Skip to main content

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா - III !
















சென்ற பாகத்தின் இறுதியில்...

"ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு வந்து நான் உங்களுக்கு ஒரு 6 மணிக்கு கால் பண்றேன்.." சொல்லி விட்டு அவள் துண்டித்த தொலைபேசி இணைப்போடு... உலகத்தோடான எனது தொடர்பு அறுந்தது போயிருந்தது

ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி.....

மனம் என்னை கேட்காமல் எங்கேயோ பறந்து கொண்டிருந்தது... நானோ கோபமாய் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த கடிகாரத்தை முறைத்தவனாய்.. லாபியில் இருந்த சோபாவில் போய் விழுந்தேன்.. 6 மணிக்கான அவளது மறு தொலைபேசியை எதிர் நோக்கியவனாய்....

இனி...

காத்திருத்தல் ஒரு அவஸ்தை. அதுவும் பெண்ணொருத்திக்காக காத்திருப்பது ஒரு செல்ல இம்சை. மனசெல்லாம் பரபரக்க வரப்போகும் அவளைக் காணாமலும் அமர்ந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டும். அவள் வராத ஒவ்வொரு நிமிடத்திற்கும் அவள் மீது கோபம் எகிற, பேசாமல் எழுந்து போய் விடலாமா என்று தோண...இல்லை இல்லை வேண்டாம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்க....கடிகாரத்தை பார்த்து சலித்து சலித்து தூரத்தில் வரும் யார், யாரையோ அவளாகக் கருதி பாராதது போல திரும்பி நின்று வந்தது அவளாக இல்லாமல் போக மறுபடி அவளை எட்டிய தூரம் வரை தேடி....

அவள் வருகிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு..காத்திருந்த அவஸ்தையை மெளனமாக்கி ஏதோ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவித்து விட்டதைப் போல முகத்தை திருப்பிக் கொண்டு...அவள் அருகில் வந்து..சாரிடா......கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்று உதடு குவிப்பதைக் கண்டு கொள்ளாமல்..வேறு பக்கம் திரும்பி...அழுகையும் ஆத்திரமுமாய்....எவ்ளோ நேரம் வெயிட் பண்றது உனக்கு...ஏன்டி இப்டி பண்ற...? நான் போய் இருப்பேன் தெரியுமா என்று..ஆதங்கத்தை அவிழ்த்துக் கொட்டும் கணம்...

மிகவும் அழகானது.

கவிதாவின் தொலை பேசிக்காய் காத்துக் கிடந்தேன். ஆறு மணி ஆனவுடன் எழுந்து ரிசப்சன் கவுண்டர் அருகில் நின்று கொண்டேன். ஆறு ஐந்து வரையும் போன் வரவில்லை. அந்த ஐந்து நிமிடமும் என்னை எங்கோ தனியாய் பாலைவனத்தின் நடுவே விட்டு விட்டு ஒட்டு மொத்த உலகமும் சந்தோசத்தில் இருப்பதாய் மனசு பதறியது...கவிதாவின் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது...ப்ளீஸ் கவிதா கால் பண்ணு என்று உள்ளுக்குள் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே....

தேவ் கால் ஃபார் யூ...என்று கனகா மேடம் எனக்கு கால் ட்ரான்ஸ்பர் செய்ய.....பதட்டத்தோடு ரிசீவரை வாங்கிக் காதில் வைத்து...ஹ.....லோ...என்று உச்சரித்ததில்  வார்த்தைகள் பாதி தொண்டைக்குள் நின்று கொள்ள மீதி காற்றில் கரைந்து போக....மறுமுனையில் கவிதா..ஹல்லோ.....தேவ்...வாட் ஹேப்ப்ண்ட்...என்று கேட்க....வார்த்தைகள்...ஒலி வடிவத்திலிருந்து அலை வடிவமாகி மீண்டும் ஒலி வடிவமாகி என் செவி சென்று உயிர் வடிவமாகி என் இதயத்தின் லப் டப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. சுதாரித்துக் கொண்டு...ஹாய்....ஹாய்...கவித்தா என்று அவசியமே இல்லாமல் அழுத்தம் திருத்தமாய் த்தை உச்சரித்தேன்...

எப்டி இருக்கீங்க..? கவிதா கேட்டாள்...

நான் எப்படி இருக்கிறேன் என்று எப்படி சொல்வேன் பெண்ணே...! கனவுகளுக்குள் என்னை அடைத்துப்  போட்டு விட்டு சென்று விட்டவளே...எனக்கு கவிதைச் சிறகுகளைக் கொடுத்தவளே.. உணர்வாய் எனக்குள் நிறைந்தவளே.. தொலைபேசிக்குள்  இருந்து இதயம் துடிக்காது என்றுதானே உலகம் சொல்லும் இதோ நீ தொலைபேசிக்குள் இருக்கிறாயே...? காலையில் நீ பேசிவிட்டு சென்ற மறுநொடியில் நின்று போன என் உலகம் மீண்டும் இப்போதுதான் இயங்கத் தொடங்கி இருக்கிறது என்பதை நீ அறிவாயா?

அவளிடம் சொல்ல நினைத்தேன்.. ! சொல்ல முடியவில்லை. காதல் ஒன்றும் கால காலமாக காத்துக் கிடக்க....அது ஒன்றும் ஆயிரங்காலத்து பயிர் அல்ல திருமணத்தைப் போல...காதல் கண நேரத்தில் நமக்குள் ஊடுருவி நம்மை ஸ்தம்பிக்கச்  செய்து....உடலுக்குள் பற்றிக் கொள்ளும் பெருநெருப்பு. மிகப்பெரிய தத்துவ விளக்கங்களும், அறிவும் காதலைக் கண்டால் தேவனைக் கண்ட சாத்தானாய் ஓடி ஒளிந்துதான் கொள்ளத்தான் வேண்டும். காதலை அறிவால் விளங்கிக் கொள்ள முடியாது. உணர்வுகளால் பார்க்கும் போது விசுவரூபமெடுக்கும் காதல் அறிவினையும் ஆராய்ச்சியையும் கண்டால் நடுநடுங்கிப் போகும்.

ஹலோ என்னாச்சு...? என்று அவள் கேட்ட பொழுது நான் சுதாரித்துக் கொண்டு என்னாச்சு...என்னாச்சு...என்றேன்...ஒண்ணும் ஆகல...நீங்க ஏன் எதுவுமே பேசாம இருக்கீங்க என்று அவள் கேட்டு முடிக்கும் முன்பே நான் திரும்ப கேட்டேன் என்னிடம் ஏன் நீ  மீண்டும் பேசவேண்டும் என்று நினைத்தாய் என்றேன்...? அது வந்து ச்ச்சும்மா....தேங்க்ஸ் சொல்லலாமேன்னுதான்..காலையில அவ்ளோ டென்சன் தேவ்...வேற யாராச்சும் பசங்க போன் எடுத்து இருந்தா அவ்ளோதான் என்ன நல்லா ஓட்டி இருப்பாங்கதானே..நீங்கதான் ரொம்ப மரியாதையா பேசுனீங்க.....எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...

தமிழ் சினிமாவைக் கொண்டாட வேண்டும் போலிருந்தது எனக்கு...பின்ன....எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து ரஜினி, கமல் வரை இடைவிடாத போதனை அல்லவா அது..?  ஹீரோயிசம் என்பது ஆண்களுக்குள் தன்னிச்சையாகவே உள்ள ஒரு குணம். அதைத்தான் தமிழ் சினிமா அப்பட்டமாக்கி வைத்தது. ஏன் உலக சினிமாவும் அப்படித்தான். எதார்த்தம் என்ற பெயரில் ஆண்கள் அடக்கி வாசிப்பதாய் காட்டும் சமகாலத்து ஒரு சில திரைப்படங்கள்தான் உண்மையில் நடிக்கின்றன. ஆணின் ஹீரோயிசம் என்பது அவனது ஜீன்களுக்குள் அடங்கிக் கிடக்கும் ஜென்மாந்திர இச்சை. பெண்ணின் எதிர்ப்பார்ப்புகள் அதிமாயிருக்கும் ஆனால் அவள் ஒரு கட்டத்தில் திருப்தியின் எல்லையைத் தொட்டுவிட்டாள் என்றால், பின் அவளிடம் சொர்க்கத்தின் சாவியைக் கொடுத்தாலும் அதை அவள் துச்சமாகத் தூக்கித்தான் எறிந்து விடுவாள்.

ஆண் இயல்பிலேயே எதிர்பாலினத்தை வசீகரிக்கும் இயல்பினன். மனிதப்பிறவி என்றில்லாமல் எல்லா உயிரினங்களிலுமே பெரும்பாலும் பெண் இனம் கண்டும் காணாதது போல இருக்க, ஆண் இனம் சுற்றிச் சுற்றி அதைக் கவர எல்லா வேலைகளையும் செய்யும். கவிதா என்னிடம் பேச ஆரம்பித்த போது எனக்குள்ளும் ஒரு புத்தி எழுந்து என்னை மிக நல்லவனாய் அவளிடம் காட்டிக் கொள்ளச் சொன்னது. என் இடத்தில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்து இருப்பார்கள். ஒரு பெண் வந்து பிரச்சினை என்று சொன்னால், நீ கவலைப்படாதம்மா...நான் இருக்கேன்.. என்று சொல்லி அவளை முதுகுக்கு பின்னால் தள்ளி விட்டு பிரச்சினையை நேருக்கு நேராய் எதிர்கொள்ளும்..பல தமிழ் சினிமாக்கள் எனக்கு பாடமாய் அமைந்து போனது.

கவிதா....அப்டீன்னு இல்லை...எப்டி பார்த்தாலும் இந்த மாதிரி ரேக் பண்றது எல்லாம் ரொம்ப தப்பு இல்லே...ஹவ் கேன் தே டூ லைக் திஸ்... மீண்டும் ஹீரோத்தனம் எழுந்து  ஸ்டைலாய் தலைகோதிக் கொண்டே அவளின் தோளை வாஞ்சையாய் நினைவுகளால் அணைத்துக் கொண்டது. யூ சுட் கம்ளெய்ண்ட் யுவர் சீனியர்ஸ் டு த மேனேஜ்மெண்ட்....நான் வேணும்னா வரவா? என்று நான் கேட்டது அவளின் சீனியர் ஸ்டூடண்ட்சை பழிவாங்கவோ கண்டிக்கவோ இல்லை, கவிதா எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காகத்தான் ....மூளை வேகமாக திட்டமிட்டு பேசிக் கொண்டிருந்தது.

ச்ச்சே....ச்ச்சே.. இட்ஸ் ஓ.கே தேவ்....! சீனியர்ஸ்னா அப்டித்தான்....யூ டோண்ட் வொர்ரி....தே பிகம் ப்ரண்ஸ் டு மீ நவ்...! அந்த அக்காங்கதான் சொன்னாங்க...உனக்கு கால் பண்ணி தேங்க்ஸ் சொல்ல சொல்லி என்று சொல்லி நம்பியாராய் நான் போட்ட சதித் திட்டத்தை உடைத்து என்னை நாகேஷாய் மாற்றியிருந்தாள்...! நான் அடித்த பந்து எல்லைக்கோட்டை தாண்டி சிக்சராகும் என்ற என் கனவினை லபக் என்று கேட்ச் பிடித்து அவுட்டாக்கினாள்.

பெண்களிடம் இருக்கும் ப்ளஸ்சும், மைனசும் என்ன தெரியுமா? தன் எதிரில் பேசிக் கொண்டிருக்கிறவனை காதலிக்கிறார்களா இல்லையா என்பதை புரிந்து கொள்ளவே முடியாது....உரிமையாய்ப் பேசுவது அவர்களின் இயல்பு. உரிமையாய்ப் பேசுபவர்களை எல்லாம் காதலிகளாய் நினைப்பது ஆண்களின் இயல்பு. இந்த இரண்டு இயல்புகளும் அதிவேகத்தில் பயணித்து சரியாய் க்ராஸ் செய்து போய்விட்டால் நல்லது....இரண்டும் சிலசமயம் ' தடால் '  என்று மோதிக்கொள்ளும் போது.....நீ என்ன ஏமாத்திட்ட என்று பசங்களும்...நான் உன்னை அப்டி நினைக்கல என்று பெண்களும்...துரோகி முத்திரை குத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

சாப்டியா தேவ்..? என்று கவிதா கேட்டாள்...அவளின் அக்கறையை என் மனது காதல் என்று சொல்ல..புத்தி ஹோல்டான் தம்பி, டோண்ட் பிளை இன் த ஸ்கை என்று சொக்காயைப்  பிடித்து கீழே இழுத்துப் போட்டது. நான் சாப்டேன் கவிதா.. ஆக்சுவலி..தேங்க்ஸ் ஃபார் காலிங்  மீ...யூ ஆர் கிரேட்....

நான் தத்துப்பித்து என்று டைப்படித்தபடியே பேசியதை புரிந்து கொண்ட கவிதா...சப்தமாய் சிரித்தாள்...! நீங்க எந்த ஊர் தேவ்...? என்று சிரிப்புக்கு நடுவே ஒரு கேள்வியையும் என்னைத் தூக்கி வீச.... நான் பராக்கு பார்த்த பையனாய் அந்த கேள்வியை மிஸ் பண்ணி விட்டு...என்ன்ன.....என்ன கேட்டீங்க...என்று மறுபடி கேட்க...

ஹலோ..உங்கள விட எனக்கு வயசு கம்மிதான்...கால் மீ கவிதா....சரியா என்று வார்த்தைகளால் எனக்கு சொடக்குப் போட..மனம் ஜிம்மியானது...தலையாட்டினேன்.....! எந்த ஊர் என்று நான் சொன்ன பின்பு அவளின் ஊரைச் சொன்னவுடன் எனக்குள் ஒரு கேள்வி எட்டிப்பார்த்தது..! கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் மனிதர்களோடு எப்படி வாசம் செய்கிறது இந்த தேவதை என்று நினைத்துக் கொண்டேன்...

முதல் நாளில் தோன்றுவது காதல் இல்லை இன்பேக்சுவேஷன் என்று எங்கேயோ ஒரு நாதாரி எழுதியதை படித்திருந்த புத்தி என் காதலை மரத்தில் கட்டி வைத்து அடித்து காறித் துப்பி இது இன்பேக்சுவேஷன்...தான்டா லூசு...காலையில கால் பண்ணி பேசிட்டு சாயங்காலம் பேசும் போது வந்தா அது காதலே இல்லை என்று எனக்கு வேதம் ஓதிக் கொண்டிருந்தது. பாஷா படத்தில் ரஜினி அடி வாங்குவது போல சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டேன்... திருப்பி கொடுப்பேன் புத்தியே உனக்கு என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டேன்...இப்படி நினைப்பதற்கும் சாட்சாத் தமிழ் சினிமாதான் எனக்கு உதவியது.

நான் வந்து ரொம்ப நேரமாச்சு....ரியலி யூ ஆர் கிரேட் தேவ்....எப்டி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலை....டுடே இஸ் ரியலி லவ்லி டே ஃபார்மி.....ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தேவ்...

வைச்சிடட்டுமா.......

அவள் சொல்லி முடித்த போது என் உலகம் இருண்டு போயிருந்தது. தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தள்ளி விட்டு விளிம்பில் நின்று சாத்தான்கள் கோரப்பற்கள் தெரிய குதித்து விளையாடுவதைப் போல உணர்ந்தேன்...

கவிதா நீ என்ன மேஜர்...என்றேன்....

ஹா....ஹா...ஹா....கண்டு பிடிங்க பார்க்கலாம்  என்றுவிட்டு...அப்போ வச்சிடவா என்றாள்....

உன்ன எப்டி காண்டாக்ட் பண்றது உன் நம்பர் கொடு...கவிதா....உள்ளுக்குள் இருந்த ஹீரோ ப்ளாட்பாரத்தில் பிச்சை எடுப்பவனைப் போல கெஞ்ச ஆரம்பித்து இருந்தான்..!

அட...நான் எங்க ஹாஸ்டல் உள்ள இருக்க எஸ்.டி.டி பூத்ல இருந்துதான் கால் பண்றேன்...இந்த நம்பர் எப்டி கொடுக்கறது...? சரி சரி நான் வச்சிடுறேன்.. வெளியில நிறைய பொண்ணுங்க..க்யூவுல நிக்கிறாங்கடா.........என்று அவள் சொல்லி முடிக்கும் போதுதான் அவள் என்னை டா போட்டு நடு நெஞ்சில் அன்புக் கத்தியால் சொருகி இருந்ததை உணர்ந்தேன்...

அச்சோ அப்போ எப்டி நான் உன்கிட்ட மறுபடி பேசுறது....மறுபடி ப்ளாட்பாரத்து பிச்சைக்காரன்......அம்மா தாயே என்றான்...

நானே பண்றேன்டா நாளைக்கு இதே நேரம்.......வைச்சிடுறேன்..தேவ்.....நல்லா சாப்டு..நல்லா தூங்கு.......பாய்....குட் நைட்......

டொக்....!

ரிசீவரை அவள் வைத்த் சப்தத்தில் நின்று போன இதயம் மறுபடி துடிக்க சில நொடிகள் ஆகிப்போயின.....

யாரிவள்...?
சொல்லாமல் கொள்ளாமல்
எனக்குள் வந்து நின்று
என்னை புரட்டிப் போட்டிருக்கிறாளே...?
தொலைபேசியில் வந்த
தொல்லையா....?
இல்லை...
என்னை தொல்லை செய்ய வந்த
தேவதையா?
இவை இம்சையா..?
ப்ரியமா?
இவள் கவிதையா...
இல்லை கள்ளிச் செடியா...?

பித்துப் பிடித்தவனைப்  போல டூட்டி விட்டு வெளியே வந்து ஸ்பெளண்டரை உதைத்தேன்.....அண்ணா சாலைக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன்....வண்டி  நிகழ்காலத்தில் ஓடிக் கொண்டிருந்தது.....புத்தியோ அடுத்த நாள் ஆறு மணியில் வால் குலைத்த நாயாய்....கவிதாவின் போனுக்கு காத்துக் கிடந்தது...!


(காத்திருங்கள்...காதலுக்காக)


தேவா சுப்பையா....






Comments

very interesting. awaiting ur next post :)
Unknown said…
சரி சரி நான் வச்சிடுறேன்.. வெளியில நிறைய பொண்ணுங்க..க்யூவுல நிக்கிறாங்கடா//ரசித்த இடங்களில்....1

யாரிவள்...? ஒரு அழகனா ராட்ஷியாதான் இருக்கும்...:)

ம் நடக்கட்டும் அடுத்த பகுதிக்காக....
Anonymous said…
மிகவும் அருமையான கதை, 90-களில் அதன் முன்னரோ இதே போல கதைகள் வந்துள்ளன, இன்று பல கதை என்ற பேரில் அறுத்துவிடுகின்றனர். அதில் இருந்து இக் கதை மாறுபட்டு வாசிக்கத் தூண்டுகினறைது. தொடர்கின்றேன்.
வலைச்சர அறிமுகத்திகு
வாழ்த்துகள்..!

http://blogintamil.blogspot.in/2013/08/4.html
ஹார்மோன் கலாட்டா இப்போது உச்சத்தில்.

குட்டி குட்டி வரிகள் ரெம்பவே அழகா இருக்குண்ணா ...!

//மனம் ஜிம்மியானது...//

நம்பியாராய் நான் போட்ட சதித் திட்டத்தை உடைத்து என்னை நாகேஷாய் மாற்றியிருந்தாள்...!//

//உரிமையாய்ப் பேசுவது அவர்களின் இயல்பு. உரிமையாய்ப் பேசுபவர்களை எல்லாம் காதலிகளாய் நினைப்பது ஆண்களின் இயல்பு//

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த