Skip to main content

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 1


இந்த தடவை கொடைக்கானல்  வருவதற்கு ஐந்து வருடம் ஆகி விட்டது. ஐந்து வருடத்திற்குள் ஏதேதோ நிகழ்வுகள் நிகழ்ந்தேறி விட்டன..! பெருமூச்சு விட்டபடி மெதுவாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். " தாஜ்மகாலின் காதிலே ராம காதை ஓதுவோம்..." என்று ராஜா சார் காருக்குள் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். துரத்தும் வாழ்க்கையை தொலைவில் நிற்க வைத்து விட்டு, சமப்பட்ட  பூமியை விட்டு மலையேறும் அனுபவம் அலாதியானது. சூட்டில் எப்போதும் சுருங்கிக் கிடக்கும் புத்தி மெல்ல மெல்ல மலர்ச்சியடைய புலன்கள் எல்லாம் புதுக்கவிதை வாசிக்கத் தொடங்கி விடுகின்றன. காட்டுக்குள் உயர்ந்த மரங்கள் பச்சை பசேலென்று இருப்பதைப் பார்க்கும் போதே உச்சத்தை எட்டிப் பிடிப்பதற்கு முன்பான காமத்தை ஒத்த உணர்வொன்று புத்திக்குள் கால் உதைத்து தக திமி...தா....தக... தகதமிதா.. தகதிமி தா...என்று ஜதி சொல்ல ஆரம்பித்தது.

உடல் தாங்கும் குளிர் அழகானது. அதாவது அச்சச்சோ குளிர் அடிக்கிறதே என்று சொல்லி கத்திக் கொண்டே தாங்கிக் கொள்ளும் குளிர். டேய்...வலிக்குதுடா என்று சொல்லிக் கொண்டே உதட்டைக் கவ்வும் காதலனை சேர்த்து அணைத்துக் கொள்ளும் காதலி போல இந்தக் குளிரையும் நாம் சிணுங்கி கொண்டே அனுபவிக்கவேண்டும். கொடைக்கானல் 6  கிலோமீட்டர் என்ற அறிவுப்பு பலகை தாண்டி ஒரு கிலோமீட்டரில் நான் வண்டியை காரை ஓரம் கட்டி நிறுத்தினேன். புகைக்க வேண்டும் போன்றிருந்தது. ப்ரண்ட் பானட் மீது வந்தமர்ந்து சிகரட்டை ஆழமாய் உள்ளே இழுத்தேன். நிக்கோடின் துகள்கள் ஆணையிடப்பட்ட இராணுவ வீரர்களாய் இரத்தத்தில் கலந்து புத்திக்குள் சென்று....புத்தியின் பரபரப்பை கட்டுப்படுத்த நெஞ்சுக்குள் ஒரு இதம் பரவியது. 

எவ்வளவு அழகான பூமி இது. எல்லா சுகத்தையும் வஞ்சகமில்லாமல் அது இறைத்து வைத்திருக்கையில் ஏனோ எல்லோருக்கும் எப்போதுமே ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. மேகங்கள் அடர்த்தியாய் எங்கோ நகர்ந்து கொண்டிருந்தன. என்ன இலக்கு இருக்கிறது அவற்றுக்கு...மிதப்பதும், நகர்தலும், கனத்தலும் பின் மழையென பொழிதலும் அன்றி வேறென்ன தேவை இருக்கிறது அதற்கு. மழை வருவதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தது. நான் செல்போனை எடுத்து பிரதீப்பை தொடர்பு கொண்டேன். என்னைப் பற்றி நன்றாகவே அறிந்த நண்பன் அவன். எல்லோரும் நண்பனைப் பார்க்க வருவதாய் சொல்லி விட்டு கொடைக்கானலைச் சுற்றி விட்டு அவனிடம் ஹாய்...பாய் சொல்லி விட்டு சென்று விடுவார்களாம். நான் மட்டும் கொடைக்கானலைப் பார்க்க வருகையில் அவனை பார்த்து செல்வேனாம்.

ஒவ்வொரு முறையும் என் தனிமைக்கு அவன் கேரண்டி செய்து கொடுப்பான். இந்த முறையும் கூட...ஆள் அரவமற்ற ஒரு தனியான காட்டேஜில் என்னை தனியே விட்டுச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையை எப்போதும் போல பூர்த்தி செய்யப் போகிறான். என் பயணம் முடிவதற்கு முன்பான கடைசி இரண்டு நாட்கள் அவனோடு தான் சுற்றிக் கொண்டிருப்பேன் என்பன போன்ற பர்சனல் விசயங்களை எல்லாம் நான் யாரிடமும் சொல்ல விரும்புவதில்லை. நிகழ்வுகளை பகிர்பவர்களை எனக்குப் பிடிக்காது. அது கொடுக்கும் உணர்வுகளைப் பகிர்பவர்களையே நான் எப்போதும் ரசிப்பேன்.

" வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ...'" 

என்று சொட்ட சொட்ட நனைத்த இசையோடு காரை நிறுத்தி விட்டு...பிரதீப்பை நெஞ்சோடு அணைத்து பார்மல் பரிமாறல்கள் எல்லாம் முடித்து இதோ ஒரு மணி நேரம் ஆகி விட்டது. பெரிய சைஸ் வீடுதான் இது. ஒரு பெரிய வரவேற்பரை அதன் மையத்தில் ஆட்கள் வந்து அமர்ந்தால் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் மூன்று சோஃபாக்கள் எல் சேப்பில், நடு சோபாவுக்கு எதிரே 39 இன்ச்சில் உலகத்தை உன் முன் கொண்டு வரவா என்று இளித்தபடியே ஒரு எமன். வரவேற்பரையில் இருந்து நேரே சென்று இடது பக்கம் திரும்பினால் மாஸ்டர் பெட்ரூம். கிங் சைஸ் பெட் பெரியதா அல்லது கியூன் சைஸ் பெட் பெரியதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் வரும் அப்படியே இன்றும் தோன்றிய கேள்வியை ஒடித்துப் போட்டேன். மெத்தை எப்போதும்  முக்கியமில்லை மெத்தையில் படுத்தால் உறங்க முடியுமா என்பதுதான் முக்கியம். பெட்ரூமை அடுத்து ஒரு க்யூட் கிச்சன், கிச்சனின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து கண்ணடிக்கும் குட்டிக் குட்டி மரங்கள். கிச்சன் வழியே பின்புறக்கதவைத் திறந்து இண்டு நிமிடம் நடந்தால்...ஹோ...என்று விரிந்து  பரந்து கிடக்கும் பசுமைப் பள்ளத்தாக்கு....

கால் நீட்டி மலை முகட்டின் ஓரமாய் அமர்ந்தேன். மதியம் மூன்று மணி சூரியனை சட்டை செய்யாமல் மேகங்கள்  என்னை இழுத்து அணைத்து உச்சி நுகர ஆரம்பித்தன. கைகளைக் விரித்து மெல்ல புற்களின் மீது படுத்தேன்....என் தலைக்கு நேர் உச்சியில் பரந்து விரிந்த ஆகாயம்....கீழே பரந்து விரிந்த புல் வெளி....ஆழமாய் மூச்சினை இழுத்து விட்டேன்....புத்திக்குள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த என் வார்த்தைப் பறவைகள் மெல்ல மெல்ல என் நினைவு விட்டு இறங்கித் தத்தி தத்தி என்னைச் சுற்றி அமர்ந்து கொண்டன....

கனவுகள் நிரம்பிக் கிடக்கும்
இந்த பெருவெளிக்குள் 
விழுந்து  நான்
கரைந்தே போய்விட முடியாதா...?

புற்களிள் நடுவில் நான் 
ஒடுங்கி ஒளிந்து
சிறுவண்டுகளோடு ஓடிப் பிடித்து
விளையாட சபித்துப் போங்களேன் யாரேனும்...?

என்னைக் கடந்து செல்லும் 
மேகத்திலேறி இந்தப் பள்ளத்தாக்கின்
நடுவே சென்று....ஆழப்பள்ளத்தில்
மெல்லவே விழுந்து பின்
சட்டென மேகத்தின் நுனி பற்றி
மேலேறி வர யுத்திகளேதேனும்
சொல்லித்தான் கொடுங்களேன் எனக்கு...

தனிமை பெரும்பாலும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மனிதர்களுக்கு எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கவேண்டும். ஒருநாளும் காற்றின் கனபரிமானம் தடவி நீ என்னதான் விரும்புவாய் என்று கேட்பதற்கான அவகாசம் யாருக்கும் இருப்பதில்லை. பெருமரத்தின் கிளைகளிலிருக்கும் குருவிகளுக்கென்று கனவுகள் ஏதேனும் இருக்குமா என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை...சிறு செடியிலிருந்து எட்டிப்பார்த்து சிரிக்கும் குட்டிப்பூவை விழிகளால் வாங்கிக் கொண்டு புன்னகைத்து அவற்றின் வரவை வாழ்த்த யாருக்கும் இங்கே ஆசைகள் இல்லை....

கிடந்த நேரம் எவ்வளவு என்று யோசிக்காமல் எழ வேண்டும் என்ற எண்ணம் வரும் வரையில் கிடந்தேன். மெல்ல நடந்து மீண்டும் வீடு தொட்டேன். ப்ரிஜில் ஏற்கெனவே பிரதீப் வாங்கி நிரப்பி இருந்தான். ஏதேதோ காய்களை வெட்டினேன்....மஞ்சள் பொடி மிளாகாய்ப் பொடி உப்பு, எல்லாம் போட்டு கொதிக்க வைத்து, பின் சாதம் வடித்து என் உணவினை நான் செய்து முடித்த போது மெல்ல மணி பார்த்தேன் இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. மூன்று ஆஃபாயில்கள் நிரம்பிய தட்டோடு வரவேற்பறை சோபா முன்பு இருந்த டீப்பாயில் அதை வைத்து விட்டு....சிப்ஸ் பாக்கெட்டை உடைப்பதற்கு முன்பு தலை திருகி ராஜதிரவத்தை என் கோப்பையில் ஊற்றினேன்...

நான் சாதாரணமாக நிறைய பேசுவேன். மது அருந்திவிட்டால் எனக்குப் பேச்சு வராது. அது ஏதோ ஒரு அனுபவத்தைக் கொடுக்க அது என்ன என்று கவனமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவேன். சமூகம் தவறென்று சொல்லும் ஒரு பழக்கம். என்னைப் பொறுத்தவரையில் அது பழக்கமாகிப் போகாத ஒரு பழக்கம் என்பதால் எனக்கு மது அருந்துவது பற்றி மாற்றுக் கருத்துக்களே இல்லை. அளவுக்கு அதிகமாய் உண்டால்  உணவு கூட தவறுதான்.... ஆக்ச்ச்ச்சுவலி டூ மச் ஆஃப் எனிடிங் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குட் ஃபார்.....

என்று ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லி புத்தி நச்சரித்த போது மூன்றாவது ரவுண்ட் முடிந்திருந்தது. எப்போது உணவருந்தினேன் எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் நான் விழித்த போது என் படுக்கை அறையின் ஜன்னலை தட்டி என்னை எழுப்பிக் கொண்டிருந்தது மழை. காலை பதினொரு மணியாயிருந்தாலும் எனக்கு மட்டுமல்ல கொடைக்கானலுக்கே அன்று அது அதிகாலைதான்..இருள் இன்னும் போகவே இல்லை. மெல்ல ஜன்னலைத் திறந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த செடியொன்றுக்கு குட்மார்னிங் சொன்னேன். செம்பருத்தி செடி அது. செம்பருத்தி செடியின் இலையின் இரண்டு பக்கவாட்டிலும் கூறாய் அடுக்கடுக்காய் இருக்கும். மழையில் நனைந்து சொட்டிக் கொண்டிருக்கும் அதன் சுகம் எப்படி இருக்கும்....என்று யோசித்தேன்....

ஒவ்வொரு துளியும் மேலே விழுகையில் சிலிர்த்து சிலிர்த்து....தன்னிலை மறந்து மழையை வாங்குகையில் மழை அங்கே கவிதையாகிறது, கனவாகிறது, காதலாகிறது, கணவனாகிறது, உயிர் கொடுக்கும் தகப்பனாகிறது. ஒரு மழை இந்த பூமி நனைத்து அத்தனை ஜீவன்களுக்கும் உயிராகிறது. கை நீட்டி தாழ்வாரத்தின் மழை நீரை வாங்கி விளையாடினேன். மழை லேசாக தூறிக் கொண்டிருந்த போது நடக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. மணி எத்தனை இருக்கும் என்று பழக்கப்பட்ட நாயாய் மனம் கடிகாரம் பார்க்கச் சொன்னது. உண்மையில் சொல்லப் போனால் இதை, இதை இந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று துரத்தும் வாழ்க்கைக்கு கடிகாரம் அவசியம் தான். அதைத் தொலைக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தேன்...நேரம் பார்த்து என்ன செய்யப் போகிறோம்....

உறக்கம் போன உடன் எழலாம். பசிக்கும் போது உண்ணலாம். நடக்கத் தோன்றினால் நடக்கலாம்...வேடிக்கைப் பார்க்கத் தோன்றினால் பார்க்கலாம்....உள்ளுணர்வுதான் எப்போதும் நம்மை வழிநடத்த வேண்டும். அதுதான் இயல்பு. மனம் எப்போதும்  பசித்தவுடன் குரைக்கும் நாயைப் போல கற்பனை செய்ய ஏதுமில்லாவிட்டால் குரைக்கத் தொடங்குகிறது. எதார்த்த வாழ்க்கையில் அதற்கு மனிதர்கள் உணவிட்டுக் கொண்டே இருப்பதால் அது தின்று கொளுத்து விட்டு மனிதர்களை ஆட்டுவிக்கிறது.

என் ஜிம்மி பெரும்பாலும் பட்டினியில் சுருண்டுதான் கிடக்குமென்றாலும், மனிதர் சூழ் ஒரு சமூக வாழ்வில் என்னைச் சுற்றி இருக்கும் யாரோ  அல்லது ஒரு சூழலோ,அல்லது மறந்து போய் நானோ அதற்கு அவ்வப்போது பிஸ்கெட்களைப் போட  அது குலைப்பதும் பின் நான் அதைப் பட்டினி போடுவதும் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். இன்று மனம் பட்டினி கிடந்து கிடந்து மறைந்தே போய்விட உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நகர்ந்து கொண்டிருந்தேன். எழுந்து ப்ரஸ் அப் ஆகி.. பிரிட்ஜைத் திறந்து பார்த்தேன். பழங்கள் வாங்கி வைத்திருந்த நண்பனை மனதார வாழ்த்திய படியே ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டே கிளம்பினேன். தனியான வீடு அது. சுற்றும் முற்றும் வேறு காட்டேஜ்களோ இல்லை வீடுகளோ  ஒன்றையும் பார்க்க முடியவில்லை. ஊரை விட்டு ஒதுங்கிய  இடம் அது. 

நடந்து கொண்டிருந்தேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை...! அப்போதுதான் பெய்து முடித்திருந்த மழையை வாங்கிக் கொண்டு நாணியபடி ஈரமாய் இருந்த நிலத்தில் கிடந்த சருகுகள் எல்லாம் சப்தமின்றி கிடந்தன....! வாழ்க்கை முழுதும் தனிமையில் இருப்பவனுக்கு மரணம் ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. என்ன ஒன்று உயிர் இருக்கும் வரை உடல் இருக்கும்...உயிர் போனால் உடல் இருக்காது. உடல் இல்லாமல் அவன் பயணம் இன்னும் பயணம் தெளிவாய் இருக்கும். மனம் என்ற ஒரு மாய வஸ்து இல்லாமல் அங்கிங்கினாத படி பிரபஞ்சம் முழுவதிலும் நாம் ஒரு மல்லிகையின் வாசம் படர்வது போல படர்ந்து கிடக்கலாம்....

ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்....

எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....!

யார் வரைந்து வைத்த ஓவியம் இது...
கால் முளைத்து நடந்து வருகிறது...?
கவிதையொன்று காற்றில்
ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது...

என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்


                                      ... பாடல் தொடரும் ....




தேவா சுப்பையா....




Comments

நல்ல ரசனை... ரசித்தேன்...
ரசனையான எழுத்து... தொடருங்கள் அண்ணா/
Unknown said…


வரிதோறும் கவிதை என
வடித்தி ருக்கும் பாங்கே
விரிந்தோடும் ஆறு என
வீசுதென்றல் எனப்பகர ஓங்க
அரியதொரு பதிவிதனைக் கண்டேன்
அன்புமிக நானுமிதை விண்டேன்!



Ungalranga said…
ஏன் இப்படி பண்ற? இப்போ அந்த பொண்ணு வரலைன்னு இப்போ யார் அழுதா? நல்லா அழகா வர்ணனையா போய்ட்டு இருந்துல்ல, அப்படியே கண்டினியூ பண்ண வேண்டியது தானே.. ஏன் இப்படி எப்பப் பாரு இப்படிபட்ட கேரக்டர்களை கொண்டுவந்து கொல்ற? உனக்கு என்னதான் பிரச்சனை?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த