Pages

Thursday, September 5, 2013

வாழ்க்கை என்னும் பேராசான்....!


சென்டிமென்ட்டா.. ஆசிரியர்கள் தினத்துக்காக.. ஆசிரியர்கள் வாழ்கன்னு எல்லாம்  உணர்ச்சிப் பூர்வமா என்னால வாழ்த்து சொல்ல முடியலை பாஸ். என்னைப் பொறுத்த வரைக்கும் ஆரம்பப் பள்ளியில ஆரம்பிச்சு, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி வரைக்கும் ஒரு ஆசிரியரைக் கூட என் நெஞ்சு நிறைத்த ஆசிரியரா எண்ணிப் பார்க்க முடியல. சொல்லிக் கொடுத்தது படிச்சது எல்லாம் சரிதான் அதுக்காக நாம நன்றி கடமைப் பட்டு இருக்கோம்ன்றது எல்லாம் உண்மைதான்....ஆனா ஒரு வழிகாட்டியா, ரோல்மாடலா ஒரு ஆசிரியர் கூட என் கல்வி கற்கும் வாழ்க்கையில அமைஞ்சு போகாததை என்னோட துரதிர்ஷ்டமா நான் கருதுறேன்.

எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எல்லோரையுமே நான் மதிக்கிறேன் பாஸ், அந்த மரியாதையில ஒரு குறையும் கிடையாது. பட் நோ ஒன் இம்ப்ரெஸ்ட் மீ ன்றதுதான் உண்மை. ஆரம்பப் பள்ளி வாத்தியார்கள்னா என் கண் முன்னாடி வந்து போறது நீண்ட பிரம்புக் கம்புகளும், கட்டாமணக்கு செடியோட குச்சிகளும்தான். மிரட்சியோட பள்ளிக் கூடத்துக்குப் போன அந்த நாட்கள்ள,  காலையில இருந்து சாயங்காலம் பள்ளி விடுற வரைக்கும் இன்னிக்கு நமக்கு அடி விழாம இருக்கணுமேன்ற கவலைதான் அதிகமா இருக்கும். படிக்காம வர்ற பையன அவமானப்படுத்துறதும் " மாடு மேய்க்கதாண்டா நீ லாயக்கு"ன்னு முகத்துக்கு நேர காறி துப்புறதும், கொஞ்சம் சரி இல்லாத பசங்கள அவுங்க கை நீட்டிக் கெஞ்சக் கெஞ்ச பிரம்பால அடிக்கிறதும்...

முட்டிப் போடவச்சு பின் பாதத்துல லாடம் கட்றதும்னும் ஒரு போலிஸ் ஸ்டேசனாத்தான் என்னோட பள்ளிக்கூட வாழ்க்கை இருந்திருக்கு. பயம்...பயம்.. பயம்.....!!!! இந்த பயத்தை தவிர வேற ஒண்ணுமே மனசுல அப்போ இருந்தது இல்லை. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள்லயும், நடுநிலைப் பள்ளிகள்லயும் ஒரு உதவியாளர்கள் கூட இருக்க மாட்டங்க...! காலையில பத்து மணி ஸ்கூல் திறக்கறதுக்கு முன்னாடியே போயி 5 வது படிக்கிற பெரிய பசங்க (9 வயசு!!!!!)  எல்லோரும் தினமும் பெஞ்சு தூக்கிப் போடணும், ஒண்ணாவது ரெண்டாவது படிக்கிற பிள்ளைங்க உட்கார பலகை தூக்கிப்போடணும்.....

அது மட்டும் இல்லாம சுழற்சி முறையில ஒவ்வொரு பீரியட்ஸ்க்கும் நடுவுல பெல் அடிக்கணும். பள்ளி ஆரம்பிக்கும் போதும் மூடும் போதும் பெல் அடிக்கிறதோட மட்டும் இல்லாம... நம்பிக்கையான ஒரு பையன் கையில பள்ளிக் கூட சாவிய கொடுத்துடுவாங்க... அந்த பையன் காலையில போய் பள்ளிய திறந்து மிச்ச வர்ற பசங்க கூட சேர்ந்து பெஞ்ச் தூக்கிப் போடணும்...

நான் அஞ்சாவது படிச்சப்ப பள்ளிக்கூட சாவி என்கிட்ட இருந்துச்சு. தோள் மாட்டிப் பையை தலையில சபரி மலைக்குப் போற பக்தன் மாதிரி மாட்டிக்கிட்டுப் போய் பள்ளிக்கூடத்த தொறப்பேன். அந்த பள்ளிக் கூடத்துல என் கூட படிச்ச 30 பேர்ல என்னால ஈஸியா முதல் மார்க் எடுக்க முடிஞ்சதோட இல்லாம..அப்பாவ எல்லா சாருக்கும் நல்லா தெரியும்ன்றதால இந்த சாவி பொறுப்பு நம்ம கைக்கு வந்துச்சு. ஆரம்பப் பள்ளியக் கடந்து  நடுநிலைப் பள்ளிக்குப் போனப்ப...சில மாணவர்கள் சரியா படிக்கலேன்னு தலைகீழா நிக்க வச்சு சில வாத்தியாருங்க அடிச்சதை எல்லாம் நான் நேரடியாவே பாத்து இருக்கேன். டேய் கொறப்பய மவனே இங்க வாடான்னுதான் கோபத்துல அவுங்க கூப்புடுவாங்க....வாத்தியார பாத்தாலே பயந்து நடுங்கற அந்தக் காலங்கள இப்ப நினைச்சாலும் மிரட்சியா இருக்கு.....! எல்லோருமே அப்டி இருந்தாங்கன்னு சொல்ல மாட்டேன் ஆனா பத்துல 6 பேர் அப்டிதான் இருந்தாங்க.

தலை முடிய பிடிச்சு இழுத்து பெரமையன ஒரு வாத்தியார் அடிச்சாரு, அதுவும் ஏழாவது படிக்கிற அந்த பதின்மத்தோட துவக்கத்துல. எல்லா பொம்பளை புள்ளைங்களுக்கும் முன்னாடி அவன் கால்சட்டையில யூரின் பாஸ் பண்ணிட்டான்.....இங்கிலீஸ் கிராமர் தெரியல அவனக்கு... டைரக்ட் சென்டஸ இன்டைரக்ட்டா மாத்த தெரியலை, அதுக்குதான் அடி. 1987 வாக்குலன்னு இல்ல இன்னிக்கு தேதி வரைக்கும் எல்லா அரசாங்க பள்ளியிலயும் படிக்கிற பிள்ளைங்க யாரும் சாஃப்ட்வேர் இஞ்சினியரோட பிள்ளைங்களோ, பணக்கார வீட்டுப் பிள்ளைங்களோ அல்லது ரொம்ப விவரமான பெற்றோர்களின் பிள்ளைகளோ கிடையாது...

ஆசாரி வேலை செய்றவங்க, வயல்ல கூலி வேலை செய்றவங்க, சைக்கிள் கம்பெனி வச்சு இருக்கவங்க, டீக்கடை, மளிகைக் கடை, லாண்டரி, சலூன், இப்படி பொதுவான விரிந்த அறிவுப் பெருக்கம் இல்லாத பெற்றோர்கள் அவுங்க பிள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்பிச்ச காலங்கள் அது இவுங்களுக்கு நடுவுல என்னைய மாதிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல வேலை பாக்குறவரோட பிள்ளைகளும், ஒண்னு ரெண்டு வாத்தியார் பிள்ளைங்களும் இருப்பாங்க....! அப்போ கூடஎங்க அப்பா அம்மாக்களுக்கு வீட்ல பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறதோ அல்லது என்ன படிச்சி இருக்கான் அப்டீன்னு க்ராஸ் செக் பண்றதோ தெரியாது. பெற்றோர் ஆசிரியர் கழகம்னு ஒண்ணு இருந்துச்சே தவிர அது ஒரு நாளும் பெற்றோர்களையும் பிள்ளைகளையு ஆசிரியரையும் ஒருங்கிணைச்ச்சு அப்போ கூட்டங்கள் நடத்துனதே இல்லை....

பெத்தவங்களுக்கு நாங்க பண்ற சேட்டையில கோபம் வந்தா புத்தகத்த எடுத்து வச்சுப் படின்னு அதட்டுவாங்க அவ்ளோதான் அவுங்க உச்சபட்ச அக்கறை. பெரும்பாலும் பள்ளிக்கூடத்து வாத்தியார்கள நம்பி இருந்த எங்க வாழ்க்கையில வாத்தியார்கள் எல்லாம் எங்கள  மாணவர்களா பாக்குறதுக்குப் பதிலா குற்றவாளிகளாத்தான் பாப்பாங்க...

யாரோ ஒரு ஜோன்ஸ் பையனும், முருகேசனும் மகனும், பஷீர் மகனும் 11 மணிக்கு மாத்தி மாத்தி போய் வாத்தியாருங்களுக்கு டீ யும் வடையும் வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. ஏழாவது படிக்கிற பையன் 10 வடையும் 5 பார்சல் டீயும் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு....எச்சில் ஒழுக வந்து மறுபடி க்ளாஸ்ல உட்கார்ந்துகிட்டு சைன் தீட்டா மைனஸ் காஸ்தீட்டானு எப்டி சார் படிப்பான்...? வயலுக்கு போயி அப்பாவுக்கு சோறு கொடுத்துட்டு வெறுங்காலோட ஓடியாந்து வீட்ல பீச்சுன பாலை பண்ணையில கொடுத்துட்டு வந்து... 

ஷேக்ஸ்பியரோட போயெட்ரிய அவன் மனப்பாடம் செய்ய கொஞ்ச நாள் ஆகுமா..? ஆகாதா? அவனைப் போயி படிப்பு வரலேன்னு அடிக்கிற வாத்தியார்கள என்ன சார் செய்றது...?

ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளை பல கசப்பான உண்மைகளோட கடந்த என்னோட லைப்  பதினொன்னாவதுல ஆரம்பிச்சு காலேஜ் முடிக்கிற வரைக்கும் வாத்தியார்களை பணம் உண்டாக்கும் மெசின் மாதிரிதான் காட்டிச்சு. அரசு உயர்நிலைப் பள்ளியில பதினொன்னாவாது படிக்கிறப்ப பண்ணென்டாவதுக்கு வச்ச ட்யூசன்...காலையில 7:30 - 8:30 = கணக்கு ட்யூசன், 8:30 - 9:30 = கெமிஸ்ட்ரி அது முடிச்சு பள்ளிக்கூடம் பத்து மணிக்கு பள்ளிக் கூடம் போனா மறுபடி ஸ்கூல் விட்டப்புறம் 4:30 - 5:30 = பிஸிக்ஸ் ட்யூசன் அப்புறம் 5:30 - 6:30 = பையாலஜின்னு முடிச்சுட்டு 7 மணிக்கு பஸ் புடிச்சு வீட்டுக்கு வர மணி எட்டாயிடும். படிக்காத பசங்களுக்குன்னு இல்லங்க நல்லா படிச்சாலும் படிக்காட்டியும் ட்யூசன் போய்தான் ஆகணும்... சத்தியமா க்ளாஸ்ல ஒண்ணுமே நடத்தமாட்டங்க ..சார் எல்லாம்...! ட்யூசன் அவுங்க கிட்ட வச்சுக்காட்டி ப்ராட்டிகல் மார்க்ல கை வைப்பார்ன்ற ஒரு டீஃபால்ட் த்ரெண்டெண்ட் எங்களுக்கு இருந்துக்கிட்டே இருக்கும்.

திறமை இருக்கவன் படிச்சு தன்னால மேல வருவான்றது எல்லாம் சரிங்க, திறமை இல்லாதவன் என்னங்க செய்றது...? பிஸிக்சும் கெமிஸ்ட்ரியும் வராதவன் எல்லாம் முட்டாள்னு ப்ரூஃப் பண்ணத்தான் இந்த சமூகம் முயற்சி பண்ணிச்சே தவிர.. ஏன் வரல... அப்டீன்னு வழிகாட்ட ஒரு நாதி இல்லேங்க அப்போ எல்லாம்...(இப்பவும் கூட இருக்கத்தான் செய்யுது...)

காலேஜ் படிக்கும் போதும் அப்டித்தான்...பென்சாய்க் ஆசிட் பிரிப்பரேசன மனப்பாடம் பண்ணி, கொடுக்குற ஆங்கில நோட்ச அப்டீயே எழுத சொன்ன ஆசிரியர்கள்..ஏன் பென்சாயிக் ஆசிட் பிரிப்பேர் பண்ணனும்...னு சொல்லிக் காட்டவே இல்லை. ஒரு நாள் 40 மாணவர்களையும் மாணவிகளையும் நிக்க வச்சு....மொத்தமா ஒரு நாள் ப்ராக்டிகல் செஞ்சு காட்டினதுதான் எங்க பென்சாயிக்  ஆசிட்டோட அறிவு....

இன்னமும் என்னோட நண்பர்கள்ல நிறைய பேருக்கு சால்ட் டைட்ரேசன் எல்லாம் ஏன் செஞ்சோம் அல்லது எதுக்கு அதைச் செய்யணும்னே தெரியாதுங்க....!

இன்னும் சொல்லப் போனா நகராத மாட்ட அடிச்சு இழுத்துட்டுப் போறது மாதிரியான ஒரு வலுக்கட்டாய திணிப்புதான் என்னோட கல்வி வாழ்கையில ஏற்பட்ட அனுபவமா இருக்குது. ஆசிரியர்கள் தினம் அப்டீன்றத நான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையோட தொடர்புபடுத்தி மட்டு பார்த்தா... நான் உங்க எல்லார்கிட்டயும் ஐயம் சாரின்னுதான் சொல்ல வேண்டி இருக்கும்....

படிச்சு முடிச்சு வெளில வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கை கல்விய கத்துக் கொடுத்த நிறைய குருக்கள் என் வாழ்க்கையில இருக்காங்க...தக்ஸின் அப்டீன்ற அந்த நட்சத்திர ஹோட்டலோட எம்.டி ஆனந்த்குமார் சார், புத்தகங்களின் வாயிலா பாலகுமாரன் சார், வாழ்க்கையின் எல்லா பக்கத்திலும் நிறைஞ்சு நின்ற என் அப்பா, ஆன்மீகத்தை புரிய வைச்ச விக்னேஷ் அண்ணன், இங்க துபாய் வந்ததுகு அப்புறம் இஸ்லாத்தை தெளிவா சொல்லிக் கொடுத்த காலிது ஷா அண்ணன்..., எப்பவுமே என் உள்ளுணவா இருந்து என்னை வழி நடத்தும் சிவம் அப்டீன்ற வெறுமை..... இப்டி என் பட்டியல்  நீண்டுகிட்டே போகும்....

ஆசிரியர்கள் என்பவர்கள் கல்விச் சாலைகளுக்குள் இருப்பவர்கள் மட்டுமல்ல...இந்த வாழ்க்கை முழுந்து பரந்து விரிந்து எப்போதும் நம்மை வழி நடத்துபவர்கள்....அவர்களை இன்று மட்டும் நினைவு கூர்ந்து கடந்து செல்லும் தர்மத்தை நான் அதர்மமென்றே சொல்லுவேன்...!

கற்றுக் கொடுக்குமொறு
பேராசான்...
தினம் கற்றுக் கொண்டிருக்கும்
விந்தையொன்றில்
வியந்து நிற்கிறேனடி....
ஞானப்பெண்ணே....
நான் வியந்து நிற்கிறேன்....!தேவா சுப்பையா...4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதென்ன புதுக் கதையா இருக்கே...! (ஆகுமா ?)

http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

Anonymous said...

வணக்கம்
பதிவு அருமையாக உள்ளது பள்ளிக்காலங்களை மறக்கமுடியமா?
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

குறிப்பு- தீபாவளித் திருநாளை முன்னிட்டு மாபெரும் கவிதைப் போட்டி நிச்சயம் பங்கு கொள்ளவும் பதிவுப் பார்வைக்கு.
https://2008rupan.wordpress.com
http://dindiguldhanabalan.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அமுதா கிருஷ்ணா said...

100% உண்மை...

Anonymous said...

Saatta padam feeling iruku postla...

kalyani