Skip to main content

படைப்பாளி....!

   

சராசரியான மனோநிலையில் புதிதாய் ஒன்றையும் படைக்க முடியாது. புதிதாய் படைப்பவன் சராசரிகளோடு ஒத்துப் போகவும் முடியாது ஏனென்றால் கிளர்ந்தெழுந்த மனோநிலைகள் பூமிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. இலக்குகளை நோக்கிய பயணம்தான் லெளகீகவிதி என்றால் பயணம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான் ஒரு படைப்பாளியின் விதி. ஏன் பயணிக்க வேண்டும்...? என்ற ஒரு ஆதரக் கேள்வியை அவன் உங்களை நோக்கி கேட்டால் அதற்கு நீங்கள் கொடுக்கப் போகும் பதில்கள் அவனை ஒரு போதும் திருப்தி செய்ய போவதுமில்லை. 

அவன் வானத்தில் ஒரு நாள் நூறு நிலாக்கள் இருக்கும் மறுநாள் நிலவே இல்லாத அடர் இருளிருக்கும், மற்றொரு நாள் நட்சத்திரங்களால் மட்டும் வானம் நிரம்பிக் கிடக்க இவன் ஒவ்வொரு நட்சத்திரமாய் பெயர்த்தெடுத்து தான் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை வரிகளுக்கு நடுவே வைத்து அலங்கரித்துக் கொண்டிருப்பான். அவன் வாழ்க்கையில் விடியாத இரவுகள் இருக்கும், எப்போதும் சுடும் சூரியன் இருக்கும்....வற்றாதா நதி இருக்கும், பேசும் பசு இருக்கும், பேசாத மனிதர்கள் இருப்பார்கள், சண்டையிடாத காதலிகளும், விஷமற்ற சர்ப்பங்களும், பரந்த புல்வெளிகளும், நிற்காத மழையும், மேகத்தைப் போர்த்திக் கொண்ட மலைகளும், நிலத்தில் நகர்ந்து செல்லும் மீன்களும், கவிதைகள் சொல்லும் பட்டாம் பூச்சிகளும், கனவுகளைச் சொல்லும் மலர்களும்  என்று அவன் உலகத்தில் எல்லாமே இருக்கும்....

கிழிந்த பாயில் அவன் படுத்துக் கொண்டு சமூக முரண்களுக்கு நீதி சொல்லிக் கொண்டிருப்பான். பஞ்சடைந்த கண்களோடு ஒளி பொருந்திய மானுட வாழ்க்கைக்கு தீர்வுகளை யோசித்துக் கொண்டிருப்பான், அடுத்தவேளை புசிக்க ஒன்றுமில்லாவிட்டாலும் தேனில் தோய்த்த பலாச்சுளைகளையும், கோப்பைகளில் வழியும் மதுரசத்தையும், தீரத் தீர இனிப்புகளையும், வயிறு முட்ட அவன் நினைவுகளால் ருசித்துக் கொண்டிருப்பான்.  சமூகத்தின் சராசரி எதிர்பார்ப்புகளுக்குள் அவனை அடைத்துவிட யாரும் சிறு முயற்சி கூட எடுத்து விடாதீர்கள், ஏனென்றால் உங்களின் லெளகீக சடுகுடுக்கள் அவனுக்கு ஒரு போதும் திருப்தியைக் கொடுத்து விடாது.

என்ன வேண்டும் என்று எதிர்பார்த்து இந்த உலகம் காய் நகர்த்துகையில் எதுவும் வேண்டாம் என்று அவன் தீர்மானித்து விட்டு நடனமாட கால்களில் சலங்கை கட்டிக் கொள்வான். கட்டம் கட்டி வாழும் வாழ்க்கை ஒன்றுக்கு அவன் எப்போதும் எதிரானவன். கட்டுப்பாடுகளற்ற பெருவெளிகளுக்குள் புலிப்பாய்ச்சல் பாயும் அவனுக்கு இயல்புகள் என்று ஒன்றும் தனித்துக் கிடையவே கிடயாது. அவனுக்கு வெகுஜனத்தைப் பற்றிய அக்கறைகள் ஏதுமில்லை. ஊர் வாழ நான் வழி சொல்லுவேன் என்று நாகரீக மனிதர்கள் சேவைக்கொடியைத் தூக்குகையில் அவன் கிழிந்து கிடக்கும் அவனின் சட்டையைப் பற்றிய எண்ணமுமற்று ஏகாந்த உலகில் சிறகடித்துக் கொண்டிருப்பான். 

அவனுக்கு நன்றாகத் தெரியும் வாய்ப்புகளை கவனியாதவர்கள்தான் வாழ்க்கையில் தோற்றுப் போகிறார்கள் என்று....! எந்த மனிதன் யாரை அடக்கினானோ அவனாலேயே மீண்டும் அடக்கப்படுவான் என்ற வாழ்க்கையின் சூத்திரமும் அவனுக்கு நன்றாகத் தெரியும். யாரும் பேசி இங்கு எதுவும் மாறவில்லை...காலம்தான் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறது என்று அவன் அடித்து சொல்வான். அப்படி இருக்கும் போது அப்படி இருந்தது.. இப்படி இருக்கும் போது இப்படி இருக்கிறது...என்பதுதான் அவன் தேடல் அவனுக்குக் கொடுத்த விடை.

பொருள் பலத்தை வைத்து வாழ்பவனும் பொருளற்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறான். பொருள் இல்லாமல் வாழ்பவனும் பொருளற்ற வாழ்க்கையையே வாழ்கிறான் என்பதை அவன் தெரிந்து வைத்திருப்பதால்தான் பொருள் என்ற  வார்த்தையை அவன் அகராதியில் அழுத்தம் திருத்தமாக அடித்து விட்டு அங்கே அதற்கு பதிலாக அருள், அருள் என்று எழுதி வைத்திருக்கிறான். இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நெறிகள் கொண்ட சமூகத்தை அவன் பைத்தியக்கார உலகம் என்று வர்ணித்துக் கொண்டிருக்கையில் இந்த உலகம் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது. அவன் அதை சட்டை செய்வதும் இல்லை.

வாழப் பிறந்தவர்கள் நாங்கள் என்று மனிதர்கள் அகந்தையோடு மார் தட்டுகையில், இவன் சாகப்பிறந்தவர்கள் நீங்கள் என்று அவர்களிடம் சவால் விடுவான்.  அவன் எழுதுவான்...எழுதுவது யாருக்காகவும் அல்ல..., என்றும் சொல்வான். கேட்டால் பரந்த வானத்தில் அடர்ந்து கிடக்கும் இரகசியங்கள் யாருக்காக சொல்லப்பட்டது...? கடும் வனத்தினூடே அடர்ந்து கிடக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து செல்லும் நதி யாருக்காக படைக்கப்பட்டது....? பாலைவனத்தின் நடுவில் பரந்து விரிந்து கிடக்கும் பெருமணல் வெளி யார் பார்க்க வேண்டுமென விரிக்கப்பட்டது...? ஆழ்கடலில் மானுடர் செல்ல முடியாத தூரங்களை எல்லாம் யாரும் பார்க்கவில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன...?

இருக்குவரையில் இயங்கவேண்டும். இயங்கும் வரையில் புறக்காட்சி என்ற ஒன்று இருக்கும். நீ ஏன் எழுதுகிறாய் என்று அவனிடம் கேட்டால், அவன் உங்களிடம் மழை ஏன் பெய்கிறது என்று கேட்பான். இங்கே எல்லாவற்றையும் யாருக்காகவும் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை என்ற உண்மையை உணருங்கள் என்று எழுத்துக்களால் விழிகள் உருட்டி மிரட்டுவான். அவன் பைத்தியக்காரன் தான்...இயல்பென்று இந்த உலகம் வரைந்து வைத்திருக்கும் எல்லா கோடுகளையும் அழித்த பைத்தியக்காரன் தான்...! அவன் ஒரு போதும் வார்த்தைகளை எழுதுவதில்லை மாறாக அவனின் உணர்வுகளையே எழுதிக் கொண்டிருக்கிறான்.

படைப்பாளியின் உலகம் என்பது உங்களுக்கு விசித்திரமானதாய் இருக்கலாம் ஆனால் அவனுக்கு இந்த உலகின் நடைமுறைகள் மிக விசித்திரமாய் தெரிகின்றன. காட்சிகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் மனிதர்கள் வார்த்தைகளைப் பெற்று பேசிக் கொண்டிருக்கையில் அவன் மெளனத்துக்குள் விழுந்து கிடக்கிறான். வெறுமையில் அவன் வாழ்க்கைக்கான விடையைத் தேடுகிறான். கடவுளை இந்த உலகம் கூறு போட்டுக் கொண்டிருக்கையில் அவன் கடவுள் என்ற வார்தையைக் கடந்து சென்று பெயரில்லாத பிரமாண்டம் ஒன்றை கண்டு விடுகிறான்.

வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் இல்லையாதலால், ஒரு படைப்பாளியும் எதையும் அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமற்று நகர்கிறான். இதை இப்படி இங்கே செய்யவேண்டும் என்ற வரைமுறை வாழ்க்கை அவனுக்கு வேடிக்கையாய்த் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஒன்றை படைக்கும் ஒருவன் இதுதான் வேண்டும் என்று விரும்பி அதைச் செய்ய அமர்வதில்லை. அப்படியாய் அவன் விரும்பி விளைவுகளை மனதில் இருத்தி ஏதேனும் செய்தால் அது வியாபரம் ஆகிப் போகும் என்பது அவனுக்குத் தெளிவாகவே தெரியும். 

லெளகீகத்தோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் அவன் வசித்தாலும், அவனின் படைப்புகளும் சந்தைக்கு வரத்தான் செய்கின்றன. வியாபரம் செய்யவே உருவாக்கம் செய்யப்பட்ட ஒன்றோடு, வெகுஜனத்தின் விருப்பத்திறாகவே அலங்கரித்துக் கொண்டு சந்தைக்குள் உலாவும் ஜிகினாக்களோடு, இவனின் வரைமுறையற்ற உணர்வுச் சித்திரங்களும் விற்பனைக்கு வருகிறது. அலங்காரித்துக் கொண்ட செயற்கைக்கு அருகில் கரடுமுரடான இவனது கற்பனைகளும் காட்சிப்படுத்தப் படுகின்றன. விற்பனைக்கென்றே பார்த்து, பார்த்து உருவாக்கப்பட்ட ஒன்றோடு......வரைமுறையற்ற எண்ணங்களிலிருந்து தோன்றிய வார்த்தை வடிவங்கள் ஒரு படைப்பாளியின்  உணர்வினைத் தாங்கியபடி படைக்கப்பட்ட ஒன்று, ஒரு மாயப் போட்டிக்கு வருகிறது..

முதலாவது விற்பனைக்கென்றே உருவானது, இரண்டாவது உருவானதால் விற்பனைக்கு வந்தது. இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் ஒன்றென்றுதான் உலகம் சொல்லும், ஏனெனில் இந்த உலகத்துக்கு வசீகரிக்கும் வார்த்தைகளும் ருசிக்கும் சொற்களும், முகஸ்துதி மனிதர்களுமே அவசியம்...

இங்கே யாருக்கும் தங்களின் சுயத்தைப் பற்றிய அக்கறைகள் கிடையாது. தன்னை எப்போதுமே வேறு யாரோவாகவே கற்பனை செய்து கொண்டு கோபப்பட்டு, சிரித்து, அழுது, புலம்பி கடைசியில் கடைவாயில் எச்சில் ஒழுக செத்துப் போகிறார்கள். மரணம் இங்கே எல்லோருக்கும் சமமாய் வழங்கப்படுகிறது. என்ன ஒன்று மனதின் இயல்புகளோடு திட்டமிட்டே வாழும் ஒருவன்...எதிர்பாராமல் இது இன்னதென்று அறியாமல் செத்துப் போகிறான்....

மனமற்ற நிலையில் எதிர்பார்ப்புகளின்றி வாழும் ஒருவன்...ஓ...இன்றுதானா அது என்று....வாஞ்சையோடு மரணத்தை கைகுலுக்கி வரவேற்று மகிழ்ச்சியாய் மரிக்கிறான். அது மரணமாய் இருப்பதில்லை பிரபஞ்சத்திடம் அடையும் சரணாகதியாகவே இருக்கிறது. இயல்புகளைப் படைத்தவன் மரணத்தையும் இயல்பாக்கிக் கொள்கிறான். அதனால் நீங்கள் ஒரு படைப்பாளியை எப்போதும் வரையறை செய்து பார்க்காதீர்கள்,  அவனின் உலகம் வேறு...

எங்கோ பயணிக்கும்
பிரபஞ்ச நகர்வுகளுக்கு நடுவே
அவன் தோட்டம்
எப்போதும் பூத்து...
சிரித்துக் கொண்டுதானிருக்கிறது....
நீங்கள் அவனை 
ஆதரிக்கலாம், எதிர்க்கலாம்
நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்...,
அவன் முரண்பட்டவன்...என்றும்
யாரையும் மதியாத 
திமிர் பிடித்தவன் என்றும்
ஏதேனும்....ஒரு
கருத்து கூட கொள்ளலாம்...
ஆனால்...
அவனோ யாருமற்ற 
தனிமையின் அந்தக் கணத்தில்
பேரமைதியின் தாலாட்டுப் பாடலை
கேட்டபடி...
தூளி உறங்கும் குழந்தையாய்
புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்...!



தேவா சுப்பையா...



Comments

வலைச்சரத்தில் காயத்ரி அக்கா அவர்கள் உங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்...

http://blogintamil.blogspot.in/2013/08/4.html

இந்தப் பதிவை படித்துவிட்டு வந்து கருத்து இடுகிறேன் அண்ணா.

இங்கே யாருக்கும் தங்களின் சுயத்தைப் பற்றிய அக்கறைகள் கிடையாது. தன்னை எப்போதுமே வேறு யாரோவாகவே கற்பனை செய்து கொண்டு கோபப்பட்டு, சிரித்து, அழுது, புலம்பி கடைசியில் கடைவாயில் எச்சில் ஒழுக செத்துப் போகிறார்கள். மரணம் இங்கே எல்லோருக்கும் சமமாய் வழங்கப்படுகிறது. என்ன ஒன்று மனதின் இயல்புகளோடு திட்டமிட்டே வாழும் ஒருவன்...எதிர்பாராமல் இது இன்னதென்று அறியாமல் செத்துப் போகிறான்...

------

நிதர்சனம்... அருமை அண்ணா.
Seeni said…
arumaiyaana vilakkam...

nantri!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த