Pages

Friday, September 27, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 3இதுவரை...இனி...

அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில  வர்றேன்... ஐ வில்  நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்....

இப்போ கிளம்புறேன்......

கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை...

பெண்கள் எப்போதும் ஒரு விசயத்தை முடிவு செய்ய ஆண்களைப் போல பல்வேறு தரப்பட்ட ஆலோசனைகளைக் கேட்பது கிடையாது. அவர்களுக்கு விசாரித்து அறிதல் என்னும் ஒரு விசயம் பற்றி அதிகம் தெரியவே தெரியாது. இயல்பாகவே பெண்களின் உள்ளுணர்வு பிரபஞ்சத்தின் ஆதி உணர்வோடு முடிச்சிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு உடல் எடுக்கும் ஆன்மா பெண்ணாய் பிறக்கவேண்டும் எனில் பூர்வஜென்மத்தில் இருக்கும் பக்குவ நிலையைப் பொறுத்தே அந்த நிகழ்வு நிகழ முடியும்.

ஆன்மாவில் ஆண் பெண் கிடையாது ஆனால் ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆன்மா நுழைய வேண்டுமெனில் நிறைய சகிப்புத்தன்மைகள் கொண்ட பூர்வ ஜென்ம அனுபவங்கள் அதற்கு அவசியமாகிறது. இயல்பிலேயே பெண்கள் மனமற்ற நிலைக்கு எழுதில் செல்லக் கூடிய வகையில்தான் அவர்களின் உடற்கூறுகளும், அனுபவங்களும் அமைந்து போகின்றன. சரணாகதி என்ற வார்த்தை பெண்களின் இயல்பிலிருந்து உணர்ந்து சமைக்கப்பட்ட வார்த்தை. கேள்விகள் கேட்காமல் உள்ளுணர்வு அவர்களுக்கு சரி என்று சைகை செய்த உடன் சரணாகதி அடையும் பெண் தான் ஏற்றுக் கொண்ட விசயம் தவறாகவே போனாலும் அதைச் சரி செய்து தனக்கு ஏற்றவாறு மாற்றியும் கொள்கிறாள்.

உலகில் இருக்கும் பெரும்பான்மையான மதங்களில் பெண்கள் இறைத்தூதராகவோ அல்லது ஞானியர்களாகவோ இருந்தது கிடையாது. பெண்கள் ஆண்கள் சொல்வதை ஏற்று நடப்பதாகவே பெரும்பாலும் அவர்களின் மதக்கோட்பாடுகள் போதிக்கின்றன. இவை எல்லாம் ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகம் பெண்களை போகத்தை மையப்படுத்தி பார்த்ததின் விளைவுகள்தான். பெண்ணுக்கு சட்டங்கள் தீட்டி அவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறும் ஆண்களே..நீங்கள் யார் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்க....? நீங்கள் யார் அவர்களுக்கு வரைமுறைகள் படைக்க.....உங்களைப் போலவே அவர்களும் இந்த பூமிக்கு வாழ வந்த சரிபாதிகள்...என்றெல்லாம் கேள்விகள் கேட்டுப்பார்க்கையில் அவற்றை மறுக்க கடவுளை துணைக்கு அழைத்து வந்து பயமுறுத்தும் பல சமூகங்கள் இந்த பூமியில் இருக்கின்றன.

ஒரு ஆணுக்கு பிடித்த ஒன்று கொஞ்சம் முரண் பட்டாலும் அதை விட்டு நகர்ந்து விடுவான் ஆனால் ஒரு பெண்ணுக்கு பிடித்த ஒன்றை அவள் ஏற்றுக் கொண்ட பின்பு கோடி முரண்கள் அங்கே வந்தாலும் அதை விட்டு அவள் எளிதில் நீங்குவது கிடையாது. அதை சரியாக்கி தன்னுடன் வைத்துக் கொள்வாள்..இல்லையேல் அதை சரியாக்குவதிலேயே போராடி மடிந்து போவாள்...

சூழல் மாறினால் ஆண்கள் எளிதில் மாறிவிடுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி அல்ல...எப்போதும் பற்றியதை விடுதல் அவர்களுக்கு மிகக்கடினம். அப்படியே விட்டாலும் பற்றியதை மறப்பார்கள் என்று சொல்லவே முடியாது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவள் எப்படிப்பட்டவள் என்று ஒரு ஆணால் கணிக்க முடியாது. அப்படி கணிக்க அவன் வெகுதூரம் பயணிக்க வேண்டிவரும். ஒரு பெண் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவனைக் கணித்து விடுகிறாள். தவறான ஆண்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து ஏமாந்து போகும் பெண்கள் கூட அறிந்தே ஏமாந்து போகிறார்கள்....

அப்போதும் அவனுடனே வாழ்வேன் என்றும் கூறுகிறார்கள். மேலோட்டமாக பார்த்தால் அது முட்டாள்தனமாக தோன்றும் ஆனால் அவர்களுக்கு தெரியும் அவர்களால் முரண்களையும் மாற்றி சரியாய் ஆக்க முடியும் என்று...! பெண் மென்மையானவள் ஆனால் வலிமையானவள். தாய்வழிச் சமூகமாய் இருந்த நமது ஆதி நாகரீகத்தில் அவளே தன் இனக்குழுக்களை வழி நடத்தும் தலைவி. அவளே உணவு தேடிச் செல்கையில் வழி நடத்துவாள். எதிர்களிடம் இருந்து தனது கூட்டத்தைக் காக்க வியூகங்கள் வகுத்து போரிடுவாள். ஆண் அவளின் பின்னால்தான் அப்போதெல்லாம் இருந்திருக்கிறான்.

ஆண் அறிவினால் சிந்திப்பவன். பெண் உணர்வினால் சிந்திப்பவள். அறிவு அழியக்கூடியது. உணர்வு அழியாதது. உணர்வுதான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது. சட்டென்று ஒரு பாதுகாப்பு உணர்வு வராமல் ஒரு பெண் எந்த ஒரு ஆணையும் அணுகுவதே இல்லை....அவள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனே பெரும்பாலும் நடந்து கொள்கிறாள்.

பூர்ணாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்...வரவேற்பரைத் தாண்டி வெளிவாசலுக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். இருள் என்பதன் அர்த்தம் நகரத்தில் வாழ்பவர்கள் என்று மட்டுமில்லை கிராமங்களும் கூட அறிவதில்லை. அவர்கள் இருள் என்பதை வெளிச்சமின்மை என்று மட்டுமே கருதுகிறார்கள். இருள் வெளிச்சமின்மை மட்டுமல்ல. அது சப்தமின்மை, சிந்தனையின்மை, பொருளின்மை, இப்படி பல இன்மைகளைக் கொண்ட கருமை சூழ் இருளை அனுபவிக்க சப்தமின்றி புலனடக்கி இருக்கவேண்டி இருக்கிறது. இருள் என்பது ரகசியம்.


பூச்சிகள், பறவைகளின் சிற்சிறு சப்தங்களும் அடங்கிப் போய் பின்னிரவு தொடங்கி இருந்த அந்த மலைப்பிரதேச கானகத்தின் அனுபவம் அதி சுவாரஸ்யமாய் இருந்தது. இருளில் உறங்கும் மலைகளும், இருண்ட வானிலிருந்து எட்டிப்பார்த்து சிரிக்கும் நட்சத்திரங்களும், இன்னும் பதினைந்து நாளில் பார் நான் எவ்வளவு புஷ்டியாய் மாறிக் காட்டுகிறேன் என்று சவால் விடும்...சிறு நிலவும், பேரமைதியை வருடிக் கொடுக்கும் நீண்ட நெடிய மரங்களும் என்று..என்னைச் சுற்றிக் கிடந்த சூழ்நிலையை விழிகளால் வாங்கி எனக்குள் நிறைத்து பேச்சற்று கிடந்தேன்.

யார் இருக்கிறார்...
யாருக்கு இங்கே...?
மனிதர்கள் மாறி மாறி
வந்து செல்லும்
பெரும் பூமியில்
யோனிகள் வழியே 
குதித்து வெளிவரும்
பிண்டங்கள் எரிந்து
சாம்பலாகும் போதும்
மட்கி மண்ணாகும் போதும்
யார் இருக்கிறார் 
யாருக்கு இங்கே...?

முட்களாய் தைத்த வார்த்தைகளை புத்தியிலிருந்து பிடுங்கிப் போட்ட படியே நான் புகைத்த சிகரெட் கையைச் சுட்டவுடன்...உதறி கீழே போட்டேன்...! ஒவ்வொரு முறையும் தனியே வரும் போதும் ஏதேதோ அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது வாழ்க்கை. எப்போதும் நான் கொடைக்கானலை தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள்தான்...ஒன்று தெரிந்த இடம்... இரண்டாவது மலைப்பிரதேசம். கொடைக்கானல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலாப் பிரதேசமாக இருந்தாலும், எத்தனை கூட்டம் வந்தாலும் அது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பிதுங்கி வழிகிறது. பழனி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மனிதர்களின் காலடி படாத இயற்கையின் ரகசியங்களை உள்ளடக்கிய பல இடங்கள் இருக்கின்றன. உயரமான இடத்தில் இயற்கை சூழ்ந்த வாழ்க்கைக்கு நடுவே பரபரப்பான சமப்பட்ட நிலத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ரொம்பவே அன்னியப்பட்டுப் போகிறது. மாடியிலிருந்து தெருவை வேடிக்கைப் பார்க்கும் ஒரு உணர்வு நமக்கு இயல்பாகவே தோன்றுகிறது.

வேடிக்கைப் பார்த்தல் என்பது தொடர்பற்று இருத்தல். நிகழும் யாவையும், பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தாலும் அந்த நிகழ்வோடு நமக்கு யாதொரு தொடர்பும் இருப்பதில்லை..!

உறக்கம் மெல்ல தோளில் கை போட்டு தலை தடவி....முதுகு தடவி என்னை இழுக்க...பாதி மூடிய இமைகளோடு படுக்கை அறையை நோக்கிச் சென்றேன்.....இந்த இரவுக்கு எனக்கு மது அவசியமில்லாமல் இருந்தது.....படுக்கையில் தொப் என்று விழுந்தேன். பாதி உறக்கத்தில் அம்மாவின் மார்பகம் தேடும் குழந்தை போல எழுந்து இரண்டு பெக் அடிக்கலாமா என்று தோன்றியது. தோன்றிய கேள்வியை ஆழமான நிசப்தத்துக்குள் உறக்கம் இழுத்துச் செல்ல....மீண்டும் உறங்கிப் போனேன்.

டக் டக் என்று யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்க....திடுக்கிட்டு விழித்த போது நல்ல வெளிச்சம் வீட்டுக்குள் பரவி இருந்தது. இது என்ன நேற்று மழை வந்து என் ஜன்னல் தட்டியது இன்று புயல் வந்து கதவு தட்டுகிறது என்று யோசித்த படியே கதவினை திறக்க....வாசலில் நின்றிருந்தது புயல் அல்ல...

தென்றல்...

பூர்ணா பூங்கொத்தாய் நின்று கொண்டிருந்தாள். என்னங்க பூர்ணா நேத்து ஒரு குத்து மதிப்பாதான் வீடு தெரியும்னு சொல்றீங்கன்னு நினைச்சேன்.... வீட்டைக் கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க....பொய்யாய் ஆச்சர்யம் காட்டினேன்....

வண்டுகளைத் தேடிப் பூக்கள்
செல்லும் காலங்களில்
மன்மதனின் கரும்பு விற்களுக்கு
வேலையில்லாமல் போகுமாம்....

சொல்லிவிட்டுச் சிரித்தாள். 

நீ கவிதை கூட சொல்வியா...?  என்று கேட்டு விட்டு....

கவிதை சொல்லும்
கவிதைகளைக் கேட்டுக் கொண்டே
பார்க்கவும் முடியும்....
என்பது வரம்தானே...?

நான் சொல்லி முடித்தேன்...

ஓ..கோ....
கவிதைகளை வாசலிலேயே 
நிற்க வைக்கும் கவிஞர்களை
நான் வரம் என்பதா...
சாபம் என்பதா..?

சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்...


                                             
                                                      ... பாடல் தொடரும் ...
தேவா சுப்பையா...
4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெண் = சக்தி

கிருஷ்ணா said...

//// சட்டென்று ஒரு பாதுகாப்பு உணர்வு வராமல் ஒரு பெண் எந்த ஒரு ஆணையும் அணுகுவதே இல்லை....அவள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனே பெரும்பாலும் நடந்து கொள்கிறாள்./////

சுயநல பற்றுதல்....

ஜீவன்சுப்பு said...

//ஆண் அறிவினால் சிந்திப்பவன். பெண் உணர்வினால் சிந்திப்பவள். அறிவு அழியக்கூடியது. உணர்வு அழியாதது.//

of-course ண்ணா ... but உணர்வுப்பூர்வமான சில முடிவுகள் அழிவையும் தந்துவிடுகின்றதல்லவா ...

சொல்லுங்க .... போட்டோஸ் யார் எடுத்தது ....? ஒவோன்னும் கண்ணுல ஒத்திக்குற மாதிரி இருக்கின்றது awesome....!

ranga rajan said...

காதல் மதுவாக அவள் வெளியே நிற்க, மது பாட்டில்கள் எங்கென்று அஞ்சினான் முகில்..!!

அருமை..!!