Skip to main content

அமுத கீதம் பாடுங்கள்.... ஆடுங்கள்!



போன வியாழக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு போன போது....டாடி ஒரு சர்ப்ரைஸ்ன்னு என் கை பிடிச்சு வீட்டுக்குள்ள ரொம்ப பவ்யமா கூட்டிட்டுப் போன என் மகள் 8 வயசு ஆகியும் ஏன் இன்னும் டாடின்னு கூப்பிடுறா அப்பான்னு தமிழ்ல கூப்டா என்னனு உங்களுக்குத் தோணி இருக்கும். இரண்டு மூணு வயசு வரைக்கும் ஆர்வமில்லாம அவ டாடின்னு கூப்டறத ஏத்துக்கிட்ட வாழ்க்கைச் சூழல், நாம தப்பு பண்ணிட்டோம் நம்ம புள்ளை நம்மள அப்பான்னுதான் கூப்பிடணும்னு யோசிச்சு அவள மாத்த முயற்சிப் பண்றப்ப அவளால மாற முடியாம போயிடுச்சு. ஒவ்வொரு தடவை டாடின்னு சொல்லிட்டு சாரி சாரி அப்பான்னு குற்ற உணர்ச்சியோட அவ பாக்குறத சகிச்சுக்க முடியாம சரி போகுது கழுத எப்டி வருதோ அப்டி கூப்டுமான்னு சொல்லிட்டேன்.

டாடின்னு கூப்டுறாளே தவிர.. தூய தமிழ்ல தொடர்ச்சியா பேசுற அவ பயன் படுத்துற சில தமிழ் வார்த்தைகள் என் நண்பர்களுக்கே தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன். தமிழ் படிக்க பள்ளிக்கூடத்துல சூழல் இல்லை. சொல்லிக் கொடுக்க நமக்கு நேரம் இல்லை. இப்படியே எட்டு வருசம் ஓடிப் போக தமிழ் நல்லா பேசுறவ எழுதவும் படிக்கவும் செய்யணுமேன்னு நூலகம்.காம்ல இருந்து செய்முறைத் தாள்களை கொடுத்து அவளுக்கு தமிழ் முழுவீச்சுல சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்.

அவ ஏன் கையப் புடிச்சு  ஆர்வமா என்ன வீட்டுக்குள்ள கூட்டிப் போனான்னு இன்னும் நான் சொல்லவே இல்ல பாருங்க.....சோ.. இப்போ வீட்டுக்குள்ள போவோம்.

ஏம்மா...என்ன ஆச்சுன்னு சத்தமா நான் கேட்டதும் என்ன பாத்து முறைச்சுட்டு...ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..சத்தம் போடாதீங்க டாடி...நம்ம பால்கனில ஒரு கப்போர்ட் இருக்குல...அது மேல சுவர் ஓரமா ஒரு பறவை குடி வந்து இருக்கு டாடின்னு கிசு கிசுப்பா என் காதுல சொன்னா....

பறவை கூடு கட்டி இருக்கான்னு திரும்ப கேட்டதுக்கு..இல்லை இல்லை குடி வந்து இருக்கு. அது கூட ரெண்டு குட்டிங்க (குஞ்சு) கூட இருக்குன்னு அவ சொல்லவும் . மெதுவா போய் பால்கனியவும் பெட்ரூமையும் பிரிக்கிற அந்த கண்ணாடி வால்க்கு இந்தப்புறம் போய் ரெண்டு பேரும் நின்னு பார்த்தோம். அட ஆமாம்.. ஒரு புறா அங்க புதுசா குடித்தனம் வந்து இருக்கு. ரெண்டு குஞ்சுகளோட அது கொஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அமீரகம் புறாக்களும், பூனைகளும் நிறைஞ்ச தேசம். பூனை குறுக்கப் போனா சகுனம் சரி இல்லேன்னு சொல்றவன் இந்த ஊர்ல எங்கயுமே வெளில போக முடியாதுன்னா பார்த்துகோங்களேன்.

ஒரு சேதி சொல்றதுக்கு முன்னாடி ஆயிரம் டாடி போடுறவ, புறாக்கள பாத்துட்டு சும்மா இருப்பாளா என்ன..., ஏன் டாடி இந்த புறாவுக்கு சாப்பாடு கொடுக்குதே அது அம்மா புறாவா? அப்பா புறாவா?ன்னு என்ன கேட்டுட்டு நான் என்ன பதில் சொல்வேன்னு ரொம்ப சீரியஸா என்னையே பாத்துட்டு இருந்தவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சு...ம்ம்ம்ம்ம் அது அம்மா புறாதான் பாப்பா....அப்பா புறா வெளியூர்க்கு சம்பாரிக்க போய் இருக்கும். அதுவரைக்கும் அம்மா புறாதான் குஞ்சுகள பாத்துக்கணும்னு சொன்னேன்.

ஓ...அப்டின்னா நான் பொறக்கும் போது நீங்க கூட துபாய்ல இருந்தீங்க என்னைப் பாக்கவே மூணு மாசம் கழிச்சுதான் வந்தீங்களே...அதே மாதிரி இந்தப் புறாங்களோட அப்பா வந்து அப்புறமா கூட்டிட்டுப் போகணும்ல....எனக்கு நைட் உங்க பக்கதுல படுத்தாதன் தூக்கம் வரும் அதே மாதிரி இந்த குட்டிப் புறாங்களுக்கும் ஆசை இருக்கும்ல டாடி...அம்மா புறா மட்டும் தனியா இருக்கு டாடி பாக்கவே பாவமா இருக்குல்ல...

ஆமாம்மா இருக்கும். கொஞ்ச நாள் ஆனா இந்த குட்டிப் புறா ரெண்டும் பறந்து போயிடும் பாப்பா. அப்பா புறா வந்தாலும் சரி வரலேன்னாலும் சரி. எவ்ளோ நாள் அதுங்க கூட்டுக்குள்ளயே இருக்கும்..? இரை தேடி அதுங்க போய்டும்ல...போனதுக்கு அப்புறம் அது, அது வயிறு அது, அது வாழ்க்கை. அப்போ அம்மா புறா, அப்பா புறாவை எல்லாம் தேடாதா டாடி....? ஆச்சர்யமாய் என்னிடம் கேட்டாள்...

அம்மாடி....இப்ப பாத்தீன்னா, அம்மா புறா குட்டிப் புறாங்களுக்கு சாப்பாடு கொடுக்குதே அது எதுக்கு தெரியுமா? மறுபடி அம்மா புறாக்கு குட்டி புறா சாப்பாடு கொடுக்கும்னு எதிர்ப்பார்த்து இல்லை..அதுக்கு கொடுக்கனும். கொடுக்கறதுல அதுக்கு திருப்தி. அந்த ஆசை தன்னாலேயே பை நேச்சர் அதுக்கு இருக்குது. இதுங்க வளர்ந்து எங்கயோ போனதுக்கு அப்புறமும் அம்மா புறா இந்தக் குஞ்சுகளத் தேடும்...எதுக்கு தெரியுமா? கொடுக்கறதுக்கு...

அப்போ அந்த குஞ்சுகளுக்கு வாங்கிக்க வேண்டிய அவசியம் இல்லாத போயிடுது. ஏன்னா அதுங்க பறந்து அது அது இரைய தேட ஆரம்பிச்சுடுதுங்க. ஒரு ரெண்டு நாள் மூணு நாள் அம்மா புறா அதுங்கள தேடிப்பாத்துட்டு...கூட்டை விட்டுட்டு வேற திசையில பறக்க ஆரம்பிச்சுடும். என்னிக்காச்சும் குட்டிப் புறாங்களும் அம்மா புறாக்களும் நேருக்கு நேரா பாத்துகிடும் போது....அது வயித்தப் பத்திதான் அது நினைக்கும் இதுங்க வயித்தப் பத்திதான் இது நினைக்கும். ஏன்னா.... ரெண்டு வயிறும் தனித்தனி மட்டும் இல்லாம, இரை தேடுற தகுதி ரெண்டுக்குமே இருக்குல்ல பாப்பா...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்...கொஞ்சம் ரொம்பவே ம்ம்ம் கொட்டி கேட்டுக் கொண்டாள்.

நீ எனக்கு இப்டி எல்லாம் இருக்கனும், திருப்பி செய்யணும்னு நான் நினைச்சு செஞ்சா அது எதிர்பார்ப்பு பாப்பா, நாளைக்கு நீ திரும்ப செய்யலேன்னா எதிர்பார்த்தது நடக்கலேன்றதுனால....நமக்கு கோபம் வரும். எரிச்சல் வரும். அப்புறம் எதுவுமே பேசாம பிரிஞ்சு போக வேண்டி வரும். எதிர்ப்பார்க்கவே இல்லேன்னா...எப்டி கோபம் வரும்...? எப்டி சண்டை வரும்..? செய்றது, செய்றதுக்காக குட்டிம்மா...திரும்ப வாங்குறதுக்காக இல்லை.

யார்கிட்டயும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதா டாடி...?  மறுபடி ஒரு கேள்வி வந்து விழ...

நீ உனக்கு என்ன தேவைன்னு பார்த்து  முடிவு பண்ணி போய்க்கிட்டே இருக்கும் போது ப்ரியம் இருக்கவங்க நம்ம  கூடவே இருப்பாங்க பாப்பா. நமக்கு உதவி செய்ய முடியாட்டியும், நம்மள நேசிச்சு நாம நல்லா இருக்கணும்னு எப்பவுமே நினைப்பாங்க பாப்பா. எல்லோருக்கும் எல்லோராலயும் எல்லாமே செஞ்சுட முடியாதுடா கண்ணம்மா..., எதுவுமே செய்ய முடியாம போனாலும் தொடர்ச்சியா அன்பு செய்ய நாம உயிரோட இருந்தா போதுமே....


ஆனா.. இப்போ யாரும் அப்டி இருக்கறது இல்லை......நம்மளால எதுவும் ஆகாது, நம்ம கிட்ட ஒண்ணும் இல்லேன்னு சொன்னா பேசக் கூட மாட்டாங்க பாப்பா...!

ஒரு வேளை.....நாளைக்கு டாடியால உனக்கு ஒண்ணு செய்ய முடியலேன்னா என்ன கோவிச்சுக்குவியா...? டாடி கூட பேச மாட்டியா? டாடிய உனக்கு பிடிக்காம போயிடும்மா அக்க்ஷும்மா...?

உதடு குவித்து...அழுகைக்கு தயாரானவள் போல இருந்தாள் அக்க்ஷு....

நோ....டாடி.....வாட் எவர் யூ டூ......ஆர் டோண்ட் டூ.....ஈவன் யூ  ஹேட் மீ.....

ஐ....ஆல்வேய்ஸ் லவ் யூ டாடி.....கண்ணில் கண்ணீர் ததும்ப என்னைக் கட்டிக் கொண்டாள்...

மீ டூ டா குட்டிம்மா....என்று அவளைக் கட்டிக் கொண்டு....புறாக் கூட்டினைப் பார்த்தேன்.....தாய்ப்பறவை குட்டிகளை விட்டு விட்டு...மீண்டும் இரைத் தேட எங்கோ பறக்கத் தொடங்கி இருந்தது.....!


தேவா. S


Comments

//எல்லோருக்கும் எல்லோராலயும் எல்லாமே செஞ்சுட முடியாதுடா கண்ணம்மா..., எதுவுமே செய்ய முடியாம போனாலும் தொடர்ச்சியா அன்பு செய்ய நாம உயிரோட இருந்தா போதுமே...//

விலை மதிக்க முடியாதது அன்பு மட்டுந்தான்னு சொல்லிக்கிட்டாலும் வெறும் காகிதத்துக்குத்தானே இந்த உலகம் மதிப்புக்கொடுக்குது..
Seeni said…
manathai thottathu...!
அண்ணா...
படிக்கும் போது உள்ளுக்குள் இழுத்துச் செல்லும் எழுத்து...

எனக்கும் என் மகள் நினைவில் வந்து...
சரி இந்த வாழ்க்கை எப்போ மாறும் என்று இருக்கிறது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...