Skip to main content

நித்ய கன்னியே... கண்ணம்மா...!


இறக்கி வைக்க முடியாத சுகங்களை எல்லாம் சுமந்து செல்லும் வழிப்போக்கனாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என் நினைவுகள். காவியங்கள் என்று தம்மை இயம்பிக் கொள்பவைகள் எல்லாம் அழுத்தமான வலிகளையே காலங்களாய் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. வலிகளோடு கூடிய தனிமையின் சுகம்தான் ஆதி பிரபஞ்சமாய் இருந்திருக்குமோ..? உறக்கத்தின் போது காணும் கனவுகள் எப்போதுமே நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. உணர்வோடு காணும் கனவுகள் எப்போதுமே அலாதியானவை...அவற்றுக்கு யாதொரு கட்டுப்பாடுகளும் கிடையாது.

ஒரு அழகிய பாடலை கேட்டு ரசிக்கையில் சப்தத்தை ஏற்றி இறக்கி வைத்துக் கொள்வது போல, ஒரு விருப்ப ஓவியத்தை வரையும் போது நமது இஷ்டப்படி கோடுகளை நீட்டி மடக்கி நகர்வது போல, யாருமற்ற சாலையில் அதிகாலையில் வாகனத்தில் ராஜாசாரின் துணையோடு புரண்டு படுத்து எழும் அதிகாலையை எதிர் கொள்வது போல, உணர்வோடு கால் உதைத்து எழும் நினைவுகளின் முதுகு தட்டி ஒரு புரவியில் பயணிக்கும் சுகத்தோடு கனவுகளை நாம் முடுக்கி விட்டுக் கொள்ள முடியும்.

எப்போதும் நிஜம் கொடுமையானது. அது பல கோரங்களை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு வெளியே அஷ்ட கோணலாய் நடித்துக் கொண்டிருப்பது. சரிகளுக்குள் தவறுகளும், தவறுகளுக்குள் சரிகளும் என்று எப்போதும் ஒரு புதிர் விளையாட்டைப் போல நிஜம் நம்மை ஏற்றி, இறக்கி நகர்கிறது ஆனால் கனவுகள் எப்போதுமே வரையறை செய்யப்படாத, யாரென்றே அறிந்திராத ஒரு கற்பனைக் காதலியை ஒத்த சுகத்தைக் கொடுக்கக் கூடியது. அது என்ன வரையறுக்கப் படாத காதலி என்று கேட்கிறீர்களா? காதல் என்பது கட்டுகளற்றது என்று உணர்ந்த பின்பு காதலியை மட்டும் ஏதோ ஒரு உடலுக்குள் சூழலுக்குள் அகப்பட்ட ஒரு பெண்ணாய் தேடிக்கொள்வது அபத்தம்தானே..? காதல் புலனறிவுக்கு அப்பாற்பட்டது.....அது எல்லைகளற்ற பெருவெளி.

வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் ஒப்பற்ற கவிதைகளை எழுதியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காதலியை தன் முன் வைத்துக் கொண்டு எழுதி இருந்திருக்க மாட்டார்கள். நித்ய கன்னியாய் கண்ணம்மாவை எங்கேனும் கண்டேன் என்று ஒருபொழுதும் பாரதி நம்மிடம் பகிர்ந்திருக்க மாட்டான். கண்ணம்மா அவனின் கனவுக் காதலி. அவள் பாரதியின் ஏகாந்தக் கனவுகளுக்கு எப்போதும் துணையாயிருக்கும் லெளகீக கட்டுக்கள் அற்ற ஒரு முழுமை. பாரதி இமை மூடினால் கண்ணம்மா அவனுள் உதயமாவாள். அவனின் எல்லா செயல்களுக்கும் அவனுக்கு துணை இருந்தது ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல...

அவன் கற்பனைக் கடவுள் அவனுக்குப் படைத்தளித்துக் கொடுத்த கண்ணம்மாதான் பாரதியோடு எப்போதும் இருந்தாள். பாரதி சோகமாய் இருந்த போதெல்லாம்  அவன் தலை தடவி அவள்தான் ஆறுதல் சொல்வாள். அவன் எழுதிய எல்லா கவிதை வரிகளையும் முதலில் வாசித்து பாரதிக்கு சொல்வதும் அவள்தான்.... உலகமே நிராகரித்தாலும் கண்ணம்மா பாரதியின் கை பிடித்து கொண்டு கம்பீரமாகச் சுற்றித் திரிவாள். அவன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எழுதினாலும் சரி,  மானங்கெட்ட மாயையே நீ மாயாயோ..? என்று மாயையைப் பழித்தாலும் சரி..., அச்சமில்லை அச்சமில்லை என்று வீரமுழக்கமிட்டாலும் சரி...

கடைசியில் இதுவன்றோ தலைமை இன்பம் ஆதலால் காதல் செய்வீர் என்று அவனை அறைகூவல் விடுக்க அவள்தான் காரணமாவாள்.

காதலிகளை பெரும்பாலும் படைப்பாளிகள் தங்களின் கற்பனையில் இருந்து ஜனிப்பித்துக் கொண்டார்கள். எதார்த்தத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் விரும்பும் ஒரு ஆணிடம் இருந்தோ, பெண்ணிடம் இருந்தோ அவர்களால் பெற முடிவதில்லை. மனித மனங்கள் மிகவும் குழப்பமனாது அது எப்போதுமே சிக்கலை கருத்தரித்துக் கொண்டு அமைதியை பிரசவிக்க போராடிக் கொண்டிருக்கும். ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ நிஜத்தில் காதலிக்கத் தொடங்கும் போதே அங்கே பல்வேறுபபட்ட சூழல்களுக்கு ஒரு படைப்பாளி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. விரும்பினால் பொறியைத் தட்டி மின்விசிறியை ஓடவிடவும் வேண்டாமென்றால் அதை நிறுத்திக் கொள்ளவும் ஒரு படைப்பாளி விரும்புவதே இல்லை...

அவன் தோட்டத்தில் எப்போதுமே பூக்கள் பூத்துக் குலுங்கும், நின்று விடாத தென்றல் காற்று பட்டு தலையாட்டிக் கொண்டிருக்கும் மரங்களில் பட்சிகளின் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும்....நட்சத்திரங்கள் நிரம்பிக் கிடக்கும் வசீகர இரவுகளின் பேரமைதியில் அவனுக்கான தாலாட்டை எப்போதும் இந்த பிரபஞ்சம் இசைத்துக் கொண்டிருக்க...அவன் விரும்பிய ஓவியங்களை எல்லாம் இயற்கை பகல் முழுதும்  அவனுக்கு காட்சிகளாக்கி வைத்திருக்கும்.

நிஜம் கட்டுப்பாடுகள் கொண்டது. கற்பனைகள்...எல்லைகளற்றது.

நிஜத்தில் வாழ்ந்து கொண்டே கற்பனைகளில் சிறகடிக்கும் மனோநிலை கொண்டவனுக்கு எதற்கு புறத்தில் ஒரு காதலி? ஏதோ ஒரு நல்ல புத்தகம், திரைப்படம், சூழல் அல்லது நல்ல ஒரு இசை என்று சுற்றிச் சுற்றி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஓராயிரம் விசயங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் தன் கற்பனைக் காதலியோடு கை கோர்த்தபடியே அவனால் லயித்து விட முடியாதா என்ன....?

ஒரு பெருமழைக்குப் பின்னான
நனைந்து கிடக்கும் நிலமாயிருக்கும்
என் கற்பனைகளில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி
என் வார்த்தைகளைக் கொண்டு
எப்போதும் எழுதிக் கொள்கிறாள்
அவளுக்கான கவிதை வரிகளை...

பாரதிக்குள் விழுந்து கண்ணம்மாவிடம் சரணடைந்து மீளமுடியாமல் போனதற்கு பரிகாரமாய் இந்த கட்டுரையை எனக்குள் இருக்கும் கண்ணம்மாவிற்கு சமர்ப்பித்துதான் ஆகவேண்டும். நீங்களும் பாரதியைக் கேட்டு மீள முடியாமல் போகக் கடவீர்களாக;



தேவா சுப்பையா...



Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...