Pages

Monday, September 30, 2013

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 6இதுவரை....


இனி...

பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...

சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்...

இனக்கவர்ச்சின்னு சொல்லிக்கிற வயச ரெண்டு பேரும் தாண்டிட்டோம். கடைசி நிமிசம் வரைக்கும் காமம் வேணும்னு ரெண்டு பேருமே நினைக்கல...

அவள் இடை மறித்தாள்...அதான் சொல்லிட்டேனே முகில்... இது நடந்தது அல்ல... நிகழ்ந்தது. 

ஒரு கவிதை எப்போது
ஜனிக்குமென்று கணித்து
எழுதினால்...
அது எப்படி கவிதையாயிருக்கும்
எழுதியவன் எப்படி 
கவிஞனாய் இருப்பான்...?

டேய்.. நிறைய யோசிக்காதடா....பசிக்குது...ஏதாச்சும் இருக்கா...? இல்லை செய்யணுமா.... கொஞ்சம் சாப்டுட்டு நிறைய நடக்கலாம் நிறைய பேசலாம்...!

அவளைப் பார்த்து புன்னகைத்தேன். பூர்ணா.. எனக்கு கொஞ்சம் கெல்ப் பண்ணு...வா என்று அவளை அழைத்தேன்.

மதியம் இரண்டரை என்று கடிகாரம் சொன்ன போது மனதைப் போலவே வயிறும் நிறைந்திருந்தது எங்களுக்கு...

நாளைக்கு காலையில நாங்க திரும்பிப் போறோம்டா சென்னைக்கு... நீ எப்போ வர்ற...? கேட்டபடியே என் கை கோர்த்துக் கொண்டாள்..

நான் நிதானமாய் நடந்து கொண்டிருந்தேன்...!

எத்தன மணிக்கு போற பூர்ணா...?

நாளைக்கு மத்யானம் 3 மணிக்கு...சாப்டுட்டு கிளம்புறோம்....நாளை மறுநாள் டூட்டி ஜாய்ண் பண்ணனும்....நாங்க வந்து நாலு நாளாச்சுடா...

சுற்றிலும் நிலவிய நிசப்தத்தையும், விரிந்து பரந்து கிடந்த இயற்கையையும் அனுபவித்தபடியே யோசித்தேன். மறுபடி பூர்ணாவை பார்த்தேன்...ஏன் பூர்ணா இனிமே நம்ம உறவு எப்டி கண்டினியூ ஆகணும்னு நீ நினைக்கிற....?

எதுக்குமே அதிகம் அழுத்தம் கொடுக்காத முகில். எனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் கிடையாது. இப்போ ரெண்டு பேருக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு உடனடியா ஒரு தீர்வு அல்லது கமிட்மெண்ட் வச்சுக்கணும்னுதான் தோணும்...

அவளை இடைமறித்தேன்........அப்டீ இல்ல பூர்ணா...சமூகம் ஏற்படுத்தி வச்சு இருக்க ஒரு ஒழுக்க கோட்பாடுகள் முன்னால நாம தப்புதானே செஞ்சுட்டோம்....? இந்த பந்தம் திருமணம் வரை போனால்தானே முழுமையா இருக்கும் இல்லேன்னா, ரெண்டு பேர்ல ஒருத்தர், யாரையோ ஏமத்திட்டோம் அப்டீன்ற எண்ணம்தானே வரும்...?

வாழ்க்கைன்ற விசயம் ஒரு கமிட்மெண்ட்லதான பயணிச்சுட்டு இருக்கு...! இந்த நிமிசம், இந்த அமைதி..இந்த சூழல் இது இப்படியே இருக்கக் கூடாதான்னு கூட எனக்குத் தோணுது. ஆனா இந்த வாழ்க்கையில மிகப்பெரிய ஆட்டம் ஒண்ணு நடந்துகிட்டு இருக்கு. இங்க உயிர் வாழத்தான் எல்லோருமே ஓடிக்கிட்டு இருக்காங்க. எந்த கஷ்டமும் இல்லாம நான் வாழணும்னு ஆசைப்படுறதோட அடுத்த ஸ்டெப்பா என்னை சார்ந்தவர்களும் வாழணும்னு நான் நினைக்கிறேன். ஒரு தாளம் தப்பாத வாழ்க்கை கிடைச்சதுக்கு அப்புறம்  அடுத்தவனை விட நான் பெஸ்ட்டா இருக்கணும்ன்ற யோசனை வருது..., அதுக்கு அடிச்சு பிடிச்சு ஏதேதோ செஞ்சு ஓட வேண்டி இருக்கு...இந்த வட்டத்துக்குள்ள சிக்கிக்க கூடாதுன்னுதான்...

நான் 35 வயசு ஆகியும் கல்யாணம் பண்ணிக்கலை. திருமணம் அப்டீன்ற வசீகர முகத்துக்குப் பின்னால நிறைய பார்க்க சகிக்காத கோரங்கள் இருக்கு. வசீகரத்தை வாங்கும் போது கோரத்தையும் சேர்த்தேதான் வாங்கிக்கிறோம். கோரம் வேண்டாம்னு முடிவு பண்ற ஒவ்வொருத்தனும் வசீகரத்தையும் சேர்த்தேதான் இழந்து ஆகணும். சந்தோசம், துக்கம், அழகு, அசிங்கம், இப்படி ஏதோ ரெண்டைப் பத்திதான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க...ஒண்ணு இந்த கடைசி இல்ல அந்தக் கடைசி...

ஒண்ணு காவி உடுத்திக்கிட்டு சாமியாரா போய் இந்த வாழ்க்கைக்கு தூரமா போறாங்க...இல்லை... இந்த வாழ்க்கையை தலைமேல வச்சு கொண்டாடிக்கிட்டு நான், நான்னு ஈகோவோட வாழ்ந்து தான் வாழ்றதுக்காக சுத்தி இருக்குற எல்லா அழகுகளையும் சிதைக்கிறாங்க...நான் தனிமையா இருக்கும் போது மட்டுமே உயிரோட இருக்குற ஒரு ஜீவனா ஃபீல் பண்றேன் பூர்ணா...

பூர்ணா எதுவும் பேசவில்லை அவளுடைய ஸ்வெட்டருக்கு மேல் கைகளை  குறுக்காக கட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். நீல வண்ண ஸ்வெட்டருக்குள் இருந்த  வெள்ளைச் சுடிதார் கொஞ்ச நேரம் முன்பு -ஹாலின் ஒரு மூலையில் கிடந்தது ஏனோ என் நினைவுக்கு வந்தது.  காற்றில் பறந்த கேசத்தை ஒதுக்கியபடியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணா. எனக்கு ஒரு மணி நேரத்துக்கு முந்திய நிகழ்வுகள் புத்திக்குள் ஏறி தாண்டவமாடிக் கொண்டிருந்தன. உடை இல்லாத பூர்ணா மூளையில் நெளிந்து கொண்டிருந்தாள்...


பேரிஜம் லேக் செல்லும் வழி என்ற போர்டு காட்டிய திசையில் வெறுமனே நடந்து கொண்டிருந்தோம். பச்சை பசேலென்று உயரமாய் மரங்கள் வளர்ந்திருந்த அடர்த்தியான காடு அது. எனக்கு ஏனோ பசுமையான மரங்களைப் பார்த்த போது உள்ளுக்குள் காமம் எட்டிப் பார்த்தது. சாலையை விட்டு தள்ளி அடர் மரங்களுக்குள் நடந்து அதன் நடு மையத்தில் போய் தரையில் இருவரும் அமர்ந்து கொண்டோம்...! சில்லென்ற சருகள் கிடந்த தரையில் அமர்ந்து மரங்களினூடே எட்டிப்பார்த்த வானத்தைப் பார்த்தேன். கண்கள் என்னைச் சுற்றிய சூழலைப் புணரத் தொடங்கி இருந்தது. ஒட்டு மொத்த பூமியும் எனக்கு பெண்ணாய் தோன்றியது. பூமி தாண்டி பரவிக் கிடக்கும் அந்த பெண்ணின் எல்லா வளைவுகளுக்குள்ளும் உணர்வாய் பயணித்துக் கொண்டிருந்தேன்....

கூடல் தொடங்கி  இருந்தது. பக்கத்தில் பூர்ணா இருக்கிறாள் என்ற பிரக்ஞை இன்றி வெறித்தபடி இருந்தேன். உடல்  என்ற தடுப்பு உடைந்து போய்  காமம் வேறு வடிவத்தில் என்னை ஆட்கொண்ட பொழுதில்...அதற்கு மேல் அமர முடியாமல் கீழே சாய்ந்தேன்...

முகில்...கெட்..அப்...போலாம்டா...பூர்ணா என்னை உலுக்கினாள். மெல்ல அரை விழியால் பூர்ணாவைப் பார்த்தேன். அவள் மடியில் என்னை படுக்க வைத்திருந்தாள். அவள் விரல்கள் என் தலையைக் கோதிக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் அற்புதமான தருணங்களில் ஒன்று ப்ரியத்தோடு யாராவது நம்மை மடியில் கிடத்தி தலை வருடிக் கொடுப்பது. அதை விட அதி அற்புதமானது அப்படியான ப்ரியமானவரை நாமும் ப்ரியத்துடன் நேசிப்பது.

எழுந்து அமர்ந்தேன்.

போகலாம் முகில். உன்னை பார்த்தது, பேசினது, அப்புறமா நடந்தது இது எல்லாமே ஆச்சர்யம்தான். ஒரு அழகிய கனவு மாதிரி இருக்கு. இந்த கனவுக்கு அர்த்தம் நீயும் கொடுத்துடாத நானும் கொடுக்கல...

இதை பத்தி கேள்வி நீ கேட்டு நான் பதில் சொல்லி திட்டமிட்டு நாம இந்த அழகை சிதைச்சுக்க வேண்டாம். இன்னிக்கு நடந்தது தற்செயலா நடந்தது அப்டீன்றத நாம நம்பினா தற்செயலாவே அடுத்து எல்லாமே நடக்கும் வரை காத்திருக்கலாம்...தண்ணிக்கு அடியிலும் நாம போய்டல தரைக்கும் நாம போய்டல... கொஞ்ச நாள் மிதக்கலாம்....மிதந்துட்டே இருக்கலாம்....இன்னொரு நாள் தற்செயலா இதே போல ஏதோ ஒண்ணு நம்ம உள்ளுணர்வோட உந்துதல்ல நடக்கலாம்....இப்போதைக்கு இந்த நினைவுகல ரசிச்சு அனுபவிச்சு லயிச்சுக் கிடக்கறதுதான் சரின்னு என் புத்திக்கு தோணுது...

பூர்ணா என்னைப் பார்த்தாள்...

ஹா.. ஹா ஆமாம் பூர்ணா தற்செயலா தோன்றியதுதானே இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும்...

அதே.. அதே... என்றபடி கழுத்தில் கை போட்டுக் கொண்டாள்.

பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஆரம்பிப்பதும் முடிவதும் எதுவும் அவற்றுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒரு நாள் என்றால்  என்னவென்று கூடஅவற்றுக்குத் தெரியாது. விடியலில் அவை திசைகளை தீர்மானித்து பறப்பது இல்லை. மீண்டும் கூடு திரும்புகையில் கூடென்ற ஒன்று இருக்கும் என்பதற்கும் யாதொரு உறுதியும் இல்லை...

அவை எப்போதும் சிறகடிக்கின்றன...உயிர் என்ற ஒன்றின் ஒற்றை உணர்வை ஏந்தியபடி...!  வாழ்க்கையோ, இயற்கையோ, கடவுளோ, இல்லை சட்ட திட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, கவலைகளோ அவற்றுக்கு கிடையாது...
.....
.....
.....
பூர்ணா பேருந்திலிருந்து ஜன்னல் வழியே கை அசைத்தாள். 

கொஞ்சம் கண்ணீரும்
நிறைய வலிகளும்
இல்லாமல் இருக்கும்
காதல் எப்படி காதலாய்
இருக்க முடியும்...?

அவள் விழிகளில் வழிந்த நீரை என் கண்களில் இருந்து துடைத்துக் கொண்டேன். மீண்டும் அவளை சந்திக்கலாம் சந்திக்கையில் இப்போது இருக்கும் மனோநிலை எங்கள் இருவருக்குமே இருக்கலாம். இல்லாமலும் போகலாம் அல்லது ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு அப்படி இல்லாமலும் இருக்கலாம்....

எது எப்படி இருந்தாலும் அது சுகமான நினைவுகளை யாராலும் அழித்து விடமுடியாது. நான் என் காட்டேஜை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்......


என் காலடி பட்டு சருகுகள் நொறுங்கிக் கொண்டிருந்தன....!!!!

                                             
                                                       .... முற்றும் ....


தேவா சுப்பையா...3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்ப்பார்த்த முடிவு... நல்லது...

Gowthaman Rajagopal said...

தல கலக்கிட்டீங்க தல..

// கொஞ்சம் கண்ணீரும்
நிறைய வலிகளும்
இல்லாமல் இருக்கும்
காதல் எப்படி காதலாய்
இருக்க முடியும்...?//

செம மேட்டர் அண்ணா இது.

உண்மையும் கூட..


அடிச்சு தொவச்சு காயப்போட்டுடிங்க போங்க...

மிக அருமையான வார்த்தைகள், கதை வளர்ந்த விதம் பலருக்கு காதலும் வளர்ந்திருக்கும்.

நோ வோர்ட்ஸ் டு எக்ஸ்பிரஸ் மை பீல் அண்ணா..

சிம்ப்லி லவ் யூ சோ மச்...

சே. குமார் said...

கொஞ்சம் கண்ணீரும்
நிறைய வலிகளும்
இல்லாமல் இருக்கும்
காதல் எப்படி காதலாய்
இருக்க முடியும்...?


எதிர்பாராத முடிவு... சோகமாய்...