Pages

Friday, September 13, 2013

தங்கமீன்கள்...!

ஒரு கதையின் சாயல் நம் வாழ்க்கையை ஒத்திருக்கும் போது அந்த திரைப்படத்தைப் பற்றி பெரிதாய்  என்ன  சொல்லி வியக்க முடியும்... அதில் ஆழ்ந்து அமிழ்ந்து போவதைத் தவிர. டீசர்கள் வெளியான போதே பதை பதைப்பை அந்த திரைப்படம் ஏற்படுத்தியதற்கு காரணம் தங்கமீன்களின் செல்லம்மா என் வீட்டிலும் வளர்கிறாள் என்பதால்தான். வசதியான அப்பாக்களால்எல்லாவற்றையும் எப்போதும் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விடமுடிகிறது. கல்யாணியைப் போன்ற அப்பாக்களின் நிலைமைதான் இங்கே மிகவும் கடினமாகிப்போகிறது.

ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இருக்கும் உறவு முறையை, பாசத்தின் அதிர்வுகளை எடுத்து சொல்ல இதுவரைக்கும்  தமிழ் சினிமா இது போல ஒன்றும் வந்தது இல்லை. இனி வரப்போவதுமில்லை. அம்மாக்கள் எப்போதுமே பிள்ளைகளின் மீது பாசமாய் இருப்பார்கள். ஒரு தாய் எப்போதும் தாய்தான். அவளுக்கு பிள்ளை பேதங்கள் எப்போதும் கிடையாது. ஒரு ஆணிடம் பெண்ணின் இயல்புகள் மிகுந்து போய் தன் பாசத்தை செலுத்தும் வாய்ப்பினை மகள்கள் தப்பாமல் கொடுத்துதான் விடுகிறார்கள். தாய், காதலி, மனைவி, சகோதரி , தோழி, என்று சுற்றிச் சுற்றி பல பெண்களிடம் பல்வேறு விதமான அன்பினை எதிர்ப்பார்க்கும் ஒரு ஆண் தன் உயிரிலிருந்து ஜனித்த பெண் குழந்தையை பார்த்தவுடன் பூரித்துப் போகிறான். கடந்த கால பெண்கள் பற்றிய எல்லா தவறான அபிப்ராயங்களையும், அழிச்சாட்டியங்களையும் அவள் உடைத்துப் போட ஒரு பெண்ணை முதன் முதலாய் அவன் பெண் என்னும் பரிபூரணத்துடன் தன் இயல்பில் உணர ஆரம்பிக்கிறான்.

ஆரம்ப காட்சியில் " நீ மட்டும் சாகாம இருப்பா.." என்று கிறக்கமாய் செல்லம்மா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளுமிடத்தில் கண்களில் துளிர்க்கும் கண்ணீர் வலியாய் மாறி படம் முழுதும் பரவிக் கிடக்கிறது. கிட்டத் தட்ட ஒரு ஞானக்கிறுக்கனை ஒத்த ஒரு பாத்திரப் படைப்பை கல்யாணி என்னும் கேரக்டரில் அப்பட்டமாய் பிரதிபலித்திருக்கிறார் ராம். ராமை விடுத்து வேறு யாராலும் அவ்வளவு அட்டகாசமாய் அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது. பொருள் சேர்த்தல் என்பது ஒரு விளையாட்டு. பாசத்திற்குள் விழுந்து கிடக்கும் மிகையான பேர்களுக்கு பொருள் என்பது இரண்டாம் பட்சமாய் போய்விடுகிறது. அதுவும் மகளோடு ஒன்றிப் போன ஒரு தகப்பன் மகளின் மீது கொண்ட பாசத்தால் அவளை விட்டு நகரமுடியாமல் அவளோடு பிண்ணிப் பிணைந்த வாழ்க்கை ஒன்றை வடிவமைத்துக் கொள்கையில் அங்கே பொருளாதாரம் வந்து தன் கோரப்பற்களைக் காட்டுகிறது.

அப்பா மகளின் பாசத்தை  எடுத்துச் சொல்லி இருக்கும் அதே நேரத்தில் ஒரு பிள்ளையை எப்படி நமது ஊர் ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்கள் சீரழிக்கின்றன என்ற அவலத்தையும் கதையினூடே பளீச் என்று சொல்லி இருக்கும் இயக்குனரை பல இடங்களில் நமக்குப் பாராட்டத்தோன்றுகிறது. ஏன் இப்படி ஒரு கிறுக்குத்தனமாய் ஒரு தகப்பன் இருக்கவேண்டும்..? மகள் மேல் பாசம் இருந்தால் போய் எங்கேயாவது பிழைக்க வேண்டியதுதானே..? இப்படி ஒரு பைத்தியக்காரனைப் போல சமகாலத்திற்கு ஏற்றார் போல தன்னை அப்டேட் செய்து கொள்ளாத ஒரு பாத்திரத்தை ஏன் ராம் படைக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய பேர்கள் விமர்சனங்களில் எழுதி இருந்தார்கள்.

வாழ்க்கை என்பது எப்போதும் ஜெயிப்பது மட்டுமல்ல. வாழ்க்கை என்பது எப்போதும் டெக்னிக்கலாய் சிந்திப்பது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது திட்டமிடுதல் மட்டுமல்ல. வாழ்க்கை என்பது எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதும்  அல்ல. வாழ்க்கை என்பது தோற்பதும் கூட. வாழ்க்கை என்பது இயலாமையும் கூட. வாழ்க்கை என்பது அன்பினில் கட்டுப்பட்டு அதன் சிறப்பை உணர்ந்து போய் போதும் என்று வாழ்தலும் கூட. கல்யாணியை போன்ற கோடி அப்பாக்கள் இந்த உலகம் முழுதும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தின் முன்பு பைத்தியக்காரர்களாய் இருக்கலாம். தங்களின் முகத்தில் பாத்திரம் பாலிஸ் செய்த வெள்ளியை முகத்தில் பூசியபடியே மகளை மகிழ்விக்க யாதொரு கவலையுமின்றி சைக்கிளில் பள்ளிகளின் வாசலில் அவர்கள் காத்திருக்கவும் செய்யலாம்.

அவர்களுக்குத் தெரியும் அன்பு என்றால் என்ன என்று. அதே போல தன் அப்பாவை அன்பின் வடிவமாய் பார்க்கும் எல்லா மகள்களுமே பரிபூரணத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். தங்களை புரிந்து கொள்ளும் ஒரு ஆன்மாவை இயல்பில் உணர்ந்து கொண்டு அவர்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டே அவர்களும் ஆனந்தித்து சுற்றிச் சுற்றி வருகிறார்கள். லெளகீக கொடுக்கல் வாங்கல்கள், எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி அவர்களின் குளத்தில் தங்கமீன்கள் எப்போதுமே நீந்தி விளையாடுகின்றன.  மகளுக்கு பிடித்தமான எவிட்டா டீச்சரைப் பார்க்க எத்தனை மணியானாலும் அந்த தகப்பனால் செல்ல முடிகிறது. அந்த டீச்சரை தன் மகளோடு பேச வைத்து எதிர்பாராத சந்தோசத்தைக் கொடுத்து அந்த  நிறைவில் அவனால் நெகிழ முடிகிறது. பாக்கெட்டில் பணம் இல்லை என்று பணம் தேடுகிறேன் பேர்வழி என்று வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்வது எல்லாம் சராசரி  அப்பாக்கள் எப்போதும் செய்வதுதானே...

கல்யாணி மாதிரி அப்பாக்கள் வாழ்க்கையை வாழ முற்படுகையில் இடையே பொருளின் தேவை பற்றிய முகத்திலறையும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்தான்.....பொருள் சேர்க்க ஓடுகிறார்கள். ஒரே நேர்கோட்டில் இயல்பான ஒரு சினிமாவை வெகு காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காணப் பெற்றதற்காய்  ஒவ்வொரு தமிழனும் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு பிரேமாய் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கும் இயக்குனரின் கடின உழைப்பு நம்மை பிரமிக்க வைப்பதோடு....யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நம் நெஞ்சை கிழிக்கவும் செய்கிறது. நா. முத்துக்குமாரின் கவிதை வரிகள் இன்னும் கூடுதல் வலிமையைச் சேர்க்க ஆனந்த யாழ் நமக்குள் தன்னிச்சையாய் மீட்டப்படுகிறது. படத்திற்கு யார் வசனம் எழுதி இருப்பார்கள் என்று தெரியவில்லை. நிறைய இடத்தில் எதார்த்தமாய் வந்து விழும் வார்த்தைகள் செவுட்டில் அறைகின்றன. உதாரணமாக " பணம் இல்லாம இருக்கறது பிரச்சினை இல்லைங்க.. பணம் இருக்கவங்க மத்தியில பணம் இல்லாம இருக்கறதுதான் பிரச்சினை" என்று சொல்வது போன்று நிறைய இடங்களில் வசனகர்த்தா கொடிகட்டிப் பறக்கிறார்.

கடந்த ஆசிரியர் தினம் அன்றுதான் நான் என் அனுபவத்தில் சந்தித்த ஆசிரியர்களைப் பற்றி எழுதி இருந்தேன். எப்போதுமே மிரட்டுவதும் ஸ்டுப்பிட், ஷட் அப் என்று சொல்வதுமே ஆசிரியர்களின் கல்வி சொல்லிக் கொடுக்கும் நெறிமுறையாக நமது நாட்டில் இருக்கிறது. அமீரகத்தில் எல்லாம் பள்ளி செல்ல பிள்ளைகள் எப்போதும் ஆர்வமாய் இருப்பார்கள். இந்தப்படத்தில் செல்லம்மா கனவு காணும் பள்ளியைப் போலத்தான் இங்கே எல்லா பள்ளிகளும் பெரும்பாலும் இருக்கின்றன. மாணவர்களை கடிந்து கூட யாரும் பேசமாட்டார்கள். பெற்றோர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பதோடுபிள்ளைகளுக்கும் இன்முகத்தோடே பாடங்கள் சொல்லித் தருகிறார்கள். இப்போது நமது ஊரில் கொஞ்சம் மாறி இருக்கலாம். 

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க  பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்ற கருத்தையும் ராம் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். மகள் ஆசைப்பட்டு விட்டாள் என்று அவளுக்கு அந்த வோடபோன் நாயை வாங்க கடுமையாய் ராம் முயலும் இடமும் அதற்காய் அவர் மலைகளைக் காடுகளைத் தாண்டி, ஏரியைத் தாண்டி செல்லுமிடம் மட்டும் கொஞ்சம் அம்புலி மாமா கதை மாதிரி படத்தோடு ஒட்டவில்லை. நாயின் விலை 22 ஆயிரம், அவர் ஒரு இசைக்கருவியைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தால் 25 ஆயிரம் கிடைக்கும் என்று கதை சொல்லும் இடங்களில் திரைக்கதையை சேர்த்து இழுத்து தைக்க கொஞ்சம் பிராயத்தனப்பட்டு இருப்பது தெளிவாய் தெரிகிறது.  25 ஆயிரம் சம்பாதித்து அதிலிருந்து 22 ஆயிரத்துக்கு வோடபோன் நாய் வாங்கி வந்து கொடுத்து மகளை சந்தோசப்படுத்தி விடுகிறார்.

ஒரு கதாசரியர் வேறு ஒன்றும் செய்ய முடியாது. மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்யும் ஒரு ஆக்கத்தில் இது போன்று நெய்துதான் முழுமையைக் கொண்டு வர முடியும். ராமின் அற்புதமான நடிப்பிற்கு முன்பும், செல்லம்மாவின் எதார்த்த நடிப்பிற்கு முன்பும் இது ஒன்றும் பெரிய குறையாய்த் தெரியவில்லை. எல்லோரும் வெறுக்கிறார்கள் என்று தண்ணீரில் விழுந்து தங்க மீனாய் செல்லம்மா மாறிவிட முடிவு செய்கையில் கடைசியில் ராம் வந்து காப்பாற்றி விடுகிறார். வோடாபோன் நாயை மகளிடம் கொடுத்து விட்டு அவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமரும் காட்சியில் பிரசவித்த பின்பு வலிகளை மறந்து குழந்தையைக் காணும் தாயின் திருப்தியை நம்மாலும் உணர முடியும். மகள்களை பெற்ற அப்பாக்கள் தாயாய் மாறிவிடுகிறார்கள். 

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகள்தான் ஏனென்றால் அவர்களால்தான்  தாய்மை என்றால் என்ன என்னும் ஒப்பற்ற உணர்வினை அடையமுடிகிறது. 

எல்லோரும் திரைப்படங்களை வர்த்தகரீதியாய் எடுத்து இயல்புக்கு முரணான காட்சிகளை வைத்து ஹீரோக்களை முன்னிலைப்படுத்தி கதைகளை உருவாக்கி இதுதான் சினிமா என்று நமக்கு கற்பிதம் செய்து விடுகிறார்கள். ராம் போன்ற படைப்பாளிகள் கண்டிப்பாய் போற்றப்படவேண்டியவர்கள். தங்கமீன்கள் போன்ற சினிமாக்கள் கொண்டாடப்பட வேண்டியவைகள். மகளிடம் பாசம் காட்டும் ராம் தன் அப்பாவின் முன்பு வளர்ந்த குழந்தையாய் அடி வாங்கிச் செல்வது போன்ற இயல்பை மீறாத காட்சிகள் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை விடுத்து அந்த கதைக்குள் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வைக் கொடுத்து விடுகின்றன.

விகடன் இந்த படத்துக்கு 44 மார்க் கொடுத்து இருப்பதாய் வாசித்தேன். ராம் அதற்காய் விகடன் ஆசிரியர்களிடம் எல்லாம் பேசியதாய் செய்திகள் வெளியாயின. உண்மையில் சொல்லப் போனால் அதற்கான அவசியமே இல்லை. விகடன் போன்ற கமர்சியல் ஊடகங்கள் வெகுஜனத்திற்கு எது இஷ்டம் என்று  பார்த்து பார்த்து தொழில் செய்யும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவை. அவற்றின் சமூகப் பார்வை, திரைப்படம் பற்றிய பார்வைகள் எல்லாமே பிறழ்ந்த கோணங்கள் கொண்டவை. சமூகத்தின் மீது அக்கறை இருந்தால் ஏன் அவர்கள் டைம்பாஸ் விகடன் போன்ற பத்திரிக்கைகள் மூலம் ஆபாசத்தை விற்கவேண்டும்...?

தலைவா படத்தையும், தங்கமீன்கள் படத்தையும் மதிப்பெண்கள் ரீதியாக சரி சமானமாய் பார்க்கும் போதே அவர்களின் லட்சணம் என்ன என்று நமக்கு புரிந்து விடுகிறது. விகடன் விமர்சனத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பெண் அவர்களின் தனிப்பட்ட பார்வை. அது பொதுவான பார்வை அல்ல....

தொடர்ந்து தங்கமீன்கள்  போன்ற தமிழர்களின் வாழ்க்கையை, உணர்வை, சமூகவியலை பிரதிபலிக்கும் படங்களை இயக்குனர் ராம் எடுக்க வேண்டும். நல்ல திரைப்படத்தை விரும்பும் தமிழ் ரசிகர்கள் ராம் போன்ற படைப்பாளிகளை மாற்றுக் கருத்துக்களின்றி அவர்களின் நல்ல ஆக்கங்களுக்காக ஆதரிக்க வேண்டும்...!


ஹேட்ஸ் அப்....ராம் சார்...!!!!!தேவா சுப்பையா....

3 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

என்றாவது ஒரு நாள் செய்வீர்கள் என்று காத்திருந்தேன். எஸ் தேவா என்பது இன்று தேவா சுப்பையா என்று மாற்றியுள்ளதற்கு வாழ்த்துகள்.

விமர்சனம் அழகியலை படம் பிடித்து காட்டியுள்ளது.

வீடு சுரேஸ்குமார் said...

சில குறைகள் இருப்பினும் பாராட்டப்பட வேண்டிய திரைப்படம் தங்கமீன்கள்!

சே. குமார் said...

ஹேட்ஸ் அப்....ராம் சார்...!!!!!

அருமையான விமர்சனம் அண்ணா...