Skip to main content

வாங்கண்ணா...வணக்கங்கண்ணா...!


தில்லானா ஆடுற வாழ்க்கையில கோடாணு கோடி மனோநிலையில கோடி மக்கள் நம்ம முன்னால எப்பவுமே வந்து போய்ட்டு இருக்காங்க. ஏதேதோ காரணங்கள் யாரையோ பிடிக்கறதுக்கும் பிடிக்காததுக்கும் இருந்துகிட்டேதான் இருக்கு. எந்த கருத்தும் எடுத்துக்காம 'பளீச்'ன்னு பிடிக்கிற விசயத்தை பிடிச்சுதுன்னு சொல்ற இடத்துல ஒரு மேகத்து மேல ஏறி உட்கார்ந்து ச்ச்சும்மா ஜிவ்வுன்னு பறந்து போற ஒரு சந்தோசம் தப்பாம நமக்கு கிடைச்சுடும். சந்தோசமாவே இருக்க பொறந்திருக்க நம்ம வாழ்க்கையில நமக்கு சந்தோசத்தோட முக்கியத்துவம் என்னனு  புரியவைக்கிறதுக்காக இடையிடையே ச்சும்மா அப்டி இப்டி ஏதாச்சும் ஒரு கட்டையத் தூக்கிப் போட்டு வாழ்க்கை எப்பவுமே விளையாடிட்டே இருக்குது. 

பொறக்குறப்பவே இறப்போம்ன்றது கன்ஃபார்மான வாழ்க்கையில மிச்சம் இல்லாம எல்லா மனுசங்களும் ஒரு கட்டத்துக்கு மேல நம்மள விட்டுட்டு போய்டுறாங்க. ஒரு நிமிசம் நின்னு யோசிச்சுப் பாத்தா இங்க சந்தோசமா இருக்குற ஒவ்வொரு நொடி மட்டும்தான் நமக்கு மிச்சம்ன்றது தெளிவா விளங்கும். எவ்ளோ பணத்தோட வாழ்ந்தீங்க...எவ்ளோ புகழோட வாழ்ந்தீங்கன்றது எல்லாம் மேட்டரே இல்ல பாஸ்...எவ்ளோ திருப்தியா வாழ்ந்தோம் அப்டீன்றதுதான் மேட்டர். சுத்தி சுத்தி எது எதையோ பேசி மூளைய சூடாக்கிக்கிட்டு எனக்கு இது பிடிக்கும், இது உனக்கும் பிடிக்கலேன்னா நீ எனக்கு எதிரி.. பிடிச்சுதா நீ என் நண்பன் அப்டீன்னு நினைக்கிறதே அபத்தம். ஆயிரம் விருப்பங்கள், ஆயிரம் திசைகள் ஆயிரம் முரண்கள்னு இப்டி, அப்டி போயிட்டு இருக்க வாழ்க்கையோட அழகே முரண்கள்தானோன்னு பல தடவை யோசிச்சு இருக்கேன்.

தண்ணி அடிக்க மாட்டேன், தம் அடிக்க மாட்டேன், பொண்ணுகள பாக்க மாட்டேன், ரொம்ப யோக்கிய சிகாமணியா நான் வாழ இந்த சமூகம் போட்டுக் கொடுத்த ஒரு ஃபார்முலாக்குள்ளயே கட்டம் கட்டி வாழ்ந்துட்டு போய்டுவேன்னு சில பேர் இருப்பாங்க, கடவுளே இல்லைன்னு சொல்லி பகுத்தறிவ பாயா செஞ்சு குடிச்சிக்கிட்டே கருப்புச் சட்டைய மட்டும்தான் போடுவேன்னு இறுகிப் போயி ரொம்பப் பேரு திரிவாங்க, நான் சாமிய கும்புடுறேன் எனக்கு சொர்க்கம் நிச்சயம்னு எதித்தாப்ல விளையாடிட்டு இருக்க பெத்த புள்ளைய தூக்கிக் கொஞ்சக் கூட நேரமில்லாம வழிபாட்டுத் தளங்கள நோக்கி இயந்திரத்தனமா ஓடி, ஓடிப் போயி கடவுள வேண்டிகிட்டே  பலர் இருப்பாங்க. செத்துப் போனா சொர்க்கத்துல சொக்கட்டான் விளையாடி சந்தோசமா வாழ்க்கையை என்ஜாய் பண்ண ஆசைப்பட்டு இங்க உயிரோட கண்ணு  முன்னாடி இருக்குற வாழ்க்கையை கண்டுக்காம  விட்டுடுவாங்க..

பஸ்ல புட் போர்ட் அடிக்காம பதின்மத்த கடந்த பெருசுகளுக்கு எல்லாம் இப்போ புட்போர்ட்ல போற புள்ளைங்கள பாத்தா கடுப்பாகத்தான் செய்யும். புட்போர்ட்ல போறது ஆபத்துதான் ஆனாலும அவன், அவன் டேலண்ட் அது .....,  அவார்னஸோட போறான்னா போய்ட்டு போகட்டுமே..தமிழ்நாடு புல்லா புட்போர்ட்ல போயி கீழ விழுந்து செத்தவன் எத்தன பேர்னு ஏதாச்சும் புள்ளி விபரம் இருந்தா எடுத்துப் பாருங்க அதை விட அதிகமா ரோட்டு ஓரமா மரியாதைய போனவங்கள வாழ்க்கை அகோரமா அழிச்சு இருக்க விபரீதம் நமக்குப் புரியும். சாமி ரொம்ப கும்புடுறான்டா முட்டாள் அப்டீன்னு ஒரு க்ரூப்பு திட்டிக்கிட்டு இருக்குது...,  சாமியே கும்புடவே மாட்டான் முட்டாள்னு இன்னொரு க்ரூப் திட்டுது....

காங்கிரஸ்தான் நாட்ட காப்பாத்துற ஒரே கட்சி அவுங்கதான் மதச்சார்பற்று இருக்காங்க பெஸ்ட்டுன்னு திங்க் பண்ற நிறைய ஸ்டேட்ஸ் இந்தியாவுல இருக்கு, பிஜேபி தான் வரணும்னு பேசிட்டு இன்னொரு க்ரூப், கலைஞர் பேர சொல்லி ஏதாச்சும் விமர்சிச்சா எதிர்க்க ஒரு க்ரூப், ஜெயலலிதாவ திட்டினா அதை எதிர்க்க ஒரு க்ரூப், எது நடந்தாலும் அதைப் பத்தி கருத்து சொல்லியே ஆகணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி ஒரு க்ரூப்னு இந்த வாழ்க்கை புல்லா எல்லாமே கலர் புல்லா ஏதாச்சும் நடந்துகிட்டே இருக்கு.

எல்லோருக்கும் யாரையோ பிடிக்குது... அல்லது கடுப்பா இருக்கு. சில பேர், சிலர காதலிக்கிறாங்க, சில பேர் கல்யாணம் பண்ணிக்கிறாங்க, சில பேர் முயற்சி பண்றாங்க, பல பேர் கனவுகளோட அலையுறாங்க, குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை வேணும், குழந்தை இருக்கவங்களுக்கு பிள்ளைகள நல்ல படியா வளர்க்கணும், கடமை.. கடமை .. பொறுப்புகள், ஆசைகள், கனவுகள், நிராசைகள்...இது ஒரு பக்கம்.

வறுமை, நோய், வறட்சி, இயலாமை, கோபம், ஆத்திரம், களவு, பொய், கொலை, முரட்டுத்தனம் இப்டி முரண்பாடுகள்னு நாம நினைக்கிற விசயங்கள் ஒருபக்கம்னு எந்த யோசனையும் இல்லாம  எல்லாமே நடந்துகிட்டே இருக்கு. கழுத்துல இருக்க செயின அறுக்குறவனுக்கு அறுக்குறவளோட குடும்பத்தப் பத்தி யோசிக்கவோ அப்டி அறுக்கும் போது அவளுக்கு வலிக்குமோன்னோ நினைச்சு பாக்கமுடியலை. அவன் வயிறு படுத்துற பாட்ல எப்டி அவன் இதை யோசிப்பான்...? மனுசனே மனுசன ஆதரிச்சு மனிதநேயம் பேசுற இந்த பூமில தான் கெமிக்கல் வெப்பன்ஸ் வச்சு மனுசங்கள கொத்து கொத்தா கொல்லவும் செய்றாங்க..., வலிமையானவன்னு இந்த சமூகம் அடையாளப்படுத்துற யாரோ ஒருத்தன் எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவனா இருக்குறான்...

அன்பானவன் எப்பவும் அன்பா மட்டும்தான் இருக்க முடியுது. அவனால இந்த உலகத்தோட  ஒரு சிறு பகுதிய கூட அன்பால கட்டிப் போட முடியலை. அன்ப போதிக்க வந்தவங்கள எல்லாம் கடவுளாக்கிக்கிட்டு மறுபடி செகண்ட் ரவுண்ட்ல மதம்ன்ற பேர்ல எல்லோரும் அடிச்சுக்கிறாங்க...

யாரும் யாரையும் இங்க திருத்த முடியாது. நான் பேசுறது உங்க கேரக்டர் கூட ஒத்துப் போச்சுன்னா சூப்பர் பாஸ்னு சொல்லுவீங்க.. இல்லேன்னா...ஹ்ம்ம்க்கும்னு சொல்லிட்டு தோள்பட்டையில முகவாயை இடிச்சுக்கிட்டு போய்கிட்டே இருப்பீங்க. இங்க அங்கீகாரம் அப்டீன்றது தனி மனித விருப்பமாத்தான் இருக்கு. எது பிடிக்கணும் பிடிக்க கூடாதுன்னு யாருக்குமே நாம வரையறை செய்ய முடியாது. ஊருக்குள்ள எந்த மூலையிலயாவது ஏதாவது அபத்தமா நடந்துச்சுனா அதை மீடியா காசாக்கிடுது, விவாதம் செய்ய டிவிக்கு கூப்டுற ஆளுங்களுக்கும் இதனால பாப்புலாரிட்டி வெகு சீக்கிரமா கிடைக்கிறதோட இதுக்கு பொருளும் கிடைக்கறதால அடுத்து எங்க எப்ப ஏழரை விழுந்தாலும் நம்மள கூப்டுவாங்களான்னு மனசு அவுங்க அறியாமலேயே ஏங்க ஆரம்பிச்சுடுது...இல்லேன்னா என்னடா ஒண்ணுமே நடக்க மாட்டேங்குதுன்னு யோசிக்க வைக்குது....

நல்ல செய்திகளை மட்டுமே ஊடகங்கள் விவாதிக்கவும், வெளியிடவும் கூடிய சூழல்னு ஒண்ணு உருவாகவே போறது இல்லை. எப்பவுமே அடுத்தவன் பிரச்சினைய வேடிக்கப் பார்க்குறது மனிதர்களோட இயல்பு. அந்த இயல்ப இப்ப இருக்குற ஊடகங்கள் எல்லாம் நல்லா சொறிஞ்சு விட டி.ஆர்பி. ரேட்டிங் எக்குத்தப்பா எகிறிப் போயிடுது. எல்லாமே இங்க காசுன்ற ஒரு விசயத்தை மையமா வச்சுதான் பெரும்பாலும் நடக்குது.

ஏங்க இப்டி எல்லாம் நடக்காத  ஒரு அமைதியான பூமி சகிப்புத்தன்மையோட உருவாகாதா....?ன்னு நீங்க கேட்கலாம்..! அப்டி எல்லாம் நடக்காது பாஸ்...சகிப்புத்தன்மையோட அமைதியா ஒண்ணுமே நடக்காம இருந்தா அப்புறம் என்னா சார் இருக்கு லைப்ல சுவாரஸ்யம்.....? மரணம்னு ஒண்ணு இல்லேன்னா இந்த வாழ்க்கை ச்ச்சீன்னு போய்டும் சார்....

எதுவும் மாறாது எல்லாமே இப்டிதான் இருக்கும்.. எனக்கு எது திருப்திய தருதோ அதை  செஞ்சுட்டு, படுக்கையில விழுந்த மூணாவது செகண்ட்ல நிம்மதியா தூங்க முடிஞ்சா நான் ஏதோ திருப்தியா வாழ்ந்துட்டு இருக்கேன்னு அர்த்தம். ஒரு நாள் டக்குனு எல்லாம் முடிஞ்சு போகும்... அப்போ யாருமே நம்ம கூட வரப் போறது இல்லை. அன்னிக்கு என்ன நடக்குதுன்னு அன்னிக்கு பாத்துக்கலாம் பாஸ்....

கேவலமான படமா இருந்தாலும் இந்த பாட்டு நல்லா இருக்கும் இதுல அக்மார்க் விஜய்ன்ற ஒரு இமேஜ் ரொம்ப ஷார்ப்பா வெளிப்பட்டு இருக்குனு நான் சொல்லி, இந்தப் பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணுங்கன்னு சொல்றதுக்கும் ஒரு காரணமும் இல்ல பாஸ்....

ஏதாச்சும் ஒண்ணு செய்வோமே.... ஒண்ணுமே செய்யாம கட்டுப்பாடுகள் விதிச்சுக்கிட்டு வாழ்ந்து என்னத்த அள்ளிக்கிட்டு போகப்போறோம்...

அதனால.. வாங்கண்ணா............வணக்கங்கண்ணா....இந்த சாங்க நீங்க கேளுங்கண்ணா.....நான் உளற உளறளலண்ணா.. ரொம்ப ஃபீலிங்கு ஃபீங்குண்ணா....!



தேவா சுப்பையா...




Comments

ரொம்ப ஃபீலிங் ஆயிட்டீங்க போல...
Unknown said…
மரணம்னு ஒண்ணு இல்லேன்னா இந்த வாழ்க்கை ச்ச்சீன்னு போய்டும் சார்....மரணம் என்பதற்கு பதிலாய் மனைவின்னு மாத்துங்க பாஸ் !
சொல்லி தர முடியாத விஷயம்தான் வாழ்க்கை, அது ஒரு அனுபவம். அனுபவிக்கறது அவனவன் விருப்பம். அத தயவு செஞ்சு யாரையும் வெறுக்காம அனுபவி ராசா. பொசுக்குனு ஒரு நாள் காலம் உசுர புடிங்கிட்டு போய்டும். அதுனால இருக்கற வரைக்கும் நல்லா வாழ்ந்துக்கோ அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல