Pages

Tuesday, December 30, 2014

பிசாசு....!


படத்தின் வரும் அந்தப் பாடல், உயிரை மீட்டும் அந்த வயலின் ஒலி, முதல் காட்சியிலேயே கதாநாயகனின் பிடித்த கையை விட்டு விட்டு ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....என்ற அழுத்தமான குரலோடு மரணிக்கும் கதாநாயகி, இறப்பதற்கு முன் ஸ்ரெட்ச்சரில் வைத்துக் கொண்டு வரும் போது காதலோடு அவள் கதாநாயகனைப் பார்க்கும் அந்தப் பார்வை, இறப்பதற்கு முன்பு அவளுக்கு ஏற்படும் அந்தக் காதல், இறந்து போன கதாநாயகியின் அப்பாவாய் நடித்திருக்கும் ராதாரவியின் உயிரை உருக்கும் நடிப்பு, அட்டகாசமான கேமரா, நேர்த்தியான இயக்குனரின் கதை சொல்லும் திறன் என்று எல்லாமே சூப்பர்தான் என்றாலும்....

இன்னும் அழுத்தமாய் இந்தக் கதையின் கரு கையாளப்பட்டிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இன்னும் வலி வேண்டும், இது எல்லாம் பத்தாது என்ற ஒரு மனோபாவம் இருப்பதால் அப்படித் தோன்றி இருக்கலாம். எந்த ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் போதும் அந்த திரைப்படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றியும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் நான் அளவு கோலாக வைத்துக் கொண்டு அந்தப் படைப்பை எப்போதும் அணுகுவதில்லை. அந்த படைப்பு என்னை என்ன செய்தது? நான் எப்படி உணர்ந்தேன் இந்த இரண்டில் மட்டும் நின்று கொண்டுதான் எழுதவே ஆரம்பிப்பேன். இந்தப்படமும் அப்படித்தான்.

என்னா சார் இப்படி ஒரு கதை? மரணம்தானே வாழ்க்கையின் இறுதி...? இங்கே மரணிக்கும் முன்பு அவளுக்கு ஒரு காதல் வந்து தொலைக்கிறதே இது என்ன சார் அவஸ்தை? ப்ப்ப்ப்ப்பா.....என்ற பெருங்கதறலோடு கதாநாயகனின் கையை விட்டு விட்டு இறந்து போகிறாளே அந்தப் பெண்...? அவளை நான் தீரத் தீரக் காதலிக்க வேண்டுமே? அவளோடு பேசிச்சிரிக்க வேண்டுமே..? அவளுக்காய் நான் கவிதைகள் பலவும் எழுத வேண்டுமே...? தினம் தினம் விடியலில் தேதிக் காலண்டரைக் கிழித்து அதன் பின்புறம் அவளுக்கென ஒரு கவிதை எழுதி படுக்கையிலேயே  அவளை வாசிக்கச் சொல்ல வேண்டுமே...? அயற்சியான தினத்தின் முடிவினில் மலரும் அற்புத இரவுகளில் அவள் கைகளை பிடித்து மடியில் வைத்துக் கொண்டு...

என் பேனாவிலிருந்து 
சொட்டிக் கொண்டிருப்பது 
வார்தைகளொன்றும் கிடையாது...
என் நெஞ்சுக்குள் தேங்கிக் கிடக்கும்...
அவஸ்தையான காதலடி அது...

என்று எழுதித் தீர்த்திருப்பேனே..! உறக்கம் கலைந்த பின்னிரவில் அவள் தலை கோதி முகத்தில் விழும் முடி ஒதுக்கி என் உதடுகளிலிருந்து ப்ரியத்தைப் பிழிந்தெடுத்து அவள் இமைகளின் மீது வைத்து ஒற்றியிருப்பேனே....? இப்படி இறந்து போனாயே பெண்ணே..? என் காதலை நான் யாரிடம் சொல்வது...?

காகிதத்தில் கவிதை எழுதி
உன் கல்லறையில் வைக்கத்தானா?
எனக்குள் கவிதைப் பூக்கள் பூத்தன?
உயிரை விட்டு விட்டு
நீ உயிராய் என்னுள் இருக்கிறாய்...
நானோ உயிரற்ற ஜடமாய்
நித்தம் உன் நினைவுகளோடு
எங்கே இனி உனைப் பார்ப்பது என்ற
என்ற புலம்பலோடு
மெளனத்தில் கரைந்து கொண்டிருக்கிறேன்....

என்றெல்லாம் எழுதித் தீர்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இறந்து போனவளின் ஒற்றைச் செருப்பை எடுத்து கதாநாயகன் பத்திரப்படுத்திக் கொண்டதற்கு காரணமாய் காதல்தான் இருக்க வேண்டும் என்று நானே நினைத்துக் கொண்டேன். காதலென்ற வார்த்தைக்குப் பதிலாக இரக்கம், பச்சாதாபம், என்று எதை எதையோ போட்டு நிரப்பிக் கொள்ள எனக்கு மனம் வரவில்லை. திகில் நிறைந்த ஒரு பேய் படமாயும் இது இருக்க வேண்டும் என்று கொஞ்சம் வேறு மாதிரி மெனக்கெட்டு இருக்கிறார் இயக்குனர். கதாநாயகனுக்கு உதவி செய்யும் பிசாசு இது... அந்த உதவி செய்யும் மனப்பான்மை காதலால் ஏற்பட்டதாய்த்தானிருக்க வேண்டும். தனக்கு உதவினான் என்று கைம்மாறு செய்துவிட்டு வேறெங்கோ போய் சுற்ற விருப்பமில்லை அந்தப் பெண்ணின் ஆவிக்கு...


அது அவனோடே வசிக்கிறது. அவனை பீர் குடிக்க விடமாட்டேன் என்கிறது, அவனுக்குப் பக்கத்தில் வேறு ஒரு நண்பனை படுக்க விடமாட்டேன் என்கிறது? பேயை ஓட்டுகிறேன் என்று அவனிடம் காசு பிடுங்க வந்தவர்களைக் கலங்கடித்து வீட்டை விட்டே ஓட வைக்கிறது, அவன்  அம்மாவை அடித்தவனை போட்டுப் போட்டுப் புரட்டி எடுக்கிறது, அவன் அம்மாவைக் காப்பாற்ற பக்கத்து வீட்டுக் கதவு தட்டி மருத்துவமனைக்கு கூட்டிப் போகச் சொல்கிறது. படம் முழுதும் கதாநாயகிக்கு ப்ப்ப்ப்பா என்ற ஒரே ஒரு வார்த்தையைத்தான் டயலாக்காய் பேசுகிறார். முதல் காட்சியிலேயே இறந்து விடுகிறார், இருந்தாலும் நம் அனைவர் நெஞ்சிலும் வலியாய் நிறைந்தும் நிற்கிறார். ஒரு சில ப்ரேம்களில் வந்தாலும் கூட வலுவாய் காதாபாத்திரங்களை மனதில் நிற்க வைக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனரை நாம் பாரட்டத்தான் வேண்டும். அதுவும் வெறுமனே ஒரு பிசாசு என்ற அளவிலான பயமாய் அது நெஞ்சில் நிற்காமல் ஒரு ஏக்கமாய், காதலாய் நம்மை அந்தப் பிசாசு படம் முடிந்தும் பின் தொடர்வதுதான் இந்தப் படத்தினால் நமக்கு ஏற்படும் அதி அற்புதமான ஒரு அனுபவம்.

ராதாரவியை ரொம்ப நாள் கழித்து லிங்காவில் பார்த்த போது எனக்கு அலுப்பாய் இருந்தது. விஜயகுமாரும், ராதாரவியும் போட்டிப் போட்டிக் கொண்டு லிங்கேஸ்வர மகாராஜாவைப் புகழ்ந்து கொண்டேயிருந்த போது எரிச்சலாய்க் கூட வந்தது, ஆனால் அந்த அலுப்பை எல்லாம் பிசாசு படத்தில் களைந்திருக்கிறார் ராதாரவி. மனுசன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் நடிப்பில். தன் மகளைப் பிசாசாய் இன்னொருத்தன் வீட்டில் பார்த்து விட்டு அவர் கதறும் கதறலை ஒரு பெண்ணின் தகப்பனாய் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவிலை.....! அம்மா... பவானி வாம்மா நம்ம வீட்டுக்குப் போயிடுவோம், சாமி, இன்னொருத்தன் வீட்ல ஏம்மா நாம தொந்தரவா இருந்துகிட்டு, நம்ம பேக்டரியிலயே நம்ம வீட்லயே நீ சாமியா இருடாம்மா....

என்று தவழ்ந்தபடியே ஓடி ஒளியும் பிசாசினை பார்த்து எந்த தகப்பனுக்கு பிசாசாய் எண்ணத் தோன்றும்? புகைக்கூண்டிற்குள் இருந்து அப்பாவின் மீது உள்ள பாசத்தில் கைகள் நீட்டி ராதாரவியின் கன்னத்தை அந்தப் பெண்ணின் ஆவி தொட்டுத் தடவிய அந்த காட்சியில் என்னை மீறித் தேம்ப ஆரம்பித்து விட்டேன்.  என்னை எப்போதும் கட்டியணைத்து என் கன்னத்தில் கை வைத்து உறங்கும் என்  பத்து வயது மகளின் நினைப்பு வந்து நெஞ்சைப் போட்டு பிசைய ஆரம்பித்து விட்டது. பெண் பிள்ளைகளுக்குத் தகப்பனாய்  இருப்பதென்பது ஒரு நெகிழ்ச்சியான, சுகமான வலி நிறைந்த ஒரு அனுபவம். நெஞ்சிலும், மாறிலும் தூக்கி வளர்த்த பெண்ணை இன்னொருவனின் கை பிடித்துக் கொடுத்து விட்டு யாரோ ஒருவன் போல விலகி நின்று அவளை ரசிக்கத் தொடங்கும் ரணம் மிகுந்த நாட்கள் எனக்கு இன்னும் ஒரு பத்து அல்லது பதிமூன்று வருடத்தில் வரப்போகின்றது என்பதை நினைத்தாலே....

அடிவயிறு கலங்குகிறது, சுவாசம் முட்ட, நெஞ்சில் ஒரு வலி வந்து மோதுகிறது.

ஓ...தகப்பன்களே....
எப்படியாப்பா உங்கள் பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து விட்டு விருந்தாளியை போல அவள் புகுந்தவீடு சென்று அவளை யாரோ ஒருவனின் மனைவியாய் பார்த்து ரசித்து வந்தீர்கள்...? 
ஓ...தகப்பன்களே.....
எப்படி உங்கள் மகள்களின் குரல் கேட்காமல் அவள் இல்லாத வீட்டிற்குள் அவள் நினைவுகளோடு அவளைக் கட்டிக் கொடுத்த பின்பும் மீண்டுமொரு வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?
ஓ......தகப்பன்களே....
கண்ணீர் வழியும் விழிகளோடு
எப்பாடியப்பா நீங்கள் உங்கள் மகள்களுக்கு 
விடை கொடுத்தீர்கள்..?
சுமையை இறக்கி வைக்கிறேன் என்று உலகுக்கு நீங்கள் சொல்லி விட்டு
மகள்களைக் கட்டிக் கொடுத்த பின்புதானே ஐயா நீங்கள்...எல்லாம்
நிஜத்தில் சுமையைச் சுமக்க ஆரம்பித்தீர்கள்...?

ராதாரவி மகள் பவானிக்காய் கலங்கிய படியே அப்பாவிற்கு முதுகு வலிக்குதும்மா, வாம்மா நம்ம வீட்டுக்குப் போய்டலாம் என்று கலங்கிக் கொண்டிருந்த போது நான் திரைப்படத்திற்கு வெளியே வந்து விழுந்து என் மகளைப் பற்றி எண்ணித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். இந்தப்படத்திலும் இயக்குனர் மிஸ்கின் பிச்சைக்காரர்கள் சிலரைக் காட்டி அதில் சிலரை கண்கள் தெரியாதவர்களாக காட்டியிருக்கிறார். ஓநாயும் ஆட்டுக்குட்டியிலும் கண் தெரியாத சிலர்தான் படத்தின் மையம் என்ற எண்ணமும் எனக்கு வந்தது. இதிலும் குறிப்பிட்ட காட்சிகளில் கண் தெரியாத பிச்சைக்காரர்களைக் காட்டி இருக்கிறார். கண் தெரியாதவரக்ளை படத்துக்குப் படம் வைப்பதன் பின்னணியில் ஏதேனும் குறியீடு இருக்குமோ என்னவோ.. யார் கண்டது?

படத்தின் க்ளைமாக்ஸ் நம்ப முடியாததாய் இருந்தாலும் பேய் என்பதையே நாம் நம்பிக் கொண்டுதானே படத்தைப் பார்த்தோம், அதில் தன் வீட்டிற்குள் மகளைப் புதைக்காமல் ஐஸ் பாருக்குள் ராதாரவி பாதுகாத்து வைத்திருப்பதை நம்பினால் என்ன குறைந்து விடப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. பிசாசு என்று டைட்டில் வைத்ததாலேயே இதை ஒரு ஹாரர் மூவி மாதிரியும் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்ததிற்கு உட்படாமல் ஒரு காதல் படமாகவே வலியோடு சொல்லி இருந்தால்....இன்னும் நன்றாயிருந்திருக்கும் என்று எனக்கு படம் பார்த்து முடித்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்....

மொத்தத்தில் .....

எனக்கு இந்தப் பிசாசு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.....!
தேவா சுப்பையா....


3 comments:

bandhu said...

எனக்கும் படம் மிக மிகப் பிடித்திருந்தது.. பெண் குழந்தையின் தகப்பனாக உருக்கி விட்டார் ராதா ரவி...
//எப்பாடியப்பா நீங்கள் உங்கள் மகள்களுக்கு
விடை கொடுத்தீர்கள்..?//
நீங்கள் சொல்லும் ஸ்டேஜை நினைத்தாலே கலங்குகிறது...

ezhil said...

அருமையான விமர்சனம் ... முதல் பத்தி முழுதும் என்னுள்ளும் தோன்றியது... உங்கள் கோணத்தில் படத்தைப் பார்த்தால் இன்னும் அருமையாய் இருக்கும் போலிருக்கு... நான் என் பேஸ்புக் பக்கத்தில் பகிர்கிறேன்

சென்னை பித்தன் said...

நானும் பிசாசு;நீங்களும் பிசாசு;ஆனால் வெவ்வேறு பிசாசு!