் சொல்லும் வார்த்தையில் உளவியில் ரீதியாக பலவீனப்பட்ட மனிதர்கள் விஸ்வருபமெடுத்து எழுந்து நிற்கும் சூத்திரம் இருக்கிறதா இல்லையா?//

அசத்தலான பதிவு தேவா, இன்றைய நாளின் மகத்துவத்தை அருமையாக சொல்லிவிட்டீர்கள்....!
//அவரை சுதந்திரமாக விட்டிருந்தால் பைபிள் என்ற ஒன்றின் அவசியமே இன்று இல்லாமல் போயிருந்திருக்கும். இருந்ததனை இருந்தது போல அவர் இருந்து காட்டியிருந்திருப்பார். புத்தகங்களைச் சுமந்து கொண்டு வேத விளக்கம் கேட்டுக் கொண்டு புத்தகத்துக்குள்ளும், கட்டிடங்களுக்குள்ளும் கடவுள் தேடும் வேலையே இருந்திருக்காது. பீட்டர் ஃபவுலுக்கும் இன்ன பிற போதகர்களுக்கும் வேலை இல்லாமல் போய்....பாதிரியார்களே இல்லாமல் இருந்திருப்பார்கள்..// உண்மைதான் .

//தாழ நின்று ஊழியம் செய்கிறீர்களோ// என்ன அர்த்தம் என்று சொல்வீர்களா ?

//“நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்." - மத் 6: 24-34// நம்பிகையூட்டும் வரிகள் .

தேவனை பற்றிய நிறைய விசயங்களை தெரிந்துகொண்டேன் . நன்றி .
நல்ல பகிர்வு... உணரப்பட வேண்டியவைகள் பல உள்ளன...
dheva said…
ஜீவன் சுப்பு....@ தலைவன் என்பவன்....எல்லோருக்கும் சேவகம் செய்யும் மனப்பான்மையுடன் இருப்பதோடு...தன்னை எப்போதும்...கடைநிலையியே வைத்துக் கொள்ள வேண்டும். தலைக்கனம் இருப்பின் நான் தான் பெரியவன் என்ற அகந்தை வந்தாலும் அவனால் செவ்வனே அரவணைத்து சக தோழர்களை வழி நடத்த முடியாது.

இன்னொரு பைபிள் வசனம்...

எவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறானோ அவன் உயர்த்தப்படுவான்.
நம்பிக்கை தளர்ந்து போன பல தருணங்களில் மீண்டு எழச்செய்த ஜீசஸின் வார்த்தைகள்.. வெறும் வார்த்தைகள் அல்ல.

/தேவனை ...மதத்திற்குள் மட்டுப்படுத்தி விடாதீர்கள் மனிதர்களே...!!!!!/

உண்மை..
அறிந்துகொண்டேன் . விளக்கத்திற்கு நன்றி அண்ணா .

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த