Pages

Sunday, November 24, 2013

கடல்...!


கடற்கரை காற்று தலை முடியைக் கலைத்துக் கொண்டிருந்தது. கடற்கரை மனதின் சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு இடமாகத்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது. கடலை நெருங்கும் போதே ” ஹோ ” என்று பரந்து விரிந்து கிடக்கும் மண்ணை பார்க்கும் போதே ஒரு வித சந்தோசம் உள்ளுக்குள் விசிலடிக்கத் தொடங்கி விடும்.

பெரும்பாலும் கடற்கரைக்கு யாரோடும் நான் வருவதில்லை. கடலே துணை, கரையே எனக்கு இணை பிறகெதற்கு ஒரு துணை. கால் நீட்டி கடற்கரை மணலில் அமந்து கொண்டு இரைச்சலாய் கரையை நோக்கி வந்து பிறகு திரும்பும் அலைகளையும், பரந்து விரிந்த வானத்தையும் அதில் மிதக்கும் மேகங்களையும் பார்த்துக் கொண்டு வெறுமனே அமர்ந்திருத்தல் சுகம். எந்த எண்ணமுமற்று அந்த சூழலில் கரைந்து கிடப்பது தவம். நிறைய பேர் ஒவ்வொரு காரணத்திற்காக கடற்கரைக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாய் வந்து அமர்ந்து உணவருந்துகிறார்கள். பேசிச் சிரிக்கிறார்கள். ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். பட்டம் விடுகிறார்கள். குதிரை சவாரி செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பகுதிவரை கடலில் சென்று குளிக்கிறார்கள். கடலில் கால் நனைத்து சிலாகித்துப் போகிறார்கள். 

கடற்கரையில் வியாபாரம் செய்யும் சிறுதொழிலாளர்களுக்கு கடற்கரை எந்த வித உணர்வையும் கொடுத்து விடுவதில்லை. அவர்கள் பிழைப்புக்கான ஒரு இடம் என்ற அளவோடு கடல் அங்கே  சவலைப் பிள்ளையாய் சுருங்கிப் போய்விடுகிறது. காதலர்களுக்கு ஒரு விதமாகவும், காவலர்களுக்கு ஒரு விதமாகவும், திருடர்களுக்கு ஒருவிதமாகவும் கடல்.....வெவ்வேறு முகத்தைக் காட்டுகிறது. உண்மையில் சொல்லப் போனால் உலகத்தில் இருக்கும் எல்லா விசயங்களுமே அப்படித்தான். எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அப்படியான செய்தியை நமக்குச் சொல்கிறது. வெளியே ஒரு செய்தியும் இங்கே கிடையாது. ஒரு மனிதரோ, சூழலோ, இடமோ எப்போதும் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. வேண்டுமென்றால் தாக்கத்தை உண்டு பண்ணலாம். அப்போது கூட வாங்கும் தன்மையைப் பொறுத்துதான் விளைவுகள் ஏற்படுகின்றன.

அடிப்படையில் பலவிதமான அபிப்ராயங்களை நமது அனுபவங்களின் மூலம் ஆழ்மனது கிரகித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல நம்மை சிந்திக்கச் சொல்கிறது.  நாம் நம் சுயவிருப்பு விருப்போடுதான் விசயங்களை எப்போதும் அணுகிக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு பொருளுக்கும் இருக்கும் தனித்தன்மையைப் பற்றி நாம் கவலைகள் கொள்வது கிடையாது. எனக்கு இது இப்படி வேண்டும் என்ற ஒரு விருப்பத்தோடுதான் இங்கே எல்லா பரிமாறுதல்களுமே நிகழ்கின்றன. நான் மாலை வேளையில் கடற்கரை வருவது என்பது எதையோ வாங்கிச் செல்ல அல்ல, எதையோ பார்த்து செல்ல அல்ல, எதைப்பற்றியோ யோசித்து செல்லவும் அல்ல...

கடல் ஒரு பிரம்மாண்டம். கடலைத் தொட்டு நிற்கும் வானம் ஒரு பிரம்மாண்டம். கடலை ஒட்டிப்பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரை ஒரு பிரம்மாண்டம். இதற்கு நடுவில் அபிப்ராயமற்று வெறுமனே அமர்ந்திருத்தலோ அல்லது நடத்தலோ அல்லது நின்று கொண்டிருத்தலோ ஒருவித சுகம். கடலை நான் பார்க்கும் போதெல்லாம் அது ஏதோ ஒரு ரகசியத்தை தன்னுள் தேக்கி வைத்திருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு முறையும் அலைகள் கரைக்கு வரும் போதும் அவை என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதாக உணர்வேன்...! இந்த அலை சொல்லவில்லை...அடுத்த அலை சொல்லுமா? இல்லை அடுத்தது சொல்லுமா என்று ஏக்கமாய் கடற்கரையில் நின்று காத்திருந்திருக்கிறேன். 

என்ன இது ஒரு அலையும் நமக்கு ஒன்றும் சொல்லவில்லையே என்று யோசித்து கவலைப்பட்ட நான், பின்னொரு நாளில் புரிந்து கொண்டேன் எல்லா அலைகளுமே என்னிடம் மெளனத்தை பகிர்ந்த்து சென்றன என்று...! ஆழ்கடல் சலனமில்லாமல் இருக்கும் என்றாலும் ஆழ்கடலில் தோன்றும் சலனமே பயணித்து அலைகளாக கரைகளை மோதுகின்றன. ஒரு ஏற்றம் ஒரு இறக்கம் என்று தொடர்ச்சியாய் பயணித்து கரையைத் தொட்டு பிறகு வெறுமனே திரும்பிச் செல்லும் அலைகளுக்கும் வாழ்க்கைக்கும் நிறையவே தொடர்பிருக்கிறது.

ஆர்ப்பட்டமாய் ஏதோ ஒரு இலட்சியத்துக்காகவே எல்லோரும் பயணிக்கிறோம். பயணத்தின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமானது அல்ல. அது போல இறுதியும் வெகு சுவாரஸ்யமானது அல்ல. ரத்தமும், சதையும் இன்ன பிற வேண்டாத பல கழிவுகளுடன் தான் மனிதன் பிறக்கிறான். இன்னும் சொல்லப் போனால் அசுத்தம் வேறு ஒரு நிலைக்கு மாறிக் கொள்வதுதான் மானுடப் பிறப்பே.....

இந்த பூமியில் ஜனித்து மரித்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற யாராவது யாரிடமாவது கேட்டுப் பெற்றோமா எனக்கு இந்தப் பிறப்பு வேண்டுமென்று..? அது திட்டமிடாமல் தன்னிச்சையாய் நிகழ்ந்தது. உயிர் உருவவாதே சாத்தியக்கூறுகளினால்தான். மொத்த வாழ்க்கையும் சாத்தியக் கூறுகளால் கட்டியமைக்கப்பட்டதே. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் இங்கே நிகழலாம். எதேச்சையாய் நான் இங்கே வந்தவன். இங்கே எனக்கு எதற்கு பிணக்குகளும், இணக்கங்களும், துக்கங்களும் சந்தோசங்களும் வேண்டும்....? 

வேண்டாம்....எதுவுமே வேண்டாம்.

இதே கடற்கரை எனக்கு பல சூழல்களை கடந்த காலத்தில் கொடுத்திருக்கிறது. ஒரு சுனாமி தினத்தன்று...இங்கே பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. சுனாமி வந்த அந்த அதிகாலையில் இந்தக் கடலின் அலைகள் எல்லாம் ஊமையாகிப் போய் மனித ஓலங்களால் நிரம்பிக் கிடந்தது. வாழ்க்கையை எது கொடுத்ததோ அதுவே எடுத்தும் கொண்டது. கடலை அன்று திட்டாத மனிதர்கள் கிடையாது. கடல் மாதா என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டவர்கள் எல்லாம் சனியனே என்று சாடினார்கள். சுனாமிக்குப் பிறகு மறுநாள்  கடல்  ஒன்றும் தெரியாதது போல சலனமில்லாமல் படுத்துக் கிடந்தது. அலைகள் எல்லாம் எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி கரைகளில் விளையாடிக் கொண்டிருந்தன.

பின்னொரு நாள்...என் காதலியை நான் சந்தித்ததும் பிரிந்ததும் இதே கடற்கரையில்தான். எதிர்ப்பாராமல் சந்தித்தோம். பல நாட்கள் வெகுதூரம் நடந்தோம். ப்ரியமானவைகள் பற்றி பட்டியலிட்டுக் கொண்டோம். கடவுள் தேடலில் கைகோர்த்துக் கொண்டோம். அவளை சகி என்றேன்.....என்னை அவள் பதி என்றாள்....! கைகோர்த்த படி கடற்கரையின் முடிவு எங்கே இருக்குமென்று தேடிக் கொண்டு வெகு நேரம் நடந்து கொண்டே வாழ்க்கையை கால்களால் அளந்தோம். கவிதைகள் சொல்வேன்...அவள் கனவுகளைச் சொல்வாள்.....கற்பனைகளை எல்லாம் வானத்தில் எழுதி வைப்போம். 

அதிகாலையிலும், உச்சிப் பகலிலும், மாலையிலும் நடந்து, நடந்து எங்கள் காதலை கடலளவு, வானளவு என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.... 

அடிப்படையில் அவளின் விருப்ப திசை வேறு என்னுடைய திசை வேறு என்று ஒரு நாள் உணர்ந்ததை அவளிடம் சொன்னேன். சரிகளை மட்டுமா மனிதம் சுமந்து கொண்டிருக்க முடியும் அப்படியானால் அது எப்படி மனிதமாகும்? அது இயந்திரமல்லவா? என் முரண்களையும் நீ ஏற்றுக் கொள்ள  வேண்டும், நான் என்பது நளினங்களின் தொகுப்பு மட்டுமல்ல நல்லவைகளின் கூட்டுமட்டுமல்ல...முட்டாள்தனமும், புரிதலின்மையும் கூட நான் தான் என்று நான் சொன்னது  அவளின் முற்போக்கு மூளைக்கு பிடிபடவில்லை. நான் நிர்ப்பந்திப்பதாக அவள் நினைத்தது தவறு என்று நான் நிறுவவும் முயலவில்லை.....

எங்கே ஒரே திசையில் சிறகடித்தோமோ...அங்கேயே ஒரு கணம் எங்களை எதிர் எதிர் திசையில் சிறகடிக்க வைத்தது. 

தெளி விசும்பினில்
கலை மேகமென
நாங்கள் தொலைந்து போனோம்!

செய்கவிதையின் படுபொருளென
அவளைக் கண்ட பொழுதினில்
அவள் மறைந்து போனாள்.....!

இந்தக் கடற்கரையில்தான்....அது நிகழ்ந்தது.

உறவினர் ஒருவர் இறந்து போக அவரின் அஸ்தியைச் சுமந்து வந்து கரைத்தது இந்தக் கடலில்தான். கடல் எனக்கு எல்லாமாய் இருந்தது. இருக்கிறது. நான் கடல் நிஜம் நிலம் பொய் என்று நம்புவன். எது மிகையோ அதுவே பொருளின் தன்மை. இந்த பூமி கடலுக்குச் சொந்தமானது. பரந்து விரிந்த இந்த வாழ்க்கையை உணர்வுப் பூர்வமாய் அணுகும் போது கடல், வான், மண், மலை, செடி, கொடி, என்று எத்தனையோ விசயங்கள் நம்மை இந்த வாழ்க்கைச் சுழற்சியை விட்டு வெளியே இழுத்துச் சென்று பிரபஞ்சத்தின் அதி நுட்பமான சூட்சுமத்தோடு இணைத்து விடுகின்றன. தத்துவங்களையும் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் சுமந்து கொண்டு ஒரு கூலியைப் போல வாழும் வாழ்க்கை அங்கே முற்றுப் பெற்று விடச் செய்கிறது.

கடவுள் தேடல் என்பது எதையும் தேடாதிருத்தல் என்ற தெளிவினை அடையும் போது மொத்த பூமி மட்டுமில்லாது பிரபஞ்சமே நமது வசப்பட்டுப் போகிறது. பசி, கோபம், காமம் என்ற தலையாய உணர்வுகளை சுற்றி அதன் அடிப்படையில் தத்தமது வசதிகளை விஸ்தாரித்துக் கொள்ளும் ஒரு இயந்திர வாழ்க்கையை விட்டு சட்டென்று வெளியேறி சலனமில்லாத பேருண்மைக்கு செல்ல கடல் போன்ற பூமியின் நம்மெதிர்ப்படு பிரம்மாண்டங்களுக்குள் நாம் கரைந்து போகவேண்டி இருக்கிறது.

சுனாமியாய் வெளிப்பட்டு இந்த பூமி வாழ் மனிதர்களை சுக்குநூறாக்கிய கடல்தான் யுகங்களாய் பெரும் மெளனத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு கரைகளில் மோதி மோதி சிரித்துக் கொண்டிருக்கிறது. சுனாமியாய் சூறையாடவும், பேரமைதியாய் சலனமற்று இருக்கவும் கடலுக்குத் தெரியும். கடலை மனிதர்கள் வெறுக்கலாம்....அதை ஆபத்தின் அறிகுறியாய் புயற்காலங்களில் அடையாளப்படுத்தியும் கொள்ளலாம்.....அல்லது கடலினால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டபடியே இந்த பூமிப் பந்து எங்கும்  ஆழ் கருநீலத்தில் படுத்துக் கிடக்கும் அதன் மெளனத்தை போற்றவும் செய்யலாம்....

ஆனால் கடலுக்கு அது பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் கடல் கடலாகவே இருக்கிறது. நேர் எதிர் கலவையான வாழ்க்கையில் அறிவைக் கொண்டு பயணிக்கும் மனிதர்களுக்கு கடலைப் போன்ற ஆழம் கொண்ட கரிக்கும் உப்பு மனிதர்களைப் பற்றி தெரிவதில்லை. இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்குகளுக்கும் ஆன்ம தெளிவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மனிதர்கள் ஜனிக்கிறார்கள் ....மரிக்கிறார்கள். இடையில் ஏதேதோ பேசுகிறார்கள்....அவ்வளவுதான் வாழ்க்கை.

காதலும் காமமும், கடவுளும் இந்த பூமிப்பந்தின் தீர்க்க முடியாத ரகசியங்கள்.. அப்படித்தான் கடலும். இந்த ரகசியங்களை அறிய முயல்தல் என்பது அறியாமை. அறிந்தேன் என்பது மடமை. இந்த பூமியில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்குள்ளும் சமுத்திரத்தின் கரிப்புத்தன்மை கரைந்து கிடக்கிறது. கரிப்புச் சுவை உணர்வோடு தொடர்புடையது....கரிக்கும் மனிதர்கள் கடலைப் போன்ற பெருங்குணம் கொண்டவர்கள்....

கடற்காற்றில் நான் அமர்ந்திருந்தேன். நிலவு கடலுக்கு மேலிருந்து ஏ...லே...லோ ஐலசா என்று பாடிக் கொண்டிருந்தது...அலைகள்....காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல ஹோ....என்ற பேரிரைச்சலோடு கரையை மோதிக் கொண்டிருந்தன.

பலர் அந்தக் கடற்கரையில் பல்வேறு காரணங்களுக்காய் அலைந்து கொண்டிருந்தனர்.

நான் கடலை பார்த்துக் கொண்டிருந்தேன்.....கடல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது...! தேவா சுப்பையா...
3 comments:

Siva sankar said...

மனிதர்கள் ஜனிக்கிறார்கள் ....மரிக்கிறார்கள். இடையில் ஏதேதோ பேசுகிறார்கள்....அவ்வளவுதான் வாழ்க்கை.?????

சே. குமார் said...

நான் கடலை பார்த்துக் கொண்டிருந்தேன்.....கடல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது...!

இதுவே பரமசுகம்தானே... வேறென்ன வேண்டும்...
லயிக்க வைக்கும் உங்கள் எழுத்தில் மேலும் ஒரு அழகான பகிர்வு.

POONGODY said...

WHAT AN IMPRESSIVE ARTICLE DHEVA. REALLY TOUCHED AND BROUGHT THE MEMORIES. THANKS.